என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.
மேடைப் பேச்சுக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேடைப் பேச்சுக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஜூன், 2012

புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநாடு


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
வியாழன், 31 மே 2012 15:39
E-mail Print
- தொகுப்பு: மின்சாரம்
பொதுக்குழு உறுப்பினர் மணிமேகலை சுப்பையா (சிவகங்கை) தென்சென்னை மகளிரணி அமைப்பாளர் செ. கனகா, தாம்பரம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பண்பொளி, வடசென்னை மகளிர் பாசறை தலைவர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துபாய் - லதாராணி மாநாட்டுத் தொடக்கவுரை நிகழ்த்தினார் (வேலூர், 29.5.2012).
கலை நிகழ்ச்சிகள் - பேசா நாடகம் - நூல்கள் வெளியீடு  - தீர்மானங்கள்
மாநாட்டு நிறைவுப் பேருரை தமிழர் தலைவர் - மக்கள் கடலில் மிதந்தது கோட்டை மைதானம்


வேலூர் மே 31- வேலூர் புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டின் மாலை நிகழ்ச்சிகள், பேரணி, கலை நிகழ்ச்சிகள், நூல் வெளியீடு, தீர்மானங்கள் - உரை வீச்சுகள் என்று பல்வேறு சிறப்புகளுடன் வரலாற்றுப் பெருமையோடு நிறைவுற்றது.
பல்வேறு அம்சங்களுடன், மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளுடன், பல்லாயிரக் கணக்கான பொது மக்களைச் சந்தித்து வந்த - புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டுப் பேரணி மாலை 6 மணி அளவில் வேலூர் கோட்டை மைதானத்தை வந்தடைந்தது.
ஜெயமணி குமாரின் மந்திரமா? தந்திரமா?
பேரணி உள்ளே நுழையும்போதே- பொது மக்கள் மைதானத்தில் வெள்ளம் போல் திரண்டிருந்தனர். திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசையும், அதனைத் தொடர்ந்து தோழியர் ஜெயமணி குமார் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியும் கலை கட்டியிருந்தது.
பெண் ஒருவர் இந்தக் கலையில் கை தேர்ந்து மக்களிடம் விளக்கிய காட்சியை மிகுந்த ஆர்வத்துடன் பொது மக்கள் பார்த்து ரசித்தனர்.
ஒவ்வொரு காட்சியையும் செய்து காட்டி, மந்திரமல்ல - தந்திரமே என்று அவர் நிரூபித்தபோது மக்கள் இவ்வளவு எளிதாக ஏமாந்து போய்விட்டோமே என்று திகைத்தனர். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவர் செய்து காட்டியபோது பொதுமக்கள் பகுதியிலிருந்து பலத்த கர ஒலி வெடித்துக் கிளம்பியது.
மக்கள் கடல் ரசித்த கலை நிகழ்ச்சிகள்
திறந்த வெளி மாநாட்டில் மாணவிகள் நடத்திக் காட்டிய கலை நிகழ்ச்சிகள் மிக மிக நேர்த்தியானவை. வைத்த விழி வாங்காமல் ருசித்து, இரசித்து மகிழ்ந்தனர் என்றால் அது மிகையல்ல.
புரட்சிக் கவிஞர் பாடலுக்கும், எழுச்சிக் கவிஞர் காசியானந்தன் பாடலுக்கும் மாணவியர் நாட்டியம் ஆடி மகிழ்வித்தனர். அத்தனையும் இனவுணர்வு - பெண்கள் புத்துலகப் பகுத்தறிவுப் பாடல்கள்!
மோகனப்பிரியா, அறிவுச்சுடர், சு.ஓவியா, மதிவதனி, அ.அறிவுமதி, த.ஓவியா ஆகிய மாணவிகள் மிகமிகச் சிறப்பாக நடனமாடி மகிழ்வித்தனர். (பலத்த கரஒலி!)
குடியாத்தம் கல்லூரி மாணவி சரண்யா பத்து வகையான உடற்பயிற்சிகளை (யோகா) செய்து காட்டி மயிர்க் கூச்செறியச் செய்தார். அவருக்கு மண்டலத் தலைவர் பா.அருணாச்சலம் ரூ.500 அளித்து ஊக்குவித்தார்!
பேசா நாடகம்
பெண்கள் சமையல்காரி, வரதட்சணை கொண்டு வரவேண்டியவள், பிள்ளை பெறும் எந்திரம் என்கிற அடிமை நிலையைச் சித்தரிக்கும் பேசா நாடகம் ஒன்று - புதுமையானதாகவும் போற்றத் தகுந்ததாக அமைந் திருந்தது.
மோகனப்பிரியா, தமிழ்நேசன், கமலேஷ், சங்கநிதி, இனியன், இசை ஆகிய மாணவச் செல்வங்கள் பங்கு கொண்டு பாங்காக நடித்துக் காட்டினர். பேசாமல், அனைத்து உணர்வுகளையும் சைகைகளின் மூலமும், உடல் உறுப்புகளின் அசைவுகள் மூலமும் அந்த மாணவச் செல்வங்கள் நடத்தியது கண்டு பாராட்டாதார் யாருமில்லை.
பயிற்றுநர் திருச்சி கல்லூரி மாணவர் ரெங்கராசன் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். அவருக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டினார் தமிழர் தலைவர்.
மகளிர் சமூகக் காப்பு அணி
மகளிர் சமூகக் காப்பணியின் இயக்குநர் வெ. அழகுமணி அதில் பங்கேற்ற மாணவிகள் வி.பிரியதர்சினி, சு.புனிதவல்லி, டி.தேவி., க.சொர்ணதீபா, ச.இரேவதி, கோ.மங்கை, கோ.பார்கவி, இ.மணிமொழி, இ.தேன்மொழி, சு.பொன்மணி, ச.செந்தமிழ் யாழினி ச.செந்தமிழ் இன்மொழி,  சு.பொன்மணி, ப.சரண்யா, மு.முகிலாசிறீ, சு.இராதிகா, க.வெண்ணிலா, சி.குழலினி, சி.யாழினி, சு.மணிமொழி, ம.புவனேசுவரி, சர்மிளா, கோகிலா, இரம்யா ஆகியோருக்குக் கழகத் தலைவர் சான்றிதழ்கள் அளித்துப் பாராட்டினார்.
தீர்மானங்கள் 14 தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் பல்வேறு அடக்குமுறைகளுக்கு விடிவு காணும் வகையில் பதினான்கு நறுக்குத் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. (காண்க: விடுதலை 30-5-2012  பக்கம் 4)
திராவிடர் கழக மகளிரணி மாநில அமைப்பாளர் கலைச்செல்வி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநாட்டுக்கு மாநில மகளிர் பாசறைத் தலைவர் டெய்சி. மணியம்மை தலைமை வகித்தார்.
லதாராணி - துபாய்
துபாய் - பாவலர் லதாராணி மாநாட்டின் தொடக்க உரையை ஆற்றினார். அவர் தம் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
தலைவர்களில் பலவகை உண்டு. பெரும்பாலோர் தோற்றமளிக்கும் தலைவர்கள்தான் நம் நாட்டில் உண்டு. ஆனால் தந்தை பெரியார் அவர்களோ எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் தலைவர் ஆவார்.
பெண்ணுரிமையில் தந்தை பெரியார் சிந்தித்த அளவுக்கு யாரும் சிந்தித்தது கிடையாது. நம் பெண்களுக்காக தந்தை பெரியார் எவ்வளவோ அவமானங்களைச் சந்தித்து இருக்கிறார்.
உண்மையான ஒரு தலைவரின் மரணம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். அப்படித்தான் தந்தை பெரியார் நம் சமூகத்தில் உள்ளார்.
தந்தை பெரியார் அவர்களால் நாம் கல்வி உரிமை பெற்றோம்; உத்தியோக வாய்ப்புகளைப் பெற்றோம். ஆனால் இன்னும் மூடநம்பிக்கைகளிலிருந்து நம் பெண்கள் விடுதலை பெற்றனரா?  இன்னும் நித்தியானந்தாக்கள் தோன்றிக் கொண்டுள்ளனரே, இன்னும் ஜெயேந்திரர்கள் ஜெகத்குரு என்று சொல்லப்படுகிறார்களே.

தமிழர் தலைவருடன் பேசா நாடகத்தில் பங்கேற்ற பிஞ்சுகள்
நகைக் கடைக்காரன் அட்சய திருதியை என்கிறான் - நம் பெண்கள் ஏமாறுகிறார்களே! புடவைக் கடைக்காரன் தங்களிடம் தேங்கிக் கிடக்கும் புடவைகளின் நிறத்திற்கேற்ப சகோதரிக்குப் பச்சை நிறப் புடவை வாங்கிக் கொடுக்கச் சொல்லுகிறான். அண்ணிக்கு ஆகாது, சிகப்புப் புடவையை வாங்கிக் கொடுக்கச் சொல்லு கிறானே. இந்த வியாபாரிகள் தங்கள் தொழிலுக்கு பக்தியைத் தந்திரமாகப் பயன் படுத்திக் கொள்கிறார்களே.
இராணுவ இரகசியத்தை வெளிநாட்டுக்குக் காட்டிக் கொடுப்பவன் மட்டும் தேசத் துரோகியல்ல - ஒரு நாட்டின் பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடை போடுபவனும் தேசத் துரோகியே! என்று அருமையான கருத்துக்களை எடுத்து வைத்தார் தமிழ் ஆர்வலர் துபாயைச் சேர்ந்த பாவலர் லதாராணி.
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, க.திருமகள், மற்றும் பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி ஆகியோரின் உரையைத் தொடர்ந்து கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி உரையாற்றினார்.
(மாலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் விழாக் குழுவின் சார்பில் பயனாடைகளை அணிவித்து உரையாற்றினார்.)
பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி தம் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு வகை உயர்ந்த மரியாதைக்குரியவர்களாக இப்போது மதிக்கப் படுகின்றனர். முன்பொரு காலத்தில் இந்த நிலை இருந்ததா? கறுப்புப் புடவை அணிந்து கூட்டங்களுக்கோ, மாநாடுகளுக்கோ சென்றால் என்ன சொல்லுவார்கள்? போவுது பார் பொம்பளை! கறுப்புச் சேலை கட்டிக்கிட்டு குடும்பத்துப் பெண்கள் செய்யக் கூடிய காரியமா இது? இந்தக் குடும்பம் உருப்படுமா? என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டு சாபமிட்ட காலம் இருந்ததுண்டு.
இப்படி அவமானப்படுத்தப்பட்ட நம் இயக்கத்தவர் களின் அஸ்திவாரத்தின் மீது நின்றுதான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்; மரியாதையையும் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
நளனுக்குத் துணை போன மனைவியும், ராமன் கட்டளைக்குக் கட்டுப்பட்டுக் காட்டுக்குப் போன சீதையும் பெண்களுக்கு வழிகாட்ட முடியுமா?
இது ஏதோ திராவிடர் கழகப் பெண்கள் பிரச்சினை மட்டுமல்ல. அனைத்துப் பெண்களும் சிந்திப்பதற்கான கருத்துக்கள்தான். பெண்கள் மாநாட்டை திராவிடர் கழகம் கூட்டுவது ஒட்டு மொத்த பெண்களின் விடுதலைக்காகத்தான் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி.
ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம்
கழகப் பொதுக் குழு உறுப்பினர் ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அவர்கள் தம் உரையில் முக்கியமாகத் தெரிவித்ததாவது:
எனக்கு இந்த ஊர் மாமனார் - மாமியார் வீடு. டார்பிடோ ஜனார்த்தனம் அவர்களைத் திருமணம் செய்து கொண்டதால் மட்டுமல்ல - இது மாமியார் வீடு. திருமணமாகி சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்த வேலூர் சிறை என்ற மாமியார் வீட்டுக்குதான் என் துணைவரோடு வந்தேன் என்று அவர் சொன்னது அனைவரும் இரசிக்கும்படி இருந்தது.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் ஒவ்வொன்றும் அருமையானவை. நமது  மாநாட்டின் இன்றைய தீர்மானங்கள் - நாளைய நம் நாட்டுச் சட்டங்கள் ஆகும்.
எங்களுக்குப் பின்னர் அடுத்த தலைமுறையினர் தயாராகிவிட்டனர் என்பதை இம்மாநாட்டில் நேரில் கண்டு மிகப் பெரிய அளவில் மனநிறைவுடன் உள்ளோம் - மகிழ்கிறோம்.
இன்றைக்குச் சிலர் கிளம்பியிருக்கின்றனர். திராவிடத்தால் நாம் வீழ்ந்தோம் என்று சொல்லிக் கொண்டு. அப்படிச் சொல்பவர்களை விட பயித்தியக் காரர்கள் வேறு யாரும் கிடையாது. அப்படிச் சொல்லு பவர்களை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது.
தன்மான உணர்வும், பகுத்தறிவு உணர்வும் நமக்கு யார் கொடுத்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா என்ற வினாவுடன் தன் உரையை நிறைவு செய்தார் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம். மாநாட்டு நிறைவுரையை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நிகழ்த்தினார்.
திறந்த வெளி மாநாட்டுக்கு வடசென்னை மகளிரணி அமைப்பாளர் கு.தங்கமணி, பொதுக்குழு உறுப்பினர் திண்டிவனம் தா. விசயலக்குமி, பொதுக் குழு உறுப்பினர் சொர்ணா ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இரவு 10 மணிக்கு வரலாற்றுச் சிறப்புகளுடன் புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாடு நிறைவுற்றது.


வேலூர் மாநாட்டில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவர்கள்
திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் புத்துலக பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டில் விருது அளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டோர் :
திராவிடர் இயக்கச் சான்றோர்கள்
சத்துவாச்சாரி : சாமிசம்மாரன், ச.கி.செல்வ நாதன், இரா.கணேசன்;
வேலூர் : தாமோதரன், பால்காரர் முனிரத்தினம், பெரியார் இல்லம் முனிசாமி, செய்யாறு: பா.அருணாச்சலம்.
திராவிடர் இயக்க வீராங்கனைகள்
சென்னை : ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், சத்துவாச் சாரி : கனகம்மாள் கணேசன்,
நாகம்மாள், குடியாத்தம்: கமலம்மாள், வேலூர் : கலைமணி பழனியப்பன், வடசேரி: மீராஜெகதீசன்.
கீழ்க்கண்ட பெருமக்களுக்கு விருதுகள் நேரில் அளிக்கப்படும்
திராவிடர் இயக்கச் சாதனையாளர்கள்
வேலூர் : வேந்தர் ஜி.விசுவநாதன், புலவர் ருக்மணி பன்னீர்செல்வம்
மனிதநேய மாண்பாளர்கள் வேலூர் : சிவகுமார் (வள்ளல் கிருஷ்ணசாமி முதலியார் மேனிலைப்பள்ளி), திருப்பத்தூர் - கணேஷ்மல், திருவண்ணாமலை : மருத்துவர் சாய் பிரசன்னா.
நூல் - குறுந்தகடுகள் வெளியீடு
95 ஆண்டுகளுக்கு முன் திராவிட இயக்க  சமூகப் புரட்சி  என்னும் நூல் அன்னை மணியம் மையாரின் சிந்தனை முத்துக்கள்,  பெரியார் பிஞ்சு பழகு முகாம் தஞ்சை ஆகிய குறுந்தகடுகளும் திறந்த வெளி மாநாட்டு மேடையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களால் வெளியிடப்பட்டன.
வேலூர் மண்டலத் திராவிடர் கழகத் தலைவர் பா.அருணாச்சலம், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் முஹம்மது சகி, தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் முதலியோர் ரூ. 500 கொடுத்துப் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து கிருட்டிணகிரி  மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தா.திருப்பதி, வடசேரி வழக்குரைஞர் ஜெ.துரை, குயில்மொழி முதலியோர் வரிசையாகச் சென்று தமிழர் தலைவரிடம் மேடையில் பெற்றுக் கொண்டனர்.


வேலூர் மாநாட்டில் நடந்த குருதி கொடை முகாம்

ஆண்களை  விட    பெண்கள் போட்டி  போட்டு ரத்த தானம் செய்தனர்.  உங்கள் உடல்  ரத்த தானம் செய்ய எடை குறைவாக இருக்கிறது என்று   சொன்னாலும்   கூட  நான்  கண்டிப்பாய்  கொடுப்பேன்  என்று சில தோழர்கள்  பிடிவாதம்  பிடித்தனர். பின்பு அவர்களுக்கு விளக்கி சொன்ன பின்னர்  அமைதி யாய்  ஏற்றனர்.
மருத்துவ  குழுவிலே  வந்த மருத்துவர் பசுபதி தஞ்சை மருத்துவ கல்லூரியில் பணியாற்றிய போது தஞ்சை மற்றும் ஒரத்தநாடு தோழர்கள் ஏற்பாடுகள் செய்த இத்தகைய குருதி கொடைமுகாம் பற்றிய நினைவுகளை தோழர்களுடன் பகிர்ந்து கொண்டார். குருதி கொடை கொடுத்த தோழர்களுக்கு சான்றிதழ்கள் மாநாட்டு அரங்க மேடையிலேயே வழங்கப்பட்டது.

வியாழன், 31 மே, 2012

திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா - புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டில்

திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா - புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டில் ( வேலூர் : 29 -05 -2012 ) தொடக்கவுரை ஆற்றியபோது

விடுதலை நாளிதழ் ; வியாழன், 31 மே 2012 15:33   
லதாராணி - துபாய்
துபாய் - பாவலர் லதாராணி மாநாட்டின் தொடக்க உரையை ஆற்றினார். அவர் தம் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

தலைவர்களில் பலவகை உண்டு. பெரும்பாலோர் தோற்றமளிக்கும் தலைவர்கள்தான் நம் நாட்டில் உண்டு. ஆனால் தந்தை பெரியார் அவர்களோ எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் தலைவர் ஆவார்.

பெண்ணுரிமையில் தந்தை பெரியார் சிந்தித்த அளவுக்கு யாரும் சிந்தித்தது கிடையாது. நம் பெண்களுக்காக தந்தை பெரியார் எவ்வளவோ அவமானங்களைச் சந்தித்து இருக்கிறார்.

உண்மையான ஒரு தலைவரின் மரணம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். அப்படித்தான் தந்தை பெரியார் நம் சமூகத்தில் உள்ளார்.

தந்தை பெரியார் அவர்களால் நாம் கல்வி உரிமை பெற்றோம்; உத்தியோக வாய்ப்புகளைப் பெற்றோம். ஆனால் இன்னும் மூடநம்பிக்கைகளிலிருந்து நம் பெண்கள் விடுதலை பெற்றனரா? இன்னும் நித்தியானந்தாக்கள் தோன்றிக் கொண்டுள்ளனரே, இன்னும் ஜெயேந்திரர்கள் ஜெகத்குரு என்று சொல்லப்படுகிறார்களே. நகைக் கடைக்காரன் அட்சய திருதியை என்கிறான் - நம் பெண்கள் ஏமாறுகிறார்களே! புடவைக் கடைக்காரன் தங்களிடம் தேங்கிக் கிடக்கும் புடவைகளின் நிறத்திற்கேற்ப சகோதரிக்குப் பச்சை நிறப் புடவை வாங்கிக் கொடுக்கச் சொல்லுகிறான். அண்ணிக்கு ஆகாது, சிகப்புப் புடவையை வாங்கிக் கொடுக்கச் சொல்லு கிறானே. இந்த வியாபாரிகள் தங்கள் தொழிலுக்கு பக்தியைத் தந்திரமாகப் பயன் படுத்திக் கொள்கிறார்களே.

இராணுவ இரகசியத்தை வெளிநாட்டுக்குக் காட்டிக் கொடுப்பவன் மட்டும் தேசத் துரோகியல்ல - ஒரு நாட்டின் பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடை போடுபவனும் தேசத் துரோகியே! என்று அருமையான கருத்துக்களை எடுத்து வைத்தார் தமிழ் ஆர்வலர் துபாயைச் சேர்ந்த பாவலர் லதாராணி.

புதன், 21 மார்ச், 2012

நெல்லை நிகழ்ச்சிகள்

http://viduthalai.in/e-paper/30439.html

விடுதலை நாளேட்டில் வந்த செய்தி:

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
புதன், 21 மார்ச் 2012 16:18
E-mail Print

நெல்லை, மார்ச் 21-பெரியாரின் பெருந் தொண்டர் குவைத் செல்லபெருமாள் தொடங்கியுள்ள வீரமணி மோகனா சமூக நீதி அறக்கட் டளை குவைத்தின் முதல் நிகழ்ச்சியாக திராவிடக் கழகத்தின் உறுப்பினர் திரு காசி அவர்களின் துணைவி யாரும்  பெரியாரின் தொண்டருமான  மறைந்த சண்முக வடிவு அம்மையார் அவர்கள் தன்னுடைய உடலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல் லூரிக்கு தானமாக வழங்கியுள்ளதையும்,  இவரைத் தொடர்ந்து பெரியாரின் சீரிய தொண்டர்  ராமர் அவர்களும் மருத்துவக் கல்லூரிக்கு தனது உடலைத் தானமாகத் தந்துள்ளதையும் நினைவு கூறி இவர் களின்  இம்மகத்தான காரியத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தி லும், உடல் தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற் படுத்த வேண்டும் என்ற அரிய நோக்கத்திலும் திருமதி சண்முக வடிவு அம்மையாரின் முதலா மாண்டு விழாவினை ஏற்பாடு செய்திருந்தார். திருநெல்வேலியில் தந்தை பெரியார் கணினி மய்யத் தில்  07-03-12 அன்று  நடைபெற்ற இவ்விழா வில் பெரியார் பன் னாட்டு மய்யம் குவைத் கிளைச் செயலாளர், கவி ஞர் லதாராணி பூங்கா வனம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு   சிறப்புரை ஆற் றினார்.
"நினைப்பும் செய லும்" என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையில்   உடல் தானம் எதற்குக் கொடுக்க வேண்டும்? அதனால் என்ன பயன்? உயிரற்ற மனித உடல்கள் மருத்துவமனைக்குக் கொடுப்பதன் மூலம் மருத் துவக்  கல்லூரி மாணவர் கள் எவ்வாறு பயன் பெறுகிறார்கள் என்பதை மிக விளக்கமாகக் கூறி னார். மனிதனின் உயிரற்ற உடல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மனித உடற் கூறியல் படிப்பதற்கும், அறுவை சிகிச்சை பயிற் சிக்கும், அறுவை சிகிச் சையில் புதிய புதிய உத் திகள் கண்டுபிடிக்கவும் அறுவை சிகிச்சையை மேலும் எளிதாக்கவும் மற்றும் நாளொன்றுக்கு புதிய புதிய நோய்களாக தோன்றிக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் அந்த நோய்களை  முற்றி லும் அழிக்கவும்  புதிய மருந்துகள் கண்டுபிடித்து அவற்றைச் செயல்படுத்தி சோதிக்கவும் என எண் ணற்ற வகைகளில் மனி தனின் உயிரற்ற உடல் உதவியாக இருப்பதை அறியாமல் மக்கள் இந்த உடலை மண்ணில் புதைத்து புழு பூச்சிகளுக்கு இரை யாக்கியும் எரியூட்டி சாம் பலாக்கியும் வீணடித்துக் கொண்டிருக்காமல்  நமது அடுத்துவரும் தலை முறையினர் நோயற்ற குறையற்ற ஊனமற்ற சந்த தியர்களாக வாழ,  நாம் நம்முடைய வாழ்வு முடிந்த பின் இந்த உடல் களை தானமாகத் தர வேண்டும் என்று கூறினார்.
எதிர்கால சந்ததியினருக்கும்...
இன்றைய  சமுதாய முன்னேற்றத்திற்காக மட்டும் சிந்திப்பவர்க ளல்ல நம் திராவிட கழகத்தினர். எதிர்கால சந்ததியர் நலனுக்காகவும் சிந்திப்பவர்கள்தான்  பெரியார் காட்டிய பகுத் தறிவுப் பாதையில் நடந்து செல்லும் நம் திராவிடக் கழகத்தினர் என்று கூறி னார். சமுதாய முன் னேற்றத்தின் ஒவ்வொரு படியிலும் முதல் தடம் பதிப்பவர்களாக  விளங் கும் நமது திராவிடக் கழக பெரியார் தொண் டர்கள் உடல் தானம் செய்வதிலும் தமிழகத் தில் முதன்மையானவர் களாக அனைவருக்கும் எடுத்துக் காட்டாகவும், மக்களிடையே உடல் தானம் குறித்த விழிப்பு ணர்ச்சி ஏற்படுத்துபவர் களாகவும்  உள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறினார்.
விழாவிற்கு நெல்லை மாவட்ட திராவிடக் கழக மண்டலச் செயலாளர் பால்ராசேந்திரம் தலைமை ஏற்று சிறப்பாக நடத்தினார். தென்காசி திராவிட  கழக மாவட்டத் தலைவர் டேவிட் செல்லத் துரை முன்னிலை வகிக்க, நெல்லை மாவட்ட பகுத் தறிவாளர் கழக அமைப் பாளர் இரா.வேல்முருகன் வரவேற்புரை அளிக்க, நெல்லை மாவட்ட செய லாளர் ராசேந்திரன் அறி முக உரையாற்ற விழா வினைத் தொகுத்து வழங் கியும் தொடக்கவுரை வழங்கியும் முத்தமிழ் அவர்கள் சிறப்பித்தார். விழாவின் நிறைவில் உடற் கொடை அளித்த அமரர். திருமதி சண்முக வடிவு அம்மையாரின் துணைவர், பெரியார் பெருந்தொண் டர் காசி  நன்றி அறிவித் தார்.
உடற் கொடையளிக்க முன்வந்தோர்
இவ்விழாவில் மேலும் பன்னிரண்டு திராவிட கழகத் தோழர்கள் தங்கள் மறைவிற்குப் பின் தங்கள் உடல்களைத் தானமாகத் தருவதாக தங்கள் பெயர் களை  மருத்துவமனையில் பதிவு செய்த சான்றிதழை கவிஞர் . திருமதி . லதா ராணி பூங்காவனம் அவர் கள் கழகத் தோழர்களுக்கு வழங்கினார்.  விழாவில் வீரமணி மோகனா சமூக நீதி அறக்கட்டளை சார் பாக  கவிஞர் . லதாராணி பூங்காவனம் அவர்களுக்கு உடற்கொடை சொற் பொழிவின் நினைவுப் பரிசினை அறக்கட்டளை தலைவர் திரு. லியாகத் அலி அவர்கள் அளித் தார்.
விழாவிற்கு முனைவர். தலைமையாசிரியர் (ஓய்வு) வாய்.மு.கும்ப லிங்கம் அவர்களும், சிற்பி பாமா அவர்களும், பெரியாரடியான் அவர் களும் மற்றும் உடற் கொடை அளித்த பெரி யார் தொண்டர் ராமர் அவர்களின் துணைவி யார் திருமதி லீலா ராமர் அவர்களும் மற்றும்  திருநெல்வேலி இந்துக் கல்லூரியின் ஆசிரியர் நீலகிருஷ்ண பாபு, சந் தானம் இன்னும் ஏனை யோர் வந்து விழாவினைச் சிறப்பித்து பெருமை படுத்தினர்.
அறக்கட்டளை தலை வர்  லியாகத் அலி பேசும் போது  தந்தை பெரியா ருக்குப் பின் இக்கழகம் அழிந்துவிடுமென்று எதிரிகள் நினைத்திருந் தனர். ஆனால் தமிழர் தலைவர்.ஆசிரியர் அய்யா கி. வீரமணி அவர் களின் அயராத உழைப் பும் அவருக்கு உற்ற துணையாக இருக்கும் அவர்துணைவியார் மோகனா அம்மையாரின் ஒத்துழைப்பினாலும் மற் றும் கழக தொண்டர் களின் ஒத்துழைப்பி னாலும் இக்கழகம் உல கெங்கிலும் கிளை பரப்பி பிரமிப்பூட்டும் அள விற்கு வளர்ந்துவிட்டது. அதில் ஒரு கிளையாகத் தான் குவைத்திலிருந்து நாங்கள் இங்கு வந்து நம் கழகத்தாரின் உடற் கொடை என்ற இந்த மகத்தான பணிக்கு விழா எடுத்துக் கொண்டிருக்கி றோம் எனக் கூறினார்.
விழா சிறப்புற நடை பெற அறக்கட்டளையின் காப்பாளர் பெரியாரின் பெருந்தொண்டர்  குவைத் செல்லப்பெரு மாள் அவர்கள் தன் னுடைய வாழ்த்தினைத் தெரிவித்திருந்தார். மேலும் ஒவ்வொரு வரு டமும் உடற்கொடை கொடுத்த நம்முடைய கழகத் தொண்டர்களின் நினைவு கூறும் விழாவை செய்வதாக கூறியுள்ளார்.
இராவண காவியம்
சிறப்புற நடந்த இவ் விழாவினைத் தொடர்ந்து கவிஞர். லதாராணி பூங் காவனம்அவர்கள் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் தமிழியல் ஆய்வு மையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு 09 -03 -12 அன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் "இராவணகாவியம்" அறிமுக உரையாற்றினார். கல்லூரியின் தமிழ் மாண வர்கள் மற்றும் கணினி பயிலும் மாணவர்களென அனைவரும் மிக்க ஆவ லுடன் இராவண காவி யத்தைக் கேட்டு வியப் புற்றனர்.தொடர்ந்து நடந்த கருத்தரங்கில்  இராவணகாவியம் குறித்த பலகேள்விகளைக் கேட்டு அறிந்தனர்.  "இராவண காவியம்"  புத்தகம் எங்கு கிடைக்குமென்று மிகுந்த ஆவலுடன் கேட்டறிந் தனர்.  இராவண காவி யத்தைப் படிக்க அவர் களுக்கிருந்த ஆர்வம் கண்டு வியப்பாக இருந் ததாக இராவண காவிய சொற்பொழிவாளர் கவி ஞர் லதாராணி பூங்கா வனம் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

* விடுதலை நாளேடு புதன், 21 மார்ச் 2012 16:18

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

அப்பாவின் நினைவரங்கத்தில் பெரியார் அண்ணாவின் பிறந்த நாள் விழா..


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
விடுதலை  நாளேட்டில் வந்த செய்தி ................ 
குவைத்தில் தலைவருக்கும் சீடருக்கும் விழா
குவைத், அக். 7- குவலயம் போற்றும் பெரியார், அண்ணா குவைத்தில் தலைவருக்கும் சீடருக்கும் விழா. குவைத்தில் தந்தை பெரியார் அவர்களின் 133 ஆவது பிறந்த நாள் விழாவும், பேரறிஞர் அண்ணா அவர்களின் 103ஆவது பிறந்த நாள் விழாவும் 02.10.2011 அன்று மாலை 7.00 மணிக்கு, மன் ஓ சால்வா உணவகத்தில் ஆசிரியர் பூங்காவனம் நினைவரங்கத்தில் கோலாகலமாக நடந்தேறியது. தந்தை பெரியார் நூலகமும் தாய்மண்கலை இலக் கியப் பேரவையும் சேர்ந்து நடத்திய இவ்விழாவிற்கு அனைத்து குவைத் தமிழ் அமைப்புகளும் வந்து சிறப்பித்தனர்.
விழாவின் தொடக்கமாக, தந்தை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் குவைத் கிளைச் செயலாலர் திருமதி.லதாராணி அவர்களின் தகப்பனார், ஆசிரியர் பூங்காவனம் (ஆற்காடு) அவர்களின் படத் தினைத் திறந்து வைத்து நூலகக் காப்பாளர் செல்லப்பெருமாள் அவர்கள் உரையாற்றினார்கள்.  தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ஆசிரியர் பூங்கா வனம் தி.மு.கழகத்தின் தீவிர தொண்டர். ஆற்காடு தி.மு.க வட்ட ப் பிரதிநிதியாக  இருந்தவர்..கடந்த ஜூலைமாதம் 25 ஆம் தேதி மறைந்த அன்னாருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியோடு விழா தொடங் கியது. அதைத்தொடர்ந்து, நெ.சு. சுந்தரவடிவேலு நூற்றாண்டை முன்னிட்டு  தந்தை பெரியார் நூலகத்தின் தொடர் சொற்பொழிவாக நீரியல் நிபுணர், ஆராய்ச்சியாளர் முனைவர் திரு. குமார் அவர்கள் சேது சமுத்திரத் திட்டத்தின் முதற்கட்ட சொற்பொழிவாற்றினார். மிகச் சிறப்பாக அமைந்த இச்சொற்பொழிவில் சேது சமுத்திரத் திட்டத்தின் நன்மை தீமைகளையும் சேது சமுத்திரத் திட்டத்தின் அவசியத்தையும் புள்ளிவிவரங்களுடன் விளக் கினார்.
இராவணகாவிய சொற்பொழிவாளர் திருமதி. லதாராணி அவர்கள் பேசுகையில், எத்தனையோ மேடையில் பேசியிருந்தாலும் தன் வாழ்க்கை யிலேயே மிகச்சிறப்பானதொரு மேடையாக இதுவே இருக்குமெனத் தெரிவித்தார். தந்தை பெரி யாரையும் பேரறிஞர் அண்ணாவையும் தனது இரு கண்களாகவே போற்றி வாழ்ந்த தனது தந்தையாரின் நினைவரங்கத்தில் அவ்விரு மாமேதைகளின் பிறந்த நாள் விழாவினைக் கொண்டாட அதில் பங்கு கொண்டு பேசும் பேறு தனக்குக்  கிடைத்ததென்று மிகவும் நெகிழ்ச்சியோடு பேசினார். அரசியல் மேடைகளில் தன் தந்தை ஆற்றிய உரைகளையும்,  அவரின் டைரியிலிருந்து எடுத்த குறிப்புகளிலிருந்து தந்தை பெரியார் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி  அவர்களைப்பற்றிய சுவை யான நிகழ்ச்சிகளைக் கூறி இவ்விழாவினை மேலும் சிறப்பித்தார்.
குவைத் செல்லபெருமாள்
தொடர்ந்து,குவைத் தந்தை பெரியார் நூலகக் காப்பாளர் மானமிகு. செல்லபெருமாள் அவர்கள் "மூவர் விடுதலைக் கோரிக்கையை  நிலைப்படுத்தி , அம்மூவருக்கும் விடுதலை கொடுத்தே தீரவேண்டு மென்று அழுத்தமாகப் பேசியும், இந்தியாவில் மரணதண்டனை ஒழித்துவிடக்கூடாது என்று கூறியதோடல்லாமல், இராஜீவ் காந்தி கொலை வழக்கை மறுவிசாரணைக்குட்படுத்தி உண்மையான குற்றவாளிகளை தூக்கிலிடவேண்டுமென்றும், அதே போல தருமபுரி பஸ் எரிப்புச் சம்பவத்தில் மூன்று மாணவிகள் கருகிய வழக்கில் உள்ள கொலையாளிகளையும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக தூக்கிலிடவேண்டுமென்றும் பேசினார். தமிழக சட்டமன்றத்தில், அமைச்சர்கள் சினிமா பாடல்கள் பாடுவதையும், முதலமைச்சரை "தங்கத் தாரகை" என்று குறிப்பிட்டுப் பேசுவதையும் வன்மையாகக் கண்டித்துப் பேசினார்.
தாய்மண் கலை இலக்கியப் பேரவை செயலாளர் அன்பரசன் பரமக் குடி நிகழ்ச்சி பற்றி பேசினார். தொடர்ந்து அறிவழகன் சிற்றுரை ஆற்றினார். காயிதே மில்லத் பேரவைத் தலைவர் அன்வர் பாஷா அவர்கள் உரை துவக்கத்தில்,  திருமதி. லதாராணி அவர்களின் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்து "தொண்டர் நினைவரங்கத்தில் தலைவர்களின் பிறந்தநாள் விழா" எனக் கூறினார். தொடர்ந்து தந்தை பெரியார் அவர்களின் சீரிய கொள்கை களைப் பற்றி சிறப்பாகப் பேசினார்.
அதைத் தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் மன்றச் செயலாளர் மதிவாணன், செல்வம் ஆகியோரும், குவைத் மறுமலர்ச்சிப் பேரவை மணிகண்டன், கவிஞர் சத்யா வளநாடன் மற்றும் பலர் சிறப்புரை யாற்றினர்.பெரியாரின் சீரிய தொண்டர் இரகமத் துல்லா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்க  திருச்சி அமானுல்லா நன்றி கூறினார்.   தந்தை பெரியார் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு விழாவினை முன்னிட்டு ஏற்பாடு செய் திருந்த சிறப்பு விருந்துடன் இரவு 10:30 மணியளவில் விழா இனிதே நிறைவுபெற்றது..
செய்தி: லதாராணி, குவைத்

வியாழன், 8 செப்டம்பர், 2011

மூவர் விடுதலை கோரிக்கை கருத்தரங்கு - குவைத்

நாள் : 8th Sep 2011   இடம்  : தந்தை பெரியார் நூலகம், குவைத்தில்  நான் பேசியது



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மூன்று குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை அளித்தத்தின் நிமித்தம்  உலகெங்குமிருந்தும் தமிழர்கள் எழுப்பிய உச்ச குரலினால் உச்ச நீதிமன்றமே அதிர்ந்து அவர்களுக்கு எட்டு வார இடைக்காலத் தடை வழங்கியிருப்பதும், அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் இவர்களின் தூக்குதண்டனை இரத்து செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தது குறித்தும் நாம் அனைவரும் அறிந்தோம்.

பிரச்சனை இதுவல்ல இப்போது... 
ராஜீவ் காந்தி கொலையின் பின்புலம் தெருவோர டீக்கடை பெஞ்சில் டீக்குடிக்கும் ஆசாமி முதல் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் பெண்கள் வரை தெளிவாக அறிந்ததுதான் . ஆனால் சட்டமன்றத்திலும் நீதிமன்றத்திலும் உள்ளவர்களுக்கு மட்டும் குழப்பம் இன்னும் தீரவில்லை என்பது தான் உண்மை.  யாருக்கு தண்டனை தரவேண்டும், யாரை விடுதலை செய்யவேண்டும் என்பதே தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்கள். 

எந்த வழக்கிலும் கொலைகாரர்களுக்கு மரணதண்டனை விதிப்பதும், அந்த குற்றத்தை செய்வதற்குத் துணையாக இருந்தவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்குவது மரபு. இது பண்டைய காலந்தொட்டு நிகழ்ந்து வருவது. ஆனால் இந்த குற்றத்தில் மட்டும் விசித்திரமான முடிவுகள்...

சுபா, சிவராசன், தணு என்ற மூன்று கொலையாளிகள் ஏற்கனவே இறந்துவிட்டார்கள்.... வழக்கு இன்னும் முடிவு பெறவில்லை... ஆனால் அக்குற்றத்தில் சம்மந்தப்பட்ட மூவருக்கு குற்றவாளிகள் என்ற பட்டம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கிறார்கள்..இம்மூவரையும் விடுதலை செய்யவேண்டுமென்று குரல் வருகிறதே ஒழிய ... மறுவிசாரணை செய்யப்படவேண்டுமென்று குரல் கொடுப்பதற்கு யாரையும் காணோம், 

இக்கொலைக் குற்றத்தில் மூன்றுவிதமான குற்றவாளிகள் உள்ளனர்...

கொலையாளிகள் - இறந்துவிட்டார்கள் 
கொலை செய்யத் தூண்டியவர்கள் - விசாரிக்கப்படவே இல்லை 
கொலை சியா துணையாய் இருந்தவர்கள் - தூக்கு தண்டனை விடிக்கப்படுகிரார்கள் .

என்னைப்பொறுத்தவரை இந்திய அரசு ஒரு தேச துரோகம் செய்துகொண்டிருக்கிறது. ஒரு பாரதப் பிரதமரை கொலை செய்ய தூண்டிவிட்டவர்களுக்கு  அடைக்கலம் கொடுத்து துனையாயிருந்தவர்களுக்கு தூக்கு தண்டனை அளித்தால்..  இது துரோகச் செயலன்றி வேறென்ன?

உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாப்பதன் மூலம் தாய் நாட்டிற்கு துரோகம் செய்ததாகிவிடும்.

இங்கு கழுத்தில் கயிறு சுற்றப்பட்டு எப்போது இருக்கப்படுமேன்று ஒவ்வொரு நிமிடமும் அதிர்ச்சியுடன் இருப்பது மூன்று தமிழர்கள்.  இந்த மூன்று தமிழர்களின் உயிர்களைக் காக்க வேண்டுமென்று போராடிக் கொண்டிருப்பவர்கள் வேற்றுமொழி பேசிக்கொண்டிருப்பவர்கள்தான். தமிழர்கள் அல்ல. 



எப்போதுமே வந்தோரை வாழவைப்பது தமிழர்கள் தான் என பெருமையாகச் சொல்லிக்கொள்வோம். ஆனால் வந்தவன் தமிழர்களுக்கு ஒரு குரலாவது கொடுப்பான என்றால் இல்லை. அமிதாப்பச்சன் தனது வலைத்தளத்தில் எழுதுகிறார்... ரஜினியின் கையசைவில் தமிழ் நாடே இயங்கும் என்று.  எங்கே அசைக்கிறார்... அவருக்கு உடல்நிலை சரியில்லைஎன்று மண்சோறு உண்ட தமிழர்களை கண்டு கையசைத்தார், மொட்டையடித்து அழகு குத்தி காவடி எடுத்த தமிழர்களைக் கண்டு கையசைத்தார். ஆனால் தூக்குக் கயிற்றை கண்ணெதிரே கொண்டு ஒவ்வொரு நிமிடமும் நிம்மதியின்றி துடிக்கும் தமிழர்கள் விடுதலைபெற வே ண்டுமேன்று எண்ணினாரா?  இங்க்ஹு, இந்தக் குவைத்தில் இந்த மூன்று தமிழர்கள் உயிர் காக்க நாம்தான் போராடிக்கொண்டிருக்கிறோம். குவைத்தில் உள்ள அத்தனை சங்கங்களுமா சேர்ந்துள்ளது இங்கு? இல்லையே. குவைத் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற சில தமிழ்ச் சங்கங்கள் இவ்விடயத்தைப் பற்றி கவலை கொண்டதாகவே தெரியவில்லையே? 


அதேபோல் இங்கு மூவர் விடுதலைக்காக தீக்குளித்து உயிர் மாய்த்துக்கொண்ட செங்கொடியை தமிழர்களின் தாயானாள், தியாகி என்றெல்லாம் கூறுவதில் எனக்கு உடன் பாடில்லை. உயிரை மாய்த்துக்கொள்வது மிகப்பெரிய முட்டாள் தனம். நான்குபேர் சேர்ந்து குரல் கொடுத்துத்தான் நீதி பெற போராட வேண்டுமே தவிர நான்கு பேர் நம்மைத் தூக்கிக் கொண்டுபோய் ஒப்பாரிவைக்க உயிர் கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவள் உயிரோடு இருந்து குரல் கொடுத்து நான்கு நாநூறாகி, நானூறு நாலாயிரமாகி, நாலாயிரம் நாற்பதாயிரமாகக் குரல் எழுப்பி நீதி கேட்டிருந்தால் நானும் கர்வப்பட்டிருப்பேன். அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் இது போன்ற காரியங்களை இனியும் நாம் ஆதரிக்கக் கூடாது. 

முடிவாக, தமிழன் என்று ஆட்சிப் பீடத்தில் அமர்கிறானோ அதுவரையில்தமிழர்களின் கழுத்துக்களை கயிறுகள் இருக்கிக்கொண்டுதான் இருக்கும்.  இவர்களைத் தூக்கிலிடுவதால் இந்த வழக்கு முடிந்துவிடுமென்று நினைத்து கொக்கரித்துக்கொண்டிருக்கும் ஒருசாராருக்கு... ஒன்று சொல்கிறேன். தமிழன் கிள்ளுக்கீரையல்ல. மீண்டும் தமிழாய்ந்த தமிழ் மகன் ஆட்சிப் பீடத்தில் வருவான் அப்போது இந்தக் கொலைவழக்கு மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு உண்மையான குற்றவாளிகளை தூக்கிலிடப்படுவார். .....அதற்குச் சந்தர்ப்பம் கொடுக்காமல்... இந்தியாவின் பிரதமரைக் கொன்ற / கொல்லத் தூண்டிய உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை அளிக்கவேண்டும். அதற்கு, இம்மூவரை விடுதலை செய்து .. இவர்களின் ஒத்துழைப்புடன்,இவர்களையே  சாட்சியாக வைத்து மறுவிசாரணைக்கு உட்படுத்தி அவ்வழக்கில் நீதி பிறழாமல் நடத்த வேண்டுமென்ற என் கருத்தை அழுத்தமாகப் பதிவுசெய்து  விடை பெறுகிறேன் வாய்ப்பிற்கு நன்றி.  

வியாழன், 1 செப்டம்பர், 2011

“மூன்று தமிழர்கள் விடுதலைக் கூட்டமைப்பு”


மூவர் விடுதலை மற்றும் தூக்குத்தண்டனை மறுப்புக் கருத்தரங்கம்
நாள்: 31.08.2011, புதன்கிழமை மாலை 0600 மணி.
இடம்: வீரப்பெண் செங்கொடி அரங்கம்.
*****
குவைத்தில் பல்வேறு அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் கூடி மூன்றுத் தமிழர்களின் விடுதலையை முன்வைத்து “மூன்று தமிழர்கள் விடுதலைக் கூட்டமைப்பு” என்ற இயக்கத்தை தொடங்கினர். அதன் தொடக்கமாக தோழர்களின் விடுதலையை கோரும் எழுச்சிப்பாடல் ஒன்று தயாரிக்கப்பட்டது. தோழர் யுகபாரதி அவர்கள் இயற்றிய அந்தப்பாடலுக்கு தோழர்.ஆதி அவர்கள் சிறந்தமுறையில் இசையமைத்துத் தந்தார்கள்.

தொடர்ந்து, இந்திய குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுனர், முதல்வர் உள்ளிட்ட இந்திய அரசிலமைப்புத் தலைவர்களுக்கு மூன்றுத்தமிழர்கள் உள்ளிட்ட தூக்குத்தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யவேண்டியும், இந்தியாவில் தூக்குத்தண்டனையை முற்றிலும் ஒழித்திட வேண்டியும் கையெழுத்து இயக்கம் தொடங்கி நட்த்தப்பெற்று வருகின்றது.

இந்நிலையில், மூன்று தமிழர்களையும் தூக்கிலிட ஆணை பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பும், தொடர் போராட்டங்களும் வலுப்பெற்றது. பல்வேறு அமைப்புக்களும் தனித்தனியே ஏற்பாடு செய்த போராட்டங்களால் அதன் பயன் முழுமையடையாது எனக் கருதிய கூட்டமைப்பு, தமிழகத்தின் பல்வேறு தலைவர்களையும் ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் பட்டினிப் போராட்டமும், தமிழக முதல்வரைச் சந்தித்து மூன்றுதமிழர்களின் தூக்கினை இரத்துச் செய்ய வலியுறுத்தவும் கோரும் கடிதங்கள் மின்னஞ்சல் வழியாகவும், தொலைநகல் வழியாகவும் அனுப்பப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தமிழக முதல்வருக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் தொலைநகலில் மூன்றுதமிழர்களை விடுவிக்க் கோரும் மனு அளிக்கும் இயக்கம் தொடங்கப்பெற்று குவைத் வாழ் தமிழர்கள் பலரிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு தொலைநகல் அனுப்பப்பட்டது.

தொடர்ந்து, மூன்றுதமிழர்கள் விடுதலைக் கூட்டமைப்பின் சார்பில் “மூவர் விடுதலை மற்றும் தூக்குத்தண்டனை மறுப்புக் கருத்தரங்கம்” 31.08.2011 அன்று வீரப்பெண் செங்கொடி நினைவரங்கத்தில் நடைபெற்றது.
 IMG_6050.JPG
இயக்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட தோழர்களின் விடுதலைப்பாடல் கருத்தரங்கத்தின் தொடக்கமாக காணொளியாக ஒளிபரப்பப்பட்டு ஒலிக்க, தோழர்.அமானுல்லா அவர்கள் கருத்தரங்கத்தின் வரவேற்புரையும் நோக்கவுரையும் நிகழ்த்தினார்.

தொடர்ந்து, தமிழர் மூவரை விடுதலை செய்க என்ற முழகத்துடன், அம்மூவரும் நிரபராதிகள் என்ற உண்மையை கூறி, அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டியதன் அவசியத்தை விளக்கி உரையாற்றியதோழர்.முனு.சிவசங்கரன் அவர்கள், கருத்தரங்கத்தின் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார், இதனை தோழர்.தமிழ்நாடன் வழிமொழிந்தார்.

அடுத்து, மரணதண்டனை ஒழிப்போம், மனிதநேயம் காப்போம் என்ற தலைப்பில் உரையாற்றியதோழர்.அறிவழகன் அவர்கள், மரணதண்டனையின் கொடிய முகத்தை விவரித்து, அது ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை விளக்கி கருத்தரங்கத்தின் இரண்டாம் தீர்மானத்தை முன்மொழிய, தோழர்.பிரபாகரன் அவர்கள் வழிமொழிந்தார்கள்.
 IMG_6035.JPG
மூன்று தமிழர்களின் விடுதலையை முன்வைத்து போராடி, இறுதியில் இப்போராட்டம் வலுப்பெற்று இறுதித் தீர்வை அடைய வேண்டுமெனற நோக்கில் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட தோழர். செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்ட்து. இந்நேரத்தில் தோழர்.செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தும் காணொளி திரையிடப்பட்டது. ஒருநிமிட மௌன அஞ்சலிக்குப்பிறகு, வீரப்பெண் தோழர்.செங்கொடிக்கு எங்கள் வீரவணக்கம் என்ற தலைப்பில் உரையாற்றி கருத்தரங்கத்தின் தீர்மானத்தை தோழர்.செந்தில் முன்மொழிய தோழர்.கருணாநிதி அதனை வழிமொழிந்தார்கள்.
 IMG_6062.JPG
தொடர்ந்து, மூன்று தமிழரைக்காப்போம், மரண தண்டனை ஒழிப்போம் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.

தமிழர்களுக்கெதிராக தொடர்ந்து போர்த்தொடுத்துவரும் எதிரிகள், இம்மூவர் தூக்குத்தண்டனையிலும் முனைப்பாக செயல்பட்டுவரும் வேளையில் அந்த எதிர்களை அடையாளப்படுத்தி எச்சரிக்கும்விதமாக “விரோதிகளை வேரறுப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றி நான்காம் தீர்மானத்தை முன்மொழிந்தார் தோழர்.நெறியாளன், தோழர். விருதைபாரி இத்தீர்மானத்தை வழிமொழிந்தார்.

தொடர்ந்து, இதுபோன்ற காலங்களில் தமிழர்கள் ஒற்றுமையாக போராடி ஒருமித்தகுரலில் ஒலித்தால் மட்டுமே இறுதி வெற்றிசாத்தியப்படும், அதற்கான தேவைகள் எப்பொழுதும் உள்ளது என்ற கருத்தை மையப்படுத்தி,உலகத்தமிழராய் ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் தோழர்.தமிழ்நாடன் உரையாற்றி அய்ந்தாவது தீர்மானத்தை முன்மொழிய தோழர்.விருதைபாரி அவர்கள் வழிமொழிந்தார்கள்.

மூன்று பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்ட செய்தியை அறிந்தவுடன் தமிழகமெங்கும் பொதுமக்களும், மாணவர்களும், வழக்கறிஞர்களும் மற்றும் பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் தன்னெழுச்சியாகப் போராடி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும், உயர்நீதிமன்றத்தில் 8 வாரகால தடையானையையும் பெற்றிருக்கிறார்கள். இக்கருத்தரங்கத்தில் அப்போராளிகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக “போராளிகளைப் போற்றுவோம்” என்ற தலைப்பில் தோழர்.சிவமணி அவர்கள் தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களை விளக்கி அதில் பங்குகொண்டவர்களை அறிமுகப்படுத்தியதோடு கருத்தரங்கத்தின் ஆறாம் தீரமானத்தை முன்மொழிய தோழர்.தமிழ்வளன் அவர்கள் வழிமொழிந்தார்கள்.
IMG_6043.JPG
கருத்தரங்கத்தின் இறுதி தீர்மானத்தை தோழர்.அன்பரசன் முன்மொழிந்து, “குவைத் தமிழர்கள் கூட்டாய்ச் செயல்படுவோம்” என்றத் தலைப்பிலும் உரையாற்றி, வரும் காலங்களில் குவைத்தில் இயங்கும் அனைத்து அமைப்புக்களும் தமிழர்களின் பொதுப்பிரச்சனைகளிலும் மொழி இனம் சார்ந்த பிரச்சனைகளிலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும், அதற்கான அமைப்பினை தொடங்கவேண்டிய அவசியத்தையும் விளக்கினார்கள். இத்தீர்மானம் தோழர்.செந்தில் அவர்களால் வழிமொழியப்பட்டது.

தொடர்ந்து, தோழர்.சேதுமாதவன், நிலவன், தமிழ்வளன், பகலவன், விதயாசாகர், இலதாராணி, மணிகண்டன், செல்லப்பெருமாள், கவிசேய் சேகர் ஆகியோர் கருத்தரங்கத்தின் தீர்மான்ங்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மூன்று பேரின் தூக்குத்தண்டனையை இரத்து செய்யக்கோரியும், மரணதண்டனையை முற்றாக ஒழித்திட வலியுறுத்தியும் உரையாற்றினார்கள்.

கருத்தரங்கத்தின் நிகழ்வுகளை தமது கருத்துக்களையும் இணைத்து தோழர். விருதைபாரி அவர்கள் தொகுத்துவழங்கிட, தோழர்.தமிழ்நாடன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

அரங்கு நிறைந்த அளவில் குவைத் வாழ்தமிழர்கள் வருகைதந்து தமது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள, அனைவருக்கும் இப்பிரச்சனைகுறித்து தலைவர்கள் உரையடங்கிய குறுந்தகடும், “மூவரின் தூக்கு நம் இனத்தின் மீதான சுருக்கு” என்ற கட்டுரைத்தொகுப்பும் வழங்கப்பட்டது.

குவைத்தில் இயங்கும் பல்வேறு தமிழ் இயக்கங்களின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்கிய வேளையில் தொழிலதிபர்கள் சாமி, இராசேந்திரன், பொறியாளர் இராமன், சுரேசு, இராசேந்திரன், இராச்சேகர், ஓவியர் கொண்டல்ராசு, பத்திரிக்கையாளர் கனி, பாவலர் வளநாடன், பாவலர் தமிழமுதன், பாவலர் அகிலோதயன், பாவலர் பட்டுக்கோட்டை சத்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 IMG_6104.JPG
மிகுந்த எழுச்சியுடனும் உணர்வுப்பூர்வமாகவும் நடைபெற்ற இக்கருத்தரங்கத்தின் இறுதியில், இவ்வியக்கம் மூன்று தமிழர்களையும் விடுதலை செய்யும் வரையிலும் இந்தியாவில் மரணதண்டனை முற்றாக ஒழிக்கப்படும் வரையிலும் தொடர்ந்து செயல்படும் என்ற உறுதிமொழியுடன் நிறைவுற்றது.

மரணதண்டனை ஒழிப்போம்! மனிதநேயம் காப்போம்!

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

டாக்.அம்பேத்கார் 120ஆவது பிறந்தநாள்விழாவில் என் உரை


குவைத் தாய்மண் கலை இலக்கியப் பேரவை 17-04- 2011 அன்று நடத்திய டாக்டர் அம்பேத்கார் 120 ஆவது பிறந்தநாள் விழாவில் நான் ஆற்றிய உரை:

அவையிலும் அரங்கத்திலும் அமர்ந்திருக்கும் அனைத்து தமிழ்ச் சகோதரர்களுக்கும்  வணக்கம் தெரிவித்துக் கொள்கின்றேன். டாக்டர் அம்பேத்கார் பிறந்தநாள் விழாவை குவைத்  தாய்மண் கலை இலக்கியப் பேரவை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருப்பதைக் கண்டு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மண் கலை இலக்கியப் பேரவை நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு முடிந்தவரை நான் தவறாமல் பங்கு கொள்வதற்குக் காரணம், குவைத்தில் வேறு எந்த அமைப்பிலும் காணமுடியாத ஓர் ஒழுங்கும் ஒற்றுமையும் இந்த அமைப்பில் இருப்பதுதான். எந்த காரணத்திற்காக நாம் ஒன்றுசேர்ந்திருக்கிறோமோ அதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நாம் செயல்படவேண்டும் என்பதற்குத் தாய்மண் கலை இலக்கியப் பேரவை மிகச்சிறந்த உதாரணமாகும்.. அந்த வகையில் இம்மன்றம்  தொடர்ந்து நடத்தும் விழாக்கள் எல்லம் சிறப்பாக நடந்தேறுவது போல் இன்று டாக்டர். அம்பேத்கார் பிறந்தநாள் விழாவையும் மிகச் சிறப்புடன் நடத்திக் கொண்டிருக்கும் இப்பேரவைத் தலைவர் அன்புச் சகோதரர் திரு அன்பரசன் அவர்களுக்கும், இச்சங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்
டாக்டர் அம்பேத்கார், இந்திய வரலாற்றின் மிக முக்கியமான பக்கத்தை ஆக்ரமித்த மாமனிதன். இந்த இடத்தில் இவர் இருப்பதற்குக் காரணம், இவர் செய்த உணர்வுப் புரட்சி.
எங்கெல்லாம் உணர்வுகள் அடக்கப்படுகின்றனவோ, எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் உணர்ச்சிகள் பீரிட்டு புரட்சி வெடித்த வரலாறுகளை நாம் படித்திருக்கின்றோம். அதே போல இந்தியத் திருநாட்டில் டாக்டர் அம்பேத்கார் அவர்கள் தானொரு தாழ்த்தப்பட்ட மகர் என்ற சமூகத்தில் பிறந்திருக்கிறோம் என சிறுபிள்ளையாய் இருந்தவரை,சகநண்பர்களுடன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. பள்ளிக்கூடம் செல்கிறார். பள்ளிதான் அவருக்குப் புரியவைத்தது உணர்வையும் உரிமையையும். பாடத்திட்டத்தால்  நடத்தப்பட்டதல்ல  இது. அவர் அங்கு நடத்தப்பட்ட விதத்தால் படிக்கப்பட்டது. எப்படியென்றால்...
பள்ளிக்கூடத்தில் மற்ற மாணவர்களைப்போல் அவரால் சமமாக உட்காரவோ நடமாடவோ முடியாத நிலையில், சக மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாத நிலையில்- எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு பாடப்புத்தகங்களையும் நோட்டுப்புத்தகங்களையும் மட்டும் எடுத்துப்போன காலத்தில், உட்காருவதற்காக ஒரு கோணிப்பையை உடன் எடுத்துச் சென்ற நிலையில், தாகம் தணிப்பதற்குக் கூட மேல்சாதி மாணவனின் இரக்கத்தை எதிர்பார்த்து காத்திருந்து தனிக்குவளையில் தண்ணீர் குடித்த நிலையில், அவருடைய நோட்டுப் புத்தகங்களைத் தொட்டால் தீட்டு என்று அவர் புத்தகங்களை ஆசிரியர் திருத்த மறுத்த நிலையில் தீண்டாமை என்ற ஒரு தீய சக்தி இந்தியச் சமூகத்தில் வேரோடியிருப்பதை அச் சிறுவயதில் உணர்கிறார்.
ஒடுக்கப்பட்ட அந்த உணர்வுகளால் அவருக்கிருந்த கல்வி மீதான ஆர்வம் சற்றும் குறையவில்லை. அத்தனை இழிவுகளையும் உரமாக்கிக் கொண்டு மிகச்சிறந்த மாணவனாகத் திகழ்கிறார். பள்ளிப் படிப்பு முடிகிறது. கல்வியில் சிறந்த அந்த மாணவனுக்கு பரோடா மன்னன் மேல்படிப்பிற்காக உதவி செய்கிறார். வெளிநாடுகளுக்கு சென்று சட்டம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பட்டம் பெற்று வந்து நாட்டின் அரசியல் சாசனத்தையே எழுதும் அளவுக்கு உயர்ந்தது, அம் பேத்கரின் அறிவுக்கு கிடைத்த அங்கீகாரம் மட்டுமல்ல, முருங்க மரம் விட்டத்துக்கு ஆகாது. சக்கிலியப்புள்ள பட்டத்துக்கு ஆகாது எனும் மனுதருமப் பழமொழிகளுக்கு கொடுத்த சவுக்கடியுமாகும்.
ஒருகாலத்தில் அடிமை வகுப்பைச் சேர்ந்த மக்கள் பார்ப்பனர்களின் பாதங்கழுவிய நீரைக் குடிக்காமல் சாப்பிட முடியாத அவல நிலை  இருந்தது.  இது ஒரு கட்டாயக் கடமையாகக் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது. கல்கத்தாவில் சாலையோரத்தில் காலை நேரத்தில் அடிமை வகுப்புகளைச் சேர்ந்த குழந்தைகள் கையில் கோப்பைத் தண்ணீருடன் வரிசை வரிசையாக பல மணி நேரம் காத்திருப்பார்களாம். யாரவது ஒரு பார்ப்பனர் அவ்வழியாக வந்தபின் அவன் பாதங்களை கழுவி அந்த நீரை தன் பெற்றோர்களுக்குக் கொண்டு செல்வார்களாம் குழந்தைகள் கொண்டு வரும் தண்ணீரை உறிஞ்சிக் குடித்துவிட்டுத்தான் அவர்கள் உணவருந்துவார்களாம். அதற்காகப் பெற்றோர்கள் காத்திருப்பார்களாம்.
இத்தகைய கொடுமைக்கு அடிப்படைக் காரணம் சாதியம். இது ஒழிய வேண்டும். இந்தச் சாதியம் ஒழிய அதன் ஆணிவேரான இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்றர் அம்பேத்கார்.
தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.
இது ரிக் வேதத்தில்ளுள்ள ஒரு சுலோகம். இதன் அர்த்தம் என்னவென்றால்,
இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும் என்று கூறி மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலத்தில் தான் ...
வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு இந்தியா வருகிறார். பரோடா சென்று, அரசரின் ராணுவச் செயலாளர் பொறுப்பில் அமர்ந்தார். அங்கிருந்த மேல்ஜாதி இந்துக்களும்  இவருக்குக் கீழ் வேலை செய்தவர்களும், உயர்ந்த படிப்பை முடித்திருந்த அம்பேத்கரைத் தீண்டத் தகாதவராகவே நடத்தினர். தங்குவதற்கு இடம் கொடுக்க மறுத்தனர். அதனால் பார்சி மதத்தவர்களின் விடுதியில் தங்கினார். அங்கும் இவர் ஒரு தாழ்த்தப் பட்டவர் எனத் தெரிந்து, அங்கிருந்தும் வெளியேற்றிவிட்டார்கள்.மெத்தப் படித்தும், மேல் நாட்டு அனுபவம் பெற்றும் பயனில்லையே என ஒரு மரத்தடியில் அமர்ந்து கண்ணீர் விட்டு வருந்துகிறார்.
உலகில் எந்த நாட்டிலும், எந்த மதத்திலும், நம் நாட்டில் உள்ளபடி சாதிகளோ, சாதிக் கொடுமைகளோ இல்லை. எனவே, இந்த சாதிக் கொடுமைகள் ஒழிய வேண்டுமானால் முதலில் நாம் சாதிய அடையாளங்களில் இருந்தும், மத அடையாளங்களில் இருந்தும் வெளிவந்து, சாதியத்தின் மூலக்கூறுகளை ஒழிக்க வேண்டும் என்று உறுதிபூணுகிறார்.
நோய்நாடி நோய் முதல்நாடி என்பது மருத்துவ இலக்கணம். சாதியின் அதனால் சாதியை கற்பித்த நூல்களைப் படிக்க எண்ணுகிறார். புத்தகங்கள் எல்லாமே சமஸ்கிருதத்தில் அல்லவா இருக்கிறது? சூத்திரன் படித்தாலே காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றச் சொன்ன மனுதருமம், பஞ்சமன் அம்பேத்கரை சமஸ்கிருதம் படிக்க விடுமா? ஆனாலும்மனுதருமம் தடுத்த போதும் சமஸ்கிருதத்தையும், புத்த இலக்கியங்கள் இருந்த பாலி மொழியையும் கற்றுக் கொண்டார்.
விஷ்ணு புராணம், ஹரிவம்சம், பகவத் புராணம், வாயு புராணம், மனுஸ்மிருதி, உபநிஷத் இவைகளையெல்லாம் படிக்கிறார்.
அனைத்திலும் வர்ணாசிரம தர்மமென்று மக்களைப் பிரித்து வைத்த சதி அமைந்திருப்பதைக் கண்டார். பிரம்மாவின் வாயிலிருந்து பிராமணன் படைக்கப்பட்டான்; அவனுடைய கைகளிலிருந்து சத்திரியனும், தொடையிலிருந்து வைசியனும், இந்த மூவகை வருணத்தாருக்கும் தொண்டு புரிவதற்காக பிரம்மாவின் கால்களிலிருந்து சூத்திரனும் படைக்கப்பட்டனர். என்று இருக்கிறது அறிவுப்பூர்வமாகச் சிந்தித்தால் ஏற்றுக்கொள்ளவே முடியாத இந்தக் கருத்தைப் படித்த அவர் வர்ணாசிரம தர்மத்தைப் பற்றிய இந்த விளக்கங்கள் பிறவியிலேயே மூளைக் கோளாறு உடையவர்களின் உளறல்கள் போலுள்ளன என்கிறார்.
வர்ண வேறுபாடுகள் உண்டான கதைகள் வேதத்தில் வேறு மாதிரியும், அதற்கு பின் வந்த தத்துவங்களில் ஒரு மாதிரியும் மாறி மாறி இருக்கிறது. ஆனால் அதில் மாறதது அதன் படி நிலைதான். பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள், சூத்திரர்கள் தாழ்ந்தவர்கள் என்பது, கதைகள் மாறினாலும் காட்சி மாறவில்லை என்று பக்கம் பக்கமாக எழுதியும் மேடை மேடையாகப் பேசியும் இந்து தத்துவங்களின் தோலை உரிக்கிறார் டாக்டர் அம்பேத்கர்
வடநாட்டில் புரட்சி வெடிக்கிறது அம்பேத்காரால் திராவிட நாட்டில் தந்தை பெரியாரால் பூகம்பம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. தீண்டாமைக்கு எதிராக இந்தியா குலுங்குகிறது,ஆரியர்கள் அலறுகிறார்கள். பெரியாரும் அம்பேத்காரும் ஒரே கருத்தை முன்னிட்டு போராடிக்கொண்டிருக்கும் வேளையில் அம்பேத்காரைப் பெரியார் தமிழகத்திற்கு அறிமுகம் செயகிறார். ஆம்பேத்காரை பெரியார் தமிழகத்திற்கு அழைக்கிறார், அவர் அழைப்பை ஏற்று வந்த அண்ணல் தமிழக மக்களிடையில் முழங்குகிறார். அதைப்பற்றி அறிஞர் அண்ணா எழுதிகிறார்..
அம்பேத்கார் வந்தார்! தந்தார்! சென்றார்! ...  என்ன வந்தார் தந்தார் சென்றார்?
...சாதுக்களும் சங்கராச்சாரியார்களும் பண்டாரங்களும் வந்தால்... சீரும் நிகண்டும் தருவார்கள். அதிகபட்சமாக ஆசீர்வாதம் தருவார்கள். டாக்டர் அம்பேத்கார் சென்னை வந்தார் ... கசையடி தந்தார் காரியக் கூத்தாடும் ஆரியருக்கு. புன்னகை தந்தார் பகுத்தறிவு இயக்கத்திற்கு. ஆரியப் பத்திரிகைகள் அலறுகின்றன. தலையங்கம் எழுதி அம்பேத்காரை வசைபாட அகராதியைப் புரட்டித் தேடுகின்றன கடுஞ்சொற்தேடி. இன்னமும் ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவும் என்ற எண்ணுகிறீர். சீறிப் பயனில்லை இனி மாறுவீர் என எழுதுகிறார்.
தமிழ் நாட்டை மட்டுமா உலுக்கினார் அம்பேத்கார்....?
1936 ஆம் ஆண்டில்,ப்போது பாகிஸ்தானில் உள்ள லாகூரில், அப்போது, ஜாத்-பட்-தோடக் மண்டல் சாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து, அந்த மாநாட்டுக்குடாக்டர் அம்பேத்கரை தலைமை தாங்க அழைத்திருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் தன் தலைமையுரையை முன்னரே தயாரித்து, அதை மாநாட்டில் அச்சிட்டு வழங்க அனுப்பி வைக்கிறார்.
டாக்டர் அம்பேத்கர் அந்த உரையை இப்படி துவங்கியிருக்கிறார்: இந்த மாநாட்டிற்குத் தலைமை வகிக்குமாறு பேரன்புடன் என்னை வேண்டிக் கொண்ட ஜாத்-பட்-தோடக் மண்டல் உறுப்பினர்களின் நிலைக்காகப் பெரிதும் வருந்துகிறேன். என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தமைக்காகப் பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். நான் இந்துக்களை விமர்ச்சித்து இருக்கிறேன். அவர்கள் போற்றிடும் மாகாத்மாவுக்கு இந்துக்கள் பேரால் பேசுவதற்கு என்ன அதிகார உரிமை உள்ளது எனக் கேட்டிருக்கிறேன். அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். அவர்கள் தோட்டத்தில் என்னை ஒரு நச்சுபாம்பாகவே பார்க்கின்றனர் .... என்று ஆரம்பித்து, சாதிகள் பற்றியும், இந்துக்கள் இந்தியாவின் நோயாளிகள் என்றும் வேதங்கள், உபநிஷதங்கள், ஸ்மிருதிகள், மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட இந்துக்களின் அறநூல்களை அம்பேத்கர் நொறுக்கியிருந்தார்.
அந்தத் தலைமை உரையை படித்துப் பார்த்த மாநாட்டின் வரவேற்புக் குழவினர், அதிர்ச்சி அடைகிறார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு உரையை சுருக்கிக் கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் வேண்டுமென குழவினர் டாக்டர் அம்பேத்கரை கேட்டுக் கொள்கின்றனர். அதற்கு டாக்டர் அம்பேத்கர் தலைமை பதவியை அளித்த கவுரவத்திற்காக, மாநாட்டுத் தலைமையுரையைத் தயாரிப்பதற்குத் தலைவருக்கு உள்ள உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்று மறுத்துவிடுகிறார்.
அதற்கு அம்பேத்கர் " சாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழிய வேண்டும்' என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப் பேசாமல் வேறு எதைப் பேசுவது? ஆகையால் அதை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டார். பின் குழுவினர் ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார்கள். அதற்கும் அவர், “நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்; தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன்'' என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது.
அம்பேத்கரிடம் அந்தப் பேச்சை வாங்கி, "சாதியை ஒழிக்கும் வழி' என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டார் தந்தை பெரியார் அவர்கள்.
அம்பேத்கார் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்காகப் போராடினார். அவர் அந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியின் தலைவர் என்ற எண்ணம் தான் அநேகமானவர்களுக்கு இருக்கிறது.. அவர் ஒரு உலகப்பெரும் தலைவர், அல்லல்பட்ட மக்களின் உரிமைக்குப் போராடி உரிமையை மீட்டுத் தந்தவர். தீண்டாமைக்கு எதிரானவர், அடிமை முறைக்கு எதிரானவர்..
இந்திய அரசியல் சட்டத்தை எழுதியிருக்கிறார். அதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் பல உரிமைகளைப் போராடி சட்டமாக்கியிருக்கிறார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கிடை வலியுறுத்தி தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினமா செய்திருக்கிறார். உலகம் வியக்கும் அறிஞராக பல விஷயங்களில் ஆழ்ந்த கருத்து தெரிவித்திருக்கிறார்.  அவர் குறுகிய ஜாதி நோக்கம் கொண்டவர் அல்ல. ஒட்டுமொத்தமான மனித இனத்தின் மாண்பை உயர்த்தியவர். ஒரு மாபெரும் மனித நேயப் பற்றாளார் என்பதைத் தெளிவுபடுத்தவேண்டிய கடமை  நமக்கு உண்டு. திருமாவளவனுக்கும் அவரது தொண்டர்களுக்கும் உண்டு..
சகோதரர் அறிவழகன் சொன்னார் அம்பேத்கார் மாட்டுவண்டிக்காரனால் அவமானப்படுத்தப்பட்டவரென்று....சிறு வயதில் மாட்டுவண்டிக்காரனால் மட்டும் அவமானப்படுத்தப்பட்டவரல்ல அம்பேத்கார், மகாத்மா காந்தியாலும் அலட்சியப்படுத்தப்பட்டவர்தான். முடிதிருத்துபவனால் மட்டும் அவமானப்படுத்தப்பட்டவரல்ல அம்பேத்கார் முன்னாள் பாரதப் பிரதமர் நேருவினாலும் அவமதிக்கப்பட்டவர்தான். டாக்டர் இராதா கிருஷ்ணன் முதல் சர்தார் வல்லபபாய் பட்டேல் வரையான பெருந்தலைவர்களாலும் புறக்கணிக்கப்பட்டவர் தான் அம்பேத்கார்.
இந்தியா சுதந்திரம் அடைகிறது, புதிய அரசியலமைப்புச்சட்டம் கொண்டுவர 42 பேர்கள் கொண்ட குழுவை நேரு அமைக்கிறார். அதில் ஆலோசனைக்காக இங்கிலாந்தின் சட்டத்துறையை அணுகிய போது, அவர்கள் டாக்டர் அம்பேத்காரைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்தியாவிலேயே ஒரு இரத்தினம் இருப்பதை இங்கிலாந்துக்காரன் சொல்கிறான்.
மராட்டிய மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்காரை இந்தப் பணிக்குத் தலைமை ஏற்குமாறு நேரு அழைக்கிறார். அழைப்பை ஏற்று டில்லி வருகிறார் அம்பேத்கார்  அதிர்ச்சி காத்திருப்பதை அறியாமலே.  குழுவிலிருந்த 42 பேரும் விலகி விட்டனர். தாழ்த்தப்பட்ட ஜாதியிலிருக்கும் ஒருவன் நமக்குத் தலைமை தாங்குவதா என்ற ஜாதி வெறி பிடித்த அந்தக் குழுவில், டாக்டர் இராதா கிருஷ்ணனும், பட்டேலும் இருந்தனர் என்பதுதான் வேதனை. இருந்தாலும் எதற்கும் அசராமல், 2 உதவியாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு 6 மாதாஙளாக இரவு பகல் பாராது  தனியாளக சட்டம் இயற்றி முடித்தார். அரசியல் சாசனம் எழுதக் கிடைத்த வாய்ப்பை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, பெண்களுக்கு, தொழிலாளர்களுக்கு, சிறுபான்மை யினருக்கு என அனைத்து தரப்பட்ட மக்க ளுக்கும் பயன்படுமாறு எழுதி முடிக்கிறார் .
இந்த அவமானம் மட்டுமல்ல...
ஒருமுறை காந்தியடிகளுடன் நாக்பூர் சென்றிருந்த போது பொது இடத்தில் நுழைய அவருக்கு அனுமதிமறுக்கப்படுகிறது. காந்தியின் வற்புறுத்தலின் பேரில்  அவரையும் அனுமதித்த விழாக் கமிட்டியினர் அம்பேத்கார் சென்றதும் அந்தத் தெருவையே கழுவி மஞள் நீர் தெளித்துப் புனிதப் படுத்தினார்கள். இதை அம்பேத்கார் காந்திஜியிடம் கூற , இதெல்லாம் உடனே மாற்ற முடியாது மெல்ல மெல்லத்தான் மாறும் என்று பதிலளித்திருக்கிறார் காந்தி. இந்தச் செயலை கண்டிக்காத காந்திக்கு கண்டனம் தெரிவிக்கிறார் அம்பேத்கார். இதற்குப் பிறகுதான் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் பேசும்போது "நான் இந்துவாகப் பிறந்துவிட்டேன் ஆனால் மரணிக்கும்போது இந்துவாக மரணிக்க மாட்டேன் எனக் கூறுகிறார்". இத்தனைக் கீழ்த்தரமான இழிவுகளுள்ள இந்து மதத்தை நான் வெறுக்கிறேன் என்று கூறுகிறார். அதற்குப் பிறகுதான் புத்த மதத்தைத் தழுவினார்.
அம்பேத்காரை ஈர்த்த அந்த புத்த மதத்தில் அப்படி என்ன சிறப்பிருக்கிறது என எண்ணுகிறீர்களா?
புத்த மதம் என்பது அறிவு மதம்.... புத்தர் அறிவுச் சுதந்திரம், சமூக சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம், அரசியல்  சுதந்திரம் வேண்டுமென வலியுறுத்தினார்.
இயற்கையில் ஓர் ஒழுங்கு உள்ளது. சமூகத்தில் அப்படிப்பட்ட ஓர் ஒழுங்கு உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பினார். அவரின் முதல் நோக்கம் பகுத்தறிவுப் பாதைக்கு வழிநடத்துவது.. இரண்டாவது நோக்கம், மக்களைச் சுதந்திர மனிதர்களாக்குவது. மூன்றாவது நோக்கம், மூடநம்பிக்கையைத் தகர்த்தெறிவது ஆகும். Athmattumalla ஆண்களுக்கிடையில் மட்டும் சமத்துவம் வேண்டுமென்று கூறவில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் சமத்துவம் வேண்டுமென்று கூறினார் பெண் வாழ்வது ஆணுக்காக மட்டும் இல்லை. பெண்ணுக்குத் தேவை அனுதாபமில்லை; விடுதலை! தனது வீட்டுக்கு veளியேயும் உலகம் இருக்கிறது என்கிற சிந்தனை பெண்கள்Luக்கு வேண்டும். இந்தச் சிந்தனை மட்டும் வந்து விட்டால், பெண் என்பவள் தாயாகவும், தாரமாகவும், சகோதரியாகவும் மட்டுமே இருந்து ஆணின் நிழலிலும் தயவிலும் வாழும் ஓர் அடிமையாக இருக்க மாட்டாள். தேசத்திற்கே வழிகாட்டும் தலைமைத்துவமாக உயர்ந்து நிற்பாள்என்கிற பிளிறலோடு, பெண் விடுதலைக்கான கொடியை முதன் முதலில் பறக்க விட்டவர் புத்தர்.
தந்தை பெரியாரின் அறிவுறுத்தலும் இதுவே அம்பேத்காரின் கொள்கையும் இதுவே. புத்தர், பெரியார், அம்பேத்கார் ஆகிய மூவரின் கொள்கைகளும் ஒரே நேர்க்கோட்டில் இருந்தது. அதனால் தான் அம்பேத்கார், அதனால்தான் புத்தர் என்னுடைய பேராசான் என்று கூறுகிறார்.
உலகெங்கும் தேடினேன் தந்தைபெரியாரைப் போல ஒரு தலைவர் எனக்கு  கிடைக்கவில்லை எனக்கு எனக் கூறி தந்தை பெரியாரை தனது தலைவராக ஏற்றுக் கொண்டார்.
அம்பேத்கர் அவர்கள், தான் புத்த மதத்தைத் தழுவ இருப்பதாகத் தன் விருப்பத்தைப் தந்தை பெரியாரிடம் கூற  புத்த மார்க்கத்திற்குச் செல்ல விரும்பினால் பெருங்கூட்டத்தோடு இந்து மதத்திலிருந்து வெளியேறி அதில் இணைய வேண்டும் என்ற தனது கருத்தையும் தந்தை பெரியார் தெரிவித்தார்.
அதேபோல்தான் பல லட்சம் மக்களுடன் அம்பேத்கார் புத்தமததைத் தழுவினார்.
இன்னொரு நிகழ்ச்சியையும் குறிப்பிடவேண்டும்
அம்பேத்கார் இறுதிக் காலத்தில் அவர் நடத்தி வந்த கல்வி நிறுவனங்கள் நிதிப் பற்றாக்குறையில் சிக்கிக்கொள்ள நேருவிடம் உதவி கேட்கிறார் "இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் எதிர்காலத்தில் என்ன சாதிக்கப்போகிறது? என்று கூறி நேரு உதவி செய்யாமல் நிராகரித்துவிடுகிறார். 
இந்த வெறுப்பினால் தான் தன் சமுதாய மக்களை நோக்கி பறிபோன உரிமைகளை பிச்சையாக பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ மன்றாடுவதன் மூலமோ நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்களில் பலியிடுவார்களே தவிர சிங்கங்களை அல்ல. என்று கூறினார். சிங்கமாக மாற வேண்டுமென்றால் கல்வி கற்க வேண்டுமென்று  தன் சமூக மக்களுக்கு கல்வியின் அவசியத்தை உணர வைத்தார். தன்னைப் பார்க்க வருபவர்களிடமெல்லாம் அவர் கூறுவது படியுங்கள்  எந்த தீய சக்தி தடுத்தாலும் கலங்காமல் படியுங்கள் என்று இளைய சமுதாயத்திற்கு அறிவுறுத்தினார்.
அன்றைய காலத்தில் ஜாதிவெறியில் அலங்கோலப்பட்டிருந்தது தமிழகம் இன்றோ அதிகார வெறியில் அலங்கோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன.... வழக்கத்திற்கு அதிகமாக 80% ஓட்டு பதிவாகி உள்ளதாக ஊடகங்கள் அறிவிக்கின்றன. ஆளும் கட்சியும் சரியில்லை எதிர்கட்சியும் சரியில்லை. ஊழலில் திளைத்திக் கொண்டிருக்கிறது கட்சிகள். ஊழலால் இளைத்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். இந்த நிலையில் ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில் விஷபாட்டிலையும் கொடுத்து உனக்குப் பிடித்ததை தேர்ந்தெடுத்துக்கொள் என்று சொல்வது போலுள்ள இன்றைய நிலையில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக மக்கள் உட்படுத்தப்பட்ட கொடுமைதான் நடந்து முடிந்த தேர்தலில் அரங்கேறியிருக்கிறது.
புத்தர் அன்றே சொன்னார்: ஆட்சியாளர் ஊழலுடையவராய் இருப்பின் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஊழலுடையவர் ஆவர். மக்கள் வன்முறையாளராகவும், மூர்க்கர்களாகவும் ஆகி நாடு சீரழியும் என்று ஆட்சியாளருக்கு எச்சரிக்கை விடுத்தார்
ஊழலற்ற ஆட்சி, தூய்மையான ஆட்சி, நேர்மையான ஆட்சி தமிழகத்திற்கு வரவேண்டும்... தமிழர்களின் நலம் காக்க ஒரு தூய்மையான தலைவன் வரவேண்டும். பணபலமுள்ள கட்சிகளைத்தவிர மக்கள் பலமுள்ள கட்சிகளும் தமிழகத்தில் உள்ளது. தரமான தலைவன் தமிழகத்தை ஆளவேண்டும் என்ற என் ஆதங்கத்தை அம்பேத்கார் பிறந்தநாள் விழாவில் தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ கட்சிகள் முளைத்திருக்கும் நம்நாட்டில் இந்தக் காட்டில் எந்த மூங்கிலாவது புல்லாங்குழலாகாதா என்ற ஏக்கத்துடன் என் உரையை முடிக்கிறேன்.
வாய்ப்பிற்கு நன்றி வணக்கம்.