கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தி குவைத்து நாட்டில் கவியரங்கில் வாசித்த கவிதை. (2004 ஆம் ஆண்டு எழுதியது )
..
ஆண்டவனை வசைபாடி :.....
அக்கினியே உன் அனல் நாவு அடங்கிவிட்டதா?
இரைவேண்டி இன்னும்தான் அலைகின்றதா ?
மருண்டு மயங்கிய மழலைகளை
தின்றபின் உன்தினவு தீர்ந்து போனதா?
வான்பார்க்க நீசெய்த அலங்கோலம்
வருணனும் உனையடக்க வரவில்லையே
வாயுவுடன் கைகோர்த்து வலம் வந்து
வக்கிர தாண்டவம் ஏன் ஆடினாயோ?
வாழை இலையில் பரிமாறியா
வதங்கிய பிஞ்சுகளை உண்பது?
பள்ளி சென்ற குழந்தைகளை
கொள்ளி வைத்தா மகிழ்வது?
கல்விக்கூடம் அழித்துவிட்டு ஆங்கோர்
கல்லறைக் கூடம் நிறுவி விட்டாய்
கறைபடிந்த உன் குரூரத்தை - இக்
கலியுகக் கல்வெட்டில் பதித்துவிட்டாய்
பூங்கள் ஐந்தும் தான் கடவுளென்று
பூமியில் உள்ளோர் நினைக்கின்றார்
இரக்கம் துளியில்லா உன்னை
இறையென்று எப்படி நான் ஏற்பது?
ஆள்பவனை வசைபாடி:
...
ஆள்பவனே போதுமா? - இது
உன் ஆணவத்தின் மீதமா?
எத்தனை பொய்களாடா
எத்தனை சபதமடா?
இலட்சியங்கள் பறக்கிறது
இலட்சங்கள் பின்னாலே
கொள்கைகள் மறைகிறது
கோடிகள் பின்னாலே
பணத்தையும் குவிக்கின்றாய்
பிணத்தையும் குவிக்கின்றாய்
நிம்மதியை அழித்துவிட்டு
நிவாரணம் தருகின்றாய்
வார்த்தைகளே இல்லையடா -உன்
வசைபாட இங்கெனக்கு
விதைகளை அழித்துவிட்டா - நீ
விவசாயம் காண்பது?
மக்கள் நலம் கருதா பிறவியுன்னை
மனிதனென எப்படி நான் ஏற்பது?
பொது :
..
அணைந்தன விளக்குகள்
அக்கினியின் ஆர்ப்பரிப்பால்
கருகின மொட்டுக்கள்
கள்வர்கள் ஆள்வதால்
ஆண்டவனும் சரியில்லை
ஆள்பவனும் சரியில்லை
அழுதழுதும் ஓயவில்லை
ஆறாத் துயரும் தீரவில்லை
இமை மூடி ஒருநிமிடம்
இழந்துவிட்ட மழலைகட்கு
அஞ்சலி செலுத்தி நின்றோம் - இருந்தும்
ஆறுதல் கிட்டவில்லை .
- லதாரணி பூங்காவனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக