என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 9 பிப்ரவரி, 2012

வெட்டு மின்வெட்டு வெட்டு ....!

வெட்டு குத்து...போய் இப்போது வெட்டு வெட்டு மின் வெட்டு .... என்றுதான் எல்லா தலைப்புச் செய்திகளும் புலம்பிக்கொண்டிருக்கிறது.

ஒளிமயமான தமிழ்நாட்டை உருவாக்கிக் காட்டுவேன் என்று கூட்டு சேர்ந்து மேடைதோறும் வசனம் பேசி ஒட்டு வாங்கி நாற்காலியில் அமர்ந்தபின்னே இருட்டுக்குள் தமிழகத்தைத் தள்ளிவிட்டு திருட்டு அரசியல் நடத்துகின்றனர்.

நாமெல்லாம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஒரு கருப்பொருளாக இந்த மின்வெட்டும் மாறிவிட்ட ஒரே அவலம் மட்டுமே தற்போது தமிழ் நாட்டில் நிலவுகிறது.  தட்டிக்கேட்க,  யார் என்ற பெரிய கேள்விக்குறி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. 

மிக்சி கிரைண்டர்... டிவி.  லேப்டாப் ஆடு மாடு என்று நாங்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு எங்களுக்கு  ஒட்டு போடுங்கள் என்று கேட்பவர்களிடம்... இவைஎல்லாம் எங்களுக்குத் தேவையில்லை எங்களுக்குத் தேவையானது இதுதான் - இவற்றைச் செய்தால் நாங்கள் ஒட்டு போடுகிறோம் என மக்கள் ஒன்று சேர்ந்து நம் தேவைகளை நிறைவேற்றும் அரசு வேண்டுமென எப்போது முடிவேடுக்கிரார்களோ அப்போதுதான் நாடு உருப்படும். 

முந்தைய அரசு இலவசத்தைக் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறதென்று   சொல்லிவிட்டு அந்த அரசு கொடுத்ததை விட அதிகமாக எல்லாவற்றையும் கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்ததும், ஆறு மாதத்தில் மின்வெட்டை முற்றிலுமாக ஒழித்துவிடும் எமது அரசு என்று ... உதய சூரியன் வேண்டாம் நாங்க முழு சூரியன் என்கிற ரேஞ்சுக்குப் பேசி ஓட்டு வாங்கி பதவிக்கு வந்த வேகத்தில்  அரிசி பருப்பு என அதிகமாகக்  கொடுத்துவிட்டு ... கருணாநிதி  இலவசமாகக்  கொடுத்ததெல்லாம் இவர் "விலையில்லா" பொருளாகக் கொடுத்து ...கூடவே காதில்  அடையாள அட்டை மாட்டிய ஆடுகளைக் கொடுக்க ...பாவம் அந்த ஆடுகளையும் காதை அறுத்து மக்கள் விற்க அராம்பித்துவிட்டார்கள்.

பால் விலையில் இருந்து பஸ் கட்டணம் வரை உயர்த்திட்டு நம் கஜானாவில் காசில்லை. அதனால் வேறு  வழியில்லாமல் விலையேற்றம் செய்தே ஆகவேண்டும் என்ற  கட்டாயத்தில் நமது அரசு இருக்கிறதென்று மக்களிடம் கெஞ்சாத  குறையாக எல்லா விலையும் ஏற்றிவிட்டு இந்த அரசு மேல் மக்கள் கொஞ்சநஞ்சம் வைத்திருந்த / எதிர்பார்த்த நம்பிக்கையையும் குறைத்துக்கொண்டார்கள்.  

இதில் இன்னொரு கூத்தும் நடந்தது.... சமீபத்தில்   டாஸ்மாக் ல் இரவு பத்தரை மணி வரை குடிமகன்கள் இருந்து அங்கேயே குடிக்கலாம் என்று  இரவு 10  மணிவரை இருந்த டாஸ்மாக் ஐ அரை மணி நேரம் அதிகமாக்கியது இன்றைய அரசு.  காரணமாகச்  சொன்னதுதான் பெரிய வேடிக்கை.

அதாவது... இதற்குமுன் இரவு பத்துமணி வரை திறந்திருந்த டாஸ்மாக் கடையில் கடை மூடும்போது வருபவர்கள் சரக்கு வாங்கினாலும் அமர்ந்து குடிக்க முடியாமல் அவதிப்படுகிறார்களாம். அதானால் அவர்களுக்கு அங்கேயே அமர்ந்து குடிக்கும்படி வசதியாக இன்னும் அரை மணி நேரம் அதிகப்படுத்தி இருப்பதாகச் செய்தி வந்தது.  காரணம் என்னவெனில் ..தினம்  அரைமணி நேரம் அதிகமாக்குவதன் மூலம் கணிசமான கோடிகள் வருமானம் அதிகமாக கிடைக்கும் என்பதே. இதில் மக்களின் நலன் குறித்த அக்கறை இந்த அரசிற்கு இருப்பதாக எப்படி நம்புகிறார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

உதய சூரியன் வேண்டாம் என்பக்கம் கருப்பு சூரியன் இருக்கிறது எங்களுக்கு ஒட்டு போடுங்கள் என்று கேட்டுவிட்டு மக்கள் நிம்மதியைக் குலைத்துக்கொண்டு சட்டசபையில் ஒருவர் மாற்றி ஒருவர் குலைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  

சங்கரன் கோவிலில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒற்றை சீட்டுக்காக 26  அமைச்சர்களை அனுப்பிவிட்டு வெறும் ஆறு அமைச்சர்கள் மட்டுமே சென்னையில் வைத்துக்கொண்டு அரசு அலுவல்களை கவனிக்கும் ... இவர்களுக்கு மின்வெட்டாவது ...மக்களைப்பற்றிய கவலையாவது?

தேர்வு நேரம்.... வெய்யில் காலம்....! மாணவர்கள் படிப்பார்களா.. உறங்குவார்களா? கரண்ட் இருக்கும்போது தான் படிக்க முடியும்.... கரண்ட் இருக்கும்போது தான் உறங்க முடியும்... என்று மாணவர்களும் ,...கரண்ட் இருக்கும்போதே சமையல் முடித்து விட வேண்டும்... என்று அம்மாக்களும்... வேலைக்குப் போகும் பெண்கள் படும் அவஸ்தையும்... சிறு தொழிற்சாலைகள் மின்வெட்டினால் எதிர்கொள்ளும் பாதிப்புகளும்....பற்றி நம் அரசு ஏனோ கவலை கொள்வதாகத் தெரியவே இல்லை. 

சித்திரை மாதத்து அக்கினி வெய்யில் வெறும் பதினைந்து நாள் தான் மக்களைப் படுத்தும். ஆனால் மக்கள்மேல் அக்கறையில்லா இந்த அரசு பதவிக்காலம் வரை மக்களைப் படுத்தும்.

ஏதோ தைப்பூசத்துக்கு மௌன விரதம் இருப்பதுபோல் அம்மா வாய்திறக்காமல் இருக்கிறாரே
ஏனென்று எத்தனையோ விதத்தில் யோசித்துப் பார்க்கையில்... மக்களுக்கு மின்வெட்டு அதிகப்படுத்தி அதனால் மக்களை அதிகமான பாதிப்பிற்கு உள்ளாக்கி.... எதாவது செய்து எங்களுக்கு மின்சாரம் தடையில்லாமல் கொடுங்கள் என்று மக்கள் கேட்க ...

இது தான் நான் எதிர்பார்த்ததென்று  கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதொன்றே வழி வேறெந்த மார்க்கமும் இல்லை... நான் ஆந்திரா கர்நாடகா என்று எல்லோரிடமும் கையேந்தி விட்டேன் பலனில்லை... இதொன்றே வழியென்று கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்கப்போகிறாரோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக