என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

திங்கள், 11 ஜூலை, 2011

இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

தொடர்ந்து  தென்பாலி நாட்டைப்பற்றி பார்ப்போம்,

தென்பாலி நாடு எங்கு எப்படி அமைந்திருந்தது என்று புலவர் குழந்தை அவர்கள் அவருக்கே உரிய அழகிய நடையில் பெருமையோடு கூறுகிறார் பாருங்கள்..

அப்பெரும் பக்றுளி  யாற்றின்  தெற்கில்
திப்பிய தென்கடல் தெற்கின தாகக்
கப்பிய பல்வளங் காமுற யாரும்
நப்புகழ் மேயதென் பாலி நளியும்

(திப்பிய : தூய , சிறந்த ; கப்பிய : கவிழ்ந்து  மூடியபடி )
பக்றுளி ஆற்றின் தெற்குப் பகுதியில், தென்கடலுக்குத் தெற்குப்பக்கம் நிலவளங்கள் பலவகையாக
நிறைந்து அந்த நாட்டையே மூடி இருக்குமாறு இருப்பதை அந்நகரை காண்பவர்கள்  அதன் அழகில் காமுறுமாறு சிறந்து விளங்கியதாம் தென்பாண்டி நாடு.

இடைநில மைந்து நூறேன்னறு   கல்லிற்
படவொளி மேய பவளமு முத்தும்
கொகுட நாட்டுக் கொழும்பொரு ளோடு
கடல் வழங்கக்கண்டு கழித்ததந் நாடே

அந்தத் தென்பாலினாடாடந்து ஐந்நூறு தொலை கல் பரப்பளவில் பெரிய கடலைக் கொண்டிருந்தது... கடலென்றால் சாதாரணக் கடலல்ல... ஒளிபொருந்திய பவழங்கள் முத்துக்கள் மற்றுமுள்ள கடற் பொருட்களோடு வளம் மிகக் கொண்டதாக இருந்ததாம் தென்பாலி நாடு.

இப்படியாக மூன்று பெரு நாடுகள் (பெருவலநாடு , குமரி நாடு , தென்பாலி நாடு )ஆகிய மூன்றும் தனித்தனியாகத் தோன்றுவதற்கு முன்பு ,,, இந்த பெரிய நிலப்பரப்பானது குமரிக் கண்டம் என்று சொள்ளத்தக்கவாறு பரந்து விரிந்திருந்ததாம்.

இப்போது ஒரு முக்கியமான விடயத்தைக் கவனிக்க வேண்டுகிறேன்...
இப்போதுதான் அறிவியல் ஆராய்ச்சியில் கூறுகிறார்கள் பழங்காலத்தில் இமையமலையானது கடலுக்குள் இருந்ததென்று... ஆனால் ... நம் முன்னோர்கள் அதை அப்போதே எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதோ.. புலவர் குழந்தையின் தெளிவான பாடல் அதை நமக்கு உணர்த்துகிறது....

அன்று வான மளாவு பனிமலை
ஒன்று மாழியா நின்றது வாரியுட்
சென்று மூழ்கிடு தோறுமத்  தென்னிலம்
இன்று போலாங் கெழுந்ததத் தொன்மலை.

பிரித்துப் படிக்க:
அன்று, வானம் அளாவும் பனிமலை
ஒன்று ஆழியா  நின்றது வாரியுள்
சென்று மூழ்கிடும் தோறும் அத தென்னிலம்
 இன்றுபோல் ஆங்கு எழுந்தது தொன்மலை

அதாவது, வானளாவி இப்போது உயர்ந்து நிற்கும் இந்தப் பனிமலை (இமயமலை)யானது கடலோடு ஒன்றி மூழ்கிக் கிடந்ததது.
அப்போதெல்லாம் தென்பகுதி நிலமானது அடிக்கடி கடல் சீற்றத்தினால் (சுனாமி) மூழ்கப்படும்.  அப்படி தென் பகுதி தாழ்ந்திருந்ததால் அடிக்கடி மூழ்கி வடபகுதியில் இருந்த மலை
வெளியே தெரியத் தோன்றியது என்று கூறுகிறார்....

எப்படி ? ஆச்சரியமாக உள்ளதல்லவா படிக்கும்போது...?

இன்னும் படியுங்கள்... இன்னும் இன்னும் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போவோம் அப்படி ஒரு அமைவு நம் பண்டைய தமிழக வரலாற்றில் உள்ளது...

இலைப்ப ரப்பெனில் என்னவே யப்பெறு
நிலப்பரப்பு நிலநடுக் கோட்டினில்
அலைப்பரப்பி னமைந்தங் கிருந்தது
தொலைப் பரப்பெனச் சொற்றிடு மாறரோ

(பிரித்துப் படிக்க:
இலைப் பரப்பெனில் என்னவே அப்பெறு
நிலப்பரப்பு நிலநடுக் கோட்டினில்
அலைப்பரப்பி னமைந்தங் கிருந்தது
தொலைப் பரப்பெனச் சொற்றிடு மாறரோ

அதாவது, என்னைவிட பெரிய நிலப் பகுதி    இல்லை என்று சொல்லும்படி இந்த தெற்கு நிலப்பரப்பாகிய பெருங்கண்டமானது  கடல் பரப்பிற்கு நடுவில் உள்ள  நிலநடுக்கோட்டைச் சார்ந்து இருந்ததாக இப்போதைய ஆய்வுகளும் தெரியப்படுத்துகின்றன.

இதுமட்டுமல்ல.... நாம் அனைவரும் அறிந்தது , கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்பது... அதை ஆதார பூர்வமாக நிரூபிக்கிறார் பாருங்கள் புலவர் குழந்தை அவர்கள்..

நன்றொ ளிப்பிழம் பாகிய ஞாயிறு
தன்ற னிற்சுழல் தன்னிற் சிதறிய
சென்ற தான திவலையே இன்னுயிர்
ஒன்று மிவ்வுல கென்றுமே யோதுவர்

அதிக வெப்பமுடைய ஒளிப்பிழம்பாக இருந்த சூரியன் தன்னைத் தானே சுழல்வதால் அதனிலிருந்து சிதறிய சிறு துளியாகிய துண்டம் தான் உயிரினம் தோன்றி வாழும்படி நாளடைவில் உருவாகின உலகமாகும் என்று கூறுகிறார். (இதையும் இப்போதைய அறிவியல் ஆராய்ச்சி நிரூபித்துள்ளது)

அப்படிச் சிதறித் தெறித்த தீப்பிழம்பின் சிறு பொறியானது(பூமி)  தன்னைத்தானே சுழன்று கொள்வதால் குளிர்ச்சியடைந்து இறுகி, உயிரினஙள் தோன்றுவதற்குரிய சூழ்னிலையை நாளடைவில் அடைந்து விடுகிறது.

ஆடு பம்பரத் தாடுனாப் பண்விரைந்
தாடு மிவுல கன்னவா றேயுயிர்
கூடு தன்மை குயின்ற நிலநடுக்
கோடி ருந்ததா லப்பெருங் கோநிலம்

பம்பரம் ஆடிக்கொண்டிருக்கும்போது எப்படி அதனுடைய நடுப்பகுதி வேகமாகச்சுழலுமோ அது போலவே தமிழகமானது நிலநடுக்கோட்டைச் சார்ந்து இருந்ததால் உயிர் உருவாகும் முதல் நிலமாகத் தமிழகமே இருந்தது என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்.

அதனால்... அந்த முதல் நிலமாகிய தமிழகம் உயிர் உருவாகும் தகுதியுடைய புகழ் பெற்றதனால் உலகில் முதல் மக்கள் தமிழர்களாகவும் முதல் நிலம் தமிழகமாகவும் விளங்கி
எல்லாவற்றிலுமே முதன்மையானவர்கள் தமிழர்கள் என்பதை அறிவியலார் உரைப்பதாகக் கூறுகிறார் பாருங்கள் :

ஆத லான்முத லவ்வயி ந்னேயுயிர்
போத நின்ற புகழின தாதலான்
மாத மிழக மக்களே மா நிலம்
மீது போந்த முதலென விள்ளுவர்

பிரித்துப் படிக்க:
ஆதலான் முதல் அவ் வயினே உயிர்
போத நின்ற புகழ் இனம் ஆதலான்
மா தமிழக மக்களே மா நிலம்
மீது போந்த முதல் என விள்ளுவர்.  (வயினே: இடம்)

இப்படி உலகின் முதன்மை நாடு உயர்வான தமிழ் நாடே. உலகின் முதன் மக்கள் புகழ் வாய்ந்த தமிழர்களே/ உலகின் முதன் மொழி புகழ் வாய்ந்த தமிழ் மொழியே ஆகும். என்று கூறிவிட்டு.. இத்தனை தகுதிகள் இருன்தும் உலகம் இவற்றை இன்னும் சரியாக அறிந்துகொள்ளமுடியாத நிலையுள்ளதே என்றும் வருத்தப் படுகிறார்.

அதை பின்வரும் செய்யுளில் கூறுகிறார்:

உலக முன்னா டுயர்தமிழ் நாடதே
உலக முன்மக்க ளொண்டமிழ் மக்களே
உலக முன்மொழி யொண்டமி ழேயிதை
உலக மின்றறி யா நிலை யுள்ளதே

இப்படியான உலக முதற்குடிமக்கள் அதாவது பண்டைய தமிழர்கள் இந்தக்காலத்திலும் விரும்பி ஏற்றுக்கொள்ளும்படியான மிக உயர்ந்த நாகரீகத்தோடு நீங்காத வளத்தோடு வாழ்ந்து வந்தனர்.அப்படிப்பட்ட நாகரிகம் தான் பின்னர் சிந்துவெளியில் மலர்ச்சிபெற்று, பின் மேலை நாடுகளில் எல்லாம் சென்று, உலகம் முழுவதும் சிறப்புடன் மணம் வீசிப் பரவி நின்றது.

ஆங்க ரும்பிய அந்நாக ரிகமே
வீங்கு சிந்து வெளியில் மலர்ந்துபின்
ஊங்கு சென்றிவ் வுலக முழுவதும்
பாங்கு டன்மணம் வீசிப் பரந்ததே.

இந்தப் பழந்தமிழ்க் குடிமக்கள்தான் மிகத் தொண்மையான காலத்தே உலகமெங்கிலும் ஆங்காங்கே பரவி வாழ்ந்தனர். பிரது தட்ப வெப்ப நிலை மாறுபாட்டிற்கு ஏற்ப இவ்வுலகில் வெவ்வேறு மனித இனங்களும் மொழிகளும் தோன்றின.

இனி மனிதக் கருவாக உலகின் முதல் மாந்தர்களாய்த் தமிழக மக்கள் வாழ்ந்த அந்தத் தொன்மை நிலப்பகுதியின் நிலையானது கடற்கோளுக்கு முன்னர் எப்படி இருந்தது என்பதை இனி காணலாம் என தனது அழகிய செய்யுள் மூலமாகவே கூறுகிறார்

இனி திராவிட நாட்டின் இயல்பு காண தொடர்வோம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக