நீலவானம் பூநிலத்தில் நீருதிர்க்கப் போவதைக்
கோலமயில் உள்ளுணர்ந்து கார்மேகம் நோக்கியே
நாலுதிசை தான்மறந்து நற்றோகைப் பூவிரித்து
கானகத்தில் ஆடுவதைக் காண்.
ஆடிமகிழ்ந் தங்குமிங்கும் ஆனந்தம் கொண்டுமிக
ஓடிவிரித் தாங்குகளித் தோடியஅத் தோகைக்கே
ஈடில்லா ஓர்துயரம் ஈந்திடத்தான் வீரமுடன்
தேடிவந்தான் மன்னவன்பே கன்.
கொள்ளை அழகுகொண்ட கோலமயில் ஆடுவதை
உள்ளம் பதைபதைக்கப் பார்த்தானம் மாமன்னன்
துள்ளும் மயிலதனைத் தோம்கூதை வாட்டுதென்றே
வள்ளல் வருத்தினனே வந்து.
வேகியாங்கு சென்றேயோர் போர்வை யுடனெடுத்து
மூடிவிட்டான் தோகையை யம்மூடன் தன்செயலை
ஓராம லேமுடித்தான் நன்நடனம் அம்முட்டாள்
ஓவிதுகொ டைமடம் ஆம்.
மழைவரும்கு றிப்பறிந்தே ஆடுமிது வென்றே
அறியாத மூடனவன் எப்படிநா டாண்டான்?
அழகுமயில் ஆட்டத்தில் ஆர்வமற்ற முட்டாள்
தழைத்தகுடி காத்ததெங்கன் கூறு?
ஆடும்தோ கைமூடி ஆட்டம் நிறுத்தியோனை
சூடுமுடி கொண்டவனென் றானதினால்; உள்ளபடி
மூடனென்று கூறாது மாறாக வள்ளலென்று
ஓதியவம் மாமடையன் யார்?
(தோம் – துன்பம், கூதை – குளிர்)
“சொப்ன பாரதி" லதாராணி
குவைத்
“சொப்ன பாரதி" லதாராணி
குவைத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக