என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

சனி, 14 ஜனவரி, 2012

"தைப்பொங்கல்"


மார்கழியில் கோலமிட்டு மங்கையளை வரவேற்க
ஊரார்கள் ஒன்றாகி உளமெல்லாம் மகிழ்வெய்தி
போராக்கிப் பழம்பொருளைத் தீயாக்கும் பழக்கமெல்லாம்
வேரோடு போனதுவோ வெறும்கதையாய் ஆனதுவோ?

பூமஞ்சள் சூட்டிவைத்து பொட்டிட்ட புதுப்பானை
பூப்போன்ற நகையுடனே புத்தாடை அணிசிறுவர்
புதுவிளைச்சல் பயனெல்லாம் பங்குவைத்துப் பொங்கையிலே
பூச்சூடிய மங்கையிடும் குரவையொலி மறந்தோமா?

பொங்கலுடன் பசுங்கறிகள் பக்குவமாய்ப் பதம்செய்து
செங்கரும்புச் சிறுமஞ்சள் சேர்த்துவைத்த பானையுடன்
செங்கதிரோன் தனைவணங்கி நன்றிதனை நவில்கின்ற
பொங்கலோ பொங்கலென்ற பழம்பாடல் காணோமோ?

கூர்கொம்பில் வர்ணமிட்டு நீள்கழுத்தில் மாலையிட்டு
ஏர் உழுத மாடுகளை அலங்கரித்து அடக்குகின்ற
வீரமிகு விளையாட்டு வீதிகளில் நடப்பதில்லை
மாறுபட்ட வாழ்க்கையினில் மாட்டுப்பொங்கல் மறந்ததுவோ?

காணும் பொங்கலன்று கண்டுஆசி தரவேண்டி
கண்விரித்து அமர்ந்திருக்கும் முதிர்வயது உறவுகளைப்
பொன்பொருளைப் பெறவேண்டி தாய்மண்ணைப் பிரிந்ததினால்
கண்குளிரக் கண்டுவர காலமகள் மறுத்தாளோ

ஏர்உழும் மாடுகளும் தேர்வுலவு வீதிகளும்
சீர்முழுதும் கொண்டசில சிற்றூர்கள் மண்ணிலுண்டு
வேரூன்றிய பழந்தமிழைன் பண்பாட்டுப் பண்டிகையை
தோரணங்கள் கட்டிவைத்து வரவேற்கத் தமிழருண்டு

தைமகளே உனைபார்க்கத் தமிழர்தவம் செய்கின்றோம்
கைவளங்கள் கண்டுமிகக் களிப்பெய்தி வாழ்ந்திடவே
பெய்வளத்தின் பேறுவேடி பெற்றவளின் ஆசிக்காய்
பைந்தமிழால் பாட்டிசைத்துப் பாங்குடனே போற்றுகின்றோம்


தைத்திங்கள் திருநாளைத் தரணித் தமிழன் தழுவட்டும்
வைத்த பொங்கல் பானையெல்லாம் பொங்கிப்பொங்கி வழியட்டும்
தைத்த புத்தாடையெல்லாம் தகதகவென ஜொலிக்கட்டும்
தித்திப்பான திருநாள் என் தமிழனுக்குச் சிறக்கட்டும்

வாராய் தைமகளே வளமனைத்தும் தாராய் தமிழருக்கே!

1 கருத்து:

  1. sooper sooper pa,,

    Happy Pongal to all!
    We thank sun for burning himself to save us.
    We thank plants sacrificing their life for us.
    And we thank all the creatures helping us to live in this world for some time.

    பதிலளிநீக்கு