என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

சனி, 19 மார்ச், 2011

யாருக்கு என் ஓட்டு?

ஐந்துவருடம் ஆகிறது ஆட்சிமாறும் நேரமிது
அடுத்தவரைத் தேர்ந்தெடுக்க நாமும்கூடும் நேரமிது
யாருக்கெந்தன் ஓட்டென்று நாள்முழுதும் சிந்தித்தும்
இதுவரையில் ஏற்பட்ட குழப்பமின்னும் தீரவில்லை.

இலவசப் பொருட்களெல்லாம் இந்நாட்டு மக்களுக்காம்
இருக்கும் பதவியெல்லாம் இவர்குடும்ப வாரிசுக்காம்
பொறுப்பாகப் பகிர்ந்தளித்துப் பரிகாசம் செய்கின்ற
நடமாடா நாத்திகரை(?) எப்படித்தான் நம்புவதோ?

செல்வியாக இருப்பதனால்  இரட்டையிலை மேன்மையா?
வாரிசு இல்லையென்றால் வளர்ப்புமகன் முளைப்பானே!
இவர்செய்த முன்வினைகள் எம்தமிழன் மறப்பானா
இரட்டையிலை நாடகத்தை இனிமேலும் நம்புவானா?

இன்தமிழர் உயிர்குடித்து வெறியாட்டம் ஆடிநிற்க
இலங்கைக்குத் துணையாக இரைதேடும் நரியான
இரக்கமில்லா இத்தாலிய இறக்குமதி  பெண்மணியை
இருக்கையிலே அமர்த்திவிட இனமானம் ஒப்புமா?

முதிர்வயது தலைமகனும் மூழ்கியதால் புகழ்பொதியில்
துதிபாடும் தூரிகைகள் தினந்தோறும் திரள்கிறது
எதிர்காலம் என்னவென்று எம்தமிழர் விழிக்கையிலே
பதிபோட்டு தன்மகனைப் பதியவைக்க முயல்ககின்றார்.

அதிகாரப் பெண்மணியோ ஆணவத்தின் குளத்தினிலே
மதியில்லாக் கூட்டோடு மெய்மறந்து நீந்துவதால்
விதியென்ன எழுதியதோ தமிழ்நாட்டின் தலையிலென்று
"மதி"முக தலைவரும் மறுத்துவிட்டு சென்றுவிட்டார்

சூரியக் கதிருமோர் வடவரின் கைவசத்தில்
ஆரிய  அணங்குமோர் "மட"ந்தையின் கையசைப்பில்
சீரிய கொள்கைகள் சிந்தையிலே கொள்ளாமல்
கூரிய சூழ்ச்சியால் குலம்வளர்க்கக் கூடுகின்றார்

தரமான தலைமையினை தருவதற்கு எண்ணாமல்
நிரந்தரமாய் தம்கையில் நாடுகொள்ளும் எண்ணமோடு
வரவொன்றே குறியென்று வரம்பின்றி செல்வதினால்
விரல்நீட்டேன் நாற்பத் தொன்பதுண்டு ஆதலினால்.

                                          -          லதாராணி, குவைத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக