குவைத் தாய்மண் கலை இலக்கியப் பேரவை 17-04- 2011 அன்று நடத்திய டாக்டர் அம்பேத்கார் 120 ஆவது பிறந்தநாள் விழாவில் நான் ஆற்றிய உரை:
அவையிலும் அரங்கத்திலும் அமர்ந்திருக்கும் அனைத்து தமிழ்ச் சகோதரர்களுக்கும் வணக்கம் தெரிவித்துக் கொள்கின்றேன். டாக்டர் அம்பேத்கார் பிறந்தநாள் விழாவை குவைத் தாய்மண் கலை இலக்கியப் பேரவை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருப்பதைக் கண்டு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மண் கலை இலக்கியப் பேரவை நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு முடிந்தவரை நான் தவறாமல் பங்கு கொள்வதற்குக் காரணம், குவைத்தில் வேறு எந்த அமைப்பிலும் காணமுடியாத ஓர் ஒழுங்கும் ஒற்றுமையும் இந்த அமைப்பில் இருப்பதுதான். எந்த காரணத்திற்காக நாம் ஒன்றுசேர்ந்திருக்கிறோமோ அதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நாம் செயல்படவேண்டும் என்பதற்குத் தாய்மண் கலை இலக்கியப் பேரவை மிகச்சிறந்த உதாரணமாகும்.. அந்த வகையில் இம்மன்றம் தொடர்ந்து நடத்தும் விழாக்கள் எல்லம் சிறப்பாக நடந்தேறுவது போல் இன்று டாக்டர். அம்பேத்கார் பிறந்தநாள் விழாவையும் மிகச் சிறப்புடன் நடத்திக் கொண்டிருக்கும் இப்பேரவைத் தலைவர் அன்புச் சகோதரர் திரு அன்பரசன் அவர்களுக்கும், இச்சங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்
டாக்டர் அம்பேத்கார், இந்திய வரலாற்றின் மிக முக்கியமான பக்கத்தை ஆக்ரமித்த மாமனிதன். இந்த இடத்தில் இவர் இருப்பதற்குக் காரணம், இவர் செய்த உணர்வுப் புரட்சி.
எங்கெல்லாம் உணர்வுகள் அடக்கப்படுகின்றனவோ, எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் உணர்ச்சிகள் பீரிட்டு புரட்சி வெடித்த வரலாறுகளை நாம் படித்திருக்கின்றோம். அதே போல இந்தியத் திருநாட்டில் டாக்டர் அம்பேத்கார் அவர்கள் தானொரு தாழ்த்தப்பட்ட மகர் என்ற சமூகத்தில் பிறந்திருக்கிறோம் என சிறுபிள்ளையாய் இருந்தவரை,சகநண்பர்களுடன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. பள்ளிக்கூடம் செல்கிறார். பள்ளிதான் அவருக்குப் புரியவைத்தது உணர்வையும் உரிமையையும். பாடத்திட்டத்தால் நடத்தப்பட்டதல்ல இது. அவர் அங்கு நடத்தப்பட்ட விதத்தால் படிக்கப்பட்டது. எப்படியென்றால்...
பள்ளிக்கூடத்தில் மற்ற மாணவர்களைப்போல் அவரால் சமமாக உட்காரவோ நடமாடவோ முடியாத நிலையில், சக மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாத நிலையில்- எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு பாடப்புத்தகங்களையும் நோட்டுப்புத்தகங்களையும் மட்டும் எடுத்துப்போன காலத்தில், உட்காருவதற்காக ஒரு கோணிப்பையை உடன் எடுத்துச் சென்ற நிலையில், தாகம் தணிப்பதற்குக் கூட மேல்சாதி மாணவனின் இரக்கத்தை எதிர்பார்த்து காத்திருந்து தனிக்குவளையில் தண்ணீர் குடித்த நிலையில், அவருடைய நோட்டுப் புத்தகங்களைத் தொட்டால் தீட்டு என்று அவர் புத்தகங்களை ஆசிரியர் திருத்த மறுத்த நிலையில் தீண்டாமை என்ற ஒரு தீய சக்தி இந்தியச் சமூகத்தில் வேரோடியிருப்பதை அச் சிறுவயதில் உணர்கிறார்.
ஒடுக்கப்பட்ட அந்த உணர்வுகளால் அவருக்கிருந்த கல்வி மீதான ஆர்வம் சற்றும் குறையவில்லை. அத்தனை இழிவுகளையும் உரமாக்கிக் கொண்டு மிகச்சிறந்த மாணவனாகத் திகழ்கிறார். பள்ளிப் படிப்பு முடிகிறது. கல்வியில் சிறந்த அந்த மாணவனுக்கு பரோடா மன்னன் மேல்படிப்பிற்காக உதவி செய்கிறார். வெளிநாடுகளுக்கு சென்று சட்டம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பட்டம் பெற்று வந்து நாட்டின் அரசியல் சாசனத்தையே எழுதும் அளவுக்கு உயர்ந்தது, அம் பேத்கரின் அறிவுக்கு கிடைத்த அங்கீகாரம் மட்டுமல்ல, முருங்க மரம் விட்டத்துக்கு ஆகாது. சக்கிலியப்புள்ள பட்டத்துக்கு ஆகாது எனும் மனுதருமப் பழமொழிகளுக்கு கொடுத்த சவுக்கடியுமாகும்.
ஒருகாலத்தில் அடிமை வகுப்பைச் சேர்ந்த மக்கள் பார்ப்பனர்களின் பாதங்கழுவிய நீரைக் குடிக்காமல் சாப்பிட முடியாத அவல நிலை இருந்தது. இது ஒரு கட்டாயக் கடமையாகக் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது. கல்கத்தாவில் சாலையோரத்தில் காலை நேரத்தில் அடிமை வகுப்புகளைச் சேர்ந்த குழந்தைகள் கையில் கோப்பைத் தண்ணீருடன் வரிசை வரிசையாக பல மணி நேரம் காத்திருப்பார்களாம். யாரவது ஒரு பார்ப்பனர் அவ்வழியாக வந்தபின் அவன் பாதங்களை கழுவி அந்த நீரை தன் பெற்றோர்களுக்குக் கொண்டு செல்வார்களாம் குழந்தைகள் கொண்டு வரும் தண்ணீரை உறிஞ்சிக் குடித்துவிட்டுத்தான் அவர்கள் உணவருந்துவார்களாம். அதற்காகப் பெற்றோர்கள் காத்திருப்பார்களாம்.
இத்தகைய கொடுமைக்கு அடிப்படைக் காரணம் சாதியம். இது ஒழிய வேண்டும். இந்தச் சாதியம் ஒழிய அதன் ஆணிவேரான இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்றர் அம்பேத்கார்.
தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.
இது ரிக் வேதத்தில்ளுள்ள ஒரு சுலோகம். இதன் அர்த்தம் என்னவென்றால்,
இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும் என்று கூறி மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலத்தில் தான் ...
வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு இந்தியா வருகிறார். பரோடா சென்று, அரசரின் ராணுவச் செயலாளர் பொறுப்பில் அமர்ந்தார். அங்கிருந்த மேல்ஜாதி இந்துக்களும் இவருக்குக் கீழ் வேலை செய்தவர்களும், உயர்ந்த படிப்பை முடித்திருந்த அம்பேத்கரைத் தீண்டத் தகாதவராகவே நடத்தினர். தங்குவதற்கு இடம் கொடுக்க மறுத்தனர். அதனால் பார்சி மதத்தவர்களின் விடுதியில் தங்கினார். அங்கும் இவர் ஒரு தாழ்த்தப் பட்டவர் எனத் தெரிந்து, அங்கிருந்தும் வெளியேற்றிவிட்டார்கள்.மெத்தப் படித்தும், மேல் நாட்டு அனுபவம் பெற்றும் பயனில்லையே என ஒரு மரத்தடியில் அமர்ந்து கண்ணீர் விட்டு வருந்துகிறார்.
உலகில் எந்த நாட்டிலும், எந்த மதத்திலும், நம் நாட்டில் உள்ளபடி சாதிகளோ, சாதிக் கொடுமைகளோ இல்லை. எனவே, இந்த சாதிக் கொடுமைகள் ஒழிய வேண்டுமானால் முதலில் நாம் சாதிய அடையாளங்களில் இருந்தும், மத அடையாளங்களில் இருந்தும் வெளிவந்து, சாதியத்தின் மூலக்கூறுகளை ஒழிக்க வேண்டும் என்று உறுதிபூணுகிறார்.
நோய்நாடி நோய் முதல்நாடி என்பது மருத்துவ இலக்கணம். சாதியின் அதனால் சாதியை கற்பித்த நூல்களைப் படிக்க எண்ணுகிறார். புத்தகங்கள் எல்லாமே சமஸ்கிருதத்தில் அல்லவா இருக்கிறது? சூத்திரன் படித்தாலே காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றச் சொன்ன மனுதருமம், பஞ்சமன் அம்பேத்கரை சமஸ்கிருதம் படிக்க விடுமா? ஆனாலும், மனுதருமம் தடுத்த போதும் சமஸ்கிருதத்தையும், புத்த இலக்கியங்கள் இருந்த பாலி மொழியையும் கற்றுக் கொண்டார்.
விஷ்ணு புராணம், ஹரிவம்சம், பகவத் புராணம், வாயு புராணம், மனுஸ்மிருதி, உபநிஷத் இவைகளையெல்லாம் படிக்கிறார்.
விஷ்ணு புராணம், ஹரிவம்சம், பகவத் புராணம், வாயு புராணம், மனுஸ்மிருதி, உபநிஷத் இவைகளையெல்லாம் படிக்கிறார்.
அனைத்திலும் வர்ணாசிரம தர்மமென்று மக்களைப் பிரித்து வைத்த சதி அமைந்திருப்பதைக் கண்டார். பிரம்மாவின் வாயிலிருந்து பிராமணன் படைக்கப்பட்டான்; அவனுடைய கைகளிலிருந்து சத்திரியனும், தொடையிலிருந்து வைசியனும், இந்த மூவகை வருணத்தாருக்கும் தொண்டு புரிவதற்காக பிரம்மாவின் கால்களிலிருந்து சூத்திரனும் படைக்கப்பட்டனர். என்று இருக்கிறது அறிவுப்பூர்வமாகச் சிந்தித்தால் ஏற்றுக்கொள்ளவே முடியாத இந்தக் கருத்தைப் படித்த அவர் வர்ணாசிரம தர்மத்தைப் பற்றிய “இந்த விளக்கங்கள் பிறவியிலேயே மூளைக் கோளாறு உடையவர்களின் உளறல்கள் போலுள்ளன” என்கிறார்.
வர்ண வேறுபாடுகள் உண்டான கதைகள் வேதத்தில் வேறு மாதிரியும், அதற்கு பின் வந்த தத்துவங்களில் ஒரு மாதிரியும் மாறி மாறி இருக்கிறது. ஆனால் அதில் மாறதது அதன் படி நிலைதான். பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள், சூத்திரர்கள் தாழ்ந்தவர்கள் என்பது, கதைகள் மாறினாலும் காட்சி மாறவில்லை என்று பக்கம் பக்கமாக எழுதியும் மேடை மேடையாகப் பேசியும் இந்து தத்துவங்களின் தோலை உரிக்கிறார் டாக்டர் அம்பேத்கர்
வடநாட்டில் புரட்சி வெடிக்கிறது அம்பேத்காரால் திராவிட நாட்டில் தந்தை பெரியாரால் பூகம்பம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. தீண்டாமைக்கு எதிராக இந்தியா குலுங்குகிறது,ஆரியர்கள் அலறுகிறார்கள். பெரியாரும் அம்பேத்காரும் ஒரே கருத்தை முன்னிட்டு போராடிக்கொண்டிருக்கும் வேளையில் அம்பேத்காரைப் பெரியார் தமிழகத்திற்கு அறிமுகம் செயகிறார். ஆம்பேத்காரை பெரியார் தமிழகத்திற்கு அழைக்கிறார், அவர் அழைப்பை ஏற்று வந்த அண்ணல் தமிழக மக்களிடையில் முழங்குகிறார். அதைப்பற்றி அறிஞர் அண்ணா எழுதிகிறார்..
அம்பேத்கார் வந்தார்! தந்தார்! சென்றார்! ... என்ன வந்தார் தந்தார் சென்றார்?
...சாதுக்களும் சங்கராச்சாரியார்களும் பண்டாரங்களும் வந்தால்... சீரும் நிகண்டும் தருவார்கள். அதிகபட்சமாக ஆசீர்வாதம் தருவார்கள். டாக்டர் அம்பேத்கார் சென்னை வந்தார் ... கசையடி தந்தார் காரியக் கூத்தாடும் ஆரியருக்கு. புன்னகை தந்தார் பகுத்தறிவு இயக்கத்திற்கு. ஆரியப் பத்திரிகைகள் அலறுகின்றன. தலையங்கம் எழுதி அம்பேத்காரை வசைபாட அகராதியைப் புரட்டித் தேடுகின்றன கடுஞ்சொற்தேடி. இன்னமும் ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவும் என்ற எண்ணுகிறீர். சீறிப் பயனில்லை இனி மாறுவீர் என எழுதுகிறார்.
தமிழ் நாட்டை மட்டுமா உலுக்கினார் அம்பேத்கார்....?
1936 ஆம் ஆண்டில்,இப்போது பாகிஸ்தானில் உள்ள லாகூரில், அப்போது, ‘ஜாத்-பட்-தோடக் மண்டல் சாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து, அந்த மாநாட்டுக்கு‘ டாக்டர் அம்பேத்கரை தலைமை தாங்க அழைத்திருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் தன் தலைமையுரையை முன்னரே தயாரித்து, அதை மாநாட்டில் அச்சிட்டு வழங்க அனுப்பி வைக்கிறார்.
டாக்டர் அம்பேத்கர் அந்த உரையை இப்படி துவங்கியிருக்கிறார்: இந்த மாநாட்டிற்குத் தலைமை வகிக்குமாறு பேரன்புடன் என்னை வேண்டிக் கொண்ட ஜாத்-பட்-தோடக் மண்டல் உறுப்பினர்களின் நிலைக்காகப் பெரிதும் வருந்துகிறேன். என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தமைக்காகப் பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். நான் இந்துக்களை விமர்ச்சித்து இருக்கிறேன். அவர்கள் போற்றிடும் மாகாத்மாவுக்கு இந்துக்கள் பேரால் பேசுவதற்கு என்ன அதிகார உரிமை உள்ளது எனக் கேட்டிருக்கிறேன். அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். அவர்கள் தோட்டத்தில் என்னை ஒரு நச்சுபாம்பாகவே பார்க்கின்றனர் .... என்று ஆரம்பித்து, சாதிகள் பற்றியும், இந்துக்கள் இந்தியாவின் நோயாளிகள் என்றும் வேதங்கள், உபநிஷதங்கள், ஸ்மிருதிகள், மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட இந்துக்களின் ‘அற‘நூல்களை அம்பேத்கர் நொறுக்கியிருந்தார்.
அந்தத் தலைமை உரையை படித்துப் பார்த்த மாநாட்டின் வரவேற்புக் குழவினர், அதிர்ச்சி அடைகிறார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு உரையை சுருக்கிக் கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் வேண்டுமென குழவினர் டாக்டர் அம்பேத்கரை கேட்டுக் கொள்கின்றனர். அதற்கு டாக்டர் அம்பேத்கர் “தலைமை பதவியை அளித்த கவுரவத்திற்காக, மாநாட்டுத் தலைமையுரையைத் தயாரிப்பதற்குத் தலைவருக்கு உள்ள உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது“ என்று மறுத்துவிடுகிறார்.
அதற்கு அம்பேத்கர் " சாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழிய வேண்டும்' என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப் பேசாமல் வேறு எதைப் பேசுவது? ஆகையால் அதை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டார். பின் குழுவினர் ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார்கள். அதற்கும் அவர், “நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்; தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன்'' என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது.
அம்பேத்கரிடம் அந்தப் பேச்சை வாங்கி, "சாதியை ஒழிக்கும் வழி' என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டார் தந்தை பெரியார் அவர்கள்.
அம்பேத்கார் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்காகப் போராடினார். அவர் அந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியின் தலைவர் என்ற எண்ணம் தான் அநேகமானவர்களுக்கு இருக்கிறது.. அவர் ஒரு உலகப்பெரும் தலைவர், அல்லல்பட்ட மக்களின் உரிமைக்குப் போராடி உரிமையை மீட்டுத் தந்தவர். தீண்டாமைக்கு எதிரானவர், அடிமை முறைக்கு எதிரானவர்..
இந்திய அரசியல் சட்டத்தை எழுதியிருக்கிறார். அதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் பல உரிமைகளைப் போராடி சட்டமாக்கியிருக்கிறார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கிடை வலியுறுத்தி தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினமா செய்திருக்கிறார். உலகம் வியக்கும் அறிஞராக பல விஷயங்களில் ஆழ்ந்த கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் குறுகிய ஜாதி நோக்கம் கொண்டவர் அல்ல. ஒட்டுமொத்தமான மனித இனத்தின் மாண்பை உயர்த்தியவர். ஒரு மாபெரும் மனித நேயப் பற்றாளார் என்பதைத் தெளிவுபடுத்தவேண்டிய கடமை நமக்கு உண்டு. திருமாவளவனுக்கும் அவரது தொண்டர்களுக்கும் உண்டு..
சகோதரர் அறிவழகன் சொன்னார் அம்பேத்கார் மாட்டுவண்டிக்காரனால் அவமானப்படுத்தப்பட்டவரென்று....சிறு வயதில் மாட்டுவண்டிக்காரனால் மட்டும் அவமானப்படுத்தப்பட்டவரல்ல அம்பேத்கார், மகாத்மா காந்தியாலும் அலட்சியப்படுத்தப்பட்டவர்தான். முடிதிருத்துபவனால் மட்டும் அவமானப்படுத்தப்பட்டவரல்ல அம்பேத்கார் முன்னாள் பாரதப் பிரதமர் நேருவினாலும் அவமதிக்கப்பட்டவர்தான். டாக்டர் இராதா கிருஷ்ணன் முதல் சர்தார் வல்லபபாய் பட்டேல் வரையான பெருந்தலைவர்களாலும் புறக்கணிக்கப்பட்டவர் தான் அம்பேத்கார்.
இந்தியா சுதந்திரம் அடைகிறது, புதிய அரசியலமைப்புச்சட்டம் கொண்டுவர 42 பேர்கள் கொண்ட குழுவை நேரு அமைக்கிறார். அதில் ஆலோசனைக்காக இங்கிலாந்தின் சட்டத்துறையை அணுகிய போது, அவர்கள் டாக்டர் அம்பேத்காரைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்தியாவிலேயே ஒரு இரத்தினம் இருப்பதை இங்கிலாந்துக்காரன் சொல்கிறான்.
மராட்டிய மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்காரை இந்தப் பணிக்குத் தலைமை ஏற்குமாறு நேரு அழைக்கிறார். அழைப்பை ஏற்று டில்லி வருகிறார் அம்பேத்கார் அதிர்ச்சி காத்திருப்பதை அறியாமலே. குழுவிலிருந்த 42 பேரும் விலகி விட்டனர். தாழ்த்தப்பட்ட ஜாதியிலிருக்கும் ஒருவன் நமக்குத் தலைமை தாங்குவதா என்ற ஜாதி வெறி பிடித்த அந்தக் குழுவில், டாக்டர் இராதா கிருஷ்ணனும், பட்டேலும் இருந்தனர் என்பதுதான் வேதனை. இருந்தாலும் எதற்கும் அசராமல், 2 உதவியாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு 6 மாதாஙளாக இரவு பகல் பாராது தனியாளக சட்டம் இயற்றி முடித்தார். அரசியல் சாசனம் எழுதக் கிடைத்த வாய்ப்பை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, பெண்களுக்கு, தொழிலாளர்களுக்கு, சிறுபான்மை யினருக்கு என அனைத்து தரப்பட்ட மக்க ளுக்கும் பயன்படுமாறு எழுதி முடிக்கிறார் .
இந்த அவமானம் மட்டுமல்ல...
ஒருமுறை காந்தியடிகளுடன் நாக்பூர் சென்றிருந்த போது பொது இடத்தில் நுழைய அவருக்கு அனுமதிமறுக்கப்படுகிறது. காந்தியின் வற்புறுத்தலின் பேரில் அவரையும் அனுமதித்த விழாக் கமிட்டியினர் அம்பேத்கார் சென்றதும் அந்தத் தெருவையே கழுவி மஞள் நீர் தெளித்துப் புனிதப் படுத்தினார்கள். இதை அம்பேத்கார் காந்திஜியிடம் கூற , இதெல்லாம் உடனே மாற்ற முடியாது மெல்ல மெல்லத்தான் மாறும் என்று பதிலளித்திருக்கிறார் காந்தி. இந்தச் செயலை கண்டிக்காத காந்திக்கு கண்டனம் தெரிவிக்கிறார் அம்பேத்கார். இதற்குப் பிறகுதான் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் பேசும்போது "நான் இந்துவாகப் பிறந்துவிட்டேன் ஆனால் மரணிக்கும்போது இந்துவாக மரணிக்க மாட்டேன் எனக் கூறுகிறார்". இத்தனைக் கீழ்த்தரமான இழிவுகளுள்ள இந்து மதத்தை நான் வெறுக்கிறேன் என்று கூறுகிறார். அதற்குப் பிறகுதான் புத்த மதத்தைத் தழுவினார்.
அம்பேத்காரை ஈர்த்த அந்த புத்த மதத்தில் அப்படி என்ன சிறப்பிருக்கிறது என எண்ணுகிறீர்களா?
புத்த மதம் என்பது அறிவு மதம்.... புத்தர் அறிவுச் சுதந்திரம், சமூக சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம் வேண்டுமென வலியுறுத்தினார்.
இயற்கையில் ஓர் ஒழுங்கு உள்ளது. சமூகத்தில் அப்படிப்பட்ட ஓர் ஒழுங்கு உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பினார். அவரின் முதல் நோக்கம் பகுத்தறிவுப் பாதைக்கு வழிநடத்துவது.. இரண்டாவது நோக்கம், மக்களைச் சுதந்திர மனிதர்களாக்குவது. மூன்றாவது நோக்கம், மூடநம்பிக்கையைத் தகர்த்தெறிவது ஆகும். Athmattumalla ஆண்களுக்கிடையில் மட்டும் சமத்துவம் வேண்டுமென்று கூறவில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் சமத்துவம் வேண்டுமென்று கூறினார் “பெண் வாழ்வது ஆணுக்காக மட்டும் இல்லை. பெண்ணுக்குத் தேவை அனுதாபமில்லை; விடுதலை! தனது வீட்டுக்கு veளியேயும் உலகம் இருக்கிறது என்கிற சிந்தனை பெண்கள்Luக்கு வேண்டும். இந்தச் சிந்தனை மட்டும் வந்து விட்டால், பெண் என்பவள் தாயாகவும், தாரமாகவும், சகோதரியாகவும் மட்டுமே இருந்து ஆணின் நிழலிலும் தயவிலும் வாழும் ஓர் அடிமையாக இருக்க மாட்டாள். தேசத்திற்கே வழிகாட்டும் தலைமைத்துவமாக உயர்ந்து நிற்பாள்’ என்கிற பிளிறலோடு, பெண் விடுதலைக்கான கொடியை முதன் முதலில் பறக்க விட்டவர் புத்தர்.
தந்தை பெரியாரின் அறிவுறுத்தலும் இதுவே அம்பேத்காரின் கொள்கையும் இதுவே. புத்தர், பெரியார், அம்பேத்கார் ஆகிய மூவரின் கொள்கைகளும் ஒரே நேர்க்கோட்டில் இருந்தது. அதனால் தான் அம்பேத்கார், அதனால்தான் புத்தர் என்னுடைய பேராசான் என்று கூறுகிறார்.
உலகெங்கும் தேடினேன் தந்தைபெரியாரைப் போல ஒரு தலைவர் எனக்கு கிடைக்கவில்லை எனக்கு எனக் கூறி தந்தை பெரியாரை தனது தலைவராக ஏற்றுக் கொண்டார்.
அம்பேத்கர் அவர்கள், தான் புத்த மதத்தைத் தழுவ இருப்பதாகத் தன் விருப்பத்தைப் தந்தை பெரியாரிடம் கூற புத்த மார்க்கத்திற்குச் செல்ல விரும்பினால் பெருங்கூட்டத்தோடு இந்து மதத்திலிருந்து வெளியேறி அதில் இணைய வேண்டும் என்ற தனது கருத்தையும் தந்தை பெரியார் தெரிவித்தார்.
அதேபோல்தான் பல லட்சம் மக்களுடன் அம்பேத்கார் புத்தமததைத் தழுவினார்.
இன்னொரு நிகழ்ச்சியையும் குறிப்பிடவேண்டும்
அம்பேத்கார் இறுதிக் காலத்தில் அவர் நடத்தி வந்த கல்வி நிறுவனங்கள் நிதிப் பற்றாக்குறையில் சிக்கிக்கொள்ள நேருவிடம் உதவி கேட்கிறார் "இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் எதிர்காலத்தில் என்ன சாதிக்கப்போகிறது? என்று கூறி நேரு உதவி செய்யாமல் நிராகரித்துவிடுகிறார்.
இந்த வெறுப்பினால் தான் தன் சமுதாய மக்களை நோக்கி “பறிபோன உரிமைகளை பிச்சையாக பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ மன்றாடுவதன் மூலமோ நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்களில் பலியிடுவார்களே தவிர சிங்கங்களை அல்ல. என்று கூறினார். சிங்கமாக மாற வேண்டுமென்றால் கல்வி கற்க வேண்டுமென்று தன் சமூக மக்களுக்கு கல்வியின் அவசியத்தை உணர வைத்தார். தன்னைப் பார்க்க வருபவர்களிடமெல்லாம் அவர் கூறுவது படியுங்கள் எந்த தீய சக்தி தடுத்தாலும் கலங்காமல் படியுங்கள் என்று இளைய சமுதாயத்திற்கு அறிவுறுத்தினார்.
அன்றைய காலத்தில் ஜாதிவெறியில் அலங்கோலப்பட்டிருந்தது தமிழகம் இன்றோ அதிகார வெறியில் அலங்கோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன.... வழக்கத்திற்கு அதிகமாக 80% ஓட்டு பதிவாகி உள்ளதாக ஊடகங்கள் அறிவிக்கின்றன. ஆளும் கட்சியும் சரியில்லை எதிர்கட்சியும் சரியில்லை. ஊழலில் திளைத்திக் கொண்டிருக்கிறது கட்சிகள். ஊழலால் இளைத்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். இந்த நிலையில் ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில் விஷபாட்டிலையும் கொடுத்து உனக்குப் பிடித்ததை தேர்ந்தெடுத்துக்கொள் என்று சொல்வது போலுள்ள இன்றைய நிலையில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக மக்கள் உட்படுத்தப்பட்ட கொடுமைதான் நடந்து முடிந்த தேர்தலில் அரங்கேறியிருக்கிறது.
புத்தர் அன்றே சொன்னார்: ஆட்சியாளர் ஊழலுடையவராய் இருப்பின் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஊழலுடையவர் ஆவர். மக்கள் வன்முறையாளராகவும், மூர்க்கர்களாகவும் ஆகி நாடு சீரழியும் என்று ஆட்சியாளருக்கு எச்சரிக்கை விடுத்தார்
ஊழலற்ற ஆட்சி, தூய்மையான ஆட்சி, நேர்மையான ஆட்சி தமிழகத்திற்கு வரவேண்டும்... தமிழர்களின் நலம் காக்க ஒரு தூய்மையான தலைவன் வரவேண்டும். பணபலமுள்ள கட்சிகளைத்தவிர மக்கள் பலமுள்ள கட்சிகளும் தமிழகத்தில் உள்ளது. தரமான தலைவன் தமிழகத்தை ஆளவேண்டும் என்ற என் ஆதங்கத்தை அம்பேத்கார் பிறந்தநாள் விழாவில் தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ கட்சிகள் முளைத்திருக்கும் நம்நாட்டில் இந்தக் காட்டில் எந்த மூங்கிலாவது புல்லாங்குழலாகாதா என்ற ஏக்கத்துடன் என் உரையை முடிக்கிறேன்.
வாய்ப்பிற்கு நன்றி வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக