
(அப்பாவின் மறைவிற்கு இரங்கல் மலரில் வெளியிட்ட கவிதை)
நெஞ்சில் நினைவில் நிலைத்து வாழ்பவர்.....
முத்தான தமிழதனைப் பயிற்றுவித் தேயெனை
முழுதான பெண்ணாக மாற்றி வைத்தும்
எத்தகைய சான்றோர்கள் முன்பும் சற்றும்
தயங்காமல் கருத்துக்கள் சொல்லும் படியும்
ஈன்றவள் மட்டுந்தான் என்பதன்றி எல்லோரும்
உவந்தேற்று மகிழும் வண்ணம் யென்னைச்
சான்றோனாய்த் தமிழுலகில் தவழவிட்ட யெந்தன்
தந்தையே யேற்றிடுவா யெந்தன் நன்றி!
அப்பா உன்பெயர் சொன்னால் போதும் உடனே
அழகான தமிழென்னைச் சூழ்ந்து கொள்ளும்
தப்பாமல் கைகோர்த்து வாழ்த்துச் சொல்லி
தளிரான என்விரலைப் பற்றிக் கொள்ளும்
அப்பாலே ஆயிரங்கல் தொலைவி லிருந்தும்
அருமருந்தாய் உன்குரலே என்னை யாற்றும்
ஒப்பில்லா உயர்வாழ்வு வாழ்ந்த உன்னாலிவ்
ஆர்க்காட்டு மண்ணன்றோ பெருமை கொள்ளும்
தோட்டத்தில் சிரித்திட்ட செடியின் தாகம்
தீர்த்திடுவாய் தினந்தோறும் விடியும் முன்பே
வாட்டத்தில் தவிக்கிறதச் செடிகள் யாவும்
நீயூற்றும் நீர்பார்த்து இருண்ட பின்னும்
வீட்டினையே சுற்றிவந்து காகக் கூட்டம்தினம்
கரைகிறது பசியுனும் விருந்திற் காக
ஏட்டினிலே உதித்துவந்த எழுத்துக்கள் எல்லாம்
ஏக்கத்துடன் நிற்கிறதுன் வாசிப்பு வேண்டி
பள்ளியிலே பாடமது பயிற்றுவித்த போதோர்
படிக்கின்ற மாணவந்தன் புத்தகத்தில் - அவனைக்
கொள்ளை கொண்டஎம் ஜிஆர்படத் தைவைக்க
கோபம்கொண்டு அவன்முதுகில் ஓங்கி வைத்து
அறிவது வளர்ந்திட வேண்டுமெனில் வையடாவுன்
புத்தகத்தில் "கலைஞர்" படமென்றாய் ; ஒம்றி
கலஞரின் ஆக்கங்கள் அனைத்தும் நீக்க
அரசாங்கம் ஆணையிட அதிர்ந்தே நின்றாய்.
இணையாரும் இல்லையென் தலைவனுக் கிந்த
இனிதான திருநாட்டில் என்னும் கர்வம்
உனைப்போல பெற்றவர்கள் யாரும் இல்லை
இதைக்கூற எனக்கொன்றும் தயக்கம் இல்லை
நினைவு தெரிந்தநாள் முதலேஉன் தன்வாயும்
நித்தமு முதிர்த்தது கலைஞர் பெயரே
நினைவிழந்து வீழ்ந்து உயிர்பிரிந்த பின்பும்
கழகத்தின் கொடியுன்மேல் போர்த்தி வைத்தோம்
மலைபோல குவிந்த மலர் மாலையெல்லாம்
அழகாக அணிவகுத்து அஞ்சலி செய்ய
சிலையெனவே ஆகிவிட்ட உந்தன் உடல்மேல்
சிலஈக்கள் ஓடிவந்து கண்ணீர் சிந்த
உற்றாரும் சுற்றாரும் ஒன்றாய்ச் சேர்ந்து
உகுத்துவிட்ட கண்ணீரும் விழியை மறைக்க
ஆன்றோரும் சான்றோரும் அய்யோ வென்றே
அலறித்தான் துடித்தனரே உன்மிச்சம் கண்டு
பள்ளிக்குத் தயாரான உடனே உந்தன்
மூன்றுவயது பேரனவன் ஓடிச் சென்று
உள்ளறையில் உனைத்தேடி ஓடும் காட்சி
காண்போரைக் கட்டவிழ்த்துக் கதறச் செய்யும்
எள்ளளவும் உம்மறைவை ஏற்கா யெங்கள்
உள்மனது படுகின்ற பாட்டைக் கண்டு
உள்மனதிற் காறுதலாய் அளிக்கும் வார்த்தை
சிலநேர ஒத்தடமே வேறொன்றில்லை!
அருமையான ஓர்மகனாம் நிரைஞ்சனோடு மகளைந்து
ஈன்றுலகிற் களித்த தந்தை யுந்தன்
நிறைவான வாழ்க்கையின் நினைவுக ளென்றும்
நீங்காது நெஞ்சினிலே நிலைத்தே நிற்கும்
இயற்கையின் நியதிதான் இதுவென்றாலும்
இதுவரையில் எங்கள்மனம் ஏற்க வில்லை
உயர்வான மனிதனென்று பெற்ற பெயரும்
இன்றாறடி மண்கீறி உலகில் ஒளிரும்.
