என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.
லதாராணி கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லதாராணி கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

வியத்தகு வள்ளுவம்!

  வியத்தகு வள்ளுவம் (குறளின் குரல் ) 
-------------------------------------------------------------------------
(அறுசீர் விருத்தம்)                                                                      

முகவரி ஆகி நின்று  
.       முழுஒளி வீசி மின்னும் 
மிகமிகப் பழமை யான 
.      மாத்தமிழ் இழையால் நெய்த 
தகவுறு துத்தம் போன்ற 
.       தப்பிலாச் செப்ப லோசை 
செகமது முழுதும் நின்று 
.       செம்மொழி பகர்தல் காணீர்!     ….….(1)

கதைகளின் நீள மில்லை 
.       காவியம் போலு மில்லை 
இதையிவன் அறிவ தற்கு 
.       இருவரி போது மென்று 
சிதைவுறாத் தமிழில், மெச்சும் 
.     சிறப்புடன் வனைந்து வைத்த 
புதைபொருள் உறைந்து நிற்கும் 
.     பொலிவுறு பேழை பாரீர்!            ……(2)

அறம்பொருள் இன்பம் வீடு 
.       அருந்தமிழ் விளைந்த காடு 
மறத்தமிழ் மக்கள் வாழ்வின் 
.       மாட்சிமை கூறும் ஏடு 
பிறன்மனை நோக்கல் குற்றம் 
.       பிறன்பொருள் கொள்ளல் கேடு 
அறவுரை சொல்லும் பாங்கு 
.        ஆமெனில் விலகும்  தீங்கு. ……..(3)


திறனறி என்று சொல்லும் 
.       திருந்திவாழ் என்றும் சொல்லும் 
பிறழிலா வாழ்வைச் சொல்லும் 
.        பிறவுயிர் காக்கச் சொல்லும் 
உட்பகை விலக்கச் சொல்லும் 
.        உறவுகள் பேணச் சொல்லும் 
வெட்டுக சோம்பல் என்று 
.         வெற்றிக்கு வழியும் சொல்லும் ………….(4)

சொற்றிறம் பாமை என்றும் 
          சொல்லிலே திருத்தம் என்றும் 
கற்றிடும் யாவும் நன்குக் 
.           கசடறக் கற்க என்றும் 
பெற்றவர் மகிழு மாறு 
.          பெருஞ்செயல் செய்க என்றும் 
நற்றமிழ் நயமாய் ஊட்டி 
.          நலமிகு சான்றோன் ஆக்கும்…………..(5)

சிறுகை கூழினைத் துய்க்க 
.         செறுநர் செருக்கினைப் போக்க 
சிறுமை முழுதாய் நீக்க 
.          சினத்தை அறவே  மாய்க்க ,
வறுமைப் பிணியைப் போக்க 
.         வாழ்க்கை வளமாய் வாழ,
பொறுமை காக்கச் சொல்லும் 
 .       போதனின் கூற்றும் என்னே!  ………….(6)


உற்றதைச் சொல்வ தற்கும் 
.      உள்ளதை உரைப்ப தற்கும் 
நற்றவச் செல்வன் தூய 
.      நனிமிகு தமிழில் செய்த 
சொற்பெருங் குவியல் தன்னைச் 
.      சுடரென ஏந்தி நிற்றல் 
கற்றவர் கைக்கொள் போக்கு, 
.      கருதுவீர் இது நம் வாக்கு. …..(7)

முத்திரை பதித்த வேதம் 
.      முப்பால் மொழிந்த நாதம் 
வித்தகச் சொற்கள் தாங்கி 
.       வியத்தகு ஆற்ற லோடு  
இத்தரை மீதில் வாழும் 
.       இன்னுயிர் முழுவ தற்கும் 
சத்தியக் குறளை யாத்த 
.       சால்பினன் பாக்கள் வாழி!

- கவிஞர்.  லதாராணி பூங்காவனம் எம்.ஏ ., எம்.காம்., 


வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

கலைஞருக்கு ஓர் கவிதைப் படையல் (கவிதாஞ்சலி)

Image result for karunanidhi
கலைஞரென்னும் காவியந்தான் முடிவு பெற்றது- எமது
      கண்ணிரண்டைக்  குளமாக்கி விட்டுச் சென்றது!
விலையில்லா மாணிக்கம் வீழ்ந்துவிட்டது -தமிழின்
        ஒப்பற்ற சொற்குன்றம் சாய்ந்துவிட்டது!
காரிருளைப் போக்கவந்த பேரொளியாக; அந்தக்
       கருஞ்சட்டைப் பெரியாரின் வளர்ப்பில்  வந்தாய்    .
ஆரியனைப் பொசுக்கிவிடும்   அக்கினிப் பிழம்பை; உன்
       ஆட்காட்டி விரல்வழியே ஒழுகச் செய்தாய்!    

திருக்குறள், தொல் காப்பியத்தைப்  புதுக்கித் தந்து
      தித்திக்கும் இலக்கியத் தேன் பருகத் தந்தாய் 
மறத்தமிழைப் போற்றிய மாப்புலவருக் கெல்லாம்
       மறக்காது சிலைவைக்கும்   மாண்பும் கொண்டாய்   .

ஆர்ப்பரிக்கும் அலைநடுவில் வள்ளுவன் சிலையும்
       அறிவூட்டும் நூலகமும் அண்ணா நினைவும்   
சீர்மிக்க  குலப்பெருமை சாற்றிடும் பல்லோர்
   சிலையோடு, செம்மொழியும் உன்பேர் சொல்லும்! 

பெண்கல்வி, சொத்துரிமை, விவசாயம் மின்சாரம்
       பேருந்து ஓய்வூதியம் உழவருக்குத் தனிச்சந்தை
எண்ணற்ற சாதனைகள் செய்திட்ட செயல்வீரா!  
          என்னாலே ஏலுமோ உன்புகழை எடுத்தியம்ப?

திருநங்கை, மாற்றுத் திறனாளி எனப்புதிதாய்
        அருந்தமிழில் பெயர்சூட்டி  அழைக்கச் செய்தாய்  
பெருநம்பிக்கை அவரிடத்து முளைக்கச் செய்து; புதுப் 
     பொலிவுடனே அவர்வாழ வழியும் செய்தாய்!

மலமள்ளும் மனிதருக்கு மறுவாழ்வும் தந்து 
      உலையரிசி கொடுத்து  வயிர்நிறையச் செய்தாய் 
பலகாலம் பட்டியலில் அடைந்தோர் வாழ்வின்
       பாதுகாப்பை உறுதிசெய்யப் பங்கும்  தந்தாய்.

திறமுரைக்கும் இராவணனின் காப்பிய நூலைச்
           சிறையிட்ட செயல்கண்டு சீற்றம் கொண்டாய்; அந்த  
அறமுரைக்கும் பெருநூலை மீட்டுத் தந்து;நம்  
           ஆதிகுடிப் பெருமைகளைக் முழங்கச்  செய்தாய்!

ஆலயத்துள் அமர்ந்திருக்கும் சிலைகள் தொட்டு  
          அனைவருமே அர்ச்சிக்க வேண்டும் என்ற 
காலங்கள் முன்கண்ட பெரியார் கனவை ;
      கல்லறைக்குள் செல்லுமுன் நிறையக் கண்டாய்! 

எண்பதாண்டுப் பொதுவாழ்வில் வலம்வந்த பேரரசே;
அண்ணாவின் இதயத்தில் இடம்பிடித்த போர்முரசே!

நுனிநாக்கில் முத்தமிழைச் சிறைவைத்த பெருந்தகையே!
இணையற்ற தமிழ்மகனே!  இறவாத பெரும்புகழே
! திராவிடர்கள் காவலனே!  தூயதமிழ்க்  காதலனே!
உடன்பிறப்பைத் தவிக்கவிட்டு விடைபெற்றுச் சென்றதுஏன்?
நீதந்த பயன்உண்ட தேனீக்கள் அத்தனையும்
"வா!தலைவா" என்றழைத்த ரீங்காரம்  கேட்கலையோ ?
காதுகளை மோதலையோ ? கையிரண்டைத் தீண்டலையோ ?
நாசியினைத் துளைக்களையோ? நரம்பேதும் புடைக்கலையோ ?

