என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

செவ்வாய், 5 ஜூலை, 2011

இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)


இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)



தமிழகக் காண்டம்

இக்காண்டத்திற்குள் செல்லுமுன்,நம் பண்டைய தமிழகத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும் அல்லவா?

மிக மிகப் பழங்காலத்தே தமிழ்நாடானது இன்றுள்ளது போல் குறுகிய எல்லைக்கு உட்பட்டு இருக்கவில்லை. வடக்கில் பனிமலை (இமயம் ) வரை பரவியிருந்தது. அதற்குப் பின் அயல்நாட்டார் குடிஎற்றத்தால் பின்னர் விந்தமலை வரை ஆனது. விந்த மலையே நம் நாட்டின் வடக்கு எல்லையாகக் கருதப் பட்டது. 

அதே போல தென்கடல் அப்போது நிலமாகத்தான் இருந்தது. அது குமரி முனைக்குத் தெற்கில் ஆயிரம் கல்லுக்கும் அகன்று பரந்திருந்தது. இப்புறத்தில் குமரிமலை, பன்மலை முதலிய ஓங்கி உயர்ந்த மலைகள் இருந்தன. குமரி மலையில் குமரி ஆறும், பன்மலையில் பஃறுளி ஆறும் தோன்றி அங்கிருந்த நிலப்பரப்பை மிக்க செழிப்பாக வளம்பெறச் செய்திருந்தது.

கிழக்குப் புறமோ.. வங்கக் கடலும் சாவகம் முதலிய தீவுகளும் ஒரே நிலப்பரப்பாகத்தான் இருந்தது. 

(படத்தினைப் பாருங்கள் : இன்னும் தெளிவாக விளங்கும்.)

குமரி ஆற்றுக்கும் பஃறுளி ஆற்றுக்கும் இடையில் பெருவள நாடு இருந்தது
பஃறுளிக்கும் தென்கடலுக்கும் இடைப்பட்ட நாடு தென்பாலி நாடு.

இந்த இரு நாடுகளுக்கும் தலைநகரமாக இருந்தது தான் மதுரை (இப்போதுள்ள மதுரை அல்ல)
இப்படி, தெற்குப் புறம் குமரிக்கும் வடக்குப் புறம் விந்தத்திற்கும் இடைப்பட்ட பகுதிதான் "திராவிட நாடு "

திராவிடத்தின் மேற்குப் புறம் சேரநாடு இருந்தது
திராவிடத்தின் கிழக்கில் சோழ நாடு இருந்தது.

இப்படியான தமிழகத்தில் , மலையும், காடும், நிலமும் , கடலுமாக நானிலமும் கூடிய வளம்பொருந்திய
தமிழகத்தில் நானில மக்களும் தங்களுக்குள் ஒரு தலைவனை தேர்வு செய்து அவனுடைய ஆட்சிக்கு உட்பட்டு வாழ்ந்து வந்தார்கள். இன்னாநிலத் தலைவர்களுக்கும் தலைவனாக முழுத் தமிழகத்துக்கும் ஒரு பேரரசனாக ஒரு மாபெரும் பேரரசனை மக்கள் கொண்டிருந்தனர். அப்பேரரசன், தமிழகத்தின் நடுவில், இப்போதுள்ள இலங்கையின் தென்னகரில் இருந்து தமிழகத்தை ஆண்டு வந்தான். 

அப்பண்டையோர் மரபில் வந்தவர்களே பாண்டியர்கள் : 

தமிழகம் அளவில் மிகப் பெரியதாய் இருந்ததால்....இந்தப் பாண்டிய மரபில் வந்த மன்னன் ஒருவன் தன் மகனைத் தென்னாட்டிற்குத் தலைவனாகவும், இன்னும் இரண்டு தமிழ்ப் பெருமக்களை சேர சோழ நாட்டிற்கும் தலைவனாக்கி சிறப்பாக ஆண்டு வந்தான். 

இவர்களின் வழி வந்தவர்கள்தான் சேர சோழ பாண்டியர்கள் .

தி,.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்கடல் பொங்கி (சுனாமி ) தென்பாலியையும், கிழக்கு நாட்டின் பெரும்பகுதியையும் விழுங்கிற்று. 

பிறகு, தி. மு. 2500 இல் மற்றொருமுறை கடல் பொங்கி (சுனாமி) பெருவளத்தின் பெரும்பகுதியையும் கிழக்கு நாட்டையும் விழுங்கியது.

பிறகு தி.மு. 700 இல் மீண்டும் பொங்கிய கடலானது திராவிடத்தின் ஒரு பகுதியை உண்டு ஏப்பம் விட்டது. 

இரண்டாவது கடல் கோளிற்குப் பின்தான் (கடல் கோள் - சுனாமி ) இலங்கை உண்டானது. இலங்கை நாட்டின் நடுவில் முக்கூடல் மலைமீதுதான் இலங்கை நகர் இருந்தது. 

இந்த இலங்கையிலிருந்து தமிழகத்தை ஆண்டுவந்த பேரரசர்களின் வழிவந்த ஒரு பேரரசன் வச்சிர வாயு. அப்பேரரசனுக்கும் அவன் மனைவி கேகசிக்கும் பிறந்தவர்கள் தான் இராவணன் , கும்பகன்னன்., பீடணன் மற்றும் காமவல்லி (இவளைத்தான் சூர்பனகை என்று இராமாயணத்தில் குறிப்பிட்டிருக்கும்,) இவர்களை வைத்தே இராமாயணம் என்ற கதை பின்னப்பட்டது. 

சரி, இதுவரை இராவண காவியம் ஏன் தோன்றியது என்பதைக் கண்டோம். இனி, கிழக்கு, மேற்கு தெற்கு ஆகிய முத்திசைகளையும் அலைகள் காவல் காக்க வளமை மிக்க விந்த மலை வடக்கில் வேலியாக அமைய சிறப்புடன் பண்டைக் காலத்தில் நம் முன்னோர்க்கள் வாழ்ந்திருந்த தமிழகம் பற்றிக் காணப்போகிறோம்.

நனிமிகு பண்டுநந் நற்றமிழ்ச் செல்வி 
பனிமலை காரும் பகை சிறிதின்றி
இனிதுயர் வெண்குடை நீழலிருந்து
தனியர சோச்சித் தமிழகம் காத்தாள் 

மிக மிகப் பழங்காலத்தே நம் நற்றமிழ்ச் செல்வியானவள் வடக்கே பனி சூழ்ந்த இமயமலைவரை பகை என்பதே இல்லாமல் தனியாக அரசாட்சி செய்து தமிழகத்தைக் காத்து வந்தாள். ஆரியர்கள் என்னும் அயலார்களின் பெயர் அறியும் முன்பே விந்தமலைக்கு வடக்கு வரை மிகச்சிறப்பாக வாழ்ந்து வந்த நம் தமிழ் மக்களின் நாகரிகச் சிறப்பினை பல அகழ்வாராய்வு முடிவுகள் நம்மை மகிழ்ச்சியோடு பெருமிதம் கொள்ளத்தக்க வகையில் வெளிப்படுத்தியுள்ளதை கீழ்கண்டவாறு கூறுகிறார் புலவர் குழந்தை அவர்கள்:

விந்த வடக்கு விளங்கி இருந்த
நந்தமிழ் மக்கணன் நாகரி கத்தைச் 
சிந்து வெளிப்புறந் தேறி யறிந்தார் 
சிந்தை மகிழ்ந்து செருக்குற நாமே...

(பிரித்துப் படிக்க : 
விந்த வடக்கு விளங்கி இருந்த 
நம் தமிழ் மக்கள் நன் நாகரிகத்தைச்
சிந்து வெளிப்புறம் தேறி அறிந்தார்
சிந்தை மகிழ்ந்து செருக்குற நாமே.

சிந்துவெளியில் மட்டுமா வாழ்ந்திருந்தனர் நம் மக்கள்? மேற்கே வளம் கொழித்த யவன நாடு உள்ளிட்ட பகுதிவரையல்லவா நம் மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பதையும் கூறி நமக்குப் புலப்படுத்துகிறார்.

அப்படி பெருமை வாய்ந்திருந்த தமிழகத்தில் முக்கியமான பகுதிகளைப் பார்ப்போம் .

பெருவள நாடு:

தன்கடன் குன்றித் தமிழகங் கொண்ட
தென்கடல் முன்பு செழுந்தமிழ் நாடா
நான்கட னாடு நனிவளந் தேங்கிப் 
பொன்கட னாடப் பொலிந்தது காணும்.

தமிழகத்தைக் காக்கவேண்டிய கடமையிலிருந்து தவறி தன்னிடம் கொண்டு சென்ற தென்கடலானது, முன்பு, செழுந்தமிழகமாக இருந்தக் காலத்தில், கடலும் விரும்பும்படியாக அவ்வளவு செழுமை மிக்கதாகவும், பிற நாடுகள் செல்வத்தை இங்கிருந்து கொடுக்கும்படி கடன் கேட்குமளவிற்குச் செழிப்புற்றிருந்ததாம் பெருவள நாடு. அயல் நாட்டவர் பொறாமை கொள்ளும்படியும் இங்கிருந்து செல்வம் நமக்கு கிடைக்காதா எனப் பேராசை கொள்ளுமளவுக்கு பெரிய பொருள் சேர்த்துவைக்கும் இடம் போல் இருந்ததாம் பெருவள நாடு.

அந்த பெருவளனாட்டினச் சூரியன் கடந்து செல்ல நடுக்கம் கொள்ளுமளவிற்கு மிக உயர்ந்து மாணிக்கத்தூன் போல செல்வம் மிக்கதாகக் கொண்ட குமரி மலை இருந்ததாம். இந்தக் குமரி மலையைக் கடந்து செல்ல சூரியன் நடுக்கம் கொண்டது என்று என்ன ஒரு அற்புதமாகக் கவி குறிப்பிடுகிறார் பாருங்கள்...

ஆயநன் னாட்டி னணியுறுப் பாக 
ஞாயிறு செல்ல நடுக்குற வோங்கிச் 
சேயுயர் வானின் திகழ்மணித் தூணின் 
மீயுயர் செல்வக் குமரி விளங்கும்.

பிரித்துப் படிக்க 

ஆய நன்னாட்டின் அணியுறுப் பாக 
ஞாயிறு செல்ல நடுக்குற ஓங்கிச் 
சேயுயர் வானின் திகழ் மணித் தூணின் 
மீயுயர் செல்வக் குமரி விளங்கும்.

இப்படி உயர்ந்து சூரியக்கதிர்களே நாட்டிற்குள் நுழைய நடுங்குமளவிற்கு இருந்த மலையானது பகைவரிடமிருந்து காக்கும் பெரிய அரணாக இருந்ததாக நயம்படக் கூறுகிறார்.

அப்படிப்பட்ட குமரிமலையில் தோன்றிய ஆறுதான் குமரியாறு என்ற பெயருடன், அந்நிலத்திற்குத் தேவையான நீர்வளத்தைக் கொடுத்துச் செழுமையாக்கியதோடல்லாமல் அந்நாட்டிற்கும் அழகு சேர்க்கும்படி அமைந்திருந்ததாம் குமரி ஆறு.


நாட்டு புகழ்த்தமிழ் நாட்டி னதுதென் 
கோட்டிலின் றுள்ள குமரி முனைக்கு 
நோட்ட மிகுமிரு நூறுகற் றெர்கில்
ஊட்டுங் குமரியா றோடின காணும்! 

அதாவது,
இப்போதிருக்கும் தமிழ்நாட்டின் குமரிமுனையிலிருந்து தெற்குப் பக்கமாகப் பார்த்தால் 200 கல் தொலைவில் குமரி ஆறு இருந்ததாம். இந்தத் தொன்மையான குமரிமளைக்குத் தெற்கே முகில் தோயும் பல மலைகள் ஒன்று சேர்ந்து பன்மலைத் தொடராக உருவாகி அழகுற அமைந்திருந்ததாம் அந்தப் பன்மலைத்தொடர்.

அடுத்ததாகக் கூறுகிறார் பக்ருளியின் தோற்றமும் அதன் உயர்வையும்... தனக்கே உரிய அருமையான கற்பனைத்திறத்தால்...

அத்தொடர்க் குன்றத் தருமக வாகி 
முத்தமி ழாளர் முதுநெறி போலப்
பத்தி யறாதுசெல் பஃருளி யாறு
புத்துண வாகிப் புதுவிருந் தாற்றும் 

ஆஹா.... என்னே கற்பனை... என்ன ஒரு அருமையான பாடல்...
அந்தப் பன்மலைத் தொடரின் குழந்தையாக பஃறுளி ஆறு பிறந்து, (அதிலிருந்து பிறந்ததால்) முத்தமிழ் அறிஞர்கள் எப்படி ஒழுக்கம் தவறாமல் அறநெறியோடு தன் கடமையைச் செய்கிறார்களோ அதுபோல் பஃறுளி ஆறும் தன்னுடைய நீர் வளத்தால் உணவுப் பொருட்களை விளைவித்து புதுவிருந்து படைக்கிறதாம் அந்நாட்டு மக்களுக்கு. சிரி

இப்படி இன்னும் பலப்பல குன்றுகளும் அதிலிருந்து தோன்றிய பல ஆறுகளும் குறைவில்லாது ஓடி பல வளங்களைப் பெறுமாறு செல்வச்செருக்கு மிக்க பெருமித உணர்வு கொள்ளுமாறு பெயருக்கேற்ற படி பெருவளங்களை அளித்து பெருவளனாட்டைப் பொலிவோடு விளங்கச்செய்தது . 

இந்தப் பெருவளநாட்டில் மொத்தம் நாற்பத்து ஒன்பது நாடுகள் இருந்ததாகக் கூறுகிறார் புலவர். 

குணக்கரை குன்றங் குறும்பனை யோடு
மணமிகு தெங்க மதுரைமுன் பாலை
இணருபின் பாலையோ டேழ்தலை மேய 
உணவமல் நாற்பதோ டொன்பது நாடே..

அவை , ஏழ் குணகரை நாடு, ஏழ் குன்றநாடு, ஏழ் குறும்பனை நாடு, 
மணமிகும் - ஏழ் தெங்க நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் முன்பாலை நாடு, 
அதனை ஒட்டிய - ஏழ் பின்பாலை நாடு 

என ஏழு என்ற எண்ணினை முதலில் கொண்ட உணவு வளம் மிக்க நாற்பத்தேழு நாடுகளைக்கொண்டதாக இருந்ததாம் பெருவள நாடு.


இதுமட்டுமல்லாமல்

கொல்லம், குமரி முதலான வளம் மிக்க பல வள நாடுகளையும் கொண்டு இயல்பான பெருமையினையும் வளமும் பொருந்தியதாகத் திகழ்ந்ததாம் அப்பெருவள நாடு என்பதை ...

கொல்லம தோடு குமரி முதலா
மல்லன் மிகும்பன் மலை வள நாடும்
எல்லியல் பாகவே ழெழோடு குன்றா
நல்லியல் பாகவந் நாடு பொலிந்த.

என்று கூறுகிறார் புலவர் குழந்தை அவர்கள் .


அடுத்து தென்பாலி நாட்டைப் பற்றி --- தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக