தொடர்ந்து தென்பாலி நாட்டைப்பற்றி பார்ப்போம்,
தென்பாலி நாடு எங்கு எப்படி அமைந்திருந்தது என்று புலவர் குழந்தை அவர்கள் அவருக்கே உரிய அழகிய நடையில் பெருமையோடு கூறுகிறார் பாருங்கள்..
அப்பெரும் பக்றுளி யாற்றின் தெற்கில்
திப்பிய தென்கடல் தெற்கின தாகக்
கப்பிய பல்வளங் காமுற யாரும்
நப்புகழ் மேயதென் பாலி நளியும்
(திப்பிய : தூய , சிறந்த ; கப்பிய : கவிழ்ந்து மூடியபடி )
பக்றுளி ஆற்றின் தெற்குப் பகுதியில், தென்கடலுக்குத் தெற்குப்பக்கம் நிலவளங்கள் பலவகையாக
நிறைந்து அந்த நாட்டையே மூடி இருக்குமாறு இருப்பதை அந்நகரை காண்பவர்கள் அதன் அழகில் காமுறுமாறு சிறந்து விளங்கியதாம் தென்பாண்டி நாடு.
இடைநில மைந்து நூறேன்னறு கல்லிற்
படவொளி மேய பவளமு முத்தும்
கொகுட நாட்டுக் கொழும்பொரு ளோடு
கடல் வழங்கக்கண்டு கழித்ததந் நாடே
அந்தத் தென்பாலினாடாடந்து ஐந்நூறு தொலை கல் பரப்பளவில் பெரிய கடலைக் கொண்டிருந்தது... கடலென்றால் சாதாரணக் கடலல்ல... ஒளிபொருந்திய பவழங்கள் முத்துக்கள் மற்றுமுள்ள கடற் பொருட்களோடு வளம் மிகக் கொண்டதாக இருந்ததாம் தென்பாலி நாடு.
இப்படியாக மூன்று பெரு நாடுகள் (பெருவலநாடு , குமரி நாடு , தென்பாலி நாடு )ஆகிய மூன்றும் தனித்தனியாகத் தோன்றுவதற்கு முன்பு ,,, இந்த பெரிய நிலப்பரப்பானது குமரிக் கண்டம் என்று சொள்ளத்தக்கவாறு பரந்து விரிந்திருந்ததாம்.
இப்போது ஒரு முக்கியமான விடயத்தைக் கவனிக்க வேண்டுகிறேன்...
இப்போதுதான் அறிவியல் ஆராய்ச்சியில் கூறுகிறார்கள் பழங்காலத்தில் இமையமலையானது கடலுக்குள் இருந்ததென்று... ஆனால் ... நம் முன்னோர்கள் அதை அப்போதே எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இதோ.. புலவர் குழந்தையின் தெளிவான பாடல் அதை நமக்கு உணர்த்துகிறது....
அன்று வான மளாவு பனிமலை
ஒன்று மாழியா நின்றது வாரியுட்
சென்று மூழ்கிடு தோறுமத் தென்னிலம்
இன்று போலாங் கெழுந்ததத் தொன்மலை.
பிரித்துப் படிக்க:
அன்று, வானம் அளாவும் பனிமலை
ஒன்று ஆழியா நின்றது வாரியுள்
சென்று மூழ்கிடும் தோறும் அத தென்னிலம்
இன்றுபோல் ஆங்கு எழுந்தது தொன்மலை
அதாவது, வானளாவி இப்போது உயர்ந்து நிற்கும் இந்தப் பனிமலை (இமயமலை)யானது கடலோடு ஒன்றி மூழ்கிக் கிடந்ததது.
அப்போதெல்லாம் தென்பகுதி நிலமானது அடிக்கடி கடல் சீற்றத்தினால் (சுனாமி) மூழ்கப்படும். அப்படி தென் பகுதி தாழ்ந்திருந்ததால் அடிக்கடி மூழ்கி வடபகுதியில் இருந்த மலை
வெளியே தெரியத் தோன்றியது என்று கூறுகிறார்....
எப்படி ? ஆச்சரியமாக உள்ளதல்லவா படிக்கும்போது...?
இன்னும் படியுங்கள்... இன்னும் இன்னும் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போவோம் அப்படி ஒரு அமைவு நம் பண்டைய தமிழக வரலாற்றில் உள்ளது...
இலைப்ப ரப்பெனில் என்னவே யப்பெறு
நிலப்பரப்பு நிலநடுக் கோட்டினில்
அலைப்பரப்பி னமைந்தங் கிருந்தது
தொலைப் பரப்பெனச் சொற்றிடு மாறரோ
(பிரித்துப் படிக்க:
இலைப் பரப்பெனில் என்னவே அப்பெறு
நிலப்பரப்பு நிலநடுக் கோட்டினில்
அலைப்பரப்பி னமைந்தங் கிருந்தது
தொலைப் பரப்பெனச் சொற்றிடு மாறரோ
அதாவது, என்னைவிட பெரிய நிலப் பகுதி இல்லை என்று சொல்லும்படி இந்த தெற்கு நிலப்பரப்பாகிய பெருங்கண்டமானது கடல் பரப்பிற்கு நடுவில் உள்ள நிலநடுக்கோட்டைச் சார்ந்து இருந்ததாக இப்போதைய ஆய்வுகளும் தெரியப்படுத்துகின்றன.
இதுமட்டுமல்ல.... நாம் அனைவரும் அறிந்தது , கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்பது... அதை ஆதார பூர்வமாக நிரூபிக்கிறார் பாருங்கள் புலவர் குழந்தை அவர்கள்..
நன்றொ ளிப்பிழம் பாகிய ஞாயிறு
தன்ற னிற்சுழல் தன்னிற் சிதறிய
சென்ற தான திவலையே இன்னுயிர்
ஒன்று மிவ்வுல கென்றுமே யோதுவர்
அதிக வெப்பமுடைய ஒளிப்பிழம்பாக இருந்த சூரியன் தன்னைத் தானே சுழல்வதால் அதனிலிருந்து சிதறிய சிறு துளியாகிய துண்டம் தான் உயிரினம் தோன்றி வாழும்படி நாளடைவில் உருவாகின உலகமாகும் என்று கூறுகிறார். (இதையும் இப்போதைய அறிவியல் ஆராய்ச்சி நிரூபித்துள்ளது)
அப்படிச் சிதறித் தெறித்த தீப்பிழம்பின் சிறு பொறியானது(பூமி) தன்னைத்தானே சுழன்று கொள்வதால் குளிர்ச்சியடைந்து இறுகி, உயிரினஙள் தோன்றுவதற்குரிய சூழ்னிலையை நாளடைவில் அடைந்து விடுகிறது.
ஆடு பம்பரத் தாடுனாப் பண்விரைந்
தாடு மிவுல கன்னவா றேயுயிர்
கூடு தன்மை குயின்ற நிலநடுக்
கோடி ருந்ததா லப்பெருங் கோநிலம்
பம்பரம் ஆடிக்கொண்டிருக்கும்போது எப்படி அதனுடைய நடுப்பகுதி வேகமாகச்சுழலுமோ அது போலவே தமிழகமானது நிலநடுக்கோட்டைச் சார்ந்து இருந்ததால் உயிர் உருவாகும் முதல் நிலமாகத் தமிழகமே இருந்தது என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்.
அதனால்... அந்த முதல் நிலமாகிய தமிழகம் உயிர் உருவாகும் தகுதியுடைய புகழ் பெற்றதனால் உலகில் முதல் மக்கள் தமிழர்களாகவும் முதல் நிலம் தமிழகமாகவும் விளங்கி
எல்லாவற்றிலுமே முதன்மையானவர்கள் தமிழர்கள் என்பதை அறிவியலார் உரைப்பதாகக் கூறுகிறார் பாருங்கள் :
ஆத லான்முத லவ்வயி ந்னேயுயிர்
போத நின்ற புகழின தாதலான்
மாத மிழக மக்களே மா நிலம்
மீது போந்த முதலென விள்ளுவர்
பிரித்துப் படிக்க:
ஆதலான் முதல் அவ் வயினே உயிர்
போத நின்ற புகழ் இனம் ஆதலான்
மா தமிழக மக்களே மா நிலம்
மீது போந்த முதல் என விள்ளுவர். (வயினே: இடம்)
இப்படி உலகின் முதன்மை நாடு உயர்வான தமிழ் நாடே. உலகின் முதன் மக்கள் புகழ் வாய்ந்த தமிழர்களே/ உலகின் முதன் மொழி புகழ் வாய்ந்த தமிழ் மொழியே ஆகும். என்று கூறிவிட்டு.. இத்தனை தகுதிகள் இருன்தும் உலகம் இவற்றை இன்னும் சரியாக அறிந்துகொள்ளமுடியாத நிலையுள்ளதே என்றும் வருத்தப் படுகிறார்.
அதை பின்வரும் செய்யுளில் கூறுகிறார்:
உலக முன்னா டுயர்தமிழ் நாடதே
உலக முன்மக்க ளொண்டமிழ் மக்களே
உலக முன்மொழி யொண்டமி ழேயிதை
உலக மின்றறி யா நிலை யுள்ளதே
இப்படியான உலக முதற்குடிமக்கள் அதாவது பண்டைய தமிழர்கள் இந்தக்காலத்திலும் விரும்பி ஏற்றுக்கொள்ளும்படியான மிக உயர்ந்த நாகரீகத்தோடு நீங்காத வளத்தோடு வாழ்ந்து வந்தனர்.அப்படிப்பட்ட நாகரிகம் தான் பின்னர் சிந்துவெளியில் மலர்ச்சிபெற்று, பின் மேலை நாடுகளில் எல்லாம் சென்று, உலகம் முழுவதும் சிறப்புடன் மணம் வீசிப் பரவி நின்றது.
ஆங்க ரும்பிய அந்நாக ரிகமே
வீங்கு சிந்து வெளியில் மலர்ந்துபின்
ஊங்கு சென்றிவ் வுலக முழுவதும்
பாங்கு டன்மணம் வீசிப் பரந்ததே.
இந்தப் பழந்தமிழ்க் குடிமக்கள்தான் மிகத் தொண்மையான காலத்தே உலகமெங்கிலும் ஆங்காங்கே பரவி வாழ்ந்தனர். பிரது தட்ப வெப்ப நிலை மாறுபாட்டிற்கு ஏற்ப இவ்வுலகில் வெவ்வேறு மனித இனங்களும் மொழிகளும் தோன்றின.
இனி மனிதக் கருவாக உலகின் முதல் மாந்தர்களாய்த் தமிழக மக்கள் வாழ்ந்த அந்தத் தொன்மை நிலப்பகுதியின் நிலையானது கடற்கோளுக்கு முன்னர் எப்படி இருந்தது என்பதை இனி காணலாம் என தனது அழகிய செய்யுள் மூலமாகவே கூறுகிறார்
இனி திராவிட நாட்டின் இயல்பு காண தொடர்வோம்....
என்னைப் பற்றி
- லதாராணி(Latharani)
- "ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.
இராவண காவியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராவண காவியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 11 ஜூலை, 2011
செவ்வாய், 5 ஜூலை, 2011
இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)
இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

இக்காண்டத்திற்குள் செல்லுமுன்,நம் பண்டைய தமிழகத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும் அல்லவா?
மிக மிகப் பழங்காலத்தே தமிழ்நாடானது இன்றுள்ளது போல் குறுகிய எல்லைக்கு உட்பட்டு இருக்கவில்லை. வடக்கில் பனிமலை (இமயம் ) வரை பரவியிருந்தது. அதற்குப் பின் அயல்நாட்டார் குடிஎற்றத்தால் பின்னர் விந்தமலை வரை ஆனது. விந்த மலையே நம் நாட்டின் வடக்கு எல்லையாகக் கருதப் பட்டது.
அதே போல தென்கடல் அப்போது நிலமாகத்தான் இருந்தது. அது குமரி முனைக்குத் தெற்கில் ஆயிரம் கல்லுக்கும் அகன்று பரந்திருந்தது. இப்புறத்தில் குமரிமலை, பன்மலை முதலிய ஓங்கி உயர்ந்த மலைகள் இருந்தன. குமரி மலையில் குமரி ஆறும், பன்மலையில் பஃறுளி ஆறும் தோன்றி அங்கிருந்த நிலப்பரப்பை மிக்க செழிப்பாக வளம்பெறச் செய்திருந்தது.
கிழக்குப் புறமோ.. வங்கக் கடலும் சாவகம் முதலிய தீவுகளும் ஒரே நிலப்பரப்பாகத்தான் இருந்தது.
(படத்தினைப் பாருங்கள் : இன்னும் தெளிவாக விளங்கும்.)
குமரி ஆற்றுக்கும் பஃறுளி ஆற்றுக்கும் இடையில் பெருவள நாடு இருந்தது
பஃறுளிக்கும் தென்கடலுக்கும் இடைப்பட்ட நாடு தென்பாலி நாடு.
இந்த இரு நாடுகளுக்கும் தலைநகரமாக இருந்தது தான் மதுரை (இப்போதுள்ள மதுரை அல்ல)
இப்படி, தெற்குப் புறம் குமரிக்கும் வடக்குப் புறம் விந்தத்திற்கும் இடைப்பட்ட பகுதிதான் "திராவிட நாடு "
திராவிடத்தின் மேற்குப் புறம் சேரநாடு இருந்தது
திராவிடத்தின் கிழக்கில் சோழ நாடு இருந்தது.
இப்படியான தமிழகத்தில் , மலையும், காடும், நிலமும் , கடலுமாக நானிலமும் கூடிய வளம்பொருந்திய
தமிழகத்தில் நானில மக்களும் தங்களுக்குள் ஒரு தலைவனை தேர்வு செய்து அவனுடைய ஆட்சிக்கு உட்பட்டு வாழ்ந்து வந்தார்கள். இன்னாநிலத் தலைவர்களுக்கும் தலைவனாக முழுத் தமிழகத்துக்கும் ஒரு பேரரசனாக ஒரு மாபெரும் பேரரசனை மக்கள் கொண்டிருந்தனர். அப்பேரரசன், தமிழகத்தின் நடுவில், இப்போதுள்ள இலங்கையின் தென்னகரில் இருந்து தமிழகத்தை ஆண்டு வந்தான்.
அப்பண்டையோர் மரபில் வந்தவர்களே பாண்டியர்கள் :
தமிழகம் அளவில் மிகப் பெரியதாய் இருந்ததால்....இந்தப் பாண்டிய மரபில் வந்த மன்னன் ஒருவன் தன் மகனைத் தென்னாட்டிற்குத் தலைவனாகவும், இன்னும் இரண்டு தமிழ்ப் பெருமக்களை சேர சோழ நாட்டிற்கும் தலைவனாக்கி சிறப்பாக ஆண்டு வந்தான்.
இவர்களின் வழி வந்தவர்கள்தான் சேர சோழ பாண்டியர்கள் .
தி,.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்கடல் பொங்கி (சுனாமி ) தென்பாலியையும், கிழக்கு நாட்டின் பெரும்பகுதியையும் விழுங்கிற்று.
பிறகு, தி. மு. 2500 இல் மற்றொருமுறை கடல் பொங்கி (சுனாமி) பெருவளத்தின் பெரும்பகுதியையும் கிழக்கு நாட்டையும் விழுங்கியது.
பிறகு தி.மு. 700 இல் மீண்டும் பொங்கிய கடலானது திராவிடத்தின் ஒரு பகுதியை உண்டு ஏப்பம் விட்டது.
இரண்டாவது கடல் கோளிற்குப் பின்தான் (கடல் கோள் - சுனாமி ) இலங்கை உண்டானது. இலங்கை நாட்டின் நடுவில் முக்கூடல் மலைமீதுதான் இலங்கை நகர் இருந்தது.
இந்த இலங்கையிலிருந்து தமிழகத்தை ஆண்டுவந்த பேரரசர்களின் வழிவந்த ஒரு பேரரசன் வச்சிர வாயு. அப்பேரரசனுக்கும் அவன் மனைவி கேகசிக்கும் பிறந்தவர்கள் தான் இராவணன் , கும்பகன்னன்., பீடணன் மற்றும் காமவல்லி (இவளைத்தான் சூர்பனகை என்று இராமாயணத்தில் குறிப்பிட்டிருக்கும்,) இவர்களை வைத்தே இராமாயணம் என்ற கதை பின்னப்பட்டது.
சரி, இதுவரை இராவண காவியம் ஏன் தோன்றியது என்பதைக் கண்டோம். இனி, கிழக்கு, மேற்கு தெற்கு ஆகிய முத்திசைகளையும் அலைகள் காவல் காக்க வளமை மிக்க விந்த மலை வடக்கில் வேலியாக அமைய சிறப்புடன் பண்டைக் காலத்தில் நம் முன்னோர்க்கள் வாழ்ந்திருந்த தமிழகம் பற்றிக் காணப்போகிறோம்.
நனிமிகு பண்டுநந் நற்றமிழ்ச் செல்வி
பனிமலை காரும் பகை சிறிதின்றி
இனிதுயர் வெண்குடை நீழலிருந்து
தனியர சோச்சித் தமிழகம் காத்தாள்
மிக மிகப் பழங்காலத்தே நம் நற்றமிழ்ச் செல்வியானவள் வடக்கே பனி சூழ்ந்த இமயமலைவரை பகை என்பதே இல்லாமல் தனியாக அரசாட்சி செய்து தமிழகத்தைக் காத்து வந்தாள். ஆரியர்கள் என்னும் அயலார்களின் பெயர் அறியும் முன்பே விந்தமலைக்கு வடக்கு வரை மிகச்சிறப்பாக வாழ்ந்து வந்த நம் தமிழ் மக்களின் நாகரிகச் சிறப்பினை பல அகழ்வாராய்வு முடிவுகள் நம்மை மகிழ்ச்சியோடு பெருமிதம் கொள்ளத்தக்க வகையில் வெளிப்படுத்தியுள்ளதை கீழ்கண்டவாறு கூறுகிறார் புலவர் குழந்தை அவர்கள்:
விந்த வடக்கு விளங்கி இருந்த
நந்தமிழ் மக்கணன் நாகரி கத்தைச்
சிந்து வெளிப்புறந் தேறி யறிந்தார்
சிந்தை மகிழ்ந்து செருக்குற நாமே...
(பிரித்துப் படிக்க :
விந்த வடக்கு விளங்கி இருந்த
நம் தமிழ் மக்கள் நன் நாகரிகத்தைச்
சிந்து வெளிப்புறம் தேறி அறிந்தார்
சிந்தை மகிழ்ந்து செருக்குற நாமே.
சிந்துவெளியில் மட்டுமா வாழ்ந்திருந்தனர் நம் மக்கள்? மேற்கே வளம் கொழித்த யவன நாடு உள்ளிட்ட பகுதிவரையல்லவா நம் மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பதையும் கூறி நமக்குப் புலப்படுத்துகிறார்.
அப்படி பெருமை வாய்ந்திருந்த தமிழகத்தில் முக்கியமான பகுதிகளைப் பார்ப்போம் .
பெருவள நாடு:
தன்கடன் குன்றித் தமிழகங் கொண்ட
தென்கடல் முன்பு செழுந்தமிழ் நாடா
நான்கட னாடு நனிவளந் தேங்கிப்
பொன்கட னாடப் பொலிந்தது காணும்.
தமிழகத்தைக் காக்கவேண்டிய கடமையிலிருந்து தவறி தன்னிடம் கொண்டு சென்ற தென்கடலானது, முன்பு, செழுந்தமிழகமாக இருந்தக் காலத்தில், கடலும் விரும்பும்படியாக அவ்வளவு செழுமை மிக்கதாகவும், பிற நாடுகள் செல்வத்தை இங்கிருந்து கொடுக்கும்படி கடன் கேட்குமளவிற்குச் செழிப்புற்றிருந்ததாம் பெருவள நாடு. அயல் நாட்டவர் பொறாமை கொள்ளும்படியும் இங்கிருந்து செல்வம் நமக்கு கிடைக்காதா எனப் பேராசை கொள்ளுமளவுக்கு பெரிய பொருள் சேர்த்துவைக்கும் இடம் போல் இருந்ததாம் பெருவள நாடு.
அந்த பெருவளனாட்டினச் சூரியன் கடந்து செல்ல நடுக்கம் கொள்ளுமளவிற்கு மிக உயர்ந்து மாணிக்கத்தூன் போல செல்வம் மிக்கதாகக் கொண்ட குமரி மலை இருந்ததாம். இந்தக் குமரி மலையைக் கடந்து செல்ல சூரியன் நடுக்கம் கொண்டது என்று என்ன ஒரு அற்புதமாகக் கவி குறிப்பிடுகிறார் பாருங்கள்...
ஆயநன் னாட்டி னணியுறுப் பாக
ஞாயிறு செல்ல நடுக்குற வோங்கிச்
சேயுயர் வானின் திகழ்மணித் தூணின்
மீயுயர் செல்வக் குமரி விளங்கும்.
பிரித்துப் படிக்க
ஆய நன்னாட்டின் அணியுறுப் பாக
ஞாயிறு செல்ல நடுக்குற ஓங்கிச்
சேயுயர் வானின் திகழ் மணித் தூணின்
மீயுயர் செல்வக் குமரி விளங்கும்.
இப்படி உயர்ந்து சூரியக்கதிர்களே நாட்டிற்குள் நுழைய நடுங்குமளவிற்கு இருந்த மலையானது பகைவரிடமிருந்து காக்கும் பெரிய அரணாக இருந்ததாக நயம்படக் கூறுகிறார்.
அப்படிப்பட்ட குமரிமலையில் தோன்றிய ஆறுதான் குமரியாறு என்ற பெயருடன், அந்நிலத்திற்குத் தேவையான நீர்வளத்தைக் கொடுத்துச் செழுமையாக்கியதோடல்லாமல் அந்நாட்டிற்கும் அழகு சேர்க்கும்படி அமைந்திருந்ததாம் குமரி ஆறு.
நாட்டு புகழ்த்தமிழ் நாட்டி னதுதென்
கோட்டிலின் றுள்ள குமரி முனைக்கு
நோட்ட மிகுமிரு நூறுகற் றெர்கில்
ஊட்டுங் குமரியா றோடின காணும்!
அதாவது,
இப்போதிருக்கும் தமிழ்நாட்டின் குமரிமுனையிலிருந்து தெற்குப் பக்கமாகப் பார்த்தால் 200 கல் தொலைவில் குமரி ஆறு இருந்ததாம். இந்தத் தொன்மையான குமரிமளைக்குத் தெற்கே முகில் தோயும் பல மலைகள் ஒன்று சேர்ந்து பன்மலைத் தொடராக உருவாகி அழகுற அமைந்திருந்ததாம் அந்தப் பன்மலைத்தொடர்.
அடுத்ததாகக் கூறுகிறார் பக்ருளியின் தோற்றமும் அதன் உயர்வையும்... தனக்கே உரிய அருமையான கற்பனைத்திறத்தால்...
அத்தொடர்க் குன்றத் தருமக வாகி
முத்தமி ழாளர் முதுநெறி போலப்
பத்தி யறாதுசெல் பஃருளி யாறு
புத்துண வாகிப் புதுவிருந் தாற்றும்
ஆஹா.... என்னே கற்பனை... என்ன ஒரு அருமையான பாடல்...
அந்தப் பன்மலைத் தொடரின் குழந்தையாக பஃறுளி ஆறு பிறந்து, (அதிலிருந்து பிறந்ததால்) முத்தமிழ் அறிஞர்கள் எப்படி ஒழுக்கம் தவறாமல் அறநெறியோடு தன் கடமையைச் செய்கிறார்களோ அதுபோல் பஃறுளி ஆறும் தன்னுடைய நீர் வளத்தால் உணவுப் பொருட்களை விளைவித்து புதுவிருந்து படைக்கிறதாம் அந்நாட்டு மக்களுக்கு.
இப்படி இன்னும் பலப்பல குன்றுகளும் அதிலிருந்து தோன்றிய பல ஆறுகளும் குறைவில்லாது ஓடி பல வளங்களைப் பெறுமாறு செல்வச்செருக்கு மிக்க பெருமித உணர்வு கொள்ளுமாறு பெயருக்கேற்ற படி பெருவளங்களை அளித்து பெருவளனாட்டைப் பொலிவோடு விளங்கச்செய்தது .
இந்தப் பெருவளநாட்டில் மொத்தம் நாற்பத்து ஒன்பது நாடுகள் இருந்ததாகக் கூறுகிறார் புலவர்.
குணக்கரை குன்றங் குறும்பனை யோடு
மணமிகு தெங்க மதுரைமுன் பாலை
இணருபின் பாலையோ டேழ்தலை மேய
உணவமல் நாற்பதோ டொன்பது நாடே..
அவை , ஏழ் குணகரை நாடு, ஏழ் குன்றநாடு, ஏழ் குறும்பனை நாடு,
மணமிகும் - ஏழ் தெங்க நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் முன்பாலை நாடு,
அதனை ஒட்டிய - ஏழ் பின்பாலை நாடு
என ஏழு என்ற எண்ணினை முதலில் கொண்ட உணவு வளம் மிக்க நாற்பத்தேழு நாடுகளைக்கொண்டதாக இருந்ததாம் பெருவள நாடு.
இதுமட்டுமல்லாமல்
கொல்லம், குமரி முதலான வளம் மிக்க பல வள நாடுகளையும் கொண்டு இயல்பான பெருமையினையும் வளமும் பொருந்தியதாகத் திகழ்ந்ததாம் அப்பெருவள நாடு என்பதை ...
கொல்லம தோடு குமரி முதலா
மல்லன் மிகும்பன் மலை வள நாடும்
எல்லியல் பாகவே ழெழோடு குன்றா
நல்லியல் பாகவந் நாடு பொலிந்த.
என்று கூறுகிறார் புலவர் குழந்தை அவர்கள் .
அடுத்து தென்பாலி நாட்டைப் பற்றி --- தொடரும்
ஞாயிறு, 3 ஜூலை, 2011
இராவண காவியம் தொடர்: 2
எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும்போதும் வாழ்த்துப் பாடுவது மரபு. அந்த வகையில் புலவர் குழந்தை அவர்கள் தமிழ்த் தாய்க்கு வாழ்த்து சொல்லி; இம் மாபெரும் காவியத்தைத் தொடங்குகிறார்.
தமிழ்த்தாய்க்கு மட்டுமா வாழ்த்து கூறினார்?
தமிழகத்தையும், தமிழ் மக்களையும், தமிழ்ப் புலவர்களையும், தமிழ் அரசர்களையும் போற்றிவிட்டே இக்காவியத்தைத் தொடங்குகிறார்.
தமிழ்த்தாய் வாழ்த்து!
உலகம் ஊமையாய் உள்ளவக் காலையே
பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே
இலகி இன்றுநா னென்னு மொழிக்கெலாம்
தலைமையாம் தமிழ்த் தாயினைப் போற்றுவாம்!
உலகில் வாழும் அனைத்து மக்களும் பேச்சு என்பது அறியாமல் ஊமையாக வாழ்ந்திருந்த காலத்திலேயே, பல்வேறு கலைச் செல்வங்களைத் தன்னுள்ளே கொண்டு இன்றைக்கு நானும் ஒரு மொழி என்று சொல்லிகொள்கின்ற அனைத்து மொழிகளுக்கும் தலைமை தாங்கும் தமிழன்னையைப் போற்றுகிறார்!
தமிழ் மக்கள் :
ஒழுக்க மென்ப துயிரினு மேலதன்
இழுக்கம் போலிழி வில்லை யெனுஞ் சொலைப்
பழக்க மாக்கிப் பயின்று பயின்றுயர்
வழக்க மாந்தமிழ் மக்களைப் போற்றுவோம்!
(பிரித்துப் படிக்க:
ஒழுக்கம் என்பது உயிரினம் மேல் அதன்
இழுக்கம் போல் இழிவில்லை எனும் சொல்லைப்
பழக்கம் ஆக்கிப் பயின்று பயின்று உயர்
வழக்கமாம் தமிழ் மக்களைப் போற்றுவோம் )
ஒழுக்கம் என்பது தமது உயிரைவிட மேலானதாக, தரம்கெட்ட வாழ்க்கை முறைபோன்ற இழுக்கு வேறு ஏதும் இல்லைஎன்று உணர்ந்து; உயர்ந்த வாழ்க்கையை வாழ்வதையே பழக்கமாக்கி சிறந்த வாழ்க்கையை வாழ்ந்த தமிழ் மக்களைப் போற்றுகிறார்!
தமிழ்ப் புலவர்களுக்கு வாழ்த்து!
பலதுறைத் தமிழ்ப் பாட்டு முரையுஞ்செய்
துலக மின்புற வோதியுன் தாய்மொழிக்
கலகி லாததொண் டாற்றிய முத்தமிழ்ப்
புலவர் பொன்னடிப் போதை வணங்குவாம்!
(பிரித்துப் படிக்க:
பல துறைத் தமிழ்ப் பாட்டும் உரையும் செய்து
உலகம் இன்புற ஓதியும் தாய்மொழிக்கு
அலகு இலாத தொண்டாற்றிய முத்தமிழ்ப்
புலவர் பொன்னடிப் போதை வணங்குவாம்!)
தமிழில் பல துறைகளில் பாட்டுக்களை இயற்றியும் உரை நூல்களை எழுதியும் உலக மக்கள் மகிழும்படி கருத்துக்களை எடுத்துக் கூறியும் தாய்மொழிக்கு அளவிலாத பணி செய்த முத்தமிழ்ப் புலவர் பெருமக்களைப் போற்றுவோம் என்கிறார் !
தமிழ் அரசர்களுக்கு வாழ்த்து!
மலையுங் காடும் வயலுங் கடலுமா
முலக நான்கு முறுவலந் தேங்கிய
நிலைய மாக நிகழ்த்திய நானிலத்
தலைவர் பொற்கழல் தம்மை வழுத்துவாம்!
ஆஹா... என்ன ஒரு அருமையான பாடல்! நானில மன்னர்களையும் ஒரே பாடலில் அதுவும் ஒரே வரியிலேயே வாழ்த்திவிடுகிறார் புலவர் குழந்தை அவர்கள்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய மிக்க வளம் பொருந்திய நாட்டை ஆண்ட நாநிலத்து அரசர்களையும் ஒருசேர வாழ்த்தி மகிழ்ந்து தன் காவியத்தைத் தொடர்கிறார்.
மலையும் மலை சார்ந்த இடமும் - குறிஞ்சி
காடும் காடு சார்ந்த இடமும் - முல்லை
வயலும் வயல் சார்ந்த இடமும் - மருதம்
கடலும் கடல் சார்ந்த இடமும் - நெய்தல்...
குறிப்பு : : இராவணன் காலத்தில் திராவிட நாட்டில் பாலை நிலம் கிடையாது. தென்குமரி ஆறும் பஃறுளி ஆறும் வளம் பெற்று நீர் வளமும் நிலவளமும் செறிந்த நாடாயிருந்தது.
காவியத் தோற்றம்:
இக்காவியம் தோன்றுதற்குக் காரணம் என்னவென புலவர் கூறுகிறார்;.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்ற புகழுக்குரிய நம் தமிழ் மக்கள் எட்டுத்திசையிலும் மிக்க பெருமையுடன் வாழ்ந்து வந்த காலத்தில், வடதிசையிலிருந்து திராவிடத்தில் புகுந்த ஆரியர்கள் நம்முடன் கலந்து பழகி நல்லவர்கள் போல நடித்து, இராமன் என்ற ஒரு அரச குமாரனை அழைத்துவந்து நம் தமிழ் மக்களுடன் பகை கொள்ளச் செய்து நம் இனத்தவரையே ஒழித்தார்கள்
ஆய்ந்தறியும் திறனில்லாத இராமன் செய்த இக்கொலைச் செயலை வாய்மையில்லாத வால்மீகி வடமொழியில் காவியமாகத் தீட்டிவிட்டான்.
காலம் கடந்து இக்காவியத்தின் உண்மைநிலையைத் தமிழர்கள் உணர்ந்தால் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் பெரும் பகை வளரும் என்பதை உணராத வால்மீகி (வடமொழியில் இருந்ததால்... காலம் கடந்து இதனைத் தமிழர்கள் உணர்வர் என்பதறியாது) பைந்தமிழ் மக்களை அரக்கர்கள் என்றும் அக்றிணையாக குரங்குகள் என்று கூறி நாத்தழும்பேறப் பழித்துப் புனைந்துவிட்டான்.
தமிழினப் பகைவனான கம்பனும், வால்மீகி சொன்ன முழுப் பொய்யை உண்மையான - உயர்வான கதை என்று தமிழர்கள் நம்பும்படியாகத் தமிழில் ஒரு காவியத்தைச் செய்துவிட்டான்...
இதை புலவர் அவர்கள் கீழ்கண்ட பாடலில் அழகாகக் கூறுகிறார்
தம்மி னப்பகை சார்தமிழ்க் கம்பனும்
அம்முழுப் பொய்யதை எந்தமிழர்கள்
மெய்ம்மை யான விழுக்கதை யாமென
அம்மவோ நம்பிடச் செய்து விட்டனன்" .. என்கிறார்!
அதுமட்டுமா?
தங்குலப் பகை தன்னைக் கடவுளா
எங்குலத்தவ ரெண்ணி வணங்கியே
கங்கு லைபகற் கால மெனக்கொளும்
திங்கள் போலத் திறம்பிட லாயினர் என்கிறார்...
அதாவது.. இந்தக் கம்பன் செய்த இப் பொய்க்காவியத்தை மெய்யென நம்பிய நம் தமிழர்கள் நம் தொல்பெருமை வாய்ந்த தமிழ் மறக்குடி மக்களைக் கொடிய பகைவர்கள் போல எண்ணி வெறுத்தும், நம் குலத்தின் பகைவனான இராமனைக் கடவுள் என நம்பி , வணங்கி, இரவினைப் பகல் என்றும் பகலினை இரவென்றும் தவறாக எண்ணி நிலைகுலைந்து விட்டனர் என்கிறார்.
அதனால்...
அம்ம யக்க மகன்று தமிழர்கள்
தம்மி னத்துத் தலைவர் பெருமையைச்
செம்ம னத்துத் தெளிந்திடச் செய்குதல்
எம்மி னத்தி னிருங்கட னாகுமால்
எனவே இந்த மயக்கத்தை நீக்கி தமிழினத் தலைவனாகிய இராவணனின் பெருமையை உணரச்செய்து, தமிழரின் நல்ல உள்ளத்தினத் தெளிவடையச் செய்வதும் நம் தமிழினத்தவரின் தலையாய கடமை ஆகுமாதலால் ...இந்தக் காவியம் தோன்றியது.
விழுந்த ஞாயிறு மேக்கெழு காலையில்
ஒழிந்து வல்லிரு ளோவுறச் செங்கதிர்
பொழிந்து மக்கட்குப் புத்தொளி காட்டல்போல்
எழுந்த தேகொலாம் இப்பெருங் காவியம்
என்கிறார்... அதாவது.. மேற்குத் திசையில் மறைந்த சூரியன் மறுபடி கிழக்குத் திசையில் மேலெழுந்து வரும்போது அடர்ந்த இருள் ஒழிந்து போகுமாறு தன் செங்கதிரைப் பரப்பி புதிய வெளிச்சம் காட்டுவதுபோல இப்பெரும் காவியம் எழுந்தது என்கிறார்.
இக்காவியத்தின் நோக்கமோ...
கரும்பை வேம்பென வேம்பைக் கரும்பென
விரும்பி வாழுமே யாமை வெருவுற
அரும்பி உண்மை அருந்தமிழ் மக்கள்முன்
திரும்பி வாழ்ந்திடச் செய்யுமிக் காவியம்
அதாவது… கரும்பை வேம்பு என நினைத்து ஒதுக்கியும் வேம்பைக் கரும்பென எண்ணி விரும்பி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் அறியாமை இருளை ஓட்டி தமிழர்களின் உண்மை நிலையை உணரச்செய்து மானமுள்ள தமிழர்களாய் வாழச்செய்வதே இக்காவியத்தின் நோக்கமெனக் கூறுகிறார்..
அவையடக்கம்:
குற்றமில்லாத இத்தமிழினத்தின் பெருங்கதையைக் கேட்டால் சிலர் ஏசுவார், சிலர் இது உண்மைதானே என உரைப்பார், உண்மை உணர்ந்தாலும் சிலர் ஏற்றுக்கொள்ளாமலிருப்பார் ஆனால் இதைத் தவறென்று எதிர்த்துப் பேசக் கூசுவார். சிலரோ ஆ ஊ என்று கூக்குரலிட்டுக் கொண்டிருப்பார் என்பதை,
ஏசு வார்சிலர் ஈதுண்மை யேயெனப்
பேசு வார்சிலர் பேச வெதிர்மனங்
கூசு வார்சிலர் கூக்குர லார்சிலர்
மாசிலாத் தமிழ் மாக்கதை கேட்கினே! -- என்று வடிக்கிறார்.
இன்னும் சிலரோ, வழிவழியாய் வந்த மரபை மாற்றும் இது என்ன நெறி? இது ஒரு பழிச் செயல், இது ஆரிய இனத்தவர் மீது கொண்ட பகைமை அடிப்படியில் கூறும் வசை என்பார்கள்.
இது அநியாயம். இது முறையல்ல, இதை ஒழிக்க வேண்டும். ஒழித்துக்கட்டுவோம் என்று பலரும் கூறுவார்.
ஆனால்....வடக்கிலிருந்து வந்த கதையினை அதன் நிலையை மாற்றி உரைத்து வடவர்களின் கொடும் செயல்களையெல்லாம் தெளிவு படுத்தி எடுத்துரைக்க ஆக்கியதே அன்றி இக்காவியத்தில் குற்றம் சொல்லுமளவுக்குத் தீமை ஏதுமில்லை.
பொய்யையும் புரட்டையும் பல கதைகளையும் புளுகி தெய்வத்தன்மையைத் திருட்டுத்தனமாக நுழைத்த ஆரியர்களின் செயலை அகற்றி உண்மையை கூறித் தமிழர்களை தம்நிலைக்குக் கொண்டுவரச் செய்வதல்லாது வேறு நோக்கமெதுவுமில்லை இக்காவியத்தில்
மனுநீதி என்று வர்ண சாஸ்திரம் இயற்றி ஒற்றுமையாய் வாழ்ந்திருந்த தமிழர்களிடத்தில் ஜாதி பேதமென்ற வேற்றுமையைப் புகுத்தி ஆரியத்திற்கு அடிமையாக்கி அந்த அடிமை வாழ்விலேயே அழுத்தி வைத்திருக்கும் வாழ்விலிருந்து விடுதலை அடைய நினைக்கும் தமிழர்களுக்குப் பொருத்தமான நூல் இது.
கோதிலாத குழந்தை குதலையைத்
தீது நன்றெனத் தேர்வரோ பெற்றவர்
ஈது நந்தமிழ் ழன்கதை யேயிதை
ஓது வோணுமீங் குங்கள் குழந்தையே
வசை மலிந்த மறுக்கெட வண்டமிழ்ப்
பசை மலிந்து பயின்று பயன்பெற
இசை மலிந்த இராவண காவியம்
திசை மலிந்து சிறந்து திகழ்கவே !
எந்தக் குற்றமும் செயாத தம் குழந்தையின் மழலை மொழிகளில் நன்மை தீமைஎன்று குற்றம் காண்பார்களா? மாட்டர்கலல்லவா அதே போல, இது நம் தமிழினத்தின் கதை இதைத் தெளிவுபட உரைப்பவன் உங்கள் அன்புக்குழந்தை என்ற பேர் கொண்டவன்.
தமிழினத்தவர்க்கு ஆரியரால் வந்த பழி மலிந்து கிடக்க, அந்தக் குற்றம் நீங்கிடத் தமிழ்ப் பற்றுநிறைந்த இந்நூலை எல்லோரும் பயின்று இராவண காவியத்தின் புகழை எல்லாத் திசைகளிலும் சென்று அடையச் செய்வீராக! என்று கூறி காவியத்தைத் தொடங்குகிறார்.
இக்காவியத்தில் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரிக் காண்டம் போர்க்காண்டம் என மொத்தம் ஐந்து காண்டங்களும், அதில் 57 படலங்களும், 3100 செய்யுட்களும் உள்ளது.
சொற்பொழிவாற்றுவது எளிதெனத் தோன்றுகிறது. தமிழில் தட்டச்சுச் செய்வது மிகவும் கடினமாகவே உள்ளது., இருப்பினும் என்னால் முயன்றவரை இங்கு அனைவரும் பயன் பெறுமாறு இக்காவியத்தினை அளிப்பேன் என நம்புகிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)