திடம்கொண்டு நூறாண்டைக் கடந்திடுவேன் என்றாயே
திடுமென்றுத் தடம்மாறிச் சாய்ந்தாயே எதனாலே?
இடையினிலே தமிழன்னை 'இங்குவா' என்றாளோ?
தடையின்றி அவளழைப்பைத் தலையாலே  கொண்டாயோ?
விடைபெற்று வாவென்று கரம்பற்றிக் கொண்டாளோ
விழிமூட வைத்துஅவள் விழிநனைந்து நின்றாளோ?
நளிதமிழில் நடனமிடும் நகைச்சுவையின் நல்விருந்தே!
நலம்பெற்று வாராது  நிலம்பெற்றுப் போனாயே! தாயாகிக் காத்துவந்த  ஓய்வறியாச் சூரியனே!
ஓயாது உன்நினைவு, ஒருபோதும் சாயாது! உன்கனவு!நீ
விட்டபணி தொடர்ந்திடவும் தொட்டபணி முடித்திடவும்
ஒட்டுமொத்த உடன்பிறப்பும் ஒன்றிணைந்து நின்கின்றோம்!
வென்றுவந்து உனை அடைவோம்!

வாழிய  உன்புகழ்! வாழிய செந்தமிழ்! 


- கவிஞர். லதாராணி பூங்காவனம் .


.

திங்கள், 30 ஜூலை, 2018

வாழ்வார் கலைஞர்…. இவர் வாழும் கலைஞர்!

                                                                               

மனிதப்  போர்வையில் உலவிக்கொண்டிருக்கும்
மதம் பிடித்த மிருகங்களே…

பித்தேறிய நிலையில் பேயாட்டம் ஆடிக்கொண்டு
பிணந்தின்னிக் கழுகுகளாய் காத்திருக்கும் கயவர்களே…

வானமளந்த கலைஞரை வாய்க்கு வந்தபடி
வசைபாடும் உங்களை மன்னிக்கவே முடியாது …

அழுகிய பிணத்தைவிட அசிங்கமாகத்தான் இருக்கிறது…
காவி பூசிய உங்கள் ஒவ்வொருவரின் முகமும்.…

குரூரத்தைக் கொட்டும் கொடுஞ் சொற்களோடு
கூடிக்களிக்கும் குப்பைத் தொட்டிகளே….

கலைஞர் என்பவர் காலம் செதுக்கிய சிற்பம் …

உங்கள் ஏச்சுக்களாலும் பேச்சுக்களாலும்
இந்தச் சிற்பத்தைச் சிதைத்துவிட முடியாது…

கலைஞரை நோக்கி நீட்டிய கைகளெல்லாம்
முடமாகிப் போனததுதான் வரலாறு.

உடல்நிலை குறைந்த ஒப்பற்ற தலைவனின்
உயிர்பிரிய வேண்டுமென்று எக்காளமிடுகிறீர்களே ..

இயற்கையின் இயல்பு என்பதைக்கூட அறியாத மூடர்களே
உங்கள் இயக்கங்கள் அழிந்து போகட்டும்
உங்கள் எண்ணங்கள் சிதைந்து போகட்டும் …
உங்கள் இதயங்கள் வெடித்துச் சிதறட்டும் …

எங்கள் கலைஞர் வாழ்வார்…
வாழ்ந்துகொண்டே இருப்பார்….
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும்…

ஆம் .. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும்…
வாழ்வார் கலைஞர்…. இவர் வாழும் கலைஞர்!

- லதாராணி பூங்காவனம்.




வெள்ளி, 1 செப்டம்பர், 2017

மருத்துவக் கனவிற்கு மரணம் பரிசு!.


கல்வியின் அருமையினைக்  கயவர்கள்  புரிந்திருந்தால்
செல்வியின் கனவின்று  செம்மையாய்ப் பலித்திருக்கும்

புத்தகம் என்னவென்று புல்லர்கள் அறிந்திருந்தால்
பூந்தளிர்   இங்கின்று பொசுங்காது  பூத்திருக்கும் .

உரிமைகள் என்னவென்று  ஊதாரிகள் தெரிந்திருந்தால்
ஊர்மகிழும்  நற்பொன்னாய் உருகாது ஒளிர்ந்திருக்கும்

கடமைகள் என்னவென்று கள்வர்கள் கற்றிருந்தால்
வடவரின் சூழ்ச்சியிலே  உடையாது  மிளிர்ந்திருக்கும்

காவிகள் கண்ணசைவில் காரியங்கள் செய்கின்ற
பாவிகளே போதுமடா பதறவைக்கும் உயிர்ப்பலிகள்

கொடியோர் ஒன்றிணைந்து கொலைபாதகம் செய்திட்டார்.
முடியாதினி முடிவாய்  முற்றுகையே ஒற்றை வழி !

தூயதமிழ்ச் செல்விக்குத் தூக்கினையே பரிசளித்த
நாயினத்தை விரட்டிவிட நற்றமிழர் ஒன்றிணைக!

- லதாராணி பூங்காவனம், ஆர்க்காடு .

வியாழன், 6 அக்டோபர், 2016

அப்பல்லோவில் அம்மா...



நேற்றோடு நாள்பதி நான்கும் முடிந்தது 
காற்றோடு செய்திகள் காணாமல் போகுது 
வேற்று மனிதரை  வார்டு  தடுக்குது 
ஆட்சி அலுவலகாய்  அப்பல்லோ ஆனது  

மீண்டு வரவேண்டி மண்சோறு தின்னுது 
தீண்டி விடும்போது தீக்குளித்துச் சாகுது 
வேண்டி விரதமேற்று வீழ்ந்து புரளுது 
காட்டு மனிதனாகி காரியங்கள் செய்யுது.  

அம்மா நலமே; ஆளுநர் கூறினார் 
சும்மா இல்லாது சொன்னார் சிறுத்தையார்
நம்ப முடியாமல் நாடு  திகைக்குது
வம்பு எதற்கென்று வாய்பொத்தி நிற்குது 

காவிரித் தண்ணீரைக் கன்னடன் மூடினான் 
காவலில்  இருந்தும் கரண்டினால் சாகிறான் 
ஆவலில் காத்திருந்த அக்டோபர் தேர்தலும் 
மாவலி போலவே மண்ணுள்ளே போனது 

குழப்பத்திலே மக்களெல்லாம் கூடிப்பேசி நிற்க 
வழக்குபாயும் என்றுசொல்லி வாயைமூட வைத்தார் 
பழக்கமாகிப் போனதிந்த பாழ்பட்ட நாட்டில் 
விழுந்தபடி உள்ளானே வீரமெங்கே காணோம். 

ஆவலில் கேட்டால் அறிக்கைதான் கிட்டுது 
பாவந்தான் மக்கள் பதட்டத்தோடு உள்ளனர் 
நோவினில்  உள்ளவரை  நேரிலே காட்டாமல் 
ஏவலில்  செயல்களை யாரது செய்வது?

 -  லதாராணி பூங்காவனம் 


சனி, 16 ஜூலை, 2016

மழலை ஓலம்





கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தி குவைத்து நாட்டில்  கவியரங்கில் வாசித்த கவிதை. (2004 ஆம் ஆண்டு எழுதியது )

..
ஆண்டவனை வசைபாடி :
.....
அக்கினியே உன் அனல் நாவு அடங்கிவிட்டதா?
இரைவேண்டி இன்னும்தான் அலைகின்றதா ?
மருண்டு மயங்கிய மழலைகளை
தின்றபின் உன்தினவு தீர்ந்து போனதா?

வான்பார்க்க நீசெய்த அலங்கோலம்
வருணனும் உனையடக்க வரவில்லையே
வாயுவுடன் கைகோர்த்து வலம் வந்து
வக்கிர தாண்டவம் ஏன் ஆடினாயோ?

வாழை இலையில் பரிமாறியா
வதங்கிய பிஞ்சுகளை உண்பது?
பள்ளி சென்ற குழந்தைகளை
கொள்ளி வைத்தா மகிழ்வது?

கல்விக்கூடம் அழித்துவிட்டு ஆங்கோர்
கல்லறைக் கூடம் நிறுவி விட்டாய்
கறைபடிந்த உன் குரூரத்தை - இக்
கலியுகக் கல்வெட்டில் பதித்துவிட்டாய்

பூங்கள் ஐந்தும் தான் கடவுளென்று
பூமியில் உள்ளோர் நினைக்கின்றார்
இரக்கம் துளியில்லா உன்னை
இறையென்று எப்படி நான் ஏற்பது?


ஆள்பவனை வசைபாடி:

...
ஆள்பவனே போதுமா? - இது
உன் ஆணவத்தின் மீதமா?

எத்தனை பொய்களாடா
எத்தனை சபதமடா?

இலட்சியங்கள் பறக்கிறது
இலட்சங்கள் பின்னாலே
கொள்கைகள் மறைகிறது
கோடிகள் பின்னாலே

பணத்தையும் குவிக்கின்றாய்
பிணத்தையும் குவிக்கின்றாய்
நிம்மதியை அழித்துவிட்டு
நிவாரணம் தருகின்றாய்

வார்த்தைகளே இல்லையடா -உன்
வசைபாட இங்கெனக்கு
விதைகளை அழித்துவிட்டா - நீ
விவசாயம் காண்பது?

மக்கள் நலம் கருதா பிறவியுன்னை
மனிதனென எப்படி நான் ஏற்பது?

பொது  :
..

அணைந்தன விளக்குகள்
அக்கினியின் ஆர்ப்பரிப்பால்
கருகின மொட்டுக்கள்
கள்வர்கள் ஆள்வதால்

ஆண்டவனும் சரியில்லை
ஆள்பவனும் சரியில்லை
அழுதழுதும் ஓயவில்லை
ஆறாத் துயரும் தீரவில்லை

இமை மூடி ஒருநிமிடம்
இழந்துவிட்ட மழலைகட்கு
அஞ்சலி செலுத்தி நின்றோம்   - இருந்தும்
ஆறுதல் கிட்டவில்லை .

                    - லதாரணி பூங்காவனம் 



திங்கள், 11 ஜூலை, 2016

பக்தன் என்ற பிச்சைக்காரர்கள்



ஒட்டிய வயிற்றோடும் 
ஊனமான உடல்களோடும் 
நோய்தாக்கிய விகாரத்தோடும்...
கையேந்திய நிலையில்..
கோவில் வாசலில் பிச்சைக்கர்கள்... 

இருந்தாலும் மூடர்களுக்குப் புரிவதே இல்லை 

இவர்களைத்தாண்டி உள்ளே சென்று 
கடவுளிடம் பிச்சைகேட்கிறோமே...

இத்தனை பிச்சைக்காரர்களை 
வீட்டு வாசலிலேயே வைத்திருப்பவன்
நமக்கு என்ன கொடுத்துவிடபபோகிறானென்று ..? 

புதன், 14 ஆகஸ்ட், 2013

புத்தகக் கோட்டைக்குள்











ஒழுங்கற்று பரட்டையாக
அழுக்குக்களால் இருகிய முடிக்கற்றைகள்
அழுக்குகளே வர்ணமாகிப் போய்
ஆங்காங்கே கிழிந்து தொங்கும் சட்டை
அழுக்கு படிந்து அருவருப்பான பற்கள்
அழுக்கேறி கிழிந்த பழைய புத்தகக் கட்டுக்கள்

இவை எல்லாமே கண்முன் வரும்
எங்கள் தெரு பைத்தியத் தாத்தாவின் நினைவு வரும்போது.

சுற்றிலும் நான்கைந்து அழுக்கேறிய புத்தகக் கட்டுக்களுடன்
ஒரு புத்தகக் கட்டைத் தலைக்கு வைத்து
எப்போதும் ஏதாவதொரு புத்தகத்தைப் படித்துக்கொண்டே
கால்மேல் கால்போட்டு மல்லார்ந்த நிலையில்
ஸ்ரீரங்கத்துக் கற்சிலை போல்  சலனமற்றுக் கிடப்பார் 

விளையாட்டுப் பிள்ளைகள் நாங்கள்

கற்கள் எடுத்து வீசுவோம்
பைத்தியம் பைத்தியம் என்று கத்துவோம்
கைதட்டிச் சிரிப்போம்
எதைப்பற்றியும் கவலைப்படாது படித்துக் கொண்டே இருப்பார்

அவர் தலைமாட்டிற்குப் பின்னால் சென்று
புத்தகத்தை எடுப்பது போல் பாவனை செய்தாலோ...

பருந்திடமிருந்து தன் குஞ்சுகளைக் காக்கச்
சீறிவரும் தாய்க்கோழியாக மாறிவிடுவார்
நாங்களெல்லாம் "ஓ" என்று கூச்சலிட்டுக் கொண்டு ஓடுவோம்
சிறிது நேரத்தில் திரும்ப வந்து மீண்டும் அவரை சீண்டுவோம்

அப்பப்பா... கோபமும் பயமும் கலந்த அந்த சீற்றம்
மறக்க முடியா நினைவாக இன்னும் என் நினைவில்...

யார்வீட்டுப் பிள்ளை இவர் - ஏன் இப்படி ஆனார் ?
யார் இவருக்கு உணவு தருகிறார்கள் - பசியாற?
யார் இவருக்கு பணம் தருகிறார்கள் புத்தகம் வாங்க ?
எங்கு போகிறார் ஏன் திரும்பி வருகிறார்
என்றெல்லாம் சிந்திக்கும் பக்குவம் பெறவில்லை அப்போது

நிறைய படித்தவர் என்று மட்டும் சொல்வார்கள்
படித்தே பைத்தியம் ஆனான் என்றும் சொல்வார்கள்
எங்களைப் பொறுத்தவரை எங்களுக்கு ஒரு பொழுது போக்கு  அவர்.

எங்கள் தெருவில் சில காலம் ...
பக்கத்துத் தெருவில் சில காலம்
பக்கத்து ஊரில் சில காலம் என்று
குறிப்பிட்ட வீடுகளின் திண்ணைகளில் தான்  உறங்குவார்
சில நாட்கள் இருப்பார் திடீரென்று காணாமல் போய் விடுவார்
சிறிது நாள் கழித்து மீண்டும் வந்து அதே திண்ணையில்.....

மேற்கூரையில்லா திண்ணை அது
வெயில் அடித்தால் கவலைப் படமாட்டார்
குளிரைப் பற்றியும் கவலையில்லை அவருக்கு
சிறிதாக மழைச் சாரல் அடித்தாலோ....
அலறியடித்து எல்லா புத்தகக் கட்டுக்களையும் இழுத்துவைத்து
அதன் மேலே படுத்து பறவையின் சிறகுகள் போல்
இரண்டு கையாலும் அனைத்துக் கொண்டு  மழையில் நனைவர்

"ஏய்" இங்க வந்து உட்கார்.. மழையில நனையாதே என்று
அந்த வீட்டுப் பாட்டி கத்துவாள்....
வேகமாக புத்தகக் கட்டுக்களை எடுத்துக்கொண்டு
மழையில் நனையாதவாறு ஒரு மூலையில் உட்கார்ந்து கொள்வார்

வருடங்கள் உருண்டோடி விட்டது...
அந்த தாத்தாவைப் பற்றி இப்போது தங்கை நியாபகப் படுத்துகிறாள்

யோசித்துப் பார்க்கிறேன்..

புத்தகத்தின் சுவையை அறிந்தபின் தான்
என்னால் உணர முடிகிறது

புத்தக வாசனை தெரியாத பைத்தியங்களிடமிருந்து
அந்தப் பொக்கிஷங்களைப் பாதுகாக்கத்தான்
அவ்வளவு போராடியிருக்கிறாறென்று.

புத்தகங்களைப் படிப்பதற்காகவே அவ்வளவு நாள்
உயிரோடு இருந்திருந்திருக்கிறாறென்று

புத்தகக் கட்டுக்களைத் தன்னைச் சுற்றி வைத்து
ஒரு நூலகத்திற்குள்ளேயே அவர் வாழ்ந்திருக்கிறாறென்று

அந்த தாத்தா எப்போதோ இறந்து விட்டார்

அவரை எரித்து இருப்பார்கள்
கூடவே அவர் புத்தகங்களையும்...

யாழ்நூலகத்தை எரித்ததுபோல்
இவர் நூலகத்தையும் எரித்திருப்பார்கள்
புத்தகத்தைப் போற்றாத பைத்தியங்கள்.

வெள்ளி, 19 ஜூலை, 2013

வாலிக்கொரு வருத்தப்பா



           
            
எரிதழலுக் கிரையான தமிழ்நூலே
      எல்லோர்க்கும் சுவையீந்த தமிழ்த்தேனே
அரிதாரக் கடல்மேலே ஒளிரலைபோல்
      அளவற்ற மனம்கவர்ந்த நறும்பூவே
சிறப்புமிகு கவிதைதரு செந்நாவே 
    இறப்போடு கைகோர்த்துச் சென்றாயே
நிறைதமிழால் விருத்தப்பா தந்தாயே
    நிரைநீரை நன்றியுடன் தந்தோமே!

சனி, 19 ஜனவரி, 2013

ஹப்பப்பா பெண்ணின் நிலை !

பள்ளிக்குச் சென்றால் வாத்தியார்
கோவிலுக்குச் சென்றால் பூசாரி
பேருந்தில் போனால் டிரைவர்
ரோட்டில் சென்றால் குடிகாரன்

ஹப்பா...     

இத்தனை வேட்டைநாய்களையும் கடந்து
ஒரு பெண் வீட்டிற்கு பத்திரமாய் வந்து சேர்வது

விண்வெளிக்குச் சென்று திரும்புவதைக் காட்டிலும் கடினம் தான்...

வெள்ளி, 11 ஜனவரி, 2013

எப்படித் தித்திக்கும் என் பொங்கல்?


வருடங்கள் தோறும் வந்து”(உ)வந்து” போகின்ற

     வீரர்குல பண்டிகையாம் தைப்பொங்கலே - நீயும்

வருந்தும்படி எமதுவாழ்க்கை மாறியதை நீயறிய

     வரிசையிட்டுக் கூறுகின்றேன் வெள்ளைப் பொங்கலே! (1)


வயிறார உண்பதற்கும் வக்கில்லா நிலைமையிலே

     விவசாயி இன்றுள்ளான் தைப்பொங்கலே – அவன்

பயிர்வளர்த்த இடங்களிலே பாதியிடம் கட்டிடமாய்

     பணக்காரன் ஆக்கிவிட்டான் பானைப் பொங்கலே!.....(2)



விடுபட்ட இடத்தினிலே விதைவிதைத்து ஓய்ந்தபின்னே

     வளர்த்திடத்தான் நீரில்லை தைப்பொங்கலே – அதை

விடுவதற்கு நீதிமன்றம் ஆணையிட்ட பின்னாலும்

     விடமாட்டேன் என்கின்றான் வாகைப் பொங்கலே!.....(3)


கொஞ்நஞ்ச இடத்தினிலே கரும்புமஞ்சள் பயிர்செய்து

     வாஞ்சையோடு வருடிவிட்டால் தைப்பொங்கலே ­– அந்த

மஞ்சளெல்லாம் மருத்துவத்தின் தேவைக்காக வேண்டுமென்று

     வெளிநாட்டான் வாங்குகிறான் வீரப் பொங்கலே!.......(4)


நாட்டிலுள்ள பயிர்நிலங்கள் நாகரீக வளர்ச்சியிலே

     நகரமாகிப் போனதுவே தைப்பொங்கலே - இப்போ

காட்டினிலே பாத்திகட்டிப் பயிவளர்க்கும அவலத்தினை

     கர்வத்தோடு செய்கின்றான் கன்னிப் பொங்கலே ....(5)


காட்டுயானை ஓடிவந்து கரும்பிட்ட தோட்டத்திலே

     கதகளிதான் ஆடுதையோ தைப்பொங்கலே – நாம்

காட்டினிலே பயிர்வளர்த்து பணம்செய்யும் செயலையது

    கண்டுமனம் கொதிக்கிறதே கரும்புப் பொங்கலே! ....(6)


கதகளிக்குத் தப்பிவந்த கரும்பெல்லாம் சூளையிலே

     கட்டுக்கட்டாய் எரிகிறதே தைப்பொங்கலே – அந்தப்

பதமான கரும்பிற்குப் பாதிவிலை கூடஇல்லை

     பாரதத்தில் இந்தநிலை பருவப் பொங்கலே!.....(7)


வருமானம் இல்லாமல் விவசாயக் கடனுக்கு

     வட்டிகட்ட ஏலவில்லை தைப்பொங்கலே – பாதி

விவசாயி மனமொடிந்து விசமருந்திச் சாகின்றான்

     விளங்கிடுமா இவ்வுலகம் வெண்ணைப் பொங்கலே…..(8)


கேணியிலே நீரில்லை தூர்வாரப் பணமில்லை

     கழனிக்கும் உரமில்லை தைப்பொங்கலே - இங்கு

மாணியம் கொடுத்தாலும் மின்சாரம் காணாமல்

     மயங்கித்தான் விழுகின்றான் மாயப் பொங்கலே!.......(9)


சேற்றினிலே கால்வைத்து சோறுபோட்ட உழவனைத்தான்

     தேற்றிவிட யாருமில்லை தைப்பொங்கலே – அவன்

ஏர்க்கலப்பை எல்லாமே துருப்பிடித்து போனதினால்

     ஊர்நிலங்கள் வெடிக்கிறது வெற்றிப் பொங்கலே!.....(10)


தோரணமாய்க் கட்டிவைக்கத் துண்டுமஞ்சள் கரும்பின்றித்

     தோள்துவண்டு போகின்றோம் திருப்பொங்கலே - நமது

திருநாட்டின் நிலைமையின்றுத் தலைகீழாய் போனதினால்

     தித்திப்பாய் இருக்கவில்லை  இத்தமிழர் பொங்கலே!....(11)

வியாழன், 29 நவம்பர், 2012

தாய்மை


பெண்மையின் நிறைவு புதுசுமை ஏற்பது
நானும் சுமக்கிறேன் சுகமான வலியுடன்

நீ எனக்குள் விழுந்த நாள்முதல்
ஏழுலகச் சுகங்கள் எல்லாவற்றையும்
என்மேல் மட்டும்தான் பொழிகிறானோஎன்று
கடவுளைக்கூட கொஞ்சநாள்
கவனமாகக் கவனித்திருக்கிறேன்

உனக்காக உண்பதும் உன்னோடுவிழிப்பதும்
நீ புரண்டு படுக்கவே நான் புரளாமல் படுப்பதும்
எட்டி உதைக்கும் உன் குட்டிப் பாதங்கள்
வலிக்காமல் இருக்க வயிற்றை வருடிக் கொடுப்பதும்

என் மாற்றத்தைக் கண்டு நானே அதிசயித்திருக்கிறேன்.

கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காத சுகத்தை
உள்ளில் உள்ளபோதே உன்னால்
கொடுக்க முடிகிறதே - எப்படி?

தாயாகாமலே தாய்மையை உணரும் வித்தையை
நான் கற்றது எப்போது?
யோசித்துக்கொண்டிருக்கையிலே இதோ...
பத்தாவது மாதமும் வந்து விட்டது.

உன் பிஞ்சு முகம் காண
நிமிடந்தோரும் துடிக்கிறேன்.

மழைவருவது எப்போதென்று
எனக்கு மட்டும் எப்படித் தெரியும்?

நீ நலமாக வெளிவந்தால் மொட்டை அடிப்பதாக
பாட்டி வேண்டிக் கொண்டிருக்கிறாளாம்.

நீ பிறக்கும் நாளன்று குறும்பாடு வெட்டி விருந்தாம் -
தன்பங்குக்கென்று தாத்தா சொல்கிறார்.

என்ன பெயர் வைப்பது? எப்படியெல்லாம் வளர்ப்பது?
ஆரம்பக் கல்வியின் அனுமதிச் சீட்டை
எந்தப் பள்ளியில் வாங்குவது - என்று
ஏக குழப்பம் ஆகியிருக்கிறார் உன் அப்பா.


நான் புரண்டு படுத்தால்
நஞ்சுக்கொடி உன் பிஞ்சுக்கழுத்தைச் சுற்றிவிடுமாம்

பிரசவ வலி புரட்டி எடுக்குமாம்
நீ பிறந்த பின் நான் பலமிழந்து போவேனாம் -
அடுத்த வீட்டுக்காரர்கள் கூட
அநியாயமாய் பயமுறுத்துகிறார்கள்

நீலவண்ணக் கண்களை நீ கொண்டிருப்பாயோ?
உன் அப்பாவைப் போலவே
உன் நாசியும் எடுப்பானதாயிருக்குமோ?

என் தங்க மகளின் தலைமுடி தொட்டால்
மயிலிறகு தன் கர்வத்தை விடுமோ?

மாருதியின் ஓவியம்போல்
முக அழகு ஒத்திருக்குமோ- இப்படி

எண்ணக் கலவைகளின்
வண்ணக் கனவுகள் ஓர்புறம்

ஆசையோடு போட்டியாய்
அவஸ்தைகள் ஓர்புறம்

நிற்கமுடியவில்லை நடக்க முடியவில்லை
உணவு ஏற்கவில்லை உறக்கமும் வருவதில்லை
படுக்க முடிவதில்லை புரளவும் இயலவில்லை

உதிரத்தின் ஓட்டம் ஒரு சீராய் இருப்பதில்லை
உள்மூச்சும் வெளிமூச்சும் ஒழுங்காகச் செல்வதில்லை  - இருந்தாலும்
உனக்காக எல்லாமும் ஏற்கின்றேன்.

ஆமாம்...என்கண்ணே-
ஏன் இன்னும் உறங்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாய்?

நீ புரண்டுபடுக்கப்
போதுமான இடம் இல்லையோ? அல்லது
 நான் உண்ணும் உணவால்
உன் சின்ன வயிறு நிரம்பவில்லையோ? பின் என்ன?

ஓ... என் எண்ண ஓட்டம் உனக்குள்ளும்
பாதிப்பு ஏற்படுத்துகின்றதோ?

என்ன செய்ய?

ஏழையாய்ப் பிறந்துவிட்டால்
எதுகுறித்தும் கவலையில்லை
செல்வந்தராய் இருந்திருந்தால்
செலவு பற்றிக் கவலையில்லை
நாம்தான் நடுத்தரவர்க்கத்து நகல் ஆயிற்றே

முதல் தேதியை எட்டிப்பிடிக்க
எத்தனை வேகமாய்த் தள்ளுகிறோம் மற்ற தேதிகளை?

இருபத்தி ஆறு -
நீ பிறக்கப்போகும் நாளென்று
குறித்துள்ளாரே மருத்துவர்

மாதக்கடைசியாயிற்றே..
மருத்துவத்திற்கு என்ன செய்ய? என்ற கவலையா?

பிரசவத்திற்கு ஆட்டோ மட்டுமே இலவசமாம். -
ஆசுபத்திரி சிகிச்சை இல்லையாம் - என்ற ஆதங்கமா?

ஒன்று செய் -

முதல் தேதி வரும் வரை
என் முகம் காணும் ஆசையை
முழுதாய்த் தள்ளிவை

ஏன் தெரியுமா?
உன் ஒவ்வொரு பிறந்தநாளும்
ஒற்றைத் தேதிக்குள் வந்தால் தானே
புத்தாடை பரிசுகள் அந்நாளே கிடைக்கும்?

அதனால் -
சம்பளம் வாங்கும் வரை சமர்த்தாய் உள்ளிரு .

இன்னும்...
நீ கட்டாயமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய சில
கட்டாயக் கடமைகள் உனக்குண்டு

வயிற்றைக் கிழித்துக்கொண்டு
வெளிவந்து வருத்தாதே
வலிதாங்க முடியும் ஆனால் விலை தாங்க முடியாது

தொப்பூழ் வழிகிட்டும் ஆகாரம் குறைவென்று
குருதி குடித்துவிடாதே!

விரதமாய் இன்னும் ஒருவாரம்
வெளிவரும் நாள்வரை வாய்திறக்காமல்
உன் விரதத்தைக் காப்பாற்று!

நன்றி என்னுயிரே!
என்நிலை நீ புரிந்ததற்கு!

(என்னுடைய "என் தவத்தில் என்ன குறை?" என்ற நூலிலிருந்து (எழுதிய வருடம் 2003))

திங்கள், 26 நவம்பர், 2012

பிஞ்சினங்கள் வெம்புவதோ….?

கொஞ்சும்மொழி பேசிபேசிக் குவிந்தஇதழ் முத்தமிட்டு
நெஞ்சாரத் தழுவியந்தத் தளிர்மேனி தனையணைத்து
மிஞ்சிவிடும் தேன்சுவையை மழலையெனக் கொடுத்தவனைக்
கொஞ்சமுமே இரக்கமின்றி கூலிவேலைக்(கு) அனுப்புவதோ?


சோம்பேறி உருக்கொண்டு சுயமானம் இழந்தவனும்
சோமபானம் அருந்திக்கொண்டு சுகவாழ்வு வாழ்பவனும்
ஆறறிவு அற்றோனாய் அடுத்தடுத்துப் பெற்றோனும்
பேருண்டி நிரப்புதற்குப் பிள்ளைகளை வதைக்கின்றான்


எள்ளளவும் முடியாது இனிஎன்னால் எனக்கூறி
பள்ளிக்குச் செல்பவனைப் பாதியிலே நிறுத்திவிட்டு
வைப்பாட்டி வீட்டிற்கு வருமானம் கொடுக்கின்றான்
பட்டாசு செய்வதற்குப் பிள்ளைகளை அனுப்புகின்றான்.


தன்னிகர்த்த தமிழ்தன்னைப் பயிலுகின்ற வேளையிலே
அன்னையவள் மடிதவறி ஆழ்கிணற்றில் வீழ்ந்ததுபோல்
தன்னலமே கொண்டசில தரமற்ற தந்தையரால்
சின்னஇளஞ் சிறுவர்கள் சுமைதூக்கிச் சாகின்றார்.

வேளாண்மை செய்தவனோ வீட்டினிலே முடங்கிவிட்டு
தோளாண்மை அற்றவனாய்த் துரத்துகின்றான் சிறுமகனை
ஆளாகா பருவத்திலே அரைவயிற்றுக் கஞ்சிற்காய்த்
தாளாத துயரத்துடன் தொழிற்சாலை அடைகின்றான்

ஆர்ப்பாட்டம் போராட்டம் அடிதடிகள் செய்யாமல்
யார்குறித்தும் ஒருகேள்வி ஏனென்றும் கேட்காமல்
அடிமைகள் போலிருந்து அயராது உழகை;கின்றார்
விடியாத இருளுக்கு விறகாகிப் எரிகின்றார்.

சிறுகூலி கொடுத்தாலே சிறுவர்களே முடித்திடுவார்
சீறாமல் சிணுங்காமல் சொல்வதெலாம் செய்திடுவார்
அதனாலே கவலையின்றி சிறுவர்களை ஏய்த்துச்சில
முதலாளி வர்கங்கள் முறையற்;றுப் பெருக்கின்றார்

உளமற்ற அரசியலார் ஊர்முழுதும் உலவுவதால்
வளம்மிக்க நாட்டினிலே வறுமைவீதம் உயர்கிறது
இளம்பிஞ்சுக் கரமெல்லாம் இரும்படித்துக் காய்க்கிறது
களப்பலியாய் சிறுவர்களைக் கண்முண்னே சாய்க்கிறது

ஏங்கியழும் பிள்ளைக்கு ஏடுவாங்கப் பணமில்லை
ஆங்குஒரு நடிகனுக்கு ஆறுகோடி தருகின்றான்.
ஓங்குபுகழ் நாட்டினிலே ஓர்பிஞ்சைத் தாங்குதற்கு
ஈங்குஒரு நாதிஇல்லை ஈனர்கட்கோ குறைவில்லை

பிழைப்பதற்கு வழிகோடி பூமியிலே இருந்தாலும்
உழைப்பதற்கு மனமின்றி வெட்டிக்கதை பேசிவரும்
ஊதாரி வாழ்க்கைக்கு உன்பிள்ளை துணைகேட்கும்
நாதியற்ற தந்தையரே நாலுபிள்ளை உனக்கெதற்கு?

குடிகாக்கும் தரமற்றோன் மனைவியான பெண்ணிணமே
குடும்பசுமை ஏற்பதற்கு குழந்தையல்ல பலியாடு
படிப்பென்ற செல்வத்தைப் பிள்ளைக்குத் தருவதற்கு
முடியவில்லை என்றாலுன் கருவரைக்கு விலங்குஇடு!

ஞாயிறு, 18 நவம்பர், 2012

“என் இனத்தார் விட்டுவிலகும்;; விளையாட்டும் கலைகளும்”


(குவைத்தில் வளைகுடா வானம்பாடிகள் கவிஞர் சங்கம் நடத்திய கவியரங்கத்தில் “என் …” என்ற தலைப்பில் 24-11-2011 –அன்று வாசித்த கவிதை)

வாழ்த்து:

பாரெங்கும் பரவியுள்ள பைந்தமிழாள் உந்தனுக்கும்
ஈரைந்து மாதங்கள் எனைச்சுமந்த தாய்மைக்கும்
சீராட்டிச் சிற்றறிவைச் செப்பனிட்ட தந்தைக்கும்
நீராட்டிப் பாதமலர் நனைக்கின்றேன் நன்றியுடன்!

மங்கிடாத தமிழாலே மண்ணிசைத் திருவிழாவை
தங்கும்படி மனத்தினிலே தொகுத்துரைக்கு மெனையழைத்து
இங்கிருக்கும் கவிஞரோடு என்கவிதை வேண்டுமெனும்
அங்கிருந்து வந்தகவி கபிலனுக்கும் என்நன்றி!

அவையடக்கம்:

நன்றிமலர் தூவியபின் என்தமிழின் வாசனையை
இன்றிந்த அரங்கினிலே நிறைத்திடவும் முயலுகின்றேன்
“என்”என்ற தலைப்பினிலே எனைப்பாட அழைத்தவுடன்
எண்ணத்தில் தோன்றியதோ “என்கலையும் விளையாட்டும்”.

                -------
கவிதை:

தொலைக்காட்சிப் பெட்டியிலும் தொலைப்பேசி அரட்டையிலும்
அலைகடலாய்க் கணினிவந்து ஆரவாரம் செய்வதிலும்
இலையென்று ஆனதுநம் கலைகளோடு விளையாட்டும்
குலைகிறது அதனாலே கேள்வியின்றி தேகபலம்!  ……(1)

ஓப்பற்ற வீரராக உயர்தமிழர் வாழ்ந்ததாக
முப்பாட்டன் காலத்து வரலாறும் உரைக்கிறது
திறம்செறிந்த ஆண்போலே பெண்ணிருந்த தாலன்று
முறம்கொண்டு  புலியடித்து விரட்டியதாய் கதையுண்டு …..(2)

இத்தனை பலம்கொண்ட எம்முன்னோர் வழிவந்தோர்
சொத்தையாகிப் போனதின்று ஏனென்று ஆராய்ந்தால்
மொத்தமாக விட்டுவிட்ட விளையாட்டும் கலைகளுமே
அத்தனைக்கும் காரணமாய் ஆனதுதான் வேதனையே! …..(3)

கால்கொலுசு சத்தமிட களங்கமற்ற சிரிப்புடனே
பால்மறந்த பிஞ்சுமுதல் பள்ளிசெல்லும் சிறுமிவரை
மறைந்தோடி யாடியதும் மணியூஞ்சல் ஆட்டியதும்
மறந்திடத்தான் இயலுமோ மற்றேதும் ஈடாமோ? …..(4)

இடைசெருகிய தாவணியும் இரட்டைசடை பின்னலோடும்
இடைமெலிந்த நங்கையர்கள் தோட்டத்திலே ஒன்றுகூடி
கண்கட்டி ஆடியதும் கயிறுதாண்டி குதித்ததையும்
நொண்டியாடி நின்றதையும்; நினைக்கையிலே இனிக்கிறது! …..(5)

பந்தடித்து விளையாடிய பருவமங்கை போலன்றி
வம்புபேசும் நேரந்தனில் ஒன்றாகச் சேர்ந்திருந்து
வெற்றிலையை மென்றபடி உட்கார்ந்த இடத்தினிலே
ஒற்றுமையாய் மூத்தபெண்டிர் விளையாடினர் பல்லாங்குழி! …..(6)

சிறுவரெல்லாம் சேர்ந்துஇரு கூட்டமாகப் பிரிந்துநின்று
சிறுகுச்சியொன் றுபோடஅதைச் சடுதியிலே அடித்துவிட்டு
சிறுகுழியில் வீழாமல் வேகமாகத் தடுக்குமந்த
சிறப்பான கில்லியாட்டம் சிந்தைக்குள் சிலிர்க்கிறது! …..(7)

சின்னஞ்சிறு பாலகர்கள் வரிசையாக குனிந்திருக்க
தன்கையை ஊன்றிவைத்து மற்றவர்கள் தாண்டிவர
சின்னதான கால்படாது சிரத்தையோடு ஆடுமந்த
பொன்குதிரைத் தாண்டுமாட்டம் இன்றெங்கே இருக்கிறது? …..(8)

தொட்டுவிட முயலும்போது காலிழுத்து விட்டபின்பு
சுற்றிவளைத் தெல்லோரும் தூக்கியெடுத் தப்படியே
துள்ளுகின்ற எதிராளைத் தொடவிடாது கோட்டினையே
எள்ளிவிளை யாடுமந்தச் சடுகுடுவும் போனதெங்கே? …..(9)

மஞ்சளோடு கருமையை உடல்முழுதும் பூசிக்கொண்டு
அஞ்சியோடும் குழந்தைகளைச் சிலநேரம் அழவைக்கும்
நெஞ்சுவிம்மும் சீற்றத்தோடு ஆடும்புலி யாட்டமட்டும்
எஞ்சியள்ள திப்போதும் எங்கோசில இடந்தன்னில்! …..(10)

கொலகொலயா முந்திரிக்கா கோலிகுண்டு பம்பரமும்
நிலாக்கும்பல் டியாண்டோல் தட்டாங்கல் தாயத்தோடு
ஆடுபுலி ஆட்டமெல்லாம் அவ்வப்போ நினைவினிலே
தேடித்தேடிப் பார்க்குமாறு தொலைந்தநிலை தானின்று ...(11)

இதுபோன்ற விளையாட்டு ஏராளம் இன்னுமுண்டு
இதையெல்லாம் விட்டுவிட்டு கணினியிலே கால்பந்தும்
முகநூலில் கட்டிடமும் கட்டிவிளை யாடுவதால்
தெருவெல்லாம் சிறுவரின்றி வெறிச்சோடி இருக்கிறது…..(12)

தமிழர்களின் கலைகளெல்லாம் தானமாகத் தந்துவிட்டு
இமியளவும் கவலையின்றி நாமிருக்கும் காரணத்தால்
களரியோடு கதகளியும் வர்மக்கலை நாட்டியமும்
மலையாளக் கலையாகி மர்மத்தோடு சிரிக்கிறது! …..(13)

கராத்தேவும் குங்ஃபூவும் ரெஸ்ட்லிங்கும் அதுபோலே
பெயர்மாற்றம் பெற்றுவிட்ட தமிழ்நாட்டுக் கலைகள்தாம்
வெளிநாட்டு  மோகத்திலே அதன்பின்னால் ஓடினாலும்
பலமற்றதே கத்தினால் அதைப்படிக்க முடிவதில்லை!…..(14)

வேறினத்தோர் கலையென்றால் வெறிகொண்டு ஏற்கின்றோம்
வேரூன்றிய நம்கலையை வெட்கமென விடுகின்றோம்
சீர்;ம்pக்க குலத்துதித்த சிந்துவெளிக் கலைகளெல்லாம்
சீர்குலைந்து போவதுதான்; சிறிதேனும் நியாயமா?  ….(15)

கோலெடுத்துச் சுழற்றுகின்ற சிலம்பாட்டம் சுருளியோடு
வாளெடுத்துச் சுழற்றுகின்ற வாள்வீச்சும் மறந்துவிட
பாறையினைத் தூக்கிதனது வீரத்தை நிலைநாட்டிய
தேரிழுத்த சீலர்குலம் சீக்காளி ஆனதின்று!  …(16)

சுற்றிவந்து எத்தனைதான் நடைப்பயிற்சி செய்தாலும்
சற்றுமந்த சர்க்கரையும் குறையாமல் தவிக்கின்றான்
மற்றுமந்த எரிச்சலிலே குருதிகொஞ்சம் கொதித்தபின்தான்
பற்றுவந்து விடுகிறது கேழ்வரகு கம்புமீது!… (17)

விருதுக்கு மட்டுந்தான் விளையாட்டென் றாகிவிட
விரும்பியவர் மட்டும்சில விளையாட்டைப் பயில்கின்றார்;
குறிப்பிட்ட விளையாட்டை மட்டுமவர் ஏற்றதனால் -(நான்)
குறிப்பிட்ட ஆட்டமெல்லாம்  நியாபகங்கள் ஆனது!   (18)

விரலசைவில் உலகம்தான் மறுக்கவில்லை ஏற்கின்றேன்
விரல்மட்டும் அசைந்துகொண்டு உடலில்பல மில்லையென்றால்
வெறுதாவாய்ப் போய்விடும்நம் விஞ்ஞானமும் வளர்ச்சியும்
வெறும்வார்த்தை யில்லையிது விளையாட்டை ஏற்றுவிடு…….(19)

கலைகளையும் விளையாட்டையும்; கைவிடாது பின்பற்றி
பலமிக்க சந்ததியைப் பாருக்கு நாம்கொடுப்போம்
அறிவோடு ஆற்றலும் அவனியிலே மிக்கவர்கள்
தரமான தமிழர்களே எனவியக்க வாழ்ந்திடுவோம்! (20)


---யாதுமானவள் (எ) லதாராணி பூங்காவனம்

சனி, 5 மே, 2012

யார் குற்றம்?


வருடா வருடம் தேர்த் திருவிழா நடக்கிறது

பிரச்சனைகளுடனே தான் ஆரம்பிக்கும்....

ஊர்ப் பெரியவர்களுக்குள் பிரச்சனை -
முதல் மரியாதை யாருக்கு ?
யார் வீட்டுமுன் தேர் முதலில் நிற்க வேண்டுமு;?
யாருடைய பூசை முதலாவதாக இருக்க வேண்டும்?

அய்யர்களுக்குள் பிரச்சினை -
யார் ஆரத்தி எடுத்து பூசை செய்வது?
யார் விபூதி தட்டை பிடிப்பது?
யார் அம்மன் பாதத்தில் அமர்ந்து தட்சணைப் பணத்தைப் பாதுகாப்பது?

வியாபாரிகளுக்குள் பிரச்சனை -
பூக்கடை எங்கே வைப்பது?
டீக்கடை எங்கே வைப்பது?
பழக்கடை எங்கே வைப்பது?

கலைஞர்களுக்குள் பிரச்சினை -
கரகாட்டம் முதலா?
ஒயிலாட்டம் முதலா அல்லது
தப்பட்டை முதலா?

விடலைகளுக்குள் பிரச்சினை -
1000 வாலா வெடிப்பதா....
ஒத்த வெடி வெடிப்பதா அல்லது
ராக்கெட்டு விடுவதா?

வயதுப் பெண்களுக்கும் பிரச்சினை
தாவணி அணிவதா
பட்டுப் புடவை அணிவதா அல்லது
சுடிதார் அணிவதா

குழந்தைகளுக்கும் பிரச்சனை
அப்பாவுடன் செல்வதா
மாமாவுடன் செல்வதா அல்லது
அம்மா அனுப்பாமலே விட்டு விடுவாளா....

இப்படி.... ஒவ்வொருவரின் 
சொந்தப் பிரச்சினைகளுடனே...
திருவிழாவும் தொடங்கிவிட்டது...

பெரிய வடம்...
அந்தப்பக்கம் 20 பேர் இந்தப் பக்கம் 20 பேர்
தேரிழுத்துத் தெருவில் போக
அச்சாணி முறிந்து அங்கேயே 20 பேர் பலி

முதல் மரியாதையிலும்
தட்சணைத் தட்டிலும் இருந்த கவனம்
தேர் செல்லும் பாதை சீராக இருக்கிறதா என
சிந்திக்கவே இல்லை.

குண்டும் குழியுமாக உள்ள சாலையில்
டாஸ்மாக்கில் தண்ணி அடித்துவிட்டு வருபவன்
தள்ளாடிக் கொண்டே நடக்கலாம்
இருபது டன் எடையுள்ள தேரெப்படி ஓடும்?

யாருமே சொல்வதில்லை
சாலைகளைச் சீரமைக்காதது அரசாங்கத்தின் குற்றமென்று.. !

இப்போதும் சொல்கிறார்கள்..
அது தெய்வ குத்தமென்று!




வெள்ளி, 4 மே, 2012

அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!


காவிகள் செய்யும் லீலைக ளெல்லாம் கடலலை போலே தொடருது
பாவிகள் நாட்டைக் கெடுப்பது நமது கண்முன் நன்றாய்த் தெரியுது
ஆயினும் மக்கள் புத்தியு மேனோ அவர்பின் னாலே அலையுது
நோயினை ஒழிக்க மருந்திற்குப் பதிலாய் விஷமா நாமும்  குடிப்பது?

பிரம்மச் சரியம் காக்கும் கலையை மேடை போட்டு நடத்துது
பிறர்மனை யாளை தள்ளிச் சென்று மேடை பின்னால் ஒளியுது
நடிகை யையெல்லாம் சீடர் களாக்கி நாய்போல் பின்னே அலையுது
கடவுள் பெயரைச் சொல்லி அங்கே காமக் கூத்து நடத்துது

நூற்றுக் கணக்காய் ஆசிர மங்கள் நாடு முழுதும் முளைக்குது
வேற்று நாட்டில் கிளைகள் கூட வேக மாகப் பரப்புது
கோடிக் கணக்கில் பணமோ இங்கு கிடுகிடு வென்றே குவியுது
ஓடியாடி உழைக்கா மல்தான் இவர்கள் உடம்பும் கொழுக்குது

பணிவிடை செய்ய பக்தை மட்டும் தனியாய் அறைக்குள் சென்றதையும்
முனிவன் போலே நடிப்பவன் அங்கே முறைகெட் டவனாய் நடந்ததையும்
பளிச்செனப் பிடித்த படங்க ளெல்லாம் தொலைக் காட்சியியே வந்ததையும்
தெளிவாய்ப் பார்த்தும் மக்கள் இன்னும் துதித்தே அவனைப் போற்றுகின்றார்

இத்தனை இழிந்த செயலைச் செய்தும் இன்னும் வெளியே சுற்றுகிறான்
உத்தமன் போலே வேடம் போட்டு ஊரை இன்னும் ஏய்க்கின்றான்
பணத்தின் பலத்தால் பக்தர்களோடு அரசாங்கத்தையும் அடக்கிவிட்டான்
கோடி ரூபாய் காலணி கொடுத்து ஆதீ னத்தையும் வாங்கிவிட்டான்

ஒழுக்கம் கெட்ட பிறவி யிவனே தகுதி யுடையான் எனச்சொல்லி
வழக்கமான முறைகளின்றி வாரிசு இவனே யெனக் கூறித்
தகுதியற்ற இவனின் தலையில் தங்கக் கிரீடம் அணிவித்து
மழுப்பும் பதிலை யேனோ மதுரை ஆதீ னந்தான் சொல்கின்றார்

வழக்கம் போல இந்தக் காவியும் எந்த வலையில் சிக்கியதோ
மழிக்காத் தலையன் இவனென் மகன்போல் அப்பன் நானென்றும்
பழிக்கு அஞ்சாப் புல்லர்கள் பதவியை பங்குபோட்டு மகிழ்வதை
விழிபிதுங்கிய நிலையில் நாமும் வேடிக்கை மட்டும் பார்க்கின்றோம்.

கண்களை மூடித் தியானம் செய்தால் கவலை ஒழியும் என்பவரைக்
கண்களை மூடி நம்பிச் செல்லுதல் முற்றும் மடமை  என்ற றிந்து
மோசடிக் காவி கள்அத் தனைபே ரையும்  நாட்டை விட்டே துரத்திவிட
யோசிக் காமல் இன்றே அனைவரும் ஒன்றாய் இணைந்து செயல்படுவோம் !


புதன், 2 மே, 2012

நாளைக்குப் பூக்கிறது ரோஜா...!


ஆசையாக வளர்த்த ரோஜா செடியில்
எனக்குப் பிடித்த  ரோசாப்பூ...
மொட்டு விட்டிருக்கிறது

நாளைக்குப் பூத்துவிடும் ....

நாளை கல்லூரிக்குச் செல்லும்போது
தலையில் வைத்துக்கொண்டு செல்லவேண்டும்...
அக்கா முடிவெடுத்துவிட்டாள்

காலையில் அம்மனுக்கு
இந்த ரோசாப்பூ வைத்து  பூஜை செய்ய  வேண்டும்...
அம்மா நினைத்துக்கொண்டிருக்கிறாள்

நாளை தன் காதலிக்கு
இந்த ஒற்றை ரோசாவைப் பரிசாகக் கொடுக்க வேண்டும் ...
தம்பியும் யோசித்துக்கொண்டிருக்கிறான்

இந்தப்பூவில் தேன் குடிக்க ஆசைப்பட்டு  
நேற்றுமுதல் அந்த மொட்டைச் சுற்றியே
வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது ஒரு வண்டு

ஆனால்..

அழகையும்-
நறுமணத்தையும்
தேன் துளிகளையும்
அடிவயிற்றில் சுமந்து கொண்டு ----

இரவெல்லாம் பிரசவ வேதனையில்
முனகிக்கொண்டிருக்கும்போதும்

இந்த யாரோ ஒருவரால் -நாளை
தன்னுடைய மரணம்
நிச்சயிக்கப்பட்டு விட்டதென்பதை அறியாமலே
இதழ்விரிக்கக் காத்திருக்கிறது அந்த ரோசாப்பூ...

புதன், 25 ஏப்ரல், 2012

சொட்டுச் சொட்டாய் ஒரு பிரளயம்...!


கண்ணீர்....
யாரோ கொடுக்கும்   பரிசு

கொடுத்தவரை  நினைத்துக்கொண்டே
வழியும் அமிலத் துளிகள் ...!

கண்ணீர்...
சந்தோஷத்தைப் புதைக்கும்போது
தெறித்து விழும் இரத்தத்துளி

கண்ணீர்...
ஏமாற்ற அலைகள்
முட்டிச் சிதைக்கும்  ஆழ்மனக் கனவு

கண்ணீர் ....
துரோகத்தைத் தாங்க முடியாமல்
கரை மீறும் துக்கம்

கண்ணீர்... 
துரத்திக் கொண்டே வரும்
உணர்வுகளின் பாதிப்பு...

கண்ணீர் ...
வெட்டிப் பறித்த 
உறவின் வலி
கண்ணீர்...

கண்ணீர்...
துடைக்கத் துடைக்க
பெருகிக்கொண்டே இருக்கும் நச்சு நீர்...

கண்ணீர்...
மொழியின் இன்னொரு  வடிவம்
உணர்பவர்களால் மட்டுமே கேட்கமுடியும்!

கண்ணீர் ...
ஒலியின் இன்னொரு வடிவம்
கேட்பவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்!

கண்ணீர்....
எழுத்தின் இன்னொரு வடிவம்

புரிந்தவர்களால் மட்டுமே படிக்க முடியும்!

மொத்தத்தில் ..... கண்ணீர் ...
சொட்டுச் சொட்டாய் வெளிப்படும்
உள்மனப் பிரளயம் !

திங்கள், 23 ஏப்ரல், 2012

தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!

தாத்தாவின் மறைவுக்குப் பின்
பாட்டிமட்டுமே வருவாள் எங்கள் வீட்டிற்கு....

பென்ஷன் பணம் வாங்கியவுடனே
மஞ்சள் பைநிறைய ..

முறுக்கு அதிரசம் கடலை உருண்டைகளும்
மாம்பழம் பலாப்பழம் பேரிக்காய் என
அந்தந்த சீசனுக்குத் தகுந்தாற்போல் பழங்களும்
பையில் திணித்துக்கொண்டு வருவாள்....

வேலூரிலிருந்து பஸ்பிடித்து
வெய்யிலில் நடந்து வருவாள்....

அவள் வெய்யிலில் நடந்து வருவதையோ
கனமான பையைச் சுமந்து வருவதையோ
வயதான  அவளுக்குக் கால் வலிக்குமே என்பதையோ 
புரிந்து கொள்ளாத பருவமது....

தூரத்தில் அவளைப் பார்த்தவுடன்...

ஐ.. ஆயா வர்றாங்க... என்ற சத்தத்தோடு
விளையாட்டை நிறுத்திவிட்டு ஓடுவோம்

பையிலிருந்து திண்பண்டங்களையெல்லாம்
ஒவ்வொன்றாய் வெளியில் எடுத்து வைக்கும்போது

மாம்பழத்தின் சுவையை மீறி
பலாப்பழத்தின் வாசனை மீறி...
எங்கள் மூக்கைத் துளைப்பது...
விபூதி வாசனைதான்

ஆமாம்...
அத்தனை பக்தியானவள் - முருகக்கடவுள் மீது
பேரக்குழந்தைகளைப் பார்க்க வருவதற்கு முன்
முருகனைப் பார்த்துவிட்டுத்தான் வருவாள்

கோவிலில் கிடைக்கும் விபூதியைக் கூட
அதே  பையில் தான் போடுவாள்

பக்கத்தில் எதாவது அம்மன் கோவிலிருந்தால்
அங்கும் நுழைந்து குங்குமமும் வாங்கி
பையில் போட்டுக்கொண்டு வந்துவிடுவாள்
   
அவள் எங்களுக்காகத்தான் வேண்டியிருக்கிறாள்
என்பதைக்கூட நாங்கள் அறிந்திடாமல்
முகம் சுளித்திருக்கிறோம்...


ஆனாலும் விபூதி வாசனையுள்ள முறுக்கைக்கூட
ஆசையாகத் திண்போம்.

சில நேரம்... மாம்பழத்தின் சாறுகூட
முறுக்கில் ஊறி இருக்கும்
அப்படி திணித்துக்கொண்டு
பேருந்து நெரிசலில் வந்து சேர்ந்திருப்பாள்

 அம்மாதான் ஆயாவைத் திட்டுவாள்....

"ஒழுங்கா ஒரு பொருளை வச்சுக்க தெரியுதா பார்
சுத்த விவரம் கெட்டவளா இருக்கீயே" என்று     

உடனே கோபித்துக்கொண்டு
கந்தசஷ்டிக் கவசத்தை சொல்ல ஆரம்பித்துவிடுவாள்.


எங்கள் நெற்றியில்
விபூதியையும் குங்குமத்தையும் வைத்துவிட்டு
நாங்கள் திண்பண்டங்களைஎல்லாம் தின்பதை
ஆசையாகப் பார்த்துவிட்டு....
உடனே கிளம்பிவிடுவாள்...

"நாளைக்குப் போம்மா... "என்று
அம்மா சொன்னாலும் கேட்கமாட்டாள்...

திரும்பச் செல்லும்போது
சேலையில் எங்களுக்குக் கொடுப்பதற்காகவே
முடிந்துவைத்திருக்கும் சில்லறைகளையும்

மறக்காமல் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிடுவாள்
புடைத்துக்கொண்டிருக்கும்
இன்னொரு பையை எடுத்துக்கொண்டு

அதே ஊரிலிருக்கும்
என் தொத்தா வீட்டுக்கும் சென்று
அந்த பேரப்பிள்ளைகளையும் பார்க்க!


அப்போதெல்லாம் தெரிய வில்லை
மஞ்சள் பை முழுக்க -
அவள் திணித்துக்கொண்டு சுமந்து வந்தது
தின்பண்டங்களையல்ல  ... பாசத்தை  என்பது !

அப்போதெல்லாம் தெரியவே இல்லை...
அந்த விபூதி வாசனைக்குள் பொதிந்திருந்தது
எங்களுக்கான வேண்டுதல் என்று!


வாழ்க்கை உருண்டோட....
அரபு நாட்டில் இருந்துகொண்டு ..
அவ்வப்போது தொலைபேசியில்
ஆயா வந்தாங்களாம்மா? நல்லா இருக்காங்களா ?
என்று அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்...

அந்த என் ஆயா இப்போது உயிரோடு இல்லை....

ஆனால் அவ்வப்போது
அவளை நினைத்துக் கொள்வேன்

அந்த மஞ்சள் பையும்.... விபூதி வாசனையும்...
பழச்சாற்றில் நனைந்த முறுக்கும்..
தவறாமல் அவளை நினைக்கும்போது
என் நினைவை அழுத்தும்...!


இப்போதும் ஆயா... எங்கோ ... தூரத்தில் !
விபூதி வாசனையுள்ள அந்த
மஞ்சள் பையுடன் வருவது போலவே....!



 





  



ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

கள்ளிப் பால் சுரக்கிறது….!


கூண்டில் நிற்கிறாள்
குற்றவாளியாய்…

பெண்சிசுவைக் கொன்ற குற்றம் அவள் மீது

பாவி…!
பச்சை மண்ணைக் கொல்வதற்கு
எப்படித் தான் மனம் வந்ததோ..

வளர்க்கத் துப்பில்லாதவள்
எதற்குப் பெற்றுக் கொள்ள வேண்டும்?

எத்தனை பேர் குழந்தை பாக்கியமில்லாமல்
ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்…
அவர்களுக்குப் பிறந்திருக்கலாமே அந்தக் குழந்தை

எவன்கிட்டயோ ஏமாந்து
பெத்துகிட்டு …. த்தூ…மானங்கெட்டவள் …

இவளையெல்லாம் -
தூக்கில் போடவேண்டும்

வேடிக்கைப் பார்க்க வந்திருந்த ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமாகப் பேசிக் கொண்டிருக்க…

வெறித்துப் பார்த்திருந்தவளை
நீதிபதி கேட்கிறார்…

எதற்காக அந்த சிசுவைக் கொன்றாய்?

இத்தனை நேரம் -

பட்டினி சுமந்த வயிற்றோடும்
துக்கம் சுமந்த கண்களோடும்

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தவள்

மௌனம் சுமந்த வாய் திறந்து சொல்கிறாள்…

குழந்தையை –

பட்டினியில் சாகவிட மனம் வரவில்லை
கொஞ்சம் பால் குடித்துவிட்டாவது
சாகட்டுமே என்றுதான் கொடுத்தேன்….

கள்ளிச் செடியின் காம்பில் சுரக்கும் பால்
என் மார்பில் சுரக்கவில்லையே….. நான் என்ன செய்ய?