என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

தூக்கு தண்டனை- நிறுத்துங்கள்!


நீதியின்  கழுத்தை முறித்த வழக்கிது
ஆண்டுகள் பல கடந்து 
ஆயுள் தண்டனை முடிந்தும் நீள்கிறது

கொன்றவன்/ள்  எங்கோ குதூகலத்துடன் இருக்க - 
பேட்டரி வாங்கிக் கொடுத்தவனின் 
கழுத்தை பத்திரப்படுத்தி வைத்த நீதி

நேரத்திற்குக் காத்திருந்தது ..

ஜனநாயகம் மரத்துவிட்ட நாட்டில் 
மனிதமும் மரணித்துவிட்டது  -

வாழ்ந்து கொண்டிருப்பது 
ஊழலும் அரசியல் அராஜகமும் மட்டுமே!

நயவஞ்சக அரசியலார்களின் 
பொழுது போக்கு - இவ்வழக்கு

சகவாசம் பெற்றுத்தந்த தண்டனை
ஆயுள்  தண்டனை முடிந்தும்  
கம்பிகளுக் கிடையில் கிடைத்த
காற்றையே சுவாசிக்க வைத்தது

இன்று அந்த சுவாசக்குழாயையும் 
நெரித்திட தேதிக்குறிப்பு 

காந்தி தேசத்தில் -
கருணைமனு -
நிராகரிக்கப்பட்டுவிட்டது

இன்றோ நாளையோ.. என்றோ...என்று... 
நொடிப்பொழுதும் நிம்மதியின்றி 
எதற்கிந்த வாழ்வு? 

தூக்கிலிட்டுவிடுங்கள்... கருணை கூர்ந்து!
ஒவ்வொரு நொடியும்
அவர்களைச் சாகடிக்காதீர்கள்

வந்தோரை வாழவைக்கும் தமிழ்க்குலமே
எங்கிருந்தோ வந்தவள் 
எப்படி வாழவைப்பாள் நம் தமிழ் உயிரை?

கெஞ்சிக் கூத்தாடி
யார் காலும் பிடிக்க வேண்டாம்
தூக்கிலிடட்டும்.. !
ஒருவகையில் வீர மரணமே இதுவும்!

தூக்குதண்டனையைக் கண்டுபிடித்தவனே
குற்றத்தை ஒப்புக்கொண்டபின் தான்
குற்றவாளியைத் தூக்கிலிட்டான்

குற்றவாளிகளில்லை என்று
குரல் கம்ம கத்தியும்
கயிறு திரித்துக்கொண்டிருக்கிறார்கள்
முழுவிசாரனையின்றி -

குற்றம் -
ஏற்றுக்கொள்ளப் படவுமில்லை
நிரூபிக்கப் படவுமில்லை...

குரல்வளையை நெரிக்க
ஆணை மட்டும் பிறப்பித்து விட்டனர் ..

குரல் கொடுக்காதீர்...கொடி பிடிக்காதீர்

வரலாறு  குறித்துக் கொள்ளட்டும்
இவர்கள் பெயரை

இவர்கள் - 
தேசத்  துரோகிகளால்  போடப்பட்ட
பொய்வழக்கின் பலிகடாக்களென்று

வரலாறு எழுதட்டும்... 
இந்தியாவின் கறுப்புக் கல்வெட்டில்

பிழையான நீதியால் - 
மூன்று உயிர்கள் பறிக்கப் பட்டதென்று

மரண தண்டனை ஒழிக்கப்பட்டும் 
மனிதத்தை இழந்த இந்தியாவில் ...
மரணம் மட்டுமே உயிர்த்ததென்று...
வருங்காலம் உமிழட்டும். .. 

குரல் கொடுக்காதீர்...கொடி பிடிக்காதீர் 
எல்லாவற்றையும் நிறுத்தி விடுங்கள் ...

ஊமையின் கதறல் செவிடர்களுக்குக் கேட்காது!

1 கருத்து:

  1. //குரல் கொடுக்காதீர்...கொடி பிடிக்காதீர்
    எல்லாவற்றையும் நிறுத்தி விடுங்கள் ...
    ஊமையின் கதறல் செவிடர்களுக்குக் கேட்காது!//

    unmai..

    பதிலளிநீக்கு