என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

செவ்வாய், 25 டிசம்பர், 2012

பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?



இந்தியாவின் தலைநகரில் கடந்த ஞாயிறன்று மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் வைத்து 6 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அந்த மாணவி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்க நீதி கேட்டு மாணவர்கள் தொடங்கிய போராட்டம் தில்லியையே நிலைகுலைய வைத்துக்கொண்டிருக்கிறது.

கொடுமையான இந்தச் செயலைச் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப் படவேண்டும்.

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை  அளிக்கவேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருக்கிறது.  ஆனால் மரண தண்டனை கொடுப்பதால் மட்டும் பாலியல் குற்றங்கள் குறையப்போவதில்லை. 

இது போன்ற வன்முறைகள் காலங்காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. காட்டுமிராண்டிகள் போல ஆண்கள் நடந்து கொள்வது இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையான ஒன்றாகத்தான் இருக்கிறது.

பெண்கள் நாகரீகம் என்கிற பேரில் அரைகுறை ஆடை அணிந்துகொண்டு செல்வதால் தான் இது போன்ற பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக வெகுவான மக்கள் புலம்புவது கொஞ்சமும் சரியன்று. அரை குறை ஆடையோடு வரும் பெண்கள் மட்டும் பாலியல் வன்முறைக்கு ஆளாவதில்லை.  புடவை கட்டினாலும், சுடிதார் அணிந்தாலும் பெண்னைப் பலாத்காரம் செய்யும் நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. பள்ளி செல்லும் சிறுமிகள்  மட்டுமல்லாது  இரண்டு வயது மூன்று வயது குழந்தைகள் கூட இதுபோன்ற வெறிச்செயல்களுக்கு ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

பெண்களுக்கு இதுபோன்ற கொடுமையான நிகழ்வுகள் ஏன் நடக்கிறது என்று பார்த்தால்... காமவெறி மட்டுமே காரணமாகச் சொல்லிவிட முடியாது கோபம், பகை, பழிவாங்கும் எண்ணம், போதை, ஒருவித மனோவியாதி இப்படி பல காரணங்கள் இருக்கும்.

போதை தலைக்கேறி செய்வதறியாமல் ஒருவன் குற்றம் செய்கிறானென்றால், காம வெறி தலைக்கேறி இன்னொருவன் அந்த குற்றத்தைச் செய்கிறான்.. இவ்வளவு ஏன் இறந்து போன பின்னும் பெண்களை புணரும் மனோவியாதியுள்ள ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பொதுவாக ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் பகை இருந்தால்  அவனைப் பழிவாங்க வேண்டுமென்று கை கால் வெட்டுவதோ அல்லது கொலை செய்வதோ நடக்கும். ஆனால் அதே ஒரு பெண்ணின் மீது ஒரு ஆணுக்கு பகை ஏற்பட்டால்.... பழிவாங்குவதற்கு அவளை பாலியல் கொடுமை செய்கிறான்.  அதாவது தன்னுடைய பகையாளியை துன்புறுத்த வேண்டும் அல்லது ஒழித்துவிட வேண்டும் என்ற எண்ணம் தான்  இப்படிச் செய்யத் தூண்டுகிறது.   ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டால் அவளை உச்சபட்சமாக தண்டித்து விட்டாதாகத் திருப்தி அடைந்து விடுகிறான். ஏனென்றால் நம் சமூக அமைப்பு பெண்களைச் ஆணுக்கு சமமாக நடத்துவதில்லை. கற்பு என்ற ஒரு  வட்டத்தைப் பெண்களைச் சுற்றி வரைந்து வைத்து அந்த வட்டத்திற்குள்ளேயே வைத்து இன்னும் வளர விடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது.

ஆண் துணை இல்லாமல் பெண்கள் வெளியே போகக் கூடாது, