என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 10 மார்ச், 2011

ஒரு தேவதையின் நினைவுகள் - புத்தக விமர்சனம்



இது தெய்வநம்பிக்கை உள்ள சலனமற்ற ஒரு மனிதனின் வாழ்க்கைச் சரிதம். இச்சரிதத்தின் சிறப்புபற்றி என் எழுதுகோல் செதுக்கிய சில வார்த்தைகள்...
1957 ஆண்டு முதலான தன் வாழ்க்கையின் அழகிய அனுபவங்களையும் ஆங்காங்கே அழவைத்த அனுபவங்களையும் மிக நேர்த்தியாகக் கோர்த்துவைத்து காதல் அன்பு> உறவுகள்> உறவின் பெருமைகள்> வாழ்க்கை> லட்சியம்> லட்சியம் அடையத் தேவையானது முயற்சி>; இவை எல்லாம் கைகூடவேண்டுமெனில் தேவை "ஆண்டவனின் அருள்” என வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் மிக ஆழமாகப் பதியவைத்துள்ளார் ஆசிரியர்.
தெய்வம் பிழை செய்யுமா?  செய்யாது என்பதற்கு இப்புத்தகம் ஒரு சாட்சி
இது ஒரு பூரண வாழ்க்கையின் புளகம் (மயிர்ச் சிலிர்ப்பு)
தங்கம்மாள்: இந்நூலாசிரியர் கிருஷ்ணமூர்த்தியுடன் வாழ்க்கையில் ‘சேர’ வேண்டுமென்பதற்காகவே ‘சேர’ நாட்டில் பிறந்தவர்.
 எல்லாம் அவனுக்குத் தெரியும்; அவன் பார்த்துக் கொள்வான் என்று தெய்வத்தின்மேல் திடநம்பிக்கை உள்ள தங்கம்மாளை ஒரு தெய்வசந்நிதியில் இவர் பார்த்துவிடுகிறார். அவரும் ஆசிரியரைப் பார்க்க;> “திட சித்தம் கொண்ட எனக்கு ஏன் இந்தத் திடீர் பாதிப்பு? என்று தன் மனத்தில் தோன்றிய தெய்வீக எண்ண அலைகளை உணர்கிறார். இருவர் கண்களும் மனமும் பேசியதை எனை ஆளும் அய்யப்பன் பார்த்துவிட்டான்> கேட்டுவிட்டான்;  இனி அவன் காட்டும் வழி" என்று நம்பிக்கை வைத்த இவர்களை குடும்பப் பெரியவர்கள் மனசம்மதத்துடனும் ஆசியுடனும் மணக்கோலத்தில் ஆண்டவன் இணைத்துவிட்டான்.  (மனசுக்குப் பிடிச்ச நல்ல பெண்ணைக் கட்டிகிட்டு சுகமா இருக்கணுங்க. "கடவுள் பாத்துப்பாரு" முன்பின் அறிந்திராத ஒரு தாயின் வார்த்தைகள் பலித்ததை உணர்கிறார் ஆசிரியர்).
அப்பப்பா… இந்த அப்பா எத்தனை அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்.. ஊரிலிருந்து அப்பா ஏகப்பட்ட பொருட்களுடன் ரிக்க்ஷவிலிருந்து வந்து இறங்குகிறார்.. மருவத்தூரிலிருந்து மாங்குடி பின் திருவாரூர் அதற்கடுத்துக் கோடம்பாக்கம் வந்து ரிக்க்ஷாவில் வீடு சேறும்வரை அவர் என்ன பாடுபட்டிருப்பார் என்பதை எழுதுகிறார் "குழந்தைகளுக்கு எல்லாம் தரவேண்டும் எனும் எண்ணத்தில் மனோபலம் ஏற்பட்டுவிடுமோ?” படிக்கும் போது நம்மைச் சிறுவயதிற்கு கொண்டுசென்று நம் தாத்தா> பாட்டி> அத்தை> மாமா இவர்களெல்லாம் திண்பண்டங்களோடு நம் வீட்டில் வந்து இறங்கியதை நியாபகப்படுத்துகிறார்.  பலகாரங்களுடன் அப்பா கொண்டுவந்த சேதிகேட்டு உளம் எய்திய பூரிப்பை வெளிக்காட்டாமல் "சாயந்திரம் பேசறோம் ..." என்ற வார்த்தையை  ஏற்று வழக்கம் போல் அலுவலகம் செல்லும்போது... காதல் வயப்பட்ட இளைஞர்கள் பெறும் தவிப்பையும் அதே நேரத்தில் வீட்டுப் பெரியவர்களுக்குத் தரவேண்டிய மரியாதையையும் உணர்த்துகிறார்.
இவர் எழுத்து ஒவ்வொன்றும் கண்முன்னே காட்சியாக விரிகிறது. 200 ஆண்டுகள் பழமையான மருவத்தூர் வீடு> அந்தக் கிராமம்> அங்கிருந்த குடிசைகள்> கோவில்கள்> தாமரைக்குளம்> பாண்டவை ஆறு> ராஜன் வாய்க்கால்..... இதெல்லாம் எப்படி இருக்குமென்று என்னால் சொல்ல முடியும்.
மாரியம்மன் கோவிலில் அக்கினிச் சட்டியை ஏந்திய நாகம்மா தன் அன்னையருக்குச் சொன்ன அருள் வாக்கு "குஞ்சையும் குஞ்சுகளோட குஞ்சுகளையும் காப்பாற்றுவேன். குறை வராது. இது சத்தியம்." இதைஎல்லாம் என்னால் கற்பனையில் காண முடிகிறது. இவற்றுடன் என்னால் ஒன்றமுடிகிறது.
சில வேறுபட்ட அபிப்ராயங்கள் சாதகமாக மாறி தங்கம்மாளை மணமுடித்த அன்று திருமணச்சடங்குகள் அத்தைனையும் தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளும்படி  வர்ணித்துக் கண்முன்னே நிழலாட வைக்கிறார். எல்லாச் சடங்குகளையும் ஓடி ஓடி செய்த தங்கம்மாவை அம்மி மிதிக்கும்போது சாய்ந்தால் தாங்கிப் பிடிக்கலாமே...என அவர் எண்ணியதைப் படிக்கும்போது நம் முகத்தில் தோன்றும் புன்னகை  முழுமையடைவதற்குள் திடீரென்று இதயத்தில் ஓர் வேதனைக்கீறல் விழச்செய்கிறார் " பிரதக்க்ஷினங்கள் வேகமாய்ச் சென்று முடித்தாள்.; உன்னைவிட எல்லாவற்றிலும் நான் முதல் என்று முன்னறிவிப்பு தந்தாளோ?"  என எழுதி.
தெய்வ அருள் நிரம்பிய ஒரு மனைவி கிடைப்பது பலஜென்மப் புண்ணியம். அதுபோலவே தெய்வ சிந்தனையுள்ள கணவனைப் பெறுவதும். புத்தகம் முழுதும் படித்தால் புரியும்.... இந்த ஆசிரியர் எத்தனை பாக்கியசாலி என்பதும் இவரை வாழ்க்கைத்துணைவராகப் பெறும் பேறு கிட்ட தங்கம்மாள் செய்த தவம் என்னவோ என்றும் சிலிர்க்கும் அளவுக்கு இவர்கள் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமானது. "தெய்வ மனம் தெய்வ மணம்" சூழத் தொடங்கிய திருமண வாழ்க்கையில்...சந்தோஷம் கஷ்டம் மாறிமாறி வந்ததைத் தெளிவாகக தெரிவிக்கிறார். 
தாம்பத்திய சாட்சியாக முதல்முதலில் ஓர் புன்னகைப்பூ இப்பூவுலகில் பிறந்தபோது ஏற்பட்ட மகிழ்சியை  மூன்று குட்டிகளுடன் வந்த தாய்ப்பூனை அறிவித்ததாக எண்ணுகிறார். தகப்பனாரின் தாய் பெயரைச் சூட்டி "பாட்டி பேத்தியாகிறாள்" என்கிறார். குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து ரசித்து மெய்சிலிர்ப்போம் பெற்றவர்கள். அப்படியே எழுதுகிறார்.
"பாட்டுபாடி உறக்காம் ஞான் தாமரப்பூம் பைதலே
கேட்டு கேட்டு நீயுரங்கென் கரளிண்டே காதலே...
ராஜாவாய்த் தீரும்நீ  ஒரு காலம் ஓமனே
மறக்காதே அந்நூ தன்ந்தாசன் சீராமனே... "
என்ற மலையாளத் தாலா(ரா)ட்டை மனைவி பாடுவது கேட்டு மெய்சிலிர்க்கிறார். பெற்றவர்களின் பாசத்தை விளக்கியபடியே பச்சிளங்குழந்தை பெற்றவர்கள்மேல் வைத்திருக்கும் பாசத்தை அப்பாவீட்டில் இல்லாத சமயம் அப்பாவின் துணிகளைக் கீழே தள்ளி அதன்மேல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையக் காட்டித் தெரிவிக்கிறார். அவள் வளர்ந்து பெரியவளாகி ஒரு குழந்தைக்குத் தாயாகும்போது இதே நிகழ்சியை நினைத்து நெகிழ்கிறார்
எங்கும் அய்யப்பனின் பிரசன்னம் இருப்பதாக உணர்கிறார். கேரளாவைக் கண்முண்ணே கொண்டுவருகிறார்... கேரள ஆலயங்களில் உபதேவதைகளின் தரிசனம்> அரவணைப் பாயாசம் முதல் அங்கொலிக்கும் செண்டையும் வாத்தியஒலிகளுடன் ஆலயமணியோசையையும் நம் செவிக்குள் அனுப்புவதோடு நம்பூதிரிகள் கொடுக்கும் தீர்த்தமும் சந்தனமும் பெற்று நெற்றியில் இடும்போது மணம்கமழும் சந்தனத்தின் வாசம் நாசி சுகர> சில்லென்ற குளுமை ஒருகணம் நம் உடலெங்கும் வியாபிப்பதை உணரவைக்கிறார்.  சாயா குடித்துக் கதகளி பார்க்க வைக்கிறார். சபரிமலைக்குச் செல்லுமுன் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை விளக்குகிறார். பூஜை செய்யும் முறையும் நெய் நிறைக்கத் தேர்ந்தெடுக்கும் தேங்காய் முதல் இருமுடிக்கு உபயோகிக்கும் துணிக்குள் வைக்கவேண்டிய பொருட்களையும் அதன் முறைகளையும் பக்கத்தில் அமர்த்திவைத்துக் கூறுவது போலுள்ளது. 
“சரணவிளி மட்டும் போதும் சர்வமும் பலிக்கும்" என்கிறார். அய்யப்பன் கோவிலுக்கு நான் இதுவரை சென்றதில்லை. ஆனால் இப்புத்தகம் படித்தபின் அங்கு நான் செல்லவில்லை என்ற குறை சொல்லமுடியாதபடி என் கைபிடித்து  அழைத்துச் சென்றதாக உணர்கிறேன். கடுத்துருத்தி> வைக்கம்> எட்டுமானூர் அம்பலங்களில் அருள்கின்ற சிவபெருமானைத் தரிசித்து கோட்டயம் வழியாக எருமேலி  சென்று வில்லும் சரமும் ஏந்தி அய்யப்பன் பாட்லைப் பாடிக்கொண்டே நடந்து நடந்து அழுதா நதியில் முங்கிக்குளித்து கஞ்சியும் சம்மந்திப்பொடியும் உண்டு>  அடுத்தநாள் பம்பா நதியில் குளித்து கணபதி பூஜை செய்து இன்னும் முன்னேறி முன்னேறி கொண்டுவந்த அம்புகளைச் சரம்குத்தியில் போட்டு சபரியை வணங்கி கன்னிமூல கணபதியைத் தொழுது அய்யனின் சந்நிதிக்குள் நுழைந்து சின்முத்திரையில் அமர்ந்திருக்கும் அய்யப்பனை நான் காண அவன் என்னையும் ஆசீர்வதித்ததாய் உணரும் பேறுபெறுகிறேன் இதைப் படிக்கும்போது. அப்படியே கொண்டுபோய் பொன்னம்பல மலையின் சிகரத்தில் தோன்றும் மகரஜோதி காணவைக்கிறார். (குவைத் நாட்டிற்கு முதல்முதல் வரும்போது எண்ணைக் கிணறுகளிலிருந்து  வீணாகும் எரிவாயு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கும் அந்தத் தீபஒளியையும் மகரஜோதியாகவே கண்டிருக்கிறார்) என்னே ஒரு பக்தி! இதனால் தான்  இவரின் பக்தியில் பிரமித்துப்போன அய்யப்பன் கான்பூரில் இவர் கர்த்தாவாயிருந்து தன்னைப் பிரதிஷ்டை செய்யவேண்டுமென பிரியப்பட்டானோ?. இவர் கழுத்து மாலையால் தன் கழுத்தை அலங்கரித்துக்கொண்டானோ?
உன்னிக்கிருஷ்ணனை> உடுப்பிக் கிருஷ்ணனை> காசி விஸ்வநாதனை (சித்தம்மையோடு சென்றது)> பூரி ஜகந்நாதனை  காணச் சென்றதை... ஹனுமன் சாலீஸா முதல் ஹரிவராசனத்தில் லயித்ததை படிக்கும்போதும். பூரிஜெகந்நாதர் கோவிலில் ஒரு சிறுவன் வலுக்கட்டாயமாகக் கொடுத்த லஷ்மி டாலரையும்> பங்களூர் ஹனுமான் கோவிலில்  யாரோ கொடுத்த அனுமன் டாலரயும்> தன்குழந்தை விளையாட்டாய்க் கொடுத்த கூழாங்கற்களை அவள் கூறியபடியே திரிசுவந்தன் ஸ்வாமியாகவும் அம்மனாகவும் நினைத்து  இன்னும் பூஜை அறையில் வைத்து பூஜித்து வருவதையும்>  கன்னடத்துக்காரன் குறிசொன்னதை அருள் வாக்காக ஏற்றதையும்> கண்டு வியப்பில் விரிகிறது எனது விழிகள்.
குழந்தை ராஜேஸ்வரியைச் சில மணித்துளிகள் காணாமல் தவித்த தவிப்பையும்> கிடைத்த பின் குழந்தை சிரித்த சிரிப்பில் அத்தனை தவிப்பையும் மறந்ததையும்> வீட்டுத் தோட்டக் காரனுக்கு ஹேமாமாலினியாகி குழந்தை தீபா ஆடிய ஆட்டத்தையும்>. குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து தாய் ஆங்கிலத் தேர்ச்சி பெற்றதையும்>  தம்மக்கள் விரும்பிய துணையுடன் தம்வாழ்க்கையை வாழவேண்டுமென்று ஜாதகம் என்ற ஒன்று பார்க்கவே கூடாதென எடுத்தமுடிவையும்> மகன் படித்து பட்டம் பெற்றபோது தான் மட்டும் சென்று கண்டோமே> பெற்றவளை அழைத்துச் செல்லாமல் பிழை செய்துவிட்டேனே என மருகியதையும்> ஒரு அன்புமிக்க  தந்தையாக கூறிக்கொண்டே வந்து.. தான் கொண்ட நீரை இளநீராகத் தரும் தென்னை மரங்களோ என்பிள்ளைகள்? – என  பெருமிதம் பொங்க இவர் எழுதுவதைப் படிக்கும்போது நம்  கண்ணிலிருந்து விழும்நீரை மறைக்கமுடிகிறதா? இப்படிப்பட்ட பிள்ளைகள் பெறும் வரம் வேண்டுமே என ஒவ்வொருவரையும் நினைக்க வைக்கிறாரே.
புத்தகம் முழுவதும் அன்பு… அன்பு… அன்பு;… தெய்வ நம்பிக்கை.. தெய்வ அருள் தெய்வீக மணம்.... வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை அறிவுரைகளையும் தன் அனுபவத்தைச் சொல்வதன் மூலமே நமக்கு உணர்த்துகிறார்.
எடுத்துக்காட்டாக இங்கு சில:
மாறுதல்களைத் தவிர்க்கக் கூடாது. ஏற்று அவை முன்னேற நல்லதோர் வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும்
ஒரு பிடித்தம் ஏற்பட்டுவிட்டால் பரிச்சயம் இல்லாத காரியங்களும் சுலபமாகும்
உழைப்பும் ஊதியமும் ஒன்றுக்கொன்று ராகமும் தாளமும் போல அவை முரண்பாடுகள் கொண்டவை அல்ல.
கண்களால் பல பொருட்களைப் பார்க்கிறோம் அவை கண்களுக்கு மட்டுமல்ல அவை நமக்கும் சொந்தமில்லை.
வெற்றி ஒரு அனுபவ மகிழ்ச்சி மகிழ்ச்சி ஒரு அனுபவ உணர்ச்சி. அந்த மகிழ்ச்சி நிலையானது இல்லையென்றாலும் மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை ஒரு பாரமாக இருக்கும்"
சுவர் இன்றி சித்திரம் இல்லை. அதற்குச் சுவர் சுத்தமாக இருக்க வேண்டும். என இன்னும் எத்தனை எத்தனையோ...
பஞ்சாப் கும்டியில் குல்பி சாப்பிட்டதும்> ஆச்சார் வீட்டு வாங்கி பாத்தின் சுவையை (கத்தரிக்காய்ச் சாதம்)  நினைவு கூர்ந்தும்> குவைத்தில் புரோகிதராக மாறி திருமணங்கள் நடத்திவைத்ததும்> குவைத் போர் நடந்தபோது பதற்றத்துடன் கழித்த நாட்களும்> வீட்டு வேலைக்காரப் பெண்ணை பத்திரமாக இலங்கைக்கு அனுப்பிவைத்தும்>  தன்மனைவி தங்கம்மாள் தன்கையிலிருந்து கழற்றிய தங்கவளையளை அப்பெண்ணுக்குக் கொடுத்து “ஊருக்குச் சென்று விற்று காசாக்கிக் கொள்” என்று கூறியதையும்> அம்மான் விமானதளத்தில் பட்ட பாடும்>  இந்தியா சென்றபின் மீண்டும் குவைத் வரும் வரை வாழ்ந்த வாழ்க்கையையும்> குழந்தையுடன் செல்லும்போது மட்டுமே ரிக்க்ஷா தனியாகச் செல்லும்போது நடை என்ற நிலையில்.  உடல் குறைகிறது தேகம் லகுவாகிறது. நடக்க நல்ல சுகம்.. என்கிறாரே  இதுதான் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனோபாவமோ?
போர்க்காலத்தில் விட்டுச்சென்ற வீட்டிற்குத் திரும்பி வருகிறார்கள். பாத்திரங்கள்> துணிமணிகள்> கட்டில்> மெத்தை பத்திரமாக இருக்கிறது என்று படித்துகொண்டு வரும்போது.... அந்த ஸ்வாமி படங்கள் என்னாயிற்றோ என்று என்மனம் வேகமாக என்னைக் கேட்டுகொண்டிருக்க அடுத்த வரியில் சொல்கிறார்..... அவசரமாகவும் முக்கியமாகவும் பார்வையிட்டது அலமாரியைத்தான். அலமாரி அப்படியே இருந்தது" சளக்கென்று ஒருதுளி கண்ணிலிருந்து விழுந்ததை தடுக்க முடியவில்லை.
அம்மா உங்களை சாப்பிட கூப்பிடறா உடனே வாங்கோ" இதயம் தொட்ட குரல்> நீங்க பூஜை செய்ய மாட்டேளா?- முதலிரவில் விழிபார்த்துப் பேசிய குரலும் ஈருடல் ஈரூயிர் ஈருளமாயிருந்த இவர்கள் ஓருடல் ஓருயிர் ஓருளமான தருணம் முதல் ஆசிரியரின் தேவதை அவரின்  ஒவ்வொரு வளர்ச்சியிலும் முன்னிருந்து முன்னேற்றியதை> பாகவதராய் ஆகவேண்டும்  காலாக்ஷேபம் செய்பவராய் ஆகவேண்டுமென நினைத்தவரை படியுங்கள்... படியுங்கள் என உற்சாகப் படுத்தி பாராட்டி>  தொடர்ந்து படிக்க வைத்து> அடுத்தடுத்து பதவி உயர்வு பெற வைக்கிறார். எல்லாம் அவனால் முடியும்நீங்க கவலைப்படாதேய்ங்கோ என எப்போதும் கூறி பக்க பலமாய்> ஆத்ம பலமாய்> தீர்க்க தரிசியாய்> தெய்வ நம்பிக்கை கொண்ட ஒரு மகத்தான துணையாய் இருந்ததும்> அக்கம் பக்கத்து வீடுகளா> அடுத்தவர்களா> தெரிந்தவரோ தெரியாதவரோ அனைவருக்கும்  அன்புச் சகோதரியாய் அன்புத் தாயாய் அனைவருக்கும் வேண்டியது செய்கிறார்.
இந்தத் தாய் நோய்வாய்ப்படுகிறார்.மனத்தைக் கட்டுப்படுத்துவதால்> மனோ பலத்தால் சரீரத்தை நாம் கட்டுப்படுத்த முடியும்.  மனம்தான் பிரதான்யம் சரீரம் இரண்டாம் பட்சம்தான் என இத்தனை காலம் எண்ணியிருந்த ஆசிரியர் ன் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுவதை உணர்கிறார்...
67 ஆம் அத்தியாயத்திலிருந்து 69 ஆம் அத்தியாயம் வரையான 35 பக்கங்களிலுள்ள ஒவ்வோர் எழுத்தும்
கனம் மிக்கவை. கநம்  நிறைந்தவை. கணம் பொருந்தியவை. படித்துப் பாருங்கள் கனம் உணர்வீர்கள். கநம் புரிவீர்கள்.. கணம் தெரிவீர்கள்.
கீற்றுக் கொட்டகையும் கயிற்றுக் கட்டிலும் என்னாயிற்றோ என்று இன்னும் நினைத்துக்கொண்டிருக்கும் அவர்  இதயத்தில் தங்கம்மாள் என்ற தோழி> துணைவி> தெய்வம்> அந்தத் தேவதை புன்னகையோடு அங்கு நடமாடிக் கொண்டிருப்பதைபதையும்> சரணவிளி கேட்டால் தனைமறக்கும் ஆசிரியர் "ராஜு அப்பா…" என்ற விளி ஒருமுறையேனும் கேட்காதா என ஏங்கிக்கொண்டிருக்கும் ஆசிரியரின் தவிப்பையும் துடிப்பையும் உணர்வீர்கள்.
ஆசிரியருக்குமுன் அவரின் தேவதை தங்கம்மாளின் ஆத்மா இப்பூதவுடல் பிரிந்தது தர்மம். இதில் எனக்கு சந்தோஷம். தங்கம்மாள் எதைச்செய்தாலும் சரியாகத்தான் செய்வார்கள் என ஆசிரியர்  ஒவ்வோர் மூச்சிலும் சொல்கிறார். தன் துணைவிக்கு முன் இவர் பிரியும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தால் இவர்கள் வாழ்ந்த அற்புத வாழ்க்கையை இவ்வுலகு அறியாமலே போயிருந்திருக்கும். ஒரு சிறந்த புத்தகம் நமக்குக் கிடைக்காமலே போயிருந்திருக்கும். ஒரு சிறந்த எழுத்தாளரை இவ்வுலகம் காணாமலே போயிருந்திருக்கும்.  தங்கம்மாள் இதையும் சரியாகவே செய்தார்ர்கள்.

இவ்வுலகில் நிலையானது எதுவுமில்லை. எதுவும் நிரந்தரமல்ல எதுவும் தொடர்வதுமல்ல.


                                                                                      
- லதாராணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக