கருவறையில் உதித்தபோதும்
கை கால்கள் முளைத்த போதும்
செவி யாரைகள் திறந்த போதும்
செந்நீரில் மிதந்த போதும்
தாயின் கருவறை
தனக்கு மட்டும் சொந்தமென்று
தீர்க்கமாய் நினைத்திருந்தேன் -
தொப்பூழ் கொடியோடு
தொடர்பறுந்து போகும் வரை.
என் -
சில்லறை வார்த்தைகளில்
சிறு விரல் தீண்டல்களில்
மூழ்கித் திளைத்திட்ட என்
தாயின் தாலாட்டும்
அடுத்தவர்க்கு மாறும் என்பதையும்
அறியாமல் இருந்துள்ளேன்
அடுத்த தங்கை அவதரித்து
அதையும் பகிரும் வரை
பள்ளிப் புத்தகங்கள்
படித்தபின்பு போகுமென்று
அந்த வருடப் பரீட்சைக்குப் பின்
அறைவிளைக்குப் விற்றபோது
அதிசயித்து அதிர்ந்து நின்றேன்
எனக்குச் சொந்தமில்லா என்
முதல்காதல் எப்போதும்
கனவுக்கே சொந்தமென்று
நிஜம் வந்து சொன்னபின்பே
நிதர்சனம் ஏற்றுக் கொண்டேன்
சமுதாயம் தருகின்ற
சொற்ப கௌர வத்திற்கு
சுற்றிச் சுழன்று
சேர்த்துவைத்த சொத்தெல்லாம்
என்னோடு தங்காது என்பதும்
அறியாமல் இருந்துள்ளேன்
அரசாங்க அதிகாரி கண்பட்டு
அதையும் அபகரிக்கும் வரை
சொந்தக் கருத்துக்கள்
சொல்லாமல் அழிந்துவிட
என்னுள் ஊரும் எண்ணங்கள் கூட
எனக்கில்லை என அறிந்தேன்
ஆறடி மண்தான்
அனைவருக்கும் சொந்தமென
யாரோ சொன்னது
இப்போது நினைவுவர
மின்சாரத் தகனமுறை
முளைத்துவிட்ட இந்நாளில்
மண்கூட சொந்தமில்லா
மரணத்தை என்ன சொல்ல?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக