இராவண காவியம் - தொடர் 1
இராவணகாவியம் என்ற பெயர் கேட்டவுடன் எல்லோருக்கும் ஆச்சரியத்தில் புருவம் ஒன்றையொன்று தொடுமளவுக்கு நெற்றி சுருங்கும். என்னடா இது காலங்காலமாக இராமாயணத்தைப் படித்தும் கேட்டும் பார்த்தும் வந்திருக்கிறோமே ... அந்த மகா காவியத்தில் சித்தரிக்கப்பட்ட அரக்கன், அசுரன், ராட்சசனுக்கு ஒரு காவியமா என்று உங்களனைவருக்கும் வியப்பாகத்தான் இருக்கும் உண்மை உணரும் வரை.
இராமன் யார்? இராவணன் யார்?
இராமாயணத்தின் நோக்கம் என்ன?
இராவண காவியத்தின் நோக்கம் என்ன?
என்பதைப் பற்றிக் கூறும் ஒரு பெரு முயற்சியில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்தினும் பழுத்த வாய்மொழிப் பாவலனான புலவர் குழந்தை அவர்கள் இராவணனின் பெருமை கூறப் புனைந்த காவியம் இராவண காவியம்.
இன்னொரு சிறப்பு என்னவென்றால் இருபதாம் நூற்றாண்டில் தமிழில் மட்டுமல்ல வேறு எந்த மொழிகளிலும் ஒரு மகா காவியம் வெளிவரவில்லை. பாரதியோ , பாரதி தாசனோ, தாகூரோ செய்யாத ஒரு மாபெரும் காவியத்தைப் புலவர் குழந்தை அவர்கள் தீட்டி, இருபதாம் நூற்றாண்டில் மகா காவியம் வெளிவரவில்லை என்ற குறையை நீக்கினார்.
புலவர் குழந்தை அவர்களை இக்காவியம் புனையத் தூண்டுதலாக இருந்தது பாவேந்தர் பாரதி தாசனார் அவரிகள் இராவணனைப் பற்றி எழுதிய "வீரத் தமிழன்" என்ற பாடலினால் ஏற்பட்டது.
"தென் திசையைப் பார்க்கின்றேன்... என்சொல்வேன்
என் சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்குதடடா
அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத் தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தான்
குன்றெடுக்கும் பெருந் தோளன் கோடை கொடுக்கும் கையான்
குள்ளநரிச் செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம்
என்றமிழர் மூதாதை என்றமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன் நாமம் இவ்வுலகம் அறியும்! ....
என்று தொடங்கும் இப்பாடல் தான்.
பாவேந்தரின் சிந்தையும் தோள்களும் பூரிக்கும் அளவிற்கு அந்த இராவணனிடத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று இவர் சிந்தையை சுட்டுவிரல் தட்டியெழுப்ப, இராமயணத்தை மீண்டும் புரட்டிப் பார்த்தார். பிறகு இராமனையே புரட்டிப் போட்டார். ஆழிசூழ் இலங்கை வேந்தன் தமிழ்ப் பேரரசன் இராவணன் தமிழர்களால் தூற்றப் படவேண்டியவனல்ல போற்றப் படவேண்டியவன் என்பதை இவ்வுலகுக்கு எடுத்தியம்பினார்.
இராமாயணம் இயற்றப்பட்ட காலம் ஆரியக் கலாச்சாரமும் திராவிடக் கலாச்சாரமும் ஆக இருவேறு கலாச்சாரங்கள் மோதத் தொடங்கிய காலம். தூய்மையான வாழ்க்கை வாழ்ந்திருந்த திராவிட மக்களிடையே ஆரிய இனக் கலாச்சாரம் தூவப்பட்ட வரலாற்றை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
வால்மீகியும் கம்பனும் எழுதிய இராமாயணத்திலிருந்தே ஆதாரங்களை எடுத்து ... இராவணனின் மீது சுமத்தப் பட்ட பழியைப் போக்கி இராவணன் தூய்மையானவன் என்றும் இராமனின் தவறுகளையும் உண்மை குணங்களையும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு காவியத்தை திடீரென்று ஏற்பார்களா மக்கள்? 1946 ஆம் ஆண்டு வெளிவந்த இக்காவியத்தை 1948 ஆம் ஆண்டு அப்போதிருந்த தமிழக அரசு தடை செய்து விட்டது. 23 ஆண்டுகள் சிறையிலிருந்த இக்காவியம் 1971 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் தடை நீக்கப் பெற்று வீரியத்துடன் வெளிவந்தது.
கலைஞர் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியிருப்பார்..."
வான்மீகி இராமாயண மூலத்திலிருந்து கம்பன் தனது இராமாயணக் கதையைப் -பாத்திரங்களைப் படைத்தான் எனினும் தமிழ்ப் பண்பாட்டிற்கேற்ப ஆங்காங்கே பல மாறுதல்களைச் செய்து தமிழுணர்வினைக் காட்டியுள்ளான். வருணனைகளும், சொல்லாட்ட்சியும் விரவியுள்ள கம்பனின் சுவைமிகு செந்தமிழ்ச செய்யுட்களை எந்தவகையிலும் குறைத்து மதிப்பிட நம்மால் இயலாது. ஆயினும், பன்னீராயிரம் பாடிய பாட்டரசன் கம்பன் எழுப்பாத இன்தமிழ் உணர்வை எழுப்பியவர் புலவர் குழந்தை அவர்கள்"
சுருங்கக் கூறின் இது “தமிழ் இலக்கியத்தின் சாறு” என்று குறிப்பிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள்; 8 நூற்றாண்டுகளாக இராமாயணத்தைப் படித்தும், இராமனைத் தெய்வமாகப் பூசித்தும் வரும் மக்களுக்கு இராவண காவியம் என்ற ஒலியே சற்று கிலிதருவதாகத் தான் இருக்கும் என்றும்
ஆரியக் கலாச்சாரத்தை தமிழர்களிடத்தில் திணிப்பதற்கு இராமாயணம் இயற்றப்பட்டது.
அதற்காக இராமன் தெய்வமாக்கப்பட்டன். இராமன் தெய்வமாக்கப்படவேண்டும் என்பதற்காகவே இராவணன் அரக்கனாக்கப்பட்டான். இராமன் கையில் மகத்துவம் பொருந்திய ஒரு கோதண்டத்தையும், இராம தூதனின் வாலுக்கு நினைத்த அளவில் நீண்டு வளரக்கூடிய மகிமையையும் கவி கற்பித்துக் கொண்டார். வேலும் வில்லும் வணக்கத்துக்குரிய பொருளாக்கப்படவே தோள் வலியும் மனவலியும் படைத்த ஒரு மாமன்னன் அரக்கனாக்கப் பட்டான். இராமனைச் செந்தாமரைக் கண்ணன் என்று புனைந்த கவி இராவணனின் கண்கள் செந்தழலை உமிழ்பவனவாகத் தீட்டிவிட்டார் என்று கூறியுள்ளார்
இந்த இராவண காவியத்தின் தொடர் சொற்பொழிவை குவைத்தில் கடந்த ஒரு வருடமாக மாதாமாதம் நடத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
இன்று புலவர் குழந்தை அவர்களின் (ஜூலை 1 , 1906 ) பிறந்தநாள். இந்த நாளில் இவர் இயற்றிய இராவண காவியத்தின் தொடர் பதிவுகளை இடுவதில் பெருமை கொள்கிறேன்.
இக்காவியத்தைத் தொடர்ந்து முக்கியமான செய்யுட்களோடு இங்கு பதிவிட்டு விளக்குகிறேன். அனைவரும் படித்துத தமிழின் சுவையைப் பருகி இன்புறுக!
சொற்பொழிவின் ஒலிநாடா கிடைக்குமா?
பதிலளிநீக்கு