என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

தேசியச் சின்னமா கற்பனைப் பாலம்?


கதைகதையாய்க் கட்டிவைத்த காவியத்தில் ராமன்
கடல்கடந்து செல்லஒரு பாலம் அமைத்தானாம்
எதையெதையோ சொல்லிச்சொல் லிஏமாற்றினர் வடவர்
அதையெல்லாம் நம்பிக்கெட்டார் நம்தமிழக மக்கள்!

மயக்கமருந் துகொடுத்தது போல்இராமனின் பின்னே
மடத்தமிழர் இன்றுமுள்ளார் மயங்கிய நிலையில்!
வியக்கும்படி விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட பின்னும்
விளங்கிடாத மாக்களைப்போல் தொடருகிறார் கதையை!

ஆண்டாண்டு முன்பே ஆழிகொண்ட நிலம்மேல்
பாங்காக வளர்கிறது பவளப்பாறை என்றே
அறிவியலார் அறுதியிட்டுக் கூறிவிட்ட பின்பும்;
அறிவற்றோர் கூறுகிறார் ராமர்பால மென்று!

அரசாங்கம் போட்டதொரு சேதுசமுத்திரத் திட்டமதை
அரங்கேற்றும் வேளையிலே முளைத்தது சதித்திட்டம்
மூடத்தனம் மலிந்துவிட்ட காரணத்தினால் இன்று
முடக்குகின்றார் தமிழகத்தை மேம்படுத்தும் திட்டம்

கட்டிய மனைவியைக் காத்திடாத ராமன்
கட்டிய தாய்ச்சொல்லும் பாலமுண்டாம் இன்றும்
அப்படியே அவர்கூறும் கூற்றுபடி சென்றால்;
அப்பட்டமாய் எழுகிறதே ஆயிரமாய்க் கேள்வி

மிதக்கும் கல்லில் பாலமென்று இராமகாதை கூற
மூழ்கும்நிலை வந்ததுயேன் விளங்கும்படி கூறும்?
உடைந்த பொருள் மூழ்குவதே உலகறிந்த கூற்று
உடையும்படி கட்டினானோ ராமபிரான் வீணே!

நன்றாக யோசித்தால் எளிதாய் விளங்குமிரு(விளங்கும் இரு)
நாடுகளை இணைக்கின்ற பாலமிது வென்று
இந்திய இலங்கையை இணைத்திடுது என்றாலிரு(என்றால் இரு )
நாடுகட்கும் சொந்தமன்றோ இவர்கூறும் பாலம்?

எல்லையில் இருந்து கடல்பரப்பின் அளவில்
பன்னிரெண்டு மைல்கள்தான் ஓர்நாட்டின் உரிமை
இருநாட்டின் சொந்தமான கடல்பரப்பை விட்டு
இடைப்பட்ட கடற்பரப்பு உலகப்பொதுவே!

இப்படி இருக்கையிலே முழுதாய்ப் பாலம்
எப்படித்தான் இந்தியர்க்குச் சொந்தம் ஆகும்?
இந்நிலையில் பாலத்தை இந்தியாவின்; தேசியச்
சின்னமாக்க வேண்டுமென்று வடவோர் அலறி

அறிவற்றோர் வடநாட்டில் ஆர்ப்பரிக் கையிலே
முறையற்ற கோரிக்கை இதுவெனக் கூறாதுநம்
முதல்வர் கூடகடித மொன்றைஅனுப் பியதேனோ?
மூடர்களாய்த் தமிழர்களை நினைப்பத  னாலோ?

முழுஉரிமை உள்ளஒரு பொருளைத்தானே நாட்டின்
முறையான சின்னமாக்க முடியும் என்றும்
அறியாது போனாரோ நமையாள்பவர் என்று
தெரியாது போனோமோ மறத்தமிழர்கள் நாமும்?

இராமபாலம் உடைபடாமல் காக்கவேண்டு மென்னும்
இராமதாசர் உளறலைநாம் தடுத்ததை  வெல்வோம்!
மூழ்கிவிட்ட பாலமென்ற கற்பனை உடைத்தே
மூடத்தனத்தில் மூழ்கிவிட்ட மக்களைக் காப்போம்!

கற்பனைக் கதையில் வரும்பாலம் விடுத்து
கற்பாறை சீராக்கிக் கால்வாய் அமைப்போம்
பிற்போக்கு எண்ணமெல்லாம் வீசியெறிந்து - நாட்டை
முற்போக்குப் பாதையிலே கூட்டிச் செல்வோம்!

4 கருத்துகள்:

  1. நீண்ட இடைவெளிக்குப்பின், அழகான கவிதை படிக்க ஆவலாய் இருக்கின்றோம்.. தொடருங்கள் உங்களின் கவிதைகளை கோடை மழையாய்!

    பதிலளிநீக்கு
  2. சிற்றறைவு கொண்டோரின்
    சிறுமதி தனை எண்ணி
    நகையாடும் கவிதை....
    நா நிலத்தோரும்
    வாழ்த்தும் செயலை
    வாழுங் காலத்தில்
    ஆட்சியாளர்கள் மறதிகொண்டு
    வெட்டியாய் கால்ங்கடத்தக்
    கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே!

    கவிதை அருமையாக உள்ளது.!

    பதிலளிநீக்கு
  3. அட!!!!!!!! சகோதரி உன்னில் நான் பார்க்கிறேன்! தந்தையை!! ஆம் பகுத்தறிவு தந்தையை!!!!!!! பரவட்டும் உன் கருத்து! படிக்கட்டும் மட ஆதிபதிகள்!! மறையட்டும் மூடம்!! மலரட்டும் மனித நேயம்!!

    பதிலளிநீக்கு