-------------------------------------------------------------------------
முகவரி ஆகி நின்று
. முழுஒளி வீசி மின்னும்
மிகமிகப் பழமை யான
. மாத்தமிழ் இழையால் நெய்த
தகவுறு துத்தம் போன்ற
. தப்பிலாச் செப்ப லோசை
செகமது முழுதும் நின்று
. செம்மொழி பகர்தல் காணீர்! ….….(1)
கதைகளின் நீள மில்லை
. காவியம் போலு மில்லை
இதையிவன் அறிவ தற்கு
. இருவரி போது மென்று
சிதைவுறாத் தமிழில், மெச்சும்
. சிறப்புடன் வனைந்து வைத்த
புதைபொருள் உறைந்து நிற்கும்
. பொலிவுறு பேழை பாரீர்! ……(2)
அறம்பொருள் இன்பம் வீடு
. அருந்தமிழ் விளைந்த காடு
மறத்தமிழ் மக்கள் வாழ்வின்
. மாட்சிமை கூறும் ஏடு
பிறன்மனை நோக்கல் குற்றம்
. பிறன்பொருள் கொள்ளல் கேடு
அறவுரை சொல்லும் பாங்கு
. ஆமெனில் விலகும் தீங்கு. ……..(3)
திறனறி என்று சொல்லும்
. திருந்திவாழ் என்றும் சொல்லும்
பிறழிலா வாழ்வைச் சொல்லும்
. பிறவுயிர் காக்கச் சொல்லும்
உட்பகை விலக்கச் சொல்லும்
. உறவுகள் பேணச் சொல்லும்
வெட்டுக சோம்பல் என்று
. வெற்றிக்கு வழியும் சொல்லும் ………….(4)
சொற்றிறம் பாமை என்றும்
சொல்லிலே திருத்தம் என்றும்
கற்றிடும் யாவும் நன்குக்
. கசடறக் கற்க என்றும்
பெற்றவர் மகிழு மாறு
. பெருஞ்செயல் செய்க என்றும்
நற்றமிழ் நயமாய் ஊட்டி
. நலமிகு சான்றோன் ஆக்கும்…………..(5)
சிறுகை கூழினைத் துய்க்க
. செறுநர் செருக்கினைப் போக்க
சிறுமை முழுதாய் நீக்க
. சினத்தை அறவே மாய்க்க ,
வறுமைப் பிணியைப் போக்க
. வாழ்க்கை வளமாய் வாழ,
பொறுமை காக்கச் சொல்லும்
. போதனின் கூற்றும் என்னே! ………….(6)
உற்றதைச் சொல்வ தற்கும்
. உள்ளதை உரைப்ப தற்கும்
நற்றவச் செல்வன் தூய
. நனிமிகு தமிழில் செய்த
சொற்பெருங் குவியல் தன்னைச்
. சுடரென ஏந்தி நிற்றல்
கற்றவர் கைக்கொள் போக்கு,
. கருதுவீர் இது நம் வாக்கு. …..(7)
முத்திரை பதித்த வேதம்
. முப்பால் மொழிந்த நாதம்
வித்தகச் சொற்கள் தாங்கி
. வியத்தகு ஆற்ற லோடு
இத்தரை மீதில் வாழும்
. இன்னுயிர் முழுவ தற்கும்
சத்தியக் குறளை யாத்த
. சால்பினன் பாக்கள் வாழி!
- கவிஞர். லதாராணி பூங்காவனம் எம்.ஏ ., எம்.காம்.,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக