என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

புதன், 25 மே, 2011

ரஜினி என்றொரு அபாயம்

அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்த தவறுகளில் ஒன்று நான் ரஜினி ரசிகையாய் இருந்தது. என்னமோ தெரியாது ரஜினி என்றால் அப்படி ஒரு ஈர்ப்பு எனக்கு. அவர் நடித்த எல்லாப் படங்களையும் பார்ப்பதும் குமுதம் ஆனந்தவிகடன், வண்ணத்திரை, முத்தாரம், ராணி என்று வார இதழ்களை  ஊனமாக்கி அதிலிருந்து ரஜினி புகைப்படங்களை வெட்டி ஆல்பமாகத் தயாரித்து மகிழ்ந்த அந்தக்காலங்களை நினைத்தால் சிரிப்பாகவும் சில நேரத்தில் வெட்கமாகவும் கூட உள்ளது.

சிறுவயதில் படிப்பைத்தவிர, விளையாட்டைத் தவிர நான் அதிகம் செலவு செய்த நேரங்கள் ரஜினி ஆல்பம் தயாரிப்பதில்தான்.

ஜானி, தில்லுமுல்லு, ஆறிலிருந்து அறுபது வரை, நெற்றிக்கண், பொல்லாதவன், நல்லவனுக்கு நல்லவன், படிக்காதவன்.. இப்படி அந்தக்காலத்தில் நடித்த ரஜினி படங்களை பார்த்து ரசித்ததுபோல் அல்ல சமீப வருடங்களில் உள்ள அவரின் படங்கள்.

எப்போது வெறுக்க ஆரம்பித்தேன் என்று நினைவில் இல்லை. அளவுக்கு அதிகமாக மேக்கப் போட்டதினாலோ அல்லது  60  வயது கடந்த பின்னும் 20  வயது பெண் அரைகுறை ஆடையுடன்  தோன்ற அவளின் அங்கங்களை தொட்டுத்  தடவி டூயட்  பாடும் அந்தக் கண் றாவிக் காட்சிகளைப் பார்த்தபோதோ...

ஒன்று பத்தாது என்று இரண்டு மூன்று நடிகைகளை ஒரே படத்தில்
ஜோடியாக்கி அவர்களோடு ஆடவேண்டுமென்ற வக்ர புத்தியுள்ள ஆள் என்பதை அறிந்த போதோ அல்லது நரைத்த தாடியை மழிக்காமல் (shave) தாடையில் முளைவிட்ட பயிறு போல அப்படியே
விழாக்களில் பங்கெடுப்பதைப் பார்த்தபின்போ   என்னமோ
 ரஜினியைக் கண்டால் ஒரு அறுவெறுப்பு தொடங்கியது...

அதுமட்டுமே அல்ல காரணம். மக்கள்  (ரசிகர்கள் )  ரஜினிமேல்  வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் அன்பும் பாசமும் போல் அவருக்கு நம் மக்கள் மீது இல்லையென்றாலும் ஒரு துளியளவேனும் இல்லை என்பதை அறிந்தபின் பலமடங்கு வெறுக்கத் தோன்றியது.

எத்தனையோ நிகழ்ச்சிகள் எத்தனையோ துயரச் சம்பவங்களைத்
தமிழக  மக்கள் சந்தித்திருக்கிறார்கள். கார்கில் போர் முதல் சுனாமி வரை.

"அப்படியே அதிருதில்ல?" என்று வசனம் பேசியவர் மக்கள் துயரத்தைக் கேட்டு அதிர்ந்ததாக எந்த ஒரு நிகழ்ச்சியும் இல்லை. சலனமே இல்லாமல் யார் எப்படிப் போனால் எனக்கென்ன வருடம் ஒரு படம் வெளியிட்டு
கோடிகளைக் காணவேண்டும்,  கட் அவுட் கட்ட, பாலாபிஷேகம் 'செய்ய ரசிகன்  வேண்டும் ஆனால் அவனுக்கு ஒரு துயரம் என்று வந்தால் "நான் ஒரு முறை சொன்னால்  நூறுமுறை சொன்னா மாதிரி" என்று சொல்லும் ரஜினி ஒரு நூறு ரூபாயாவது மனம்வந்து - (மனமுவந்து அல்ல மனம் வந்து) எந்த ஒரு காரியத்திற்காவது கொடுக்கிறாரா என்றால் இல்லை.

அரிதாரம் பூசி சினிமாவில் நடிப்பவர்கள் கொஞ்சம் தம்மை வளர்த்துவிட்ட மக்கள் மீது அக்கறை உள்ளவர்களாக நிஜத்தில் நடித்திருந்தால் கூட பரவாயில்லை. இடர்கள் வரும்போது மௌன பூனையாகிவிடும் சுயநலவாதியாகத்தானே ரஜினி இருக்கிறார்.

சமூக சேவை என்ற ஒரு வார்த்தை கூட நிஜவாழ்க்கையில் இவர் வாயிலிருந்து உதிர்ந்ததில்லை என்றே  நினைக்கின்றேன்.

அனால் இந்த சுயநலவாதி ரஜினி இன்று நிமோனியா பாதிப்பால் 
மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போது  "தமிழ்நாடே அதிருகிறது" என்பதுதான் வெட்கப்படவேண்டிய கட்டத்தில் ஒவ்வொரு தமிழனையும் நிறுத்தியிருக்கிறது. 

ஒரு சக மனிதன் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்   அவர் நலமுடன் திரும்பி
வரவேண்டும் என்பது என் அவாவும்.கேள்விப்பட்டவுடன்ஒரு நிமிடம்
"நோயிலிருந்து மீண்டு வரவேண்டும்"  என என் மனமும் வேண்டியதுதான்.
இது சாதாரண மனிதப பாங்கு.

ஆனால்  இந்த முட்டாள் மகாஜனங்கள்  தீக்குளித்து உயிர்விடுகிறான்,  
அலகு குத்தி  காவடி எடுக்கிறான். சினிமத்துறையோ கூட்டுப்பிரார்த்தனையாக 500  டைரக்டர் , ஆயிரக்கணக்காக மற்ற
சினிமாத்துறை ஊழியர்கள் என்று நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறது .

நான் தமிழச்சி  என்று சொல்வதில் கூசிப்போகும்படியான சில விஷயங்கள் தமிழ்நாட்டில் நடப்பது இதுபோன்ற சில நிகழ்ச்சிகள்  நடக்கும்போதுதான்.

வெளிநாட்டில் இருப்பதால்... நாம் பலநாட்டு மக்களையும் இந்தியாவின் பல்வேறு மாநில மக்களையும் அன்றாடம் சந்திக்கிறோம்.

அந்த வேளைகளில் அவர்கள் ஒரு நடிகனுக்காக உயிர் விடும் ரசிகன் உள்ள நாட்டின் தரம் இந்த அளவுதான் என வரையறுத்துப் பேசும்போது நம்மால் பதில் கொடுக்க முடியாத சூழல் உருவாகிவிடுகிறது.  நல்ல படித்த அறிவுள்ள பெரிய பதவிகளில் இருக்கும் தமிழர்களும் இதில் அடக்கம்.

இந்தப் படித்த பாமரர்கள் எப்போது திருந்துவார்கள்.  சினிமா என்பது வெறும் பொழுது போக்கே. வாரம் ஒருமுறையோ அல்லது மாதம் ஒரு முறையோ தத்தம் சூழ்நிலையை அனுசரித்து சினிமா பார்ப்பது நியாயம். அந்த சினிமா நடிகனை கடவுளாக தூக்கிவைத்து கொண்டாடும் அபத்தம் அபாயத்தில் தான் முடியும்.

நாட்டில் எத்தனையோ நிகழ்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஊடகங்களும் தன் பங்கிற்கு ரஜினி ரஜினி ரஜினி என்று எல்லாச் சானல் களிலும் லைவ் டெலிகாஸ்டிங் பண்ணுவது போல... இட்லி சாப்பிட்டார் வடை சாப்பிட்டார்... தண்ணீர் குடித்தார் ... பல்விளக்கினார் கிரிகெட் பார்த்தார் கருணாநிதியை பார்கவில்லை என்று நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள். 

தெரிந்தேதான் கேட்கிறேன், இந்த ரஜினிகாந்த் இல்லையென்றால் தமிழ்நாடு  குடிமுழுகிப் போய்விடுமா என்ன?

இவர் நோயிலிருந்து மீண்டுவந்து தமிழக நலனிற்கு ஏதாவது
செய்துவிடப்போகிறாரா என்ன?

குறைந்த பட்சம் அவர் ரசிகர்களுக்காவது இவரால் எந்த ஆதாயமும் இருக்கப்போகிறதா என்ன ?

கண்மூடித் தனமாக இருக்கும் அந்த அப்பாவி ரசிகர்களை இந்த ரஜினி மாயையிலிருந்து "அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்"

எப்படியோ ரஜினிகாந்தை சினிமாவில் நடிப்பதை நிறுத்திய நிமோனியா விற்கு நன்றி.

விரைவில் குணமடைந்து வீடு போய்ச் சேர எனது வாழ்த்துக்கள்!