என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

புதன், 20 ஏப்ரல், 2011

பிழை

தென்னங்கீற்று என்னை
சுகமாகத் தீண்டவில்லை
சின்னக் குயிலோசை என்
செவிநாளம் வருடவில்லை

காகம் கழுதை என்
கண்ணில் பட்டதில்லை
கற்பூரம் கொளுத்தி வைக்க ஒரு
கோவிலும் இங்கு இல்லை

துள்ளும் மீனினங்கள்
தடாகத்தில் கண்டதுவும்
தாவும் வானரங்கள்
ஆரணத்தில் அலைந்ததுவும்

பார்த்த நியாபகங்கள்
பத்திரமாய் வைத்துள்ளேன்

தெருவோர சண்டைகளும்
திருவிழா கூச்சல்களும்
தெருக்கூத்து வசனமும்
தெம்மாங்கு பாடல்களும்

தொலைந்து போனதுபோல
தொடர்ந்து வரும் ஏக்கங்கள்
வருமானம் தேடி நான்
வளைகுடா வந்த பின்

சுகமான புல்வெளியில்
பதியாத தடங்களாய்

வெளிநாட்டு நாட்களெல்லாம்
என் வாழ்க்கை வங்கியில்
செலவாகிப் போகிறது
சொச்சமின்றி அழிகிறது

பொடியான பாலும்
பதம் செய்த பழங்களும்
என்றோ உயிர் விட்டு
இன்று வறுத்த கோழியும்

புரியாத வாழ்க்கை தான்
தெரியாத தேடல் தான்

வியர்வை அத்தனையும்
வங்கியில் கனக்கிறது
வேதனை மட்டுமென்
நெஞ்சினில் நிலைக்கிறது

ஈட்டுகின்ற பொருள்களெல்லாம்
என்ன செய்வேன் தெரியவில்லை
சேர்த்து வைக்கும் சொத்தெல்லாம்
செலவு செய்ய வழியுமில்லை

அதிகபட்சம் ஐந்தாயிரம்
அம்மாவுக்கு அனுப்புகிறேன்
அவள் வாழுகின்ற முதியோர் இல்லம்
அதற்கு மேல் கேட்பதில்லை

அர்த்தமில்லா வாழ்க்கையின்
அடித்தளத்தில் நின்று கொண்டு
என் நிலையில் இங்குள்ள
எல்லோரையும் கேட்கின்றேன்

பிழைப்புத் தேடி நாம்
பிழை செய்து விட்டோமா?
பச்சைப் பசுமரங்கள் என்
பார்வையில் படவில்லை
பழங்கதைகள் நான் பேச
ஆட்களும் யாருமில்லை

1 கருத்து:

  1. ஈட்டுகின்ற பொருள்களெல்லாம்
    என்ன செய்வேன் தெரியவில்லை
    சேர்த்து வைக்கும் சொத்தெல்லாம்
    செலவு செய்ய வழியுமில்லை

    உங்கள் கவலையை போக்க நான் இருக்கிறேன்.எனக்கு அனுப்பி வைச்சுருங்க.

    பதிலளிநீக்கு