
தமிழர் திருநாளாம்
தைப்பொங்கல் வந்துடிச்சி
ஆரத்தி ஏத்திவச்சி
ஆண்டவனைக் கும்பிட
எம்மனசு ஏக்கலே எனக்கில்ல திருநாளு!
பொல்லாத கடலும்
பொங்கிவந்து அழிச்சதாலே
திருநாளு கொண்டாட்டம்
துண்டிச்சிப் போயாச்சி
என்வூட்டு மக்களெல்லாம்
மண்ணுக்குப் போனபின்னே- இனி
பொங்கி வச்சாலும் திங்க யாரிருக்கா?
போகிப் பண்டிகைக்குப்
பழசெல்லாம் போக்கணுந்தான்
பழசுன்னு நெனச்சு
ஒருபாகத்தையே அழிச்சிட்டியே
பாற்கடலே உன்வேகம்
தீராத பெரும் பாவம்
வெள்ள அடிச்ச சொவரு
வீதியில மாக்கோலம்
பழசெல்லாம் எரியவச்சி
விடியக்கால கூடுங்கூட்டம்
ஒண்ணயுங் காணோமே
இதுஎன்ன திருநாளு?
வெளஞ்ச பயிர்களின்
வெவரங் கூட்டிவச்சிப்
புதுப்பான மேலேத்திப்
பொங்கிவரும் நாள்தானே
பொங்கல் திருநாளு?
வெளஞ்ச பயிரெல்லாம்
வெள்ளத்துல போயிடுச்சேன்னு
புலம்பி நான் நிக்கயிலே
ஆளுக்கு அரக்கிலோ
அரசாங்கம் அரிசிதர
புரட்டாசி கொண்டாட்டமா
பிச்சையெடுத்துப் பொங்கிதிங்க?
எம்மனசு ஒப்பல
எதயும் நான் ஏக்கலே
எழவு வூட்டுல எதுக்குப் புதுப்பான?
மாட்டுப் பொங்கலுக்கு
மாடாச்சும் மிஞ்சுச்சான்னு
தேடிப் பாத்தாக்க
தடயம் ஒண்ணும் கெடைக்கலே
மாவீரன் சுனாமின்னு
மார்தட்டிப் பேர்வாங்க
மயானமாக்கிப்புட்டு
மறஞ்சே போயிட்டான்
பாலு பொங்கலான்னா
பசுமாட்ட இங்க காணோம்
வீட்டுல கட்டிப் போட
ஒத்தமாடும் பொழக்கக் காணோம்
எம்மனசு ஏக்கலே எனக்கில்ல திருநாளு!
கலர்கலரா துணிபோட்டு
மொகம் பூரா சிரிப்போட
ஊரு கொழந்தைங்க
வீடு வீடா ஓடிவந்து
கால்தொட்டுக் கும்பிட்டு
ஆசிவாங்கயிலே
அவுத்துக் கொடுக்கணும்னு
சீலையில முடிஞ்சுவச்ச
சில்லற கணக்குதே
சிறுசுங்க காணலியே!
காணும் பொங்கலிலும்
காணமுடியலியே
கலங்கும் எம்மனச கட்டமுடியலியே
இனியென்ன கொண்டாட்டம?
எம்மனசு ஏக்கலே எனக்கில்ல திருநாளு!
(சுனாமி வந்த போது எழுதியது…. 26- டிசம்பர் 2014 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக