வைக்கோலும் யானையும்
வாரிக் களத்தடிக்கும், வந்தபின்பு கோட்டைபுகும்
போரில் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலு மால்யானை யாம்.
விளக்கம் : சிறப்புப் பொருந்திய செம்மை நிறமுடைய அழகான மேனியுடைய திருமலை ராயனின் மலைச்சாரலிடத்தில் வைக்கோல் மதயனைக்குச் சமம் என்று கூறுகிறார் கவி காளமேகம்.
எப்படியெனில் -
வைக்கோல், உழவர்களால் கற்றை கற்றையாக வாரிஎடுத்துச் செல்லப்பட்டு களத்துமேட்டில் அடிக்கப்படும். பிறகு பண்டகசாலைகளில் கோட்டையாகக் கட்டிச் சேர்க்கப்படும். ஊருக்குள் கொண்டுவரப்பட்டு. பெரிய பெரிய வைக்கோற் போர்களாக வைக்கப்பட்டு சிறப்பாகத் தோன்றும்.
அதே போல் -
யானையானது , போர்க்களத்தில் பகைவர்களைத் துதிக்கையால் தூக்கிஎடுத்துத் தரையில் வீடி அடித்துக் கொல்லும். பகைவர்களைக் கொன்ற பின் அவர்கள் கோட்டைக்குள் வெற்றியுடன் நுழையும். .இப்படி போர்க்காலத்தில் யானையானது சிறப்பாகத் தோன்றும்
இதனால் வைக்கோலும் யானையும் சமம் என கவிகாளமேகம் அழகாகக் கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக