என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

திங்கள், 23 மே, 2011

அப்பாவுடன் கலைஞரை .....

அப்பாவுடன் கலைஞரை .....

வாரம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ அப்பாவுடன் தொலைபேசியில் பேசிவிடுவேன். என் எழுத்துக்களை ஊக்குவிப்பவர். இன்னும் நிறைய எழுதவேண்டுமென்று அக்கறையை என்மீது அன்பாகப்  பொழிபவர்.

சமீபத்திய தேர்தல் முடிவுகளால் கொஞ்சம் அல்ல நிறையவே மனவருத்தப்  பட்டிருக்கிறார். காரணம் பரம்பரை பரம்பரையாக தி மு க கட்சியைச் சேர்ந்தவர்கள். கருணாநிதி மேல் அளவு கடந்த பாசம் கொண்டவர். தன்னுடைய வாழ்க்கை முடியும் வரை அல்லது  கருணாநிதியின் வாழ்க்கை முடியும் வரை  கருணாநிதியே தமிழக முதல்வராக இருக்கவேண்டுமென்று  ஆசை பட்டவர். தேர்தலில் தோற்றத்தைப் பற்றி பெரிதாக வருந்தவில்லை. வெற்றியும் தோல்வியும் சகஜம் தான் வாழ்க்கையில் என்று அறிந்தவர்தானென்றாலும் இப்படி   ஒரு அதலபாதாளத்தில் வீழும் அளவிற்கு மக்கள் திமுக வைப் புறக்கணித்ததுதான் அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

கனிமொழி மீது ஏக கடுப்பில் உள்ளார். அந்த பெண் எப்போ கட்சிக்குள்ள கால் எடுத்து வச்சாளோ அன்னைக்கே சொன்னேனே திமுக அவ்வளவுதான்னு. அப்படியே ஆகிடுச்சி  ன்னு சொல்லி ரொம்ப .
வருத்தப்பட்டார்.

75  வயதில் இருக்கும் அப்பாவிற்கு இப்போதெல்லாம் உடல் நிலை பலவீனமாகிக்கொண்டிருக்கிறது. ரொம்ப நேரம்பேச முடியலைம்மான்னு சொல்றார். பத்து நிமஷம் தொடர்ந்து நடக்க முடியலம்மான்னு சொல்றார், கேட்கும்போது மனது வலிக்கிறது.  தம்பி தான் அப்பாவை கவனித்துக் கொள்கிறார். அவருக்கும் சொந்த வேலை குடும்ப சூழ்நிலை என்று பிசியான வாழ்க்கைதான் . 

வெளியில் எங்காவது செல்லவேண்டுமென்றால் தம்பிதான் பைக்கில் உட்கார வைத்து அழைத்துச் செல்வான். அவரால் இப்போது வண்டி ஓட்ட முடிவதில்லை. ஏதாவது கேட்டாலும் சொல்வார் தம்பி வரட்டும்மா, அவன் வந்தப்புறம் செய்றேன், அவன் வந்தப்புறம் கேக்கறேன், அவன் வந்து செஞ்சு தருவான், அவன் வந்து எடுத்து தருவான்.. என்று சொல்கிறார். வீட்டில் அலமாரியின் மேல்வரிசையிலுள்ள ஒரு புத்தகமோ அல்லது தன் கட்டிலுக்கு அடியில் கொஞ்சம் தள்ளிச் சென்றுவிட செருப்பையோ எடுக்கவேண்டுமென்றால் தம்பியின் வருகைக்காகக் காத்திருக்கிறார்.

எப்படியெல்லாம் இருந்த அப்பா. எவ்வளவு சுறுசுறுப்புடன் பார்த்திருக்கிறேன்.  நான் சிறுவயதிலிருக்கும்போது   கிணற்றிலிருந்து  தண்ணீர் இழுத்து தோட்டத்திலுள்ள அத்தனை செடிகளுக்கும் விடியற்காலையில் உற்றுவதைக்  கண்டிருக்கிறேன். காலையில் சைக்கிள் மிதித்துக்கொண்டு விடியும் முன்பே டீக்கடைக்குச் சென்று டீ குடித்துவிட்டு வீட்டுக்குத் தேவையான காய்கறி வாங்கி வருவார். கும்மடத்தில்  இருந்து சைக்கிளிலேயே கஸ்பாவரை வேலைக்குச் செல்வார். ஆசிரியர் என்பதால் பாடம் நடத்துவதைக்காட்டிலும் சிரமம் மாணவர்களைச் சமாளிப்பதென்பது. அதையும் திறம்படச் செய்துவிட்டு, மதிய  உணவிற்கு மீண்டும் சைக்கிள்   மிதித்து வீடுவந்து உண்பார். எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்குச்  சென்றுவிடுவதால் அம்மா  தனியாக வீட்டில் இருப்பார். அவரின் பாதுகாப்புக் கருதியே நண்பகல் உணவிற்கு 2 கிலோ  மீட்டர் தூரத்திலிருந்து வந்து பார்த்துவிட்டுச் செல்வார். மீண்டும் டியூஷன், வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் அவர்களிடம் அளவளாவுவது, என்று சுறுசுறுப்புடன் சிரித்த முகத்துடன் குறும்புப் பேச்சுடன் எப்போதும் காணப்பட்ட அப்பா இன்று தளர்ந்து இருக்கிறார்.  இதுதான் மூப்பின் வரையறையோ?

அப்பாவிற்குத் தேவையான எல்லா உதவிகளையும் தவறாமல் நேரத்திற்குத் தம்பி செய்து கொண்டிருந்தாலும் அடிக்கடி அவனைத் தொல்லை செய்தால் கோபித்துக் கொள்வானோ, அவன் கவலைப்பட்டுவிடுவானோ என நினைத்து  சில நேரங்களில் ஏதும் கேட்காமல் விட்டு விடுகிறார்.  சில நேரங்களில் எனக்கு சில உறவினர்களின் வீட்டுக்கு போகணும் போல இருக்குப்பா என்று  சொன்னாலோ  அல்லது கடைத் தெருவுக்கோ, லைப்ரரி கோ  போகவேண்டும் கூட்டிக்கிட்டுப் போ என்று கேட்டாலோ  அல்லது இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டாலோ   "நாளைக்கு கூட்டிகிட்டு போறேன்"  "இப்போ வேணாம்" "அப்புறம் பாக்கலாம் " என்று சில நேரம் தம்பி கூறிவிடுவதால் அவரை அதிகமாக தொல்லை படுத்துகிறோமோ என்ற எண்ணம் வந்து விடுகிறது அவருக்கு. சிறிது கோபபட்டாலும் வயதின் இயலாமையால், தேகத் தளர்வினால் கொஞ்சம் பயமும் கூடவே வந்துவிடுகிறது.  இருக்கறவைக்கும் அவன் மனசு கோணாம நடந்துக்கனும்மா என்று அவர் சொல்லும்போது மனது வலிக்கிறது. 

இப்படி 75  வயதிலேயே தளர்ந்துவிட்ட அப்பா சாதாரண ஒரு ஆசிரியர். ஒரு குடும்பத் தலைவன். அதை மீறி வேறெந்தப் பொறுப்பும் இல்லை என்றே சொல்லலாம்.  எந்தவிதமான கெட்ட குணங்களோ நடத்தைகளோ அல்லது அடுத்தவர் பொருளின்மீதானா ஆசைகளோ இல்லாத ஒரு சாதாரண மகனைக் கொண்ட என் அப்பா, இந்த ஒரு மகனின் மனம் கோணக்கூடாது அவனை அன்றி நமக்குத் துணை யாருமில்லை. மீதமுள்ள காலங்களை அவனை அனுசரித்து நடந்து கொள்ளவேண்டுமென்று அவனை எதிர்த்துப் பேசாமலும், தன்னுடைய எத்தனையோ தேவைகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தாமலும் அமைதியாக இருந்துவிடுவதாகத் தெரிவித்துக்கொண்டிருக்கும்போது.. .உடனே  எனக்குத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு வந்தது.  


85  வயது, நடைவண்டியில் வாழ்கை, தமிழக முதல்வர் என்ற மிகப்பெரிய பொறுப்பு... வயதுடன் சேர்த்து தளர்ந்த உடலையும் தமிழகத்தைக் காக்கும் பொறுப்பையும் சுமந்த அம்மனிதனின் இளவயது கால உழைப்பை உலகறியும். கழகத்தை வளர்க்க அவர் ஆற்றிய அருந்தொண்டுகள் அளவில்லாததென்பதை அகிலமறியும். ஆனால் சமீப காலங்களில் குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டுக்குள் அவர் வந்திருப்பதை அறியாமல்தான் நாம் எல்லோரும் அவரைத் தூற்றிக்கொண்டிருக்கிறோம்  என்பதை இன்று என் அப்பாவுடன் நான் உரையாடும்போது என்னால் உணர முடிந்தது.  தன் குடும்பத்தை மட்டுமே  மனதில் கொண்டுள்ள தம்பியின்கட்டுப்பாட்டுக்குள் என் தந்தையின் வாழ்கை வந்துவிட்டதைக்கண்டு வருத்தப்பட்ட நான் ,

முதல்வராக வேண்டுமென்ற எண்ணம் கொண்ட ஸ்டாலின், மதுரையைத் தன விரல்வசத்தில் வைத்து ஒரு குறுநில மன்னனாகவே  ஆகிவிட்ட அழகிரி, பணமும் தன் சுகமும் மட்டுமே  எண்ணத்தில் கொண்ட மகள் கனிமொழி,  இன்னும் தயாநிதி  உதயநிதி என்ற நிதியைத்தேடும்  குடும்ப உறுப்பினர்கள்  என்ற அத்தனை பேரின் அச்சுறுத்தல்கள் அந்த வயதான மனிதன் மீது இல்லாமல் இருந்திருக்குமா என்ன?

தன்னை நம்பி தமிழக மக்கள் இத்தனை பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்த இவர் தன் குடும்ப மக்களையும் அனுசரித்துக்கொண்டே மக்களுக்கும் நல்ல பல திட்டங்களைச் அமல் படுத்தி ஆக்கப்பூர்வமாகச் செய்துகொண்டுதானிருக்கிறார்.  ஆனால் இவர் நாட்டு மக்களுக்காக அமல்படுத்திய திட்டங்களை இவர் மக்களே உட்புகுந்து சீர்குலைத்தது இவரின் பார்வைக்கோ காதுக்கோ  எட்டியிருக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அப்படியும் சில விஷயங்கள் அவர் கருத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதைக்குறித்து அவர் விவாதித்திருந்தாலும் பதவியாசையும் பண ஆசையும் பிடித்த மக்கள் நடைவண்டியில் உள்ளவரை மிரட்டாமல் இருந்திருப்பார்களா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.மொத்தமாக முடித்துவிட்டால் பரவாயில்லை  சிறுகச் சிறுக சித்திரவதை செய்தால் பழுத்த தேகம் தாங்குமா? அதனால் தான் அமைதியாக அனைத்தையும் தாங்கிக்கொண்டாரோ?

சரி இவரால் தான் முடியவில்லையே.. பின் எதற்கு இவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் ஒழுங்காக அரசியலிலிருந்து
விலகி இருந்திருக்கலாமே என்ற கேள்வி அடுத்து விழும். 

திமுக கட்சியில் கருணாநிதியின் பெயரை வைத்து மட்டுமே  ஓட்டு வாங்க முடியும் ஆதலால்... பலவந்தப் படுத்தித் தான் அவரை அவருடைய வாரிசுகள் சென்ற தேர்தலிலேயே  நிறுத்தியிருப்பார்களோ  என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

இவரை ஒரு பொம்மையாக வைத்து ஆட்சியைக் கைப்பற்றி நமது நாடகத்தை நாம் நடத்திக் கொள்வோம் என அவர் குடும்பத்தினர் நினைத்திருக்க வாய்ப்பிருக்கிறதல்லவா?  

என்னமோ,  நடந்தவைகளைஎல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தால் தமிழ் மக்களுக்கு கலைஞர் துரோகம் செய்திருப்பார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அத்தனையும் வயதின் இயலாமையே. இவர் பெயரை வைத்து இவருடைய வாரிசுகள் விளையாடிய விளையாட்டுக்களே அத்தனையும் என்பதை அம்முதிர்வயது இதயம் யாரிடமும் சொல்லாமல் உள்ளுக்குள் வேதனைப்பட்டுக் குமுறிக்கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன். 
ஒருவேளை திமுக ஜெயித்து ஆட்சியைப் பிடித்திருக்கும் பட்சத்தில் குடும்பத்திற்குள் பிரச்சனைகள் வலுப்பெற்று கட்சியே உடைந்திருக்கும் வாய்ப்பு அதிகமாக இருந்ததை அறிந்தவராதலால் தான் கட்சியைக்  காக்க முடிந்ததே என்ற   பெருமூச்சில்  தோல்வியைக் கூட புன்னகையுடன் 
ஏற்றுக்கொண்டாரோ? 
இதைத்தான் சூசகமாகச் சொன்னாரோ " மக்கள் எனக்கு ஓய்வளித்துவிட்டனர்" என்று?