என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 21 ஏப்ரல், 2011

எண்ணச் சிலம்பின் பரல்கள் -

எண்ணச் சிலம்பின் பரல்கள் எழுப்பிய ஓசையின் எதிரொலி
-          லதாராணி
புகும் முன் நான் புரிந்தது..... தங்கள் எண்ணக்குழந்தையை ஏடுகளில் அலங்கரிக்கும் பூக்களில் வீசுகிறது உள்ளிலுள்ள பாக்களின்  நறுமணம் - பரல்களில் ஒலிப்பதோ அப்பாக்களின் ஓசை நயம் - பனைஓலை பறைசாற்றுவதோ  சமுதாய சீர்கேடுகளைச் சாடும் சாடல் ஏற்படுத்தப்போகும் சலசலப்பை...
அதுசரி, அட்டைப்படமே சொல்லிவிட்டதே எல்லாவற்றையும்... இனியேதும் நான் சொல்லவேண்டுமா என்ன?  இருந்தாலும் ஏதும் சொல்லாமல் இருக்க முடியுமா என்னால்?
புகுந்தபின் நான் அறிந்தது.......
எழுத்தறிவித்த இறைவர்க்கு அர்ப்பணமாக்கி- அருமை மக்களின் திருமணத்திற்கு அன்பளிப்பாக்கி- தமிழ் கூறு நல்லுலகத்தின் கைகளில் தவழவிட்ட தங்கள் செல்லக் குழந்தைக்கு முதலில் தங்கை எந்தன் அன்பு முத்தங்கள் ஆரத்தழுவல்களுடன்.
நான் நுகர்ந்த நறுமணங்கள்:
தங்கள் எண்ணப் பரல்களை ஏழு வண்ணங்களாக்கி விரிந்துகிடக்கும் இப்பரந்த வெளியில் நிரல்படுத்தி நிலைப்படுத்திய தங்கள் எண்ணங்களினூடே பயணிக்கிறேன்...
சற்றேனும் சரிவற்ற சரித்திரத்தின் சாட்சியமே...
எம்மழையும் தாராத ஈரமிகு தீம்புனலே....
செம்மொழியே உனக்கென்றன் சிரம் தாழ்ந்த நல்வணக்கம் என  உமைப்பெற்ற நற்றமிழன்னைக்கு வணக்கம் செலுத்த நீர் சிரம்தாழ்த்தி அவளை எல்லோரும் சிரம் உயர்த்தி நோக்கச் செய்துவிட்டீர்.
அவளின் ஒவ்வோர் எழுத்தும் உம் உளமெங்கும் ஊடுருவி ஊனுக்குள் உயிராகி யதை
பரிவுமிகு தாயன்பே! பரவுபுகழ்ச் சொல்லழகே!
பைந்தமிழே! வழக்கம்போல் வணக்கம் நின் ஒள்ளடிக்கே! - என தாங்கள் மீண்டும் மீண்டும் வணங்கும்போது தமிழன்னை தங்களை அள்ளி அணைத்து உச்சிமுகர்வதை உணர்கிறேன்..
தமிழ்மகளின் தலைமகனாம் வள்ளுவன் குர(லை)ளை...
"நற்றமிழ் இனத்தின் நலஞ்சார் வாழ்க்கை நெறியை
ஞாலத்தின் ஏனைய இனங்கட்கெல்லாம்
ஞாபகமூட்டி வருகின்ற நாட்காட்டி" என அந்த
"ஒப்பிலாப் புலவனின் தப்பிலாச் செப்பலோசை" 
"ஒவ்வொரு தமிழனும் பூணவேண்டிய பொற்கவசம்!"
என தாங்கள் அடித்துக் கூறுவதைக் கேட்பின் கன்னியா குமரியிலிருந்து நாகர்கோவிலுக்கு நடந்தே வந்து நீர் பூண்ட கவசம் கண்டு தான் பூரிப்படைவானே அத்தமிழ்ப் புலவன்.
அடுத்து அவ்வைப்பாட்டிக்குப் போட்டியாய் ஓர் ஆத்திச்சூடியையும் அனுப்பிவைத்த நீர் –
அறிந்ததை அப்படியே அச்சிலேற்றினால் அதுபோதுமென அறியாது பிதற்றியிருந்த எனக்கு "யாப்பு அறிமின்! என்று அறிவுநல்கிய நல்லாசானாய் நிற்கின்றீர். இது நான்கு வருடங்களுக்குமுன் எனக்கென தாங்கள் எழுதியிருந்தாலும் நற்றமிழ் உலகின் நல்ல தலைமுறை  அத்தனை பேருக்கும் தேவையான அறிவுரையன்றோ?
காப்பியம் படைப்போர்க்கெல்லாம் காப்பரண் யாப்பே என்னும்
ஏற்புரை உண்மையாயின், இலக்கணச் செறிவின் மாண்பை
நூற்பெருங் கவிஞர் கூட்டம் நோன்பிருந்தேனும் எய்தல் 
பாப்புகழ் தமிழோர் போற்றும் பழுதிலாக் கடமை யம்மா!
தன்னலம் காக்க கடவுள் பெயர் சொல்லி நோன்பிருக்கும் தமிழ்க்குலத்திற்கு தமிழ்நலன் காக்க நோன்பிருக்கச்சொல்லுவது  தமிழ்மீது தாங்கள் கொண்ட காதலையும் தமிழுக்குத் தாங்கள் ஆற்றும் கடமையையும் தெளிவிக்கிறது. 
கவிஞர்கள் வெண்பா யாக்கக் கற்றில ராயின், இந்தப்
புவிமிசைத் தமிழை காக்கும் புலவர்கட்(கு) எங்கே போவீர்?
அய்யோ  யாப்பறியாமலே  கவிதைகள் என்ற பெயரில் எம்குலமக்கள் தமிழைக் களையிழக்கச் செய்துவிடுவார்களோ? என தாங்கள் ஆதங்கப்பட்டு வெளிப்படுத்தும் வேதனையோ இவ்வரிகள்?
நவின்றிடு கவிதை சொல்லின் நாணயம் காக்கும் யாப்பைத்
தவிர்த்திடும் பிழைமேற் கொள்ளல் தமிழிடம் வேண்டாம் அம்மா....
- எனத் தாங்கள் கூறி இலக்கணத்தின் அவசியத்தையுணர்த்தி, நீ யாப்பதைக் காப்பது யாப்பதுவொன்றே எனக் கூறி  இலக்கணத்தின் துணையின்றி இலக்கியம் படைக்கமுடியாதென உணர்த்தியபின் தானே பயில ஆரம்பித்து....
"பழம்புலவன் வள்ளுவனின் பல்பதிந்த மார்பே
கிழப்பாட்டி அவ்வைவாய் தின்று துய்த்த பாக்கே...என என்னால் எழுத முடிந்தது?
யாப்பின் மேண்மையுணர்த்தி யாப்பயிலத் தூண்டிய உமக்கு நன்றிசொல்ல ஓர் வார்த்தை நல்லாசானே நீரே எமக்கு அனுப்பி வைப்பீர்!
அடுத்து ,
தமிழ்க்காமுகன்  நீரென்று தமிழுலகம் உமையறியும். தமிழின் கரம் பழக்கிவிடத் தாங்கள் புனைந்த பா தனியழகு! 
குழலிலும் யாழிலும் ழகரங்கள்
கொஞ்சிடும் இசையைக் கொடுக்குது பார்!
உழவிலும் மழையிலும் ழகரம்தான்
ஓசையின் அழகை விதைக்குது பார்!

வாழையும் பழமும் ழகரத்தால்
வழங்கும் சுவைதனை யார் மறுப்பார்?
தாழையின் பெயரில் ழகர ஒலி         
தரித்திடும் நறுமணம் யார் மறப்பார்?

 தொழுகையைச் சொல்லும் போதினிலே
தூய்மையை ழகரம் தருகுது பார் …..என

குழலும் யாழும் கொடுக்கும் இசையும் , உழவும் மழையும் விதைப்பதையும், வாழையும் பழமும் சுவைப்பதையும்,  தாழை தரித்த நறுமணமும், தொழுகை தந்திடும் தூய்மையும்.... ஆஹா! தங்கள் கற்பனை கண்டு மெய்சிலிர்த்து மீண்டும் மீண்டும் படித்து மீளாத ஆனந்தம் கொண்ட நான்...
ஈழமென்று சொல்லும்போது தமிழன் பெறும் ஈர்ப்பினை சொல்ல ஏன்மறந்தீர்?”  எனக் கேட்பதைத் தமிழ் வேழமாகிய நீர் தவறென்று நினைத்திட மாட்டீரெனவும்   அறிவேன்.

அம்மம்மா இது தமிழ்மோகம் அந்தாதி பாடி எனை ஆட்கொண்ட  தமிழ்மேகம்
மலைமகளொடு மலைவளமொடு
மளமளவென இழைமேகம்,
இலைதழையொடு எழில்பொழிலொடு
இளையவளெனக் குழைமேகம்! 
குழையணிதமிழ் மடவார்குழல்
குலமெனக் கவி விழைமேகம்....
விசும்பின் துளி பசும்புல் தரை
விளம்பும் குறள் அழைமேகம்...
தளைதொடையொடு நடமிடுகவித் தமிழ்மேகம்... அம்மம்மா... தமிழோடு தாங்கள் இழைந்து குழைந்து நடமிடுவது கண்டு சொல்லிலடங்கா ஆனந்தம் கொள்கிறேன். தங்களைப்போல் எழுத தமிழன்னை எனக்கும் அருள் புரிவாளா என ஏங்குகிறேன்.
(இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.... திரு. பொன்னீலன் அவர்கள் தாங்கள் வான் பொழியும் மழையைப் பாடியதாக புரிந்திருக்கிறாரல்லவா? அல்லது நான் தவறாகப் புரிந்திருக்கிறேனா? - புரியவைப்பீர்)
அடுத்ததாக தமிழ்த் தாய் காண தங்கள் கைபிடித்து நடக்கிறேன்...
"எழுதாய் என ஒரு கவிஞனை விழைந்திட
எட்டிப் பார்ப்பவள் தாய் காண்மின்
பொருதாய் எனுமொரு கொற்றவன் ஆணையில்
போர்ப்பறை முழக்கம் தாய் காண்மின்...
தந்தாய்,  குழந்தாய்”, நினைத்தாய்”, இனித்தாய்”, எழுதாய், ஏனழு"தாய்" என...தமிழ்த் "தாய்" அவளை -
ஒவ்வோர் வார்த்தையிலும் கண்டு நீ(ர்) பூரித்"தாய்" - அதன்பயனாய் ஓர் கவிதையினை  வடித்"தாய்" - வடித்ததைத் தொடுத்"தாய்" - மனம் மகிழ நம் தமிழர்க்கதைக் கொடுத்"தாய்".
"எழுத்தாய் வந்து அதில் இனிதாய் ஒலிக்கும்
இலக்கிய நாதம் "தாய்" காண்மின்!
என தமிழ்த் தாயைக் கண்டு நீர் உவகை மேற்கொண்டு ஓடி அணைப்பது கண்டு பரவசமடைந்த நான், தங்கள் தனித்தமிழ் வேட்கையை நன்கறிந்தவளாதலால் வியப்பொன்றும் அடைந்துவிடவில்லை ஆங்கிலத்தை அழகுதமிழில் கூடவைக்க கேடு செய்த தங்கள் அருமை நண்பனுக்குக் குட்டுவைத்தபோது.
"நனிசிறந்த சொல்வளமை இருக்கும் போது
நற்றமிழ் ஏன் அயல்மொழிச் சொல் 'இரக்க' வேண்டும்?
 மணிச்சரத்தின் ஊடே ஓர் கூழாங்கல்லை
மாட்டுவதால் மணிக்கென்ன பெருமை தோன்றும்? 
அடடா... மணிச்சரத்தின் ஊடே ஒரு கூழாங்கல்லை.... என்னே ஒரு உவமை? என்னவொரு சாதுர்யம்? இதைவிட அழகாக ஒருவன் தமிழ் மொழியை உருவகப்படுத்திவிடமுடியுமா? உயர்வுபடுத்திவிடமுடியுமா? அல்லது இதைவிடக் கேவலமாக அயல்மொழியை தாக்க முடியுமா?
தமிழ்மகனின் அறிவிலினோர் தெளிவு இன்றேல்
தனித்தமிழின்  நியாயமெல்லாம் சபையேறாது" - என்றுரைத்து
ஆங்கிலத்தின் நிழலிலிருந்து அகற்றி அந்நண்பனைத் தமிழ் வசம் ஒப்படைத்த உம்மை அணைக்கத் தமிழன்னையோடு இணைந்தோம் யாம்.
                                                ****
அழகான ரமதான் வாழ்த்து புதிதானது
"அருளோனது பரிவானது அமைவானது தெளிவானது"
நபிநாயகர் தலமானது நலமானது புலனானது"... எனக்கூறும்போது அடுத்த மதத்தினையும் அணைக்கும் உமது அகமானது தெளிவானது!"  J
(தமதானது தளர்வானது! தமிழானது நெறிதான் அது.... இது எமக்குப் புரியவில்லை தங்கள் விளக்கத்திற்குக் காத்திருக்கிறேன்)
வாட்டுகின்ற குளிர்தன்னைத் தளிர்மேனி வரவேற்க,
வையகத்து மாந்தருக்கு வாட்டமிலா நெறிதன்னைக்
காட்டுகின்ற பெருந்தலைவன் கச்சிதமாய்ப் புல்லணையில்
கண்ணயர்ந்த வணப்பினிலும் காணுகிறாந் தன்றன்
கருணையினால் மானிடத்தைப் பேணுகிறான்.

"தேனமுதச் செய்தியொடு செம்பவள வாய்திறந்து
தெய்வமகன் எம்பெருமான் பேசுகிறான்
அள்ளியிரு கைகளிலே அண்ணல்தனை அணைத்தெடுத்து
அரும் பண்ணால் தாலாட்ட வாரீரோ...
அந்த ஆராரோ சுகம் பெறுவார் யார்யாரோ?....
அவனை நீர் தாலாட்டும் பண்கேட்டு நாங்களன்றோ சுகம் பெறுகிறோம்.
                                                                *******
இரண்டு "ஜான்"களுக்கும் தாங்கள் எழுதிய இரங்கற்பா இதயத்தில் ஆழ்ந்தது. ஒன்று வலம்புரி ஜான். இன்னொன்று வாட்டிகன் "ஜான்". ஒன்று நட்பிற்கு. இன்னொன்று நற்குலத்திற்கு. ஈடு செய்ய முடிந்தால் அது இழப்பல்ல... ஈடிணையற்ற இவ்விரு ஆத்மாக்களிடம் தாங்கள் கொண்டிருந்த ஈடுபாடு புலனாகிறது.  இவ்விரு ஆத்மாக்களுக்கும் என் ஆத்ம வணக்கங்கள் தங்கள் மூலமாகத் தெரியப்படுத்துகிறேன்.

வார்த்தைச் சித்தன் வலம்புரிக்கும் "மனிதநேயம் பரிசளித்த மாமழைக்கும் தாங்கள் பாடிய இரங்கற்பா தாண்டி புத்தாண்டிற்குள் புகுந்து  செல்கிறேன்.
"ஆண்டுதொறும் அவனிதனை ஆண்டுகொள்வதால்தான் - இதை
"ஆண்டு" எனநாம் அழைத்தோமோ அரியதொரு பேர்தான்!
மீண்டுமொரு படிக்கல்லைத் தாண்டுகின்ற தால்தான் - நாம்
மென்மேலும் புத்தாண்டு என்றழைத்தோமோ? நேர்தான்!
ஆண்டிற்கு புதுவிளக்கம் கொடுத்து படிப்போரை ஆண்டுகொள்கிறீர்கள்.
"நீதிமின்னும் மனித நேய ஒளி தோன்ற வேண்டும்
உன் நிழல்கூட கொடுமைகளுக்குக் குழிதோண்ட வேண்டும்"
மனிதநேயம் சற்றும் இல்லாத இவ்வுலகத்திற்கு புத்தாண்டில், மறந்திருக்கும் அல்லது மறைந்திருக்கும் மனிதநேயத்தை வெளிக்கொணரும் வேக ஈட்டியாய் இறங்குகிறது இப்பா.
இது இப்படியிருக்க, திரை"யுலகத்தினை நூல்நூலாகக் கிழித்தெறிந்திருக்கிறீர்கள்.
"கடல் கடந்து கலம் செலுத்திக் களங்கள் கண்ட நாட்களும்
கயவர்கட்குக் கண்ணெதிரே விதிவக்குத்த வாட்களும்,
மடமைகண்ட தமிழனுக்கு மறதியாகிவிட்டது
மானமிக்க தமிழினம் இம்மந்திகளால் கெட்டது.  J

கண்ணகிக்குச் சிலையெடுத்து கலிங்கம் வரை படையெடுத்து முப்பாலில் குறள் படைத்துத் தொல்தமிழன் செய்த சாதனைகள் சொல்லி இன்றைய தமிழன்
சிந்தையிலா மந்தைகளாய் திரையினர் பால் சரிவது
எத்திறத்தில் செந்தமிழன் இங்கிதத்தில் சேர்ந்தது?”
என தாங்கள் கேட்பது காலணி கொண்டு கன்னத்திலறைகிறது.

