என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

ஞாயிறு, 3 ஜூலை, 2011

இராவண காவியம் தொடர்: 2

எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும்போதும் வாழ்த்துப் பாடுவது மரபு. அந்த வகையில் புலவர் குழந்தை அவர்கள் தமிழ்த் தாய்க்கு வாழ்த்து சொல்லி; இம் மாபெரும் காவியத்தைத் தொடங்குகிறார்.

தமிழ்த்தாய்க்கு மட்டுமா வாழ்த்து கூறினார்?

தமிழகத்தையும், தமிழ் மக்களையும், தமிழ்ப் புலவர்களையும், தமிழ் அரசர்களையும் போற்றிவிட்டே இக்காவியத்தைத் தொடங்குகிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்து!

உலகம் ஊமையாய் உள்ளவக் காலையே
பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே
இலகி இன்றுநா னென்னு மொழிக்கெலாம்
தலைமையாம் தமிழ்த் தாயினைப் போற்றுவாம்!

உலகில் வாழும் அனைத்து மக்களும் பேச்சு என்பது அறியாமல் ஊமையாக வாழ்ந்திருந்த காலத்திலேயே, பல்வேறு கலைச் செல்வங்களைத் தன்னுள்ளே கொண்டு இன்றைக்கு நானும் ஒரு மொழி என்று சொல்லிகொள்கின்ற அனைத்து மொழிகளுக்கும் தலைமை தாங்கும் தமிழன்னையைப் போற்றுகிறார்!

தமிழ் மக்கள் :

ஒழுக்க மென்ப துயிரினு மேலதன்
இழுக்கம் போலிழி வில்லை யெனுஞ் சொலைப்
பழக்க மாக்கிப் பயின்று பயின்றுயர்
வழக்க மாந்தமிழ் மக்களைப் போற்றுவோம்!

(பிரித்துப் படிக்க:
ஒழுக்கம் என்பது உயிரினம் மேல் அதன்
இழுக்கம் போல் இழிவில்லை எனும் சொல்லைப்
பழக்கம் ஆக்கிப் பயின்று பயின்று உயர்
வழக்கமாம் தமிழ் மக்களைப் போற்றுவோம் )

ஒழுக்கம் என்பது தமது உயிரைவிட மேலானதாக, தரம்கெட்ட வாழ்க்கை முறைபோன்ற இழுக்கு வேறு ஏதும்  இல்லைஎன்று உணர்ந்து; உயர்ந்த வாழ்க்கையை வாழ்வதையே பழக்கமாக்கி சிறந்த வாழ்க்கையை வாழ்ந்த  தமிழ் மக்களைப் போற்றுகிறார்!


தமிழ்ப் புலவர்களுக்கு வாழ்த்து!

பலதுறைத் தமிழ்ப் பாட்டு முரையுஞ்செய்  
துலக மின்புற வோதியுன் தாய்மொழிக்
கலகி லாததொண்   டாற்றிய முத்தமிழ்ப்
புலவர் பொன்னடிப் போதை வணங்குவாம்!

(பிரித்துப் படிக்க:
பல துறைத் தமிழ்ப் பாட்டும் உரையும் செய்து
உலகம் இன்புற ஓதியும் தாய்மொழிக்கு
அலகு  இலாத  தொண்டாற்றிய  முத்தமிழ்ப்
புலவர் பொன்னடிப்  போதை வணங்குவாம்!)

தமிழில் பல துறைகளில் பாட்டுக்களை இயற்றியும் உரை நூல்களை எழுதியும் உலக மக்கள் மகிழும்படி  கருத்துக்களை  எடுத்துக்  கூறியும்  தாய்மொழிக்கு  அளவிலாத  பணி  செய்த முத்தமிழ்ப்  புலவர் பெருமக்களைப்  போற்றுவோம்  என்கிறார் !

தமிழ் அரசர்களுக்கு வாழ்த்து!

மலையுங் காடும் வயலுங் கடலுமா
முலக நான்கு முறுவலந் தேங்கிய
நிலைய மாக நிகழ்த்திய நானிலத்
தலைவர் பொற்கழல் தம்மை வழுத்துவாம்!

ஆஹா... என்ன ஒரு அருமையான பாடல்! நானில மன்னர்களையும் ஒரே பாடலில் அதுவும் ஒரே வரியிலேயே  வாழ்த்திவிடுகிறார் புலவர் குழந்தை அவர்கள்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய மிக்க வளம் பொருந்திய  நாட்டை ஆண்ட நாநிலத்து அரசர்களையும் ஒருசேர வாழ்த்தி மகிழ்ந்து தன் காவியத்தைத் தொடர்கிறார்.

மலையும் மலை சார்ந்த இடமும்
  - குறிஞ்சி
காடும் காடு சார்ந்த இடமும் - முல்லை
வயலும் வயல் சார்ந்த இடமும் - மருதம்
கடலும் கடல் சார்ந்த இடமும் - நெய்தல்...

குறிப்பு : : இராவணன் காலத்தில் திராவிட நாட்டில் பாலை நிலம் கிடையாது. தென்குமரி ஆறும் பஃறுளி ஆறும் வளம் பெற்று நீர் வளமும் நிலவளமும் செறிந்த நாடாயிருந்தது. 


காவியத் தோற்றம்:

இக்காவியம் தோன்றுதற்குக் காரணம் என்னவென புலவர் கூறுகிறார்;.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்ற புகழுக்குரிய நம் தமிழ் மக்கள் எட்டுத்திசையிலும் மிக்க பெருமையுடன் வாழ்ந்து வந்த காலத்தில், வடதிசையிலிருந்து திராவிடத்தில் புகுந்த ஆரியர்கள் நம்முடன் கலந்து பழகி நல்லவர்கள் போல நடித்து, இராமன் என்ற ஒரு அரச குமாரனை அழைத்துவந்து நம் தமிழ் மக்களுடன் பகை கொள்ளச் செய்து நம் இனத்தவரையே ஒழித்தார்கள்

தமிழினப் பற்று சிறிதும் இல்லாத சில கொடியவர்களின் துணையோடு தொன்மைச் சிறப்புடைய தலைமகன் இராவணனை அக் கொடிய இராமன்  போரிட்டு வெற்றிபெற்று மாமன்னனின் குலத்தையே ஒழித்து விட்டான்.

ஆய்ந்தறியும் திறனில்லாத இராமன் செய்த இக்கொலைச் செயலை வாய்மையில்லாத வால்மீகி வடமொழியில் காவியமாகத் தீட்டிவிட்டான்.

காலம் கடந்து இக்காவியத்தின் உண்மைநிலையைத் தமிழர்கள் உணர்ந்தால் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் பெரும் பகை வளரும் என்பதை உணராத  வால்மீகி (வடமொழியில் இருந்ததால்... காலம் கடந்து இதனைத் தமிழர்கள் உணர்வர் என்பதறியாது) பைந்தமிழ் மக்களை அரக்கர்கள் என்றும் அக்றிணையாக குரங்குகள் என்று கூறி  நாத்தழும்பேறப் பழித்துப் புனைந்துவிட்டான்.
தமிழினப் பகைவனான கம்பனும், வால்மீகி சொன்ன முழுப் பொய்யை உண்மையான - உயர்வான கதை என்று தமிழர்கள் நம்பும்படியாகத் தமிழில் ஒரு காவியத்தைச் செய்துவிட்டான்...
இதை புலவர் அவர்கள் கீழ்கண்ட பாடலில் அழகாகக் கூறுகிறார்

தம்மி னப்பகை சார்தமிழ்க் கம்பனும்
அம்முழுப் பொய்யதை எந்தமிழர்கள்
மெய்ம்மை யான விழுக்கதை யாமென
அம்மவோ  நம்பிடச் செய்து விட்டனன்" .. என்கிறார்!

அதுமட்டுமா?

தங்குலப் பகை தன்னைக் கடவுளா
எங்குலத்தவ ரெண்ணி வணங்கியே
கங்கு லைபகற் கால மெனக்கொளும்
திங்கள் போலத் திறம்பிட லாயினர் என்கிறார்...

அதாவது.. இந்தக் கம்பன் செய்த இப் பொய்க்காவியத்தை மெய்யென நம்பிய நம் தமிழர்கள் நம் தொல்பெருமை வாய்ந்த தமிழ் மறக்குடி மக்களைக் கொடிய பகைவர்கள் போல எண்ணி வெறுத்தும் நம் குலத்தின் பகைவனான இராமனைக் கடவுள் என நம்பி , வணங்கி, இரவினைப் பகல் என்றும் பகலினை இரவென்றும் தவறாக எண்ணி நிலைகுலைந்து விட்டனர் என்கிறார்.

அதனால்...
அம்ம யக்க மகன்று தமிழர்கள் 
தம்மி னத்துத் தலைவர் பெருமையைச்
செம்ம னத்துத் தெளிந்திடச் செய்குதல் 
எம்மி னத்தி னிருங்கட னாகுமால்

எனவே இந்த மயக்கத்தை நீக்கி தமிழினத் தலைவனாகிய இராவணனின் பெருமையை உணரச்செய்து, தமிழரின் நல்ல உள்ளத்தினத் தெளிவடையச் செய்வதும் நம் தமிழினத்தவரின் தலையாய கடமை ஆகுமாதலால் ...இந்தக் காவியம் தோன்றியது.

விழுந்த ஞாயிறு மேக்கெழு காலையில்
ஒழிந்து வல்லிரு ளோவுறச் செங்கதிர்
பொழிந்து மக்கட்குப் புத்தொளி காட்டல்போல்
எழுந்த தேகொலாம் இப்பெருங் காவியம்
என்கிறார்... அதாவது.. மேற்குத் திசையில் மறைந்த சூரியன் மறுபடி கிழக்குத் திசையில் மேலெழுந்து வரும்போது அடர்ந்த இருள் ஒழிந்து போகுமாறு தன் செங்கதிரைப் பரப்பி புதிய வெளிச்சம் காட்டுவதுபோல இப்பெரும் காவியம் எழுந்தது என்கிறார்.

இக்காவியத்தின் நோக்கமோ...
கரும்பை வேம்பென வேம்பைக் கரும்பென
விரும்பி வாழுமே யாமை வெருவுற
அரும்பி உண்மை அருந்தமிழ் மக்கள்முன்
திரும்பி வாழ்ந்திடச் செய்யுமிக் காவியம் 

அதாவது…  கரும்பை வேம்பு என நினைத்து ஒதுக்கியும் வேம்பைக் கரும்பென எண்ணி விரும்பி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் அறியாமை இருளை ஓட்டி தமிழர்களின் உண்மை நிலையை உணரச்செய்து மானமுள்ள தமிழர்களாய் வாழச்செய்வதே இக்காவியத்தின் நோக்கமெனக் கூறுகிறார்..

அவையடக்கம்:
குற்றமில்லாத இத்தமிழினத்தின் பெருங்கதையைக் கேட்டால் சிலர் ஏசுவார், சிலர் இது உண்மைதானே என உரைப்பார், உண்மை உணர்ந்தாலும்  சிலர் ஏற்றுக்கொள்ளாமலிருப்பார் ஆனால் இதைத் தவறென்று எதிர்த்துப் பேசக் கூசுவார்.  சிலரோ ஆ ஊ என்று கூக்குரலிட்டுக் கொண்டிருப்பார் என்பதை,

ஏசு வார்சிலர் ஈதுண்மை யேயெனப்
பேசு வார்சிலர் பேச வெதிர்மனங் 
கூசு வார்சிலர் கூக்குர லார்சிலர்
மாசிலாத் தமிழ் மாக்கதை கேட்கினே!  -- என்று வடிக்கிறார்.

இன்னும் சிலரோ, வழிவழியாய் வந்த மரபை மாற்றும் இது என்ன நெறி? இது ஒரு பழிச் செயல், இது ஆரிய இனத்தவர் மீது கொண்ட பகைமை அடிப்படியில் கூறும் வசை என்பார்கள்.
இது அநியாயம். இது முறையல்லஇதை ஒழிக்க வேண்டும். ஒழித்துக்கட்டுவோம் என்று பலரும் கூறுவார்.

ஆனால்....வடக்கிலிருந்து வந்த கதையினை அதன் நிலையை மாற்றி உரைத்து வடவர்களின் கொடும் செயல்களையெல்லாம் தெளிவு படுத்தி எடுத்துரைக்க      ஆக்கியதே அன்றி இக்காவியத்தில் குற்றம் சொல்லுமளவுக்குத் தீமை ஏதுமில்லை.
பொய்யையும் புரட்டையும் பல கதைகளையும் புளுகி தெய்வத்தன்மையைத் திருட்டுத்தனமாக நுழைத்த ஆரியர்களின் செயலை அகற்றி உண்மையை கூறித் தமிழர்களை தம்நிலைக்குக் கொண்டுவரச் செய்வதல்லாது வேறு நோக்கமெதுவுமில்லை இக்காவியத்தில்

மனுநீதி என்று வர்ண சாஸ்திரம் இயற்றி ஒற்றுமையாய் வாழ்ந்திருந்த தமிழர்களிடத்தில் ஜாதி பேதமென்ற வேற்றுமையைப் புகுத்தி ஆரியத்திற்கு அடிமையாக்கி அந்த அடிமை வாழ்விலேயே அழுத்தி வைத்திருக்கும் வாழ்விலிருந்து விடுதலை அடைய நினைக்கும் தமிழர்களுக்குப் பொருத்தமான நூல் இது.

கோதிலாத குழந்தை குதலையைத்
தீது நன்றெனத் தேர்வரோ பெற்றவர்  
ஈது நந்தமிழ் ழன்கதை யேயிதை
ஓது வோணுமீங் குங்கள் குழந்தையே

வசை மலிந்த மறுக்கெட வண்டமிழ்ப்
பசை மலிந்து பயின்று பயன்பெற
இசை மலிந்த  இராவண காவியம்
திசை மலிந்து சிறந்து திகழ்கவே !

எந்தக் குற்றமும் செயாத தம் குழந்தையின் மழலை மொழிகளில் நன்மை தீமைஎன்று குற்றம் காண்பார்களா? மாட்டர்கலல்லவா அதே போல, இது நம் தமிழினத்தின் கதை இதைத் தெளிவுபட உரைப்பவன் உங்கள் அன்புக்குழந்தை என்ற பேர் கொண்டவன்.

தமிழினத்தவர்க்கு ஆரியரால் வந்த பழி மலிந்து கிடக்க, அந்தக் குற்றம் நீங்கிடத்  தமிழ்ப்  பற்றுநிறைந்த இந்நூலை எல்லோரும் பயின்று இராவண காவியத்தின் புகழை எல்லாத் திசைகளிலும் சென்று அடையச் செய்வீராக! என்று கூறி காவியத்தைத் தொடங்குகிறார்.

இக்காவியத்தில் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரிக் காண்டம் போர்க்காண்டம் என மொத்தம் ஐந்து காண்டங்களும், அதில் 57 படலங்களும், 3100 செய்யுட்களும் உள்ளது. 

சொற்பொழிவாற்றுவது எளிதெனத் தோன்றுகிறது. தமிழில் தட்டச்சுச் செய்வது மிகவும் கடினமாகவே  உள்ளது., இருப்பினும் என்னால் முயன்றவரை இங்கு அனைவரும் பயன் பெறுமாறு இக்காவியத்தினை அளிப்பேன் என நம்புகிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக