என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

சனி, 2 ஜூலை, 2011

பெற்றவள் ...உன்னை நான் பெற்றவள்!


ஐயிரண்டு திங்களெனை   அடிவயிற்றில் பதுக்கி யதால்
மெய்யுருக்கி   நித்தமுந்தன்   மேனியதை வருத்தி யதால்
பெய்யுமழை யாகியெனைப் புதுப்புனலாய் ஆக்கி  யதால்
மெய்யான என்னுடலுக் குன்னாலுயிர் பெற்றேன்

உன்னுதிரம்  குழைத்து தினம் உட்கொண்ட காரணத்தால்
என்னிதயம் என்சுவாசம்  எல்லாமும் ஒழுங்குபட
உன்னுள்ளே ஓசையின்றி ஓவிய மாய்நீ வரைய
இன்னுலம் காணும் படிஇவ்வுரு வம்நான்  பெற்றேன்

உண்ட உந்தன் முலைப்பாலால் உற்றதொரு தேகபலம்
கொண்டு நானும் வளர்ந்து சிறுமழலை யாகி ஓடிவர
கண்டு   யெனைமற்றவர் கள்எழிலாக யெனையழைக்க
நண்ணிய தானலதா ராணியெனும்  பெயர்  பெற்றேன்.

முன்னெனக்குப் பிறந்தவர்கள் முத்தம்நிறை பெற்றவர்கள்
பின்னெனக்குப் பிறந்தவர்கள் பாசம்நிறை பெற்றவர்கள்
என்னருமை உடன்பிறந்தோர் அருமையான அறுவரையும்
உன்னாலே என்னுறவாய் இவ்வுலகில் நான் பெற்றேன்!

தக்க பருவந்தன்னில் தாய்மொழியைப் பயிற்றுவித்து
அக்கறை யோடு யெனை அருமையாக வளர்த்தெடுத்து
சொக்கும் தமிழோடு யெனைசேர்த் துவைத்து வாழவைத்து
மிக்கவரை ஈர்க்குமாறிந் தச்சிற்றறி வும்யான் பெற்றேன்.

பொன்னும் பொருளும் பெயருடனே உற்றபல நற்புகழும்
இன்னும் என்னென்ன உண்டோ இனிதான இவ்வுலகில்
உன்னாலே எல்லாமும் பெற்றே னிதைஎல்லாம் விஞ்சியதாய்
பொன்னினும் மேலான நின்னை யென்தாயாகப் பெற்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக