என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 1 செப்டம்பர், 2011

“மூன்று தமிழர்கள் விடுதலைக் கூட்டமைப்பு”


மூவர் விடுதலை மற்றும் தூக்குத்தண்டனை மறுப்புக் கருத்தரங்கம்
நாள்: 31.08.2011, புதன்கிழமை மாலை 0600 மணி.
இடம்: வீரப்பெண் செங்கொடி அரங்கம்.
*****
குவைத்தில் பல்வேறு அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் கூடி மூன்றுத் தமிழர்களின் விடுதலையை முன்வைத்து “மூன்று தமிழர்கள் விடுதலைக் கூட்டமைப்பு” என்ற இயக்கத்தை தொடங்கினர். அதன் தொடக்கமாக தோழர்களின் விடுதலையை கோரும் எழுச்சிப்பாடல் ஒன்று தயாரிக்கப்பட்டது. தோழர் யுகபாரதி அவர்கள் இயற்றிய அந்தப்பாடலுக்கு தோழர்.ஆதி அவர்கள் சிறந்தமுறையில் இசையமைத்துத் தந்தார்கள்.

தொடர்ந்து, இந்திய குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுனர், முதல்வர் உள்ளிட்ட இந்திய அரசிலமைப்புத் தலைவர்களுக்கு மூன்றுத்தமிழர்கள் உள்ளிட்ட தூக்குத்தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யவேண்டியும், இந்தியாவில் தூக்குத்தண்டனையை முற்றிலும் ஒழித்திட வேண்டியும் கையெழுத்து இயக்கம் தொடங்கி நட்த்தப்பெற்று வருகின்றது.

இந்நிலையில், மூன்று தமிழர்களையும் தூக்கிலிட ஆணை பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பும், தொடர் போராட்டங்களும் வலுப்பெற்றது. பல்வேறு அமைப்புக்களும் தனித்தனியே ஏற்பாடு செய்த போராட்டங்களால் அதன் பயன் முழுமையடையாது எனக் கருதிய கூட்டமைப்பு, தமிழகத்தின் பல்வேறு தலைவர்களையும் ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் பட்டினிப் போராட்டமும், தமிழக முதல்வரைச் சந்தித்து மூன்றுதமிழர்களின் தூக்கினை இரத்துச் செய்ய வலியுறுத்தவும் கோரும் கடிதங்கள் மின்னஞ்சல் வழியாகவும், தொலைநகல் வழியாகவும் அனுப்பப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தமிழக முதல்வருக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் தொலைநகலில் மூன்றுதமிழர்களை விடுவிக்க் கோரும் மனு அளிக்கும் இயக்கம் தொடங்கப்பெற்று குவைத் வாழ் தமிழர்கள் பலரிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு தொலைநகல் அனுப்பப்பட்டது.

தொடர்ந்து, மூன்றுதமிழர்கள் விடுதலைக் கூட்டமைப்பின் சார்பில் “மூவர் விடுதலை மற்றும் தூக்குத்தண்டனை மறுப்புக் கருத்தரங்கம்” 31.08.2011 அன்று வீரப்பெண் செங்கொடி நினைவரங்கத்தில் நடைபெற்றது.
 IMG_6050.JPG
இயக்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட தோழர்களின் விடுதலைப்பாடல் கருத்தரங்கத்தின் தொடக்கமாக காணொளியாக ஒளிபரப்பப்பட்டு ஒலிக்க, தோழர்.அமானுல்லா அவர்கள் கருத்தரங்கத்தின் வரவேற்புரையும் நோக்கவுரையும் நிகழ்த்தினார்.

தொடர்ந்து, தமிழர் மூவரை விடுதலை செய்க என்ற முழகத்துடன், அம்மூவரும் நிரபராதிகள் என்ற உண்மையை கூறி, அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டியதன் அவசியத்தை விளக்கி உரையாற்றியதோழர்.முனு.சிவசங்கரன் அவர்கள், கருத்தரங்கத்தின் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார், இதனை தோழர்.தமிழ்நாடன் வழிமொழிந்தார்.

அடுத்து, மரணதண்டனை ஒழிப்போம், மனிதநேயம் காப்போம் என்ற தலைப்பில் உரையாற்றியதோழர்.அறிவழகன் அவர்கள், மரணதண்டனையின் கொடிய முகத்தை விவரித்து, அது ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை விளக்கி கருத்தரங்கத்தின் இரண்டாம் தீர்மானத்தை முன்மொழிய, தோழர்.பிரபாகரன் அவர்கள் வழிமொழிந்தார்கள்.
 IMG_6035.JPG
மூன்று தமிழர்களின் விடுதலையை முன்வைத்து போராடி, இறுதியில் இப்போராட்டம் வலுப்பெற்று இறுதித் தீர்வை அடைய வேண்டுமெனற நோக்கில் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட தோழர். செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்ட்து. இந்நேரத்தில் தோழர்.செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தும் காணொளி திரையிடப்பட்டது. ஒருநிமிட மௌன அஞ்சலிக்குப்பிறகு, வீரப்பெண் தோழர்.செங்கொடிக்கு எங்கள் வீரவணக்கம் என்ற தலைப்பில் உரையாற்றி கருத்தரங்கத்தின் தீர்மானத்தை தோழர்.செந்தில் முன்மொழிய தோழர்.கருணாநிதி அதனை வழிமொழிந்தார்கள்.
 IMG_6062.JPG
தொடர்ந்து, மூன்று தமிழரைக்காப்போம், மரண தண்டனை ஒழிப்போம் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.

தமிழர்களுக்கெதிராக தொடர்ந்து போர்த்தொடுத்துவரும் எதிரிகள், இம்மூவர் தூக்குத்தண்டனையிலும் முனைப்பாக செயல்பட்டுவரும் வேளையில் அந்த எதிர்களை அடையாளப்படுத்தி எச்சரிக்கும்விதமாக “விரோதிகளை வேரறுப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றி நான்காம் தீர்மானத்தை முன்மொழிந்தார் தோழர்.நெறியாளன், தோழர். விருதைபாரி இத்தீர்மானத்தை வழிமொழிந்தார்.

தொடர்ந்து, இதுபோன்ற காலங்களில் தமிழர்கள் ஒற்றுமையாக போராடி ஒருமித்தகுரலில் ஒலித்தால் மட்டுமே இறுதி வெற்றிசாத்தியப்படும், அதற்கான தேவைகள் எப்பொழுதும் உள்ளது என்ற கருத்தை மையப்படுத்தி,உலகத்தமிழராய் ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் தோழர்.தமிழ்நாடன் உரையாற்றி அய்ந்தாவது தீர்மானத்தை முன்மொழிய தோழர்.விருதைபாரி அவர்கள் வழிமொழிந்தார்கள்.

மூன்று பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்ட செய்தியை அறிந்தவுடன் தமிழகமெங்கும் பொதுமக்களும், மாணவர்களும், வழக்கறிஞர்களும் மற்றும் பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் தன்னெழுச்சியாகப் போராடி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும், உயர்நீதிமன்றத்தில் 8 வாரகால தடையானையையும் பெற்றிருக்கிறார்கள். இக்கருத்தரங்கத்தில் அப்போராளிகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக “போராளிகளைப் போற்றுவோம்” என்ற தலைப்பில் தோழர்.சிவமணி அவர்கள் தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களை விளக்கி அதில் பங்குகொண்டவர்களை அறிமுகப்படுத்தியதோடு கருத்தரங்கத்தின் ஆறாம் தீரமானத்தை முன்மொழிய தோழர்.தமிழ்வளன் அவர்கள் வழிமொழிந்தார்கள்.
IMG_6043.JPG
கருத்தரங்கத்தின் இறுதி தீர்மானத்தை தோழர்.அன்பரசன் முன்மொழிந்து, “குவைத் தமிழர்கள் கூட்டாய்ச் செயல்படுவோம்” என்றத் தலைப்பிலும் உரையாற்றி, வரும் காலங்களில் குவைத்தில் இயங்கும் அனைத்து அமைப்புக்களும் தமிழர்களின் பொதுப்பிரச்சனைகளிலும் மொழி இனம் சார்ந்த பிரச்சனைகளிலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும், அதற்கான அமைப்பினை தொடங்கவேண்டிய அவசியத்தையும் விளக்கினார்கள். இத்தீர்மானம் தோழர்.செந்தில் அவர்களால் வழிமொழியப்பட்டது.

தொடர்ந்து, தோழர்.சேதுமாதவன், நிலவன், தமிழ்வளன், பகலவன், விதயாசாகர், இலதாராணி, மணிகண்டன், செல்லப்பெருமாள், கவிசேய் சேகர் ஆகியோர் கருத்தரங்கத்தின் தீர்மான்ங்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மூன்று பேரின் தூக்குத்தண்டனையை இரத்து செய்யக்கோரியும், மரணதண்டனையை முற்றாக ஒழித்திட வலியுறுத்தியும் உரையாற்றினார்கள்.

கருத்தரங்கத்தின் நிகழ்வுகளை தமது கருத்துக்களையும் இணைத்து தோழர். விருதைபாரி அவர்கள் தொகுத்துவழங்கிட, தோழர்.தமிழ்நாடன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

அரங்கு நிறைந்த அளவில் குவைத் வாழ்தமிழர்கள் வருகைதந்து தமது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள, அனைவருக்கும் இப்பிரச்சனைகுறித்து தலைவர்கள் உரையடங்கிய குறுந்தகடும், “மூவரின் தூக்கு நம் இனத்தின் மீதான சுருக்கு” என்ற கட்டுரைத்தொகுப்பும் வழங்கப்பட்டது.

குவைத்தில் இயங்கும் பல்வேறு தமிழ் இயக்கங்களின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்கிய வேளையில் தொழிலதிபர்கள் சாமி, இராசேந்திரன், பொறியாளர் இராமன், சுரேசு, இராசேந்திரன், இராச்சேகர், ஓவியர் கொண்டல்ராசு, பத்திரிக்கையாளர் கனி, பாவலர் வளநாடன், பாவலர் தமிழமுதன், பாவலர் அகிலோதயன், பாவலர் பட்டுக்கோட்டை சத்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 IMG_6104.JPG
மிகுந்த எழுச்சியுடனும் உணர்வுப்பூர்வமாகவும் நடைபெற்ற இக்கருத்தரங்கத்தின் இறுதியில், இவ்வியக்கம் மூன்று தமிழர்களையும் விடுதலை செய்யும் வரையிலும் இந்தியாவில் மரணதண்டனை முற்றாக ஒழிக்கப்படும் வரையிலும் தொடர்ந்து செயல்படும் என்ற உறுதிமொழியுடன் நிறைவுற்றது.

மரணதண்டனை ஒழிப்போம்! மனிதநேயம் காப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக