என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

இலங்கை தேவாலயங்களில் குண்டு வெடிப்பு….மனித நேயம் எங்கே?




இலங்கை குண்டுவெடிப்பில் இறந்துபோனவர்களையும், கைகால்கள் இழந்து பரிதவிப்பவர்ளையும் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவர்களையும், சொந்தபந்தங்களை இழந்து துயருற்று இருப்பவர்களையும் காணும்போது மனம் பதறுகிறது. 

இந்த நிகழ்ச்சியை நம்முடைய பெரியார் வழிவந்த பகுத்தறிவுவாதிகள் சிலரே..

"தேவலத்திலேயே குண்டுவெடிப்பு, உயிர்த்து எழுந்தவர் குண்டுகளோடு வந்து உங்களையும் தேவலோகத்துக்கு தூக்கிட்டு போய்ட்டாரா…?"

"குண்டு வெடிப்பைத் தடுக்காம இயேசு எங்க போனார்? "
"இயேசு உயிர்த்தெழுந்தார்… குண்டு வெடித்தது. உயிர்கள் பலியாகின … சாத்தான் செயலா… யார் வல்லமை? "

என்று இன்னும் பலவிதங்களில் கடவுள் மறுப்புக் கொள்கையை இந்த நிகழ்வோடு ஒப்பிட்டு நக்கலாகப் பதிவிடுவது வருத்தமாக இருக்கிறது. (இப்படிப் பேசுவதால்தான் பெரியாரை அவர்கள் தரக்குறைவாகப் பேசுகிறார்கள்)

கிருத்துவ தேவாலயத்தில் மட்டுமல்ல….ஹோட்டலில் குண்டுவெடிப்பு இரயில்வே ஸ்டேஷனில் குண்டுவெடிப்பு… 

கோவிலுக்குச் சென்றவர்கள் அறியாமையில் சென்றார்கள் என்றால், இரயில் நிலையத்துக்குச் சென்றவர்களும்  அறியாமையினால் சென்றார்களா? 

தீவிரவாதிகள் எங்கு வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்துவார்கள்.  அது தேவாலயமாகவும் இருக்கலாம், பகுத்தறிவு பேசும் கூட்டங்களாகவும் இருக்கலாம். இரயில் நிலையங்களாகவும் இருக்கலாம், மருத்துவமனைகளாகவும் இருக்கலாம். பள்ளிக்கூடங்களாகவும் இருக்கலாம், முதியோர் இல்லங்களாகவும் இருக்கலாம்.

தீவிரவாதத்தால் நடந்த குண்டுவெடிப்பை கண்டிக்கவேண்டுமே தவிர, இந்த இடத்தில்  நாத்திகம் பேசி மகிழக்கூடாது.

தந்தை பெரியார் சிலையை உடைத்தாலே தீவிரவாதம் என்று கொதிப்படையும் நாம் 350 க்கும் மேற்பட்ட உயிர்ப்பலிகள் நடந்திருப்பதை கேலியாகப் பேசுவது மனிதநேயமற்ற செயல். 

இது பெரியாரியம் அல்ல. பெரியார் மனிதநேயத்தைப் போற்றியவர். போற்றவேண்டும் என்று சொன்னவர். 

பகுத்தறிவாளர்கள் பக்குவப்பட்டவர்களாக இருக்க வேண்டும். தயவு செய்து இதுபோன்ற பதிவுகளைத் தவிர்க்கவும். 

- கவிஞர். லதாராணி பூங்காவனம்.  M.A., M.Com., 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக