தமிழ் நாட்டின் பேசுபொருளாக
மாறியது.
ஒரு திருமணத்தைப் போற்றிப் புகழாத வாய்களே இல்லை என்னும் அளவிற்கு அவ்வளவு பெருமை வாய்ந்த திருமணமாக அத்தனைபேரும் வாழ்த்துக்களை வாரிக் குவித்தார்கள்
அதே நேரம், மற்றொரு திருமணத்தைக் கடித்துக் குதறி ஆபாச வார்த்தைகளை அள்ளிக்கொட்டி அவமானமாகக் கருதுவதாகப் பெரும்பாலோனோர் பொங்கிப் பிரவாகித்தார்கள்.
ஆம்,
வாழ்த்து வாங்கியது சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் மறுமணம்.
வசவு வாங்கியது கவுசல்யா சங்கரின் மறுமணம்.
இரண்டுமே மறுமணம் தான்.
மார்ச் 2016 கவுசல்யாவின் காதல் கணவன் ஆணவப்படுகொலை செய்யப்பட, சரியாக இரண்டு வருடம் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர்,-2018 இல் சக்தியை காதலித்து மறுமணம் செய்துகொள்கிறார். (விதவைத் திருமணம்)
அதேபோல், 2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சௌந்தர்யா, ஒரு ஆண்குழந்தையைப் பெற்ற பிறகு, மனவேற்றுமை காரணமாக ஜூன் 2017ல் கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றபின், சரியாக ஒரு வருடம் 7 மாதத்திற்குப் பிறகு, பிப்ரவரி - 2019 ல் விசாகன் என்பவரைக் காதலித்து மறுமணம் செய்துகொள்கிறார்.
ஆனால் மக்கள் கௌசல்யாவை நோக்கிப் பாய்ச்சிய விஷ வார்த்தைகள் ஏராளம்.
உடல் சுகத்துக்கு இன்னொரு திருமணம் தேவைப்படுதா இவளுக்கு?
அப்படின்னா சங்கரை காதலித்தது பொய்யா?
உண்மையாவே சங்கரை காதலித்திருந்தால் இன்னொருத்தன் மேல எப்படி காதல்வரும்? என்பன போன்ற ஏகப்பட்ட கேள்விகளால் அந்தச் சிறுபெண்ணை ஆபாசக் கேள்விகளால் தாக்கிக் காயப்படுத்தியது ஒரு கூட்டம்.
இதையெல்லாம் விட மேலாக, ஒரு ஊடகம் இப்படி தலைப்புச் செய்தியைப் போட்டது " கணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட கௌசல்யா" என்று.
ஆனால், நேற்று நடந்த ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவும், காதலித்துத்தான் முதல் திருமணம் செய்துகொண்டார். மணமுறிவு ஏற்பட்டபிறகு, இன்னொரு காதலுக்கு ஆட்பட்டார். ஒரு குழந்தைக்குத் தாயானநிலையிலும்அவருக்கு மறுமணம் செய்துவைத்தனர் பெற்றோர்.
ஆனால், கவுசல்யாவிடம் கேட்ட கேள்விகள்போல, சௌந்தர்யாவை நோக்கி, முதல் காதல் பொய்யா, காதல் உண்மையாக இருந்தால் இரண்டாவதுதாக எப்படி இன்னொருவரின் மேல் காதல் வரும் போன்ற எந்தவிதமான கேள்விகளும் எழவில்லை,
காரணம், சவுந்தர்யா மிகப் பிரபலமானவரின் மகள். அதனால்தான் அவரின் மறுமணத்தைப் புளகாங்கிதமாகப் பேசிப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த் ஒரு நல்ல தந்தை என்று பாராட்டப்படுகிறார். தன்னுடைய மகளின் நல்வாழ்விற்காக மறுமணம் செய்வித்தது அவர் செய்த புரட்சி என்று பேசப்படுகிறது.
ஆனால் கவுசல்யா ஒரு சாதாரண வீட்டுப் பெண், கண்முன்னே காதல் கணவனை வெட்டிச் சாய்த்த வேதனையைச் சுமந்துகொண்டு, சிறு வயதிலேயே தன் சிரிப்பை மறந்து, ஆணவக்கொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து, தன்னை வாழவிடாமல் செய்த சாதிவெறிக்கு எதிராக நின்று, தன்னால் இயன்றதை இந்தச் சமுதாயத்திற்குச் செய்ய வேண்டும் என்று நினைத்த அவளுக்கு மீண்டும் ஒரு காதல் துளிர்விட்டதும், மறுமணம் செய்ததும், தந்தை பெரியார் கொள்கையாளர்களையும், சில முற்போக்குச் சிந்தனையாளர்களையும் தவிர, இந்தச் சமுதாயத்தில் வாழும் மற்றவர்களுக்குத் தவறாகப் படுகிறது.
எப்படி முடிகிறது? கவுசல்யாவும், சவுந்தர்யாவும் ஒன்றுதான். இவர்கள் மட்டுமல்ல இவர்களின் நிலையில் இன்னும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். விதவைத் திருமணம், விவாகரத்து பெற்றபின் மறுமணம் என்று செய்துகொள்ளும் பெண்களில் பணம், பதவி இருப்பவர்கள் செய்தால் மட்டும் பாராட்டுவதையும், பாமர மக்கள் வாழ்க்கையில் நடந்தால் பழிப்பதையும் நிறுத்துங்கள்.
மனைவியை இழந்த அல்லது பிரிந்த ஒரு ஆணுக்கு, மறுமணம் செய்துகொள்ள எவ்வளவு உரிமை உள்ளதோ அதே போல, கணவனை இழந்த அல்லது பிரிந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
காலம் மாறிக்கொண்டிருக்கிறது.. இன்னும் பெண்களை அடிமைகளாகவே வைத்திருக்கவேண்டுமென்ற நினைப்பிலிருந்து இந்தச் சமுதாயம் மாறவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையே இந்த இரு திருமணங்களும் உணர்த்துகிறது. .
- கவிஞர். லதாராணி பூங்காவனம்
'காலம் மாறிக்கொண்டிருக்கிறது.. இன்னும் பெண்களை அடிமைகளாகவே வைத்திருக்கவேண்டுமென்ற நினைப்பிலிருந்து இந்தச் சமுதாயம் மாறவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையே இந்த இரு திருமணங்களும் உணர்த்துகிறது.....' என்கிற
பதிலளிநீக்குஉங்களின் தீர்மானகரமான வரிகளில் எனக்குக் கிஞ்சிற்றும் மாறுபாடு இல்லை.
ரஜினி பெண் மறுமணத்துக்கும் முகநூல்தளத்தில்
'ஆறாவது கல்யாணம் எப்போ?' என்கிறமாதிரி இழிந்த குரல்கள் பல எழும்பிக் கிடந்ததைப் பார்த்தேன்.
'ஆம்பிள மனசு 'களுக்கு எல்லாப்பெண்ணுக்கும் ஒரே 'முழி'தான் என்றே தோணுகிறது.
'காலம் மாறிக்கொண்டிருக்கிறது.. இன்னும் பெண்களை அடிமைகளாகவே வைத்திருக்கவேண்டுமென்ற நினைப்பிலிருந்து இந்தச் சமுதாயம் மாறவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையே இந்த இரு திருமணங்களும் உணர்த்துகிறது.....' என்கிற
பதிலளிநீக்குஉங்களின் தீர்மானகரமான வரிகளில் எனக்குக் கிஞ்சிற்றும் மாறுபாடு இல்லை.
ரஜினி பெண் மறுமணத்துக்கும் முகநூல்தளத்தில்
'ஆறாவது கல்யாணம் எப்போ?' என்கிறமாதிரி இழிந்த குரல்கள் பல எழும்பிக் கிடந்ததைப் பார்த்தேன்.
'ஆம்பிள மனசு 'களுக்கு எல்லாப்பெண்ணுக்கும் ஒரே 'முழி'தான் என்றே தோணுகிறது.
நம் நாட்டில் எப்பொழுதும் காசுக்கு தான் மதிப்பு மனசாட்சிக்கு அல்ல
பதிலளிநீக்குநம் நாட்டில் எப்பொழுதும் காசுக்கு தான் மதிப்பு மனசாட்சிக்கு அல்ல
பதிலளிநீக்கு