"காவிரியைத் தாஎன்றால் கைவிரிக்கும் கன்னடன்
நாவிளங்க நாலுதமிழ்ச் சொல்வழங்காப் பாமரன்" இது "சூப்பர் ".
இன்னும் கோபம் அடங்காமல் -
நடிகர்களின் படம் காண விடியும் வரை விழிக்கிறான்
நல்லதமிழ் படியென்றால் நாணமின்றி முழிக்கின்றான்' 
என்றுதாங்கள் கூறும்போது, இந்நிலையில் தமிழன் இன்றிருப்பது கண்டு வெட்கப்படவும் வேதனைப்படவும் மட்டுமே முடிகிறது. இதைமீறி வேறொன்றும் செய்ய இயலாத நிலையிலல்லவா தமிழனின் இன்றைய நிலையுள்ளது? அதையும் தான் புரியும்படி அதுத்தடுத்த வரிகளில் கூறிவிட்டீரே..
திரையுலகம் தமிழ்நாட்டின் வழிபாட்டுத் திருத்தலம் 
சினிமாவின் கணிகையர்க்குக் கோவில்கட்டும் தமிழ்க்குலம்
திரையுலக நாயகன்தான் தளபதியும் தலைவனும் (இங்கு பனைஓலை சலசலக்கிறது J)
செந்தமிழா உனக்கெதற்கு நாகரிகச் சீதனம்?
                                                ******
ம்ம்ம்ம்....  இங்குதான் நான் தங்களோடு முரண்படுகிறேன்.
ஊர்க்குருவிக் குலமே! - நீங்கள் உச்சிவானிலே உலாவரும்போதும்
கழுகுகள் ஆவதில்லை - உங்களது கர்வத்தில் உண்மையில்லை".
எப்படி எழுதுகிறீர்கள் புலவர்களே? ஒப்புமை சரிகிறதே, சரியாக இல்லையே. நான் கூறும் என்கருத்தில் தவறிருப்பின் மன்னிப்பீர்! (This is one of the defense technique..முன்கூட்டியே மன்னிப்பு கேட்டுவிடுவது... J )
ஊர்க்குருவி எதற்குப் பருந்தாக வேண்டும்?  உயரே பறக்கும்போது கண்களிலென்ன கர்வத்தைக் காட்டியிருக்கிறதா? இதோ எப்போதோ நான் எழுதி குவைத் "நீதியின் குரல்" என்ற புத்தகத்தில் வெளிவந்த கவிதை கீழே:
மாற்று(க்) கருத்து
உயரே பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகுமா? - என்று
உரக்கப் பேசும் கவிஞர்களே...
ஊர்க்குருவி  ஏன் பருந்தாக வேண்டும்?

நற்பழங்கள் தானியங்கள்
நன்னீரருந்தும் - இக்குருவி
அழுகிய பழங்களொடு பிணங்களையும்
எச்சில் சளியென்று இன்னபிற திண்ணும்
பருந்தோடு ஒப்புமோ?

கவிதைக்கு வேண்டும் கற்பனை - ஆனாலும்
காக்கவும் வேண்டும் அதன் கற்பினை
உயரே பறந்ததனால் கர்வம் கொண்டதாய்த்
தவறாய் கற்பிதம் கொண்டோரே...

உயர்ந்தது ஊர்க்குருவிதான்
உயரப் பறந்தாலும்
உயர்வில்லாதது பருந்து.
மாற்றுங்கள் பழமொழியை

" உயர உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவியாகுமா பருந்து என்று.
-லதாராணி
காகிதப்பூக்கள்
வாசமில்லா மலர்கள்தான்
வீட்டு வாசல்களில் வசிக்கிறது...
வாசமுள்ள மலர்களோ- அடுத்தவர்
வசமாகிப் போகிறது.
     -லதாராணி
அடுத்து, மின்மினிப் பூச்சி மெழுகுவர்த்தியுடன் ஒப்புமைப் படுத்தப்படுகிறது.  மின்மினிப் பூச்சியோ தானாக வெளிச்சம் தருகிறது. ஆனால் மெழுகுவர்த்தியை நாமே "கொளுத்தி" அதை அழித்துவிட்டு தியாகி பட்டம் சூட்டுவது சரியா? நாம் கொளுத்த வில்லையெனில் அது வெளிச்சம் தருமா?
அடுத்து, குயிலிசைக்கு மயங்காதோர் எவருமே இல்லை.  அக்குயிலைத் தன்கூட்டில் அடைகாத்து முதலுணவு ஊட்டி வளர்த்த செவிலித்தாயல்லவோ காகம்? குழந்தையைத் தாயுடன் ஒப்புமைப்படுத்தி தாயைக் கேவலப்படுத்துவது என்ன நியாயம்? என்னவோ... எனக்கு இக்கவிதையில் உடன்பாடில்லை. (மீண்டும் மன்னிப்பீர்)
 மேற்சொன்ன இக்கருத்தில் காகமும் குயிலும் என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளேன். அதை அடுத்துவரும் புத்தகத்தில் பதிப்பேன்.( ஒரு முழுப்பக்கக் கவிதையானதால் இங்கு எழுதவில்லை) தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் அணிந்துரை எழுத J
வன்முறைத் திரையுலகம்- பிச்சைக் கலத்தில் பெருந்தொகை சேர்த்துப் பிழைக்கும் பிழைப்பினைச் எச்சில் உமிழ்ந்து இகழ்ந்திருக்கிறீர்.
" அறிவு தழுவிய ஆன்ற படைப்புகள் ஆயிரமாய்ச்
செறிவுறத் தந்தநம் செந்தமிழ் வம்சம், திரையுலகால்
நெறிபிறழ்கின்ற நிகழ்வுதனைக் கண்டு நெஞ்சினிலே
பொறிபறக் கின்ற சினத்தொடு பொங்குக பொங்குகவே!

காலம் சீரழித்துக்கொண்டிருக்கின்ற கலாச்சாரத்திற்கு முக்கிய முதல் காரணமாய் இருக்கும் இத்திரைத் துறை திருந்தும் நாள் எந்நாளோ? என்ற ஆதங்கப் பெருமூச்சு என்னிலிருந்தும் வெளிப்படுகிறது இவ்வரிகளைப்படிக்கும் போது.

எப்படி எழுதுவது?   தண்ணீர் படைக்கும் தடை? - இது மிகச் சிறந்த கவிதை
எந்தவரி எடுத்துக்காட்டுவது?  " ஆறுகளே அணிகலனாய் வாய்த்திருக்கும் பேறுகளே... என அழகாக ஆரம்பித்துள்ளீரே இந்த வரிகளில் லயிப்பதற்குள்
நீள நடக்கின்றீர் "நீர்" எனக்கூறி என் கற்பனைக்கு ஒரு கடிவாளம் போட்டு நிறுத்தி நிதர்சனம் காட்டுகிறீரே இதைச் சொல்லவா?
நன்னடத்தைப் பொன்னியாம்  நற்றமிழர்க் காவிரியைக்
கன்னடத்தார் கைப்படுத்திக் காட்டுகின்றார் –
இந்நடத்தை ஏற்புடைத்தோ? - எனக்குமுறுவதையா?

பாலாற்றை எம்முன்னே பாழாறாய் ஓட வைக்க
ஆலாய்ப் பறக்கின்றார் ஆந்திரத்தார்.. என்பதையா?
முல்லைப் பெரியாற்றின் மூச்சடைத்துத்
தொல்லை புரிகின்ற தோழர்களின்
புல்லறிவாண்மையப் புரிந்து புழுங்குகிறீர்களே இதைச் சொல்வதா?
நதிநீர் பங்கீட்டு நடுவர்மன்றம் இன்றோர்
பொதிசுமக்கும் நல்விலங்காய்ப் போயிற்று
எனச் சினத்தொடு நீர் வேண்டி "நீர்" சீறுகின்ற சீற்றம்பற்றி சொல்வதா?  அல்லது
ஆறுகளே நீவீர் அறமற்றுப் போவீரேல்
ஆறுதலாய் எம்மவர்க்கிங்(கு) ஆர்?”
என ஆருமில்லாததால் ஆறுதல்தேடி ஆறிடமே ஓடுகிறீரே இதைச் சொல்வதா? 

பொழிலொடு பூங் காற்றும் புடை சூழப் பூமீ(து)
எழில் நடையாய் ஏகும் நதிகாள்! - விழிபடரும்
கண்ணீர் துடைக்கும் கருத்திலையோ?
எத்தனைநாள் தண்ணீர் படைக்கும் தடை?
நீர் வேண்டி நீர் எழுதிய இந்நீர்க் கவிதைப் படித்து முடித்தபின் சுரந்த என் கண்ணீ(நீ)ர் அடங்கவில்லை இன்னும். யார் போடுவார் தடை?
தாழ்த்தப்பட்டவன்!
தொட்டாலே தீட்டென்ற துயரம் தானா
தூயதமிழ்த் திருக்கூட்டம் கொணர்ந்த நீதி?
சமன் செய்து வாழ்ந்த சரித்திரத்தே
சாதிவந்து கால்பதித்தது எந்த தேதி?
 நமனை அஞ்சோம் என்றிருந்த தமிழருக்(கு) ஏன்
நாலு வர்ணம் எனப்படும் ஓர் நச்சுச் செய்தி? 
 கேள்விகளல்ல  இவைகள்.  சாதித் தீயை அணைக்கப் பெருகி ஓடிவரும் காட்டாற்று வெள்ளம்.

மனுவென்ற மடையோனே!  மானுடம்மேல்
மாசுமிகு தூசுதனைப் படரவிட்டுத்
தனித்தமிழ்ச் சாதிதனைப் பிளந்த நீதான் 
தாழ்த்தப்பட்டவன் என்னும் தகுதி பெற்றாய்

அடே மனுவென்ற மடையா!” இதற்கெல்லாம் நீயே காரணம் எனத் தனித்தமிழ்ச் சாதியைப் பிளந்தவனையும் தனித்தமிழ் என்ற வார்த்தையினையும் அழுத்தமாகப் பதிவு செய்த துணிச்சல் மிக்க வரிகள் கண்டு மனம் துள்ளியது அறிவீரோ?
இக்கவிதையினைக் குவைத் பெரியார் நூலகம் நடத்திய முப்பெரும் விழா சிறப்புமலரில் பதியவைத்துள்ளேன் என்பதைத் தங்களிடம் கூறியுள்ளேன்.  எல்லோரும் பாராட்டினர் (ஒரு தூய தமிழ்க் காதலனைத் தவிர J )

அடுத்து மனுவிற்கு விட்ட டோஸ் முடிந்து மறுபக்கம் திரும்பினால் அய்யகோ ....
இராமபிரான் கோபமுறான் என்ற அடுத்த கவிதை... இராமனுக்கு இங்கே என்ன நேர்ந்ததோ என ஆவலோடு படிக்க... 
கடலடியில் கிடக்கிறதோர் கல்லைக் காட்டி
கதை கட்டி விடுகின்றான் கடவுள் பக்தன்
காய்ச்சிய கம்பியோடு சூடுவைக்கக் கிளம்பியது போன்ற சொற்களோடு தொடர்கிறீர்... 
கதைகளிலே வருபவனைக் கடவுளாக்கி 
கற்பனையின் நாயகனைத் தலைவனாக்கி
உதவாத மதவாத உறக்கத்துள்ளே
உலவுகிறான் கனவை மட்டும் சொந்தமாக்கி!
எனத் தாங்கள் எள்ளி நகைப்பது ஏற்புடையது.
பலகோடி வருடங்கள் பழக்கம் கொண்ட
பாறைகளின் நீட்டம் தான் இன்னும் உண்டு!
சிலநூற்றாண்டின் முன்பே சிதைந்துபோன
சீதைமணாளன் பாலம் எங்கே உண்டு?” என்று கேட்பதும்

அவதார புருஷனவன் அமைத்தபாலம்
ஆடாமல் அசையாமல் இருக்குமென்றால்
தவமான தமிழ்மன்னன் இராவணந்தன்
தடயங்கள் ஒன்றேனும் ஏன் அங்கில்லை? (இங்கும் பனைஓலை சலசலக்கிறதுJ )

சேது சமுத்திரத்திட்டம் நன்றோ தீதோ
செந்தமிழர்க்கு அது தேவைதானோ வீணோ
ஏது முடி(வு) என்றாலும் இராமன் என்பான்
எதற்கிங்கே வரவேண்டும் சொல்லுங்கப்பா?
 நக்கல், கோபம், ஆதங்கம், துணிச்சல்... இப்படி அனைத்தும் உள்ளடக்கியது இவ்வரிகள் (இங்கு பனையோலையின் சலசலப்பு வீரியத்துடன் உள்ளது)
ஏசல்களைத் தாண்டி இந்தத் திட்டம் வெல்லும்
இராமபிரான் கோபமுறான் காலம் சொல்லும்" எனக்கூறி ஒரு வழியாய் முடித்து விட்டீர். ஆடாமல் அசையாமல் இருந்த அவதார புருஷனைக் கொஞ்சம் ஆட்டிப்படைத்துவிட்டீர் இக்கவிதையில் J

வாழ்வியல் எண்ணங்கள்: 
ஒற்றைப் பனைமரத்தில் ஒருகோடி செய்தியா?
அப் பனைமரம் தங்கள் வீட்டுத் திண்ணையோடு சேர்ந்து மட்டும் நிற்கவில்லை தங்கள் எண்ணத்தோடு ஊன்றிவிட்ட பனைமரம்.
அதிகாலை கடிகாரக் காக்கைகளின் பனைமரம் - " அதிகாலை கடிகாரம் உவமை இது புதுமை. மிக மிக அருமை.
நான் ஓய்வெடுத்த திண்ணைக்கும் நிழல் கொடுத்த பனைமரம்.
"நான் கோலியாடி தோற்றபோது ரசித்து நின்ற பனைமரம்" – இவ்வரிகள் வாசிக்கும்போது தங்கள் தோல்வியை ரசித்து நின்ற பனைமரத்தை  மனக்கண்ணால் கண்டு நான் ரசிக்கின்றேன்.
 கருக்கலிலே கன்றுமாட்டைக் கட்டிப்போட்ட பனைமரம் அது
கண்ணயர்ந்து தூங்கும்போது காவல்நின்ற பனைமரம்!
கூடுதேடி முட்டையிடும் குயிலினத்தின் பனைமரம் இசை
கூடுமட்டும் கூடவிட்டுப் பாடவிடும் பனைமரம்
முந்தியசீர் தமிழ்க்குடியை முன்னிறுத்தும் பனைமரம் எம்
மூவேந்தர் மார்புக்கு மாலைதந்த பனைமரம்
செந்தமிழர்ச் சுவடிகட்கு ஓலைதந்த பனைமரம் என்
சிந்தனைக்கு தினந்தோரும் தினவுதரும் பனைமரம்
ஆஹா... கன்றுக்குட்டிக்குக் காவலாக மட்டுமா நின்றது நல்ல கனிதரும் இத் தனிமரம்? செந்தமிழர் சுவடிகளுக்கு ஓலை தந்து பண்டைய இலக்கியங்களைக் காத்து நின்ற பனைமரமே எனத் தாங்கள் கூறும் போது புதிய கண்கொண்டு அப்பனைமரத்தைப் பார்க்கிறேன். உள்ளப்பூரிப்புடன் அதைக் கொஞ்சம் அணைக்கின்றேன்.
பனைமரத்தைப் பாடியவுடன் பாழுங்கடல் பாய்ந்து பாழாக்கிய நாட்களை பதித்திருக்கிறீர்.
அணைத்திருந்த கைகள் கொண்டு தன் குழந்தையை
அன்னையொருத்தி தின்னுவது என்ன தர்மம் அம்மா?”  -
எனத் தாங்கள் கூறும் போது இராவணகாவியத்தில், கடற்கோட் படலத்தில், அன்றைய ஆழிப்பேரலை அடித்து அழித்ததை புலவர் குழந்தை அவர்கள் எழுதும்போது ...
வேலியே பயிரை மேய்ந்தால் மேலொரு காப்பின் றேபோற்
கோலியே வேலி யாகக் குழவியைத் தாய்காப் பேபோற்
சாலவே காத்து வந்த தமிழ்க்கட லெனப்பேர் பெற்ற
வேலையே கொள்ளு மானால் வேறினிச் செய்வதென்னே---எனப்புலம்பியது நினைவுக்கு வருகிறது.

கும்பிட்டவரின் கும்பி எரிய வைத்துவிட்டாயே!  துதிபுரிந்தோர்க்கு சதிபுரிந்த சண்டாளியே என கோபமிகக் கொண்டு குமுறுவது எம் அத்தனை பேரின் மனக்குமுறலையும் சேர்த்தன்றோ ஒலிக்கின்றது?
ஆழிப்பேரலை அடிதோய்ந்த கூத்து முடியுமுன் பொங்கலென்ற பெருநாளும் வந்துநின்ற கொடுமையினை எப்படி நாம் மறப்போம்?  வந்த பொங்கலை இனி வாராதே என்று சொன்ன அந்த ஓர்நாள் இன்னும் என்நெஞ்சினிலும் ஆறாமல் இருக்கிறதே... 

"கவலையினால் உள்ளமெல்லாம் பொங்கும் போது
பொங்கலென்று நீயும்வந்து பொங்கு வாயோ? 
செங்கரும்புச் சாறுகொண்டு சோறுபொங்க
செந்தமிழர் சேனையிடம் கலங்கள் இல்லை 
சிங்க நிகர் தமிழினத்தின் பொங்கல் பாட்டைச்
செவிமடுக்க சிறுமழலைக் குலங்கள் இல்லை. 
தவிக்கின்ற தமிழ் நெஞ்சும் ஈழ மண்ணும்
தமைமறந்து மகிழ இது தருணம் அல்ல.
பொங்கல் எனில் பொங்காதே என்றுகூடப் பொருளுண்டு
கடலை நோக்கி பொங்கல் என புத்திமதி கூறிவிட்டு போய்வா!
என தாங்கள் கூறும்போது "எம்மனசு ஏக்கலே எனக்கில்ல திருநாளு" என நான் எழுதிய தங்களுக்குப் பிடித்த கவிதையின் வரிகளும் வந்து போகிறது.
அந்த ஆழித்தீ அழித்தொழித்த உயிர்களுக்கும் உடமைகளுக்குமான அடுத்த ஆண்டின் நினைவுநாளில் பாடிய அஞ்சலியில் 
கத்துகடல் பேரலை தந்த காயம் ஆறலை
இத்தருணம் அவர்களுக்கு யாம் செலுத்தும் அஞ்சலி
எத்தனைநாள் ஒத்தடம் என்றுகூட தெரியலை!
என்று கூறி அவர்களின் ஆழ்மன வேதனையை எப்படி ஆற்றுவது என தெரியாமல் திண்டாடும் நிலையினில் தாங்கள் தவிப்பது புரிகிறது.
அடுத்ததாக,
வேதமும் சாதிகளும் வெறிமிகு
வெங்களம் காணுது பார்
பேதம் வகுப்பதனால் மானுடம்
பிழைபட்டுப் போனது பார்

தொட்டாற்சிணுங்கிகளும்  துப்பாக்கி தூக்குது பார்!
என்று பூமித்தாய் கொடுத்த புகார் புரியுமா இம்மதவெறியும் பதவிவெறியும் பிடித்த மனிதர்களுக்கு?. 
முல்லை வனத்தினில் அது விடும் மூச்சின் நறுமணத்தில் தாங்கள் மூழ்கித் திளைத்தது கண்டு பரவசமடைகிறோம். 
முல்லைப்பூவின் நறுமணத்தினி நுகர்ந்துகொண்டே தாமரைக்குளம் நோக்கிச் சென்றிடின்...
"உன்னைமறக்காத சிறார் நூறு பேரில்
ஒருவதான் என்னை நினைவிருக்கா? என்றுகேட்டு
பின்னும் அதற்கு நினைவுபடுத்த தங்கள் நினைவிலாடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாய் நினைவூட்டுவது அழகு.  ஆழமான காதலை அழகாகக் காட்டும்பாங்கு தனியழகு.
ஆடையிலே மூடியதோர் அழகுமங்கை
அன்றொருநாள் வந்திருந்தாள் நினைவிருக்கா?
கொத்துமலர் மேனிதனை உனதுநீரால்
குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள் நினைவிருக்கா?
 தாமரையில் தாமரையாய் மிதந்து நீந்தித்
தண்ணீரில் தகதகத்தாள் நினைவிருக்கா?
நீராடிச் சென்ற அவள் நினைவில் ஆடி
நெஞ்சாரப் படர்காதல் நெறியில் ஆடி
ஏராடி இணையாடி இடுக்கண் ஆடி
எனையிழந்து போயிருந்தேன் நினைவிருக்கா?
என்ற அழகிய காதலை எனையிழந்து அவ்வரிகளில் மயங்கி படித்துக் கொண்டிருக்கும்போது
சாதிக்கு மயங்கியதோர் சமுதாயத்தில்
சாதிக்க முடியாது தோல்வி கண்டு
நாதிக்க நாதிக்க புலம்பிக் கொண்டு
நாதியற்று நான் கிடந்தேன் நினைவிருக்கா?
என உமது நா திக்க நீர் புலம்பிய புலம்பலைப் படிப்போர் அத்தனைபேருக்கும் அந்தச் சாதித்தீ படர்ந்து அழித்த அத்தனை காதலையும் நினைவுபடுத்தும்.

வேறு சாதி பெண்ணென்றால் வெறுக்க வேண்டும்
வெளிசாதிப் பெண்ணென்றால் மறக்க வேண்டும்...
என்ன ஒரு வார்த்தைப் புழக்கம் இவ்விடம்? காதலைச் சொல்ல வந்து சாதியெனும் சீர்கேட்டை சாடிய கவிதை. தாமரையாள் மேல் நீர்வைத்த காதலையும் தமிழ்ச் சமுதாயத்தின்மேல் நீர்வைத்த காதலையும் ஒருந்கிணைத்துக் கூறிய தங்கள் உத்தி சிறந்தது.

தாமரைக்கு தங்கள் உளம் தந்ததால் தான் தாமரைக் குளமென்று பேர்வந்ததென்று கூறிய இந்த அருமையான வரிகள் வாசிப்பவர் உள்ளமதில் தங்கிவிடும்.
எது எப்படீயாயினும் நா திக்க நா திக்க தாங்கள் புலம்பிய நினைவுகளை என்நா தித்திக்க தித்திக்க படித்து முடித்தேன்.

கருவுற்றிருக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணின் தாகங்களைக் கூறும் கவிதை மயக்குகிறது. தங்களின் தமிழ்க்காதலை அவ்விளந்தாயின் மூலமாய் அறிகிறேன். 
வீணைகாண வேண்டும் அதை
விழுந்து தழுவ வேண்டும்
அமுதம் ஊட்ட வேண்டும்
தமிழ் அமுதும் ஊட்ட வேண்டும் இனி
எமது மடிதவழும் மழலைகேட்கவொரு
இனிய கவிதை வேண்டும்
கருவிலிருக்கும் அக்குழந்தையைக் கற்பனை செய்து பார்க்கிறேன். தொப்பூழ் கொடிவழி உயிரும் உடலும் வளர்க்கும் தாய் தமிழ் உணர்வையும் ஊட்டிவளர்க்கிறாளே... மெய்சிலிர்க்கிறது.
                                                                ****
சேட்டா நீ மிடுக்கனாணு. பாலை நிலத்து எண்ணங்களைப் பளிச்சென்று பறஞ்சல்லோ?
பார்க்கும் அலுவல்களும் - பழகிடும்
பன்மொழிக் கும்பல்களும்
ஏற்கும் பெருமைகளும் இன்றெனக்(கு)
இருந்திடும் போதினிலும்
ஏக்கம் தணிந்திடுமோ?

கன்றுதனைப் பிரிந்த - கறவையின்
கவலை நெஞ்சினிலே !
இந்த நிலை அகன்று இன்பநிலை என்று வரும்?
என்று ஏங்கும் ஒவ்வொரு கணமும் என்ன வாழ்க்கையோ இதுவென்று இங்குள்ள அனைவருக்கும் தோன்றுவதை சொல்லிட வல்லீரோ என தூது விட்டு கேட்கிறீரே.
****
 கலையாழம் மிக்கதமிழ் நாஞ்சில் நாட்டுக்
கரையாளன் தமிழ்பேசத் தயங்கேன்"
எனக்கூறி மலையாள மதியீணன் மடமையைப் போக்க சரியாத தமிழ்ச் சரிதம் சொல்லி  அவனைச் சரியாக்கி விட்ட தங்கள் திறமை என்னே?
அலைகடந்து நாடுகளை ஆண்டிருந்த
அக்காலத் தமிழன்தான் இலங்கை மண்ணை
நிலையாக ஆண்டிருந்தான். நேற்றுவந்த
நீயொன்றும் இக்தறிய நியாயம் இல்லை.

கயவாகு ஆண்ட காலம் கூறி அவன் வாயடைக்க வைத்த நின் அறிவு கண்டல்லோ அவன் சேட்டா நீ மிடுக்கனாணென்னு பறஞ்ஞு?  தமிழ் மலையோடு மோதிப்பார்த்த அம்மலையாளத்தானின் நிலை அந்தோ பாவம்!.
                                                ******

யாப்பு அறிமின் எனக்கென எழுதினீர். கடவுளுக்கேன் என்னிடத்தில் கருணையில்லை? என்சார்பில் தாங்கள் எழுதினீரோ?. இதிலுள்ள ஒவ்வொரு வரியும்  என் உள்மன வேதனைகள்.
ஏனதுநீ சொல்வதென்(று) எல்லோரும் கேட்பர்:
என்னையன்றி அக்தரிவார் எவருமில்லை.
"எவ்வளவு தான்புரண்டு படுத்தபோதும்
இருவிழிகள் குளமாதல் நிற்பதில்லை

தூக்கமில்லா இரவுகளின் தொடர்ச்சி யாலே
துக்கமதை தாங்குதற்குச் சக்தி இல்லை
யார்க்குமிலா வேதனையின் விபரம் சொல்லி
யாரிடமும் முறையிடவும் முடிய வில்லை!
கடவுளிடம் முறையிட்டு அலுத்துப் போனேன்
கண்ணீர்விட்(டு) அழுதழுது களைத்துப் போனேன்
கடவுளைநான் இல்லையென்று சொல்ல வில்லை 
கடவுளுக்கேன் என்னிடத்தில் கருணை இல்லை?
இக்கவிதைக்கு ஏதாவது விளக்கமோ விமர்சனமோ நான் எழுத ஆரம்பித்தால் இதற்குமுன் நான் எழுதிய அத்தனை பக்கங்களையும் என் கண்ணீர்த்துளிகள் அழித்துவிடும். தங்களையும் இனி மேலே படிக்கவிடாமல் திரை மறைத்துவிடும். ஆகையால்  கருணையுள்ள கடவுள் என்கவலைகளைத் தீர்ப்பான் என்ற இந்தநிமிடத்தும் நான் கொண்டுள்ள நம்பிக்கையோடு இக்கவிதைவிட்டு புலம் பெயர்கிறேன் புலம்பெயர்ந்த தமிழன் நோக்கி!

நிலம் இழந்த நிலையில்கூட நிமிர்ந்து நடக்கின்றான்
நெஞ்சமெங்கும் நீதிவேட்கை நிறைந்துகிடக்கின்றான்

இல்லாததொன்றில்லை நம் திராவிட நாட்டினில்
இருந்தும் நானிருப்பதற்கு இடமில்லை சொந்த நாட்டில்
நொந்துநொந்து நான் வாழும் வாழ்க்கை
என்நிலைப்பாட்டில் உள்ளோருக்கே புரியும்.
மண்ணைப்பிரிவது மரணவலி
இந்நிலை இனி வேரு யாருக்கும்
வாய்க்காமல் போக! என
வழங்குகிறேன் ஒரு சாபம்.

புலம் பெயர்ந்த மனிதன் மனநிலையில் ஓடும் எண்ணங்கள் சொல்ல ஒப்புமா? சொந்த பந்தங்கள் பிரிவுமட்டுமா தாங்குகிறான், சில சமயம் பக்கத்து தெரு பாட்டியின் நினைவும் பல்துலக்க ஒடித்த வேப்பமரக் குச்சியும், பல்லாங்குழியாட பொறுக்கிய புளியங்கொட்டையும் கூட  நம் எண்ணத்தில் பயணிக்குமே... நிலாக்கும்பல் விளையாட அள்ளிஎடுத்த மண்ணை நினைவில் மட்டுமே ஏந்திக்கொண்டு நித்தம் படும் வேதனையை சொல்ல ஒப்புமா?
                                                                                                ****
பாலையில் தோன்றிய வானவில்!
வானமங்கை எங்கிருந்து வாங்கினாள் இவ்வில்லை?
வரிந்து பூட்டும் பாணம் இன்னும் ஏன்கிடைக்க வில்லை?
வானவில்லே என்னையுன்றன் பாணமாகப் பூட்டு
வண்டமிழார் வரிகள் என்றும் வல்லதென்று காட்டு.
என்னே ஒரு கற்பனை? 
வானவில்லின் பாணமாகி வானப்பலகை முழுவதும் வண்டமிழ்க் கவி வரிகள் எழுத வேண்டுமென்ற எண்ணமா?  ம்ம்நட்சத்திரங்களுக்குப் பதில் அங்கே தமிழ் எழுத்துக்கள் மின்னினால் எப்படி இருக்கும்? நினைப்பதற்கே இனிக்கிறதே.....

விடுமுறையின் வறுமை மிகமேலென்று புரிந்த ஓர் உழைப்பாளியின் உள்ளத்து உளைச்சலை அடுத்த கவிதை அளந்து காட்டுகிறது
"மன ஈரமறு காட்டரபி தோட்டமதில்
எடுபிடியில் இருந்திருந்தான் வாட்டமுடன்"
பாலை நிலத்தில் எத்தனையோ தொழிலாளிகளின் அவலநிலை இதுதான்.ஈவிரக்கமில்லா முதலாளிகளிடம்  சிக்கிச் சீரழிந்து சிதைநொந்து போகின்றர் நம் இந்தியர். மிகச்சரியான வார்த்தையது "மன ஈரமறு காட்டரபி".உழைத்த உழைப்பிற்கு வியர்வை காயும் முன் அவனுக்கான ஊதியத்தைக் கொடுக்கவேண்டுமென நபிகள் சொன்ன வார்த்தையைத் தீமூட்டி எரித்துவிட்டார்களா என்ன? பின் வியர்வை காயுமுன் இல்லையென்றாலும் தன் ஊருக்குத் திரும்பும்போதாவது கொடுக்கவேண்டாமா? இஸ்லாம் மதத்தின் புனித இடமாம் சௌதியிலேயே இந்த அவலமென்றால் ......  வேறென்ன நான் சொல்வது?
இந்த சௌதியின் (சாலையின்) ன்னொரு அவலத்தையும் அழகாகக் காட்டியுள்ளீர் அடுத்த கவிதையில்.

சௌதிக்கு எவரேனும் வந்தால் - அதன்
சாலைகளை முதலில் அறிவீர்
மீதி அறிவதற்கு முன்னால் - உயிர்
மிஞ்சுமெனில் நீவிர் பெரியீர்
கண்மண் தெரியாமல் கார் ஓட்டும் மக்களை இந்த அரபு நாட்டில் மட்டுமே காணமுடியும்.  ஒவ்வொரு நாளும் இரத்த அபிஷேகம் சாலைகளுக்கு இங்கு.
சாலை விதி என்பது யாரும் பொருட்படுத்தாத ஒன்று. பாவம் அந்த சாலைகளின் "விதி" அது.

பாலைவனக் கப்பலை பரிந்து பேச அழைத்துள்ளீர்:
"ஊமையான பாலைக் கப்பல்காள் – உங்கள்
உடைமையாளர் இல்லம் செல்வீரோ?
தீமையான செயல்புரிந்தால் தெய்வம் நின்று கொல்லும் என்று
செய்கை மூலமேனும் சொல்வீரோ?
 தங்கள் முதலாளிகளிடம் பேசக் கூட உரிமையில்லாத அத்தொழிலாளிகள் தங்களுக்காக யாராவது பரிந்து பேச மாட்டார்களா என ஏங்கும் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது இக்கவிதை. யாருமில்லாத நிலையில் ஒட்டகம் வாய்பேச முடியாவிட்டாலும் சைகையிலாவது நம் சோகத்தை சொல்லிவிடாதா என ஆடு ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற கூலித் தொழிலாளிகளின் நிலையை அப்பட்டமாகக் கூறியுள்ளீர்.

ஈழ நிலத்து எண்ணங்கள்... கண்ணில் ஈரம் சுரக்கும் வண்ணங்கள்
பொன்னீழத் திருநாட்டில் புகுந்து கொண்ட
போர்மேகம் கலைவதற்கோர் வழிசொல்லுங்கள்
கண்ணீரும் கதறலுமே கதையாய்ப் போன
காட்சிகோர் இறுதிதினம் குறித்திடுங்கள்
 இந்துமகா சமுத்திரத்தின் முத்துத் தீவில்
ஈழம் இனி எங்களுக்கோர் திருநாட் கோவில்
அந்தமிலாச் செந்தமிழால் அறம் வளர்த்த 
அச்சமிலாச் செங்கோல்தான் இனிஎம் மண்ணில்
ஒருநாள் அத் திருநாளும் வந்தே தீரும்
உயிர்த்தியாகம் தனது பயன் தந்தே தீரும்

கண்டிப்பாக மலரும் ஈழநாடு. இப்புலவனின் அறம் விழுந்த வார்த்தைகள் பலித்தே தீரும். நம் கண்முன் இவையெல்லாம் நடந்தே தீரும்.
ஈழம் என்பது சொப்பனமல்ல  என ஆக்ரோஷமாகத் தாங்கள் எழுதிய இக்கவிதை  படிப்பவர்களை வீறுகொண்டு எழச்செய்யும்.
எட்டுத்திசையெங்கும் ஏறுநடை போட்ட குலம்
ஏழு கடல்வெளியும் வீரமுடன் ஆண்ட குலம் 
கெட்டவர் புன்மதியின் கீழடங்கிப் போவதுண்டோ?
கேட்கட்டும் போர்முழக்கம்....! 
வீரம் செறிந்த வாக்குகள்.

காலக் கணக்கனுக்கு  நான்விடுக்கும் கேள்வியிது
கையில் நீ வைத்திருக்கும் புத்தகத்தின் பக்கமொன்றில்
ஈழத்தமிழனுக்கும் ஏன் ஒதுக்க வில்லை இடம்?
-கோபம் கொப்பளிக்கும்  வார்த்தை
புத்தனைப் போற்றுபவன் பூமியெங்கும் ரத்தமடா
 புண்ணியப் போர்வையில் புறப்பட்டதோ மூர்க்கமடா!
-தாங்கள் உமிழ்வது தெறிப்பது தெரிகிறது
தருமத்தைக் கவ்வியதோர் சூதினுக்குத்
தமிழ்வேதம் தண்டனைகள் விதித்தே தீரும்
                                                                ****
தமிழ் வெல்லும் என்னும் கவிதையில்
"சொந்த மண்ணிலொரு குடிசை வேண்டுமெனச்
சொல்வதிங்கு ஒரு குற்றமோ?”
ஊனம் உள்ளவனின் ஊனும் உள்ளமதும்
உறுதமிழ் மனதைச் சுடுவதோ?
எங்கள் உறவுகள் ஊறு படுவதோ?”

மெல்ல வந்து நமை மெல்ல வந்தவன்
மிருக ஜாதியினன் காணடா!”
வித்தை கற்ற தமிழ் யுத்த புத்திரர்கள்
வெற்றிதான் நமது லட்சியம்
தமிழ் வெல்லும் வெல்லும் இது சத்தியம்!
பாரதியார், பாரதிதாசன் கவிதைகளுக்கு ஒப்பாகவும் மேலாகவும் உள்ள எழுச்சிக் கவிதை இது.
என்ன ஒரு அழகான வார்த்தை உபயோகம்?.. மெல்ல மெல்ல வந்து நமை மெல்ல வந்தவன்....  எழுச்சியும் வேகமும் ஒருநிமிடம் நிறுத்திவைத்து  இந்த வார்த்தை  ஜாலத்தை ரசிக்கவைக்கிறது.
ஈழக்கவிஞர்களில் எனக்குப் பிடித்த காசி ஆனந்தனின் கவிதைகள்  போல் மிக்கத் துணிச்சலான வார்த்தை வேகம் உள்ளது தங்கள் கவிதைகளில்.

தாலாட்டுப் பாடி கண்ணுறங்கு கண்ணே.. 
"தூயகுலம் பெற்றெடுத்த தும்பையிதழ்ப் பூவனமே!
தெள்ளுதமிழ்ச் சித்திரமே தேன்மழலைப் பாசுரமே!
செந்தமிழார் சிந்தைதனைச் செப்பனிடும் சேய்வடிவே!
பூமணக்கும் பொன்முகமே! புன்னகையின் போர்க்களமே!” ...

ஞாலமெங்கும் நல்லவர்கள்
நாளையுன்னைப் போற்றி நிற்கும்
காலம் ஒன்றே என்கனவு
கண்ணுறங்கு கண்ணே...
நாளையொரு வேளைவரும் நல்லதமிழ்க் காவலரும்
ஆளவரும் காலம் வரும் ஆறுதல் கொள் கண்ணே

செங்குருதி நெய்சொரிந்து செய்வதொரு வேள்விதனைக்
கண்களில்யாம் ஏந்திநின்றோம்...
சே... கொடுமையடா சாமி... நேரில் பார்த்ததும் நினைத்துப் பார்த்ததும் ஏட்டில் பார்த்ததும் தொலைக் காட்சிப் பெட்டியில் பார்த்ததும் மீண்டும் மீண்டும் கண்களில் உழன்றுகொண்டே இருக்கிறதே..... 
வீரர் குலம் தோற்பதில்லை
 வெற்றியொன்றும் தூரமில்லை ...
நேரம் வரும் நிச்சயமே!   எனத் தாங்கள் சொல்வது சத்தியமே.  இந்த துக்கங்களெல்லாம் துடைக்கப்படும் நாள் வெகு விரைவில் வரும்.  கவிஞனே நீயும் கவலைவிடு.
_
பார்த்திப ஆண்டை வரவேற்கும் விதம்  இனிது!
ஆண்டுதான் வந்த(து) இன்று
அமைதியோ வருவ(து) என்(று)> என்(று)
யாண்டுமோர் ஏக்கம் எங்கள்
யாழ்நிலம் எங்கும் தோன்ற
மீண்டுமோர் ஆண்டாய் வந்து
மெத்தநீ ஆண்டாய் என்னும்
மாண்டபேர் எய்தும் வண்ணம்
மலர்ந்திடு புத்தாண்டே..
அருமை! இதுபோன்ற ஒரு புத்தாண்டு வரவேற்பை யாரும் எழுதியுள்ளனரா என எமக்குத் தெரியாது! ஈழமக்களின் ஏக்கத்தை எவ்வளவு ஆழமாகக் கூறுகிறீர்கள்?  இங்கு கூட ஏக்கத்தை மீறி தங்கள் எழுத்தின் அழகில் மூழ்க வைக்கிறீர்
அந்தநாள் எந்நாளோ?
உச்சிவரை எதிரிகளை உதறலுற வைத்திடத்தான்
ஒருதருணம் நமக்குவரும் நாள் எந்நாளோ?
இறப்புதனை முத்தமிடும் இறவாதார் சந்ததியார்
ஈழத்தை முத்தமிடும் நாள் எந்நாளோ?

தன் இளங்கை தனைத்தன்றன் தாய்பிடிக்க,
சுதந்திரமாய்த் தமிழ்மழலை நடைபயிலும் நாள் எந்நாளோ?
 என தாங்கள் ஏங்கும் நாள் இதோ விரைவில்  தெரிகிறது... ஊரெலாம் தமிழ் மணக்கும் அந்நாள் வெகு விரைவிலே காணுவோம். கொழும்புக்குச் சென்றபோது மருந்துக்குக் கூட தமிழெழுத்தை காணோமே என்று ஆதங்கப்படுவதைக் காணும்போது என்மனதுக்குள் துக்கம் பீறிட்டு வருகிறது. தமிழின் மீது பற்று கொண்டு தமிழின் துணைமட்டுமே கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும்  என்னால் இவ்வார்த்தைகளைக் கேட்க முடியவில்லை. என் கண்ணில் ஏன் இந்நீர்த்துளி?
தென் திசையைப் பார்க்கிறேன்; என் சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்குதடடா! என்று பாரதி தாசன் கூற... அத் தென் திசையில் அப்படி என்ன இருக்கிறது இப்புலவன் இப்படி பூரித்திட என எண்ணிய ஒருபுலவன் ஆழ்ந்து ஆய்ந்ததன் விளவு.. ஒரு காவியம் உருவாக்கப் பட்டது. அதுதான் "இராவண காவியம்" அக்காவியத்தில் புலவர் குழந்தை அவர்கள்  தென்னிலங்கை நாட்டினைப்பற்றிக் கூறும்போது..

"நாடெலாம் புலவர் கூட்டம் நகரெலாம் பள்ளி யீட்டம்
வீடெலாந் தமிழ்த்தாய்க் கோட்டம் விழவெலாந் தமிழ்க்கொண் டாட்டம்
பாடெலாந் தமிழின் றேட்டம் பணையெலாந் தமிழ்க்கூத் தாட்டம்
மாடெலாந் தமிழ்ச்சொல் லாட்டம் வண்டமி ழகத்து மாதோ!
 -  புலவர் குழந்தை ("இராவண காவியம்")
என்று பாடியிருப்பது நினைக்கிறேன். நான் இராவண காவியத்தின் சொற்பொழிவாற்றிக்கொண்டிருப்பதைத் தாங்கள் அறீவீர். இப்போது இலங்கைமீதும் இராவணன்மீதும் உண்மை தெரிந்தபின் அதிமோகம் கொண்டுள்ளேன்.
****

செந்நீரொடு கண்ணீர்த்துளி தெளிதேசியம் புகலும்:
 சிங்களவனின் வெங்களவினை எங்களை இனி அகலும்

உன்பாட்டின் ஞாபகங்கள் ஒவ்வொன்றாக
உள்ளத்துச் சுவர்களுக்குள் ஒலிப்பதைப் பார்!
பண்பாட்டின் பண்பாடி நின்ற காற்றே 
பழையபடி மீன் பாட்டை மீட்டுவாயோ?

அகதியாகப் புலம்பெயர்ந்து அலைந்த்து திரிவதோ - நாங்கள்           
அடிமையாகச் சொந்த நாட்டில் அடங்கி வாழ்வதோ?
என்று ஈழநாட்டின் ஒவ்வோர் நிலையையும் ஆழமாகப் பதிதிது எங்கள் ஆழ்மனதினை ஆட்டுவித்தீர்.
கும்மி எடுத்துவிட்டீர் கெட்ட அரசியல் வாதிககளை
பிச்சைக் கலங்கள் சுமந்தபடி வரும் பேரணி இக்தென்று கும்மியடி! (சலசலவென்று கேட்கிறது)
ஐந்து வருடத்துகோர்முறைதான் - இந்த
ஆட்சியாளருக்குக் கண்விழிப்போ?
நைந்து  வருந்தும் தமிழரிடம் திடீர்
நட்பென்னவோ என்று கும்மியடி!

அடுத்து வீரச்சங்கொலி முழக்கமிடுகிறது.! 
நூறு புண்களுடன் நோவு கொண்டுதவம்
நோற்றிருப்பது கொடுமையே!
பேச்சுவார்த்தையெனும் பிடியில் வீழ்த்தவொரு
பெரிய நாடகம் நடந்ததே!
காட்சி மாறும் எனக் காத்திருந்தவர்க்
கனவுக் காலமும் முடிந்ததே!

" கடலலையின் வழிநெடுகே....! "
இப்புத்தகத்தின் மிகமிக மேன்மையான கவிதையாக இதைத்தான் நான் குறிப்பிடுவேன்...
வாழ்ந்திருந்த தமிழனுக்கு வந்ததென்ன சாபமோ? வரலாற்றின் தலைவனுக்கு அகதியென்ற பட்டமோ?

இந்தியனாய்ப் பிறந்ததனால் தமிழனுக்கு மௌனமா
இலங்கையிலே பிறந்ததனால் தமிழனுக்கு மரணமா?
 கண்திறந்து பார்க்க இங்குத் தமிழனுக்கே வருத்தமா?
 கனன்றெழுந்த்து கடிந்துரைக்க தலைவர்கட்கும் தயக்கமா?

மண்மூடிப் போகுதடா மறத்தமிழன் குடிசைகள்
மாற்றுவழி கேட்குதடா புத்தனின் அகிம்சைகள்
கண்மூடித் தாக்குதடா காடையனின் முப்படை
கௌதமனே உன்மதத்தைக் கழுகுவசம் ஒப்படை"

சர்வதேச நாடுகளும் தமிழருக்க்(கு) எதிரடா
பர்வதம்போல் பேச்சின்றிக் கிடப்பது பாரதமடா...!

ஒவ்வோர் வரியும் சவுக்கு கொண்டு கை ஓயும் வரை அடித்தது போல் உள்ளது. மௌனமாய் இருந்தே மரணவலை வீச விட்ட அரசும்  அதற்குத் துணையாவதுபோல துணிவின்றி நடந்துகொண்ட அந்நிய அரசுகளும் செய்த பிழையை மனம் பதைபதைத்தபடி தூரதேசத்திலிருந்து தொலைக்காட்சிப் பெட்டியில் பார்த்து பார்த்து பொலபொலவென கண்ணீர்விட்ட என்போன்ற தமிழர்கள் எத்தனையோபேர். இனியாவது அமைதியான தமிழீழம் தனியீழம் அமையட்டும்.
"கௌதமனே.....உன்மதத்தை கழுகுவசம் ஒப்படை" -- என்ன வார்த்தையிது?  இழப்புக்களை ஏற்காத மனக்குமுறலல்லவா இது?  தமீழம் அடையும்.  தமிழர்களின் கண்ணீரும் அடையும்.  வேண்டியது தமிழீழமென வேண்டும் ஓர் புலவனே.. பெண்டிரையும், குழந்தைகளையும்  கொல்வது அறமல்ல ....அறப்போரல்ல என அனைவரும் அறிவோமே... இருந்தும் ...

"மழலை மாதரை இழந்தாலும்... மலர வேண்டியது தமிழீழம்"  என தமிழீழத்துக்காய்த் தாய்மார்களையும்  தளிர்களையும் கூடத் தாரைவார்த்தாவது தமிழீழம் கொள்ளவேண்டும் என்ற குருதி நனைந்த இந்த  வாசகத்தில் தெரியும் உமது ஏக்கம் உமது வாழ்நாட்களிலேயே தீர்ந்து : இனிய தமிழீழம்  மலரவேண்டும் என நற்றமிழன்னையிடம் வேண்டுகிறேன்.  வாழ்க உமது தமிழ்ப் பணி! வெல்க உமது ஈழத்துக் கனவு!
                                                                                என்றென்றும் அன்புடன்
                                  தங்கள் அன்பிலும் தமிழன்னை மடியிலும் தங்கி இருக்கும் தங்கை லதாராணி,
குவைத் , எழுதிய நாள்: 30/10/2010

இன்னொரு சிறப்பு :  இப்புத்தகத்தின் இன்னொரு சிறப்பு  ஓவியம். "ஓவியர் திரு. கனகராஜ் கங்கன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
அ" கரம் பழக்கிய செம்மொழியே தேனமுதே ஓவியத்திலிருந்து, பாரதியின் மீசை பிடித்திழுக்கும் சின்னக் குழந்தை ஓவியமும்,ழகரம் பழக்க அங்கே குவித்த யாழ், குழல், பழங்கள், வாழை தாழையும் தாய்"க் குருவி தன் குஞ்சுகளுடன் கொஞ்சும் படமும், வலம்புரி சங்கின் நாதமும்,வன்முறைத் திரையுலகத்தினைக் காட்டும் ஆக்டோபஸின் ஒவ்வொரு கைகளிலும் பச்சைவசனமெழுதும் எழுத்து அட்டைமுதல், கத்தி,கண்ணாடி பாட்டில், ஆடையற்ற பெண் என அமைத்தும், தண்ணீர் படைக்கும் தடை.க்கு சிவனின் சடைமுடி ஒழுக்கும்  தண்ணீரை பிடிக்கும் கைகளும், தாழ்த்தப்பட்டவனுக்கு தட்டும் , தம்ளரும் காசும் மேலிருந்து தூக்கிப்போடுவதையும், நக்கலான படமாக அணில் கல்லெடுத்துப் போட்டு பாலமமைத்த படமும், நன்றியாக பனைமரத்தின் கிழங்குமுதல் விசிரியும் பாயும் கூடையும் தொப்பியும் காலணியும் குடிசையும்….
ஆழிப்பேரலை அழிவு காட்ட பச்சிளங்குழந்தையை தான் மூழ்கிக் கொண்டிருக்க ஓங்கிய அலையிலிருந்து காக்கப் போராடும்  ஒரு தாயும், பொங்கல் கொண்டாட்டத்திற்கு மண்பானை கரும்பொடு, கண்ணிவெடியும் கைத்துப்பாக்கியும், சொல்லிட வல்லீரோ என பாலைவனத்தின் கள்ளிச்செடியில் ஒற்றையனாய் உட்கார்ந்து தாய்நாட்டில் தனியளாய்த் தன்குழந்தைகளோடிருக்கும் துணைவியை நினைக்கும் படமும், ஈழ நாடு மலரட்டும் என புத்தன் கையேந்திய வாளும்.... எல்லா வற்றிற்கும் மகுடம் வைத்ததுபோல்  புத்தனின் பீடத்தினடியில் மண்டையோடுகள்... அப்பபா.... கவிநயமும் கலைநயமும் ஒருங்கே பெற்ற ஓர் உயர்ந்த புத்தகம் இது.  இப்பொக்கிஷத்தை வாசிக்க நான் மிகப்பேறுபெற்றவளாயிருக்கிறேன்.   என்வீட்டு புத்தக அறையை அலங்கரிக்க... இன்னும் சில .... எனக்கு வேண்டும்.....
மிக்க நன்றியுடன்
லதாராணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக