நண்பரும் நற்றமிழ் நயந்தொரும் வாழ்த்திடும்
கண்பெறும் காட்சியைக் கண்டிடும் பேரினை
என்குலத் தமிழர்க்குத் தந்துநீ மகிழ்கிறாய்!
எத்தரும் புகழுமிப் புத்தி(ர)க் கவிநீ
இத்தரை மீதினில் வந்தநாள் முதலாய்
புத்தமிழ் கொண்டுநற் புத்தியை வளர்த்து
முத்திரைப் பதித்துஎம் மூளையில் அமர்ந்தாய்!
மதிநிறைப் பெரியார் மனத்தினில் நிறைந்தாய்
முதுநிறை வயதிலும் முதுமையை மறந்தாய்
புதியவர் போலவே பொலிவுடன் திகழ்வதால்
அதிசயம் போலவே அனைவரும் காண்கிறோம்!
தடைபல கடந்து தாங்கிய முடியை
இடையறச் செய்த இலக்கியத் தொண்டை
அகவை எண்பத்தி ஒன்பதில் இன்று
அகிலம் பேசி மகிழும் வேளையில்
நேர்மிகு தமிழை நுகர்ந்திடும் வாய்ப்பினை
நீரெமக்குத் தருவீரோ மீண்டும் ஒன்றை
என்றுமைக் கேட்கிறேன் எல்லோர் சார்பிலும்
இன்றைய நாளின் இனியஇவ் வேளையில்!
அரசியற் தொண்டினை அழகாய்த் தொடர
அருமைப் புதல்வன் ஸ்டாலின் உள்ளார்
அருந்தமிழ் தன்னில் உன்னைத் தொடர
பொருந்தியோர் யாரும் இல்லை ஆதலால்
தன்மானப் பெரியார் தந்தநம் கழகத்தின்
உன்னதம் ஒவ்வொன்றும் உருக்கியே தமிழில்
சன்னமாய்க் காப்பியம் ஆக்கியே தாவென்று
உன்னையே மீண்டும் உரக்கக் கேட்கிறேன்.
எம்தமிழ்ப் புலவர்கள் செருக்குடன் சொல்லுவர்!
பொங்குநல் புகழுனைச் சூழ அருள்கென
தங்கிடும் தமிழினில் திரண்டுனைப் போற்றுவர்!
செந்தமிழ் போலநீர் சிறப்புடன் வாழவும்
பைந்தமிழ்ப் போலநீர் பல்லாண்டு வாழவும்
வண்டமிழ்ப் போலநீர் வான்புகழ வாழவும்
உந்தமிழ் கொண்டே உவந்துநான் வாழ்த்தினேன்!
வாழ்க நீர் தமிழ் உள்ளவரை !
வாழும் தமிழ் நீர் உள்ளவரை!
வாழ்க நீர் தமிழின் உள்ளம் வரை!
வாழ்வீர் நீர் தமிழர் உள்ளம் வரை!
- Latharani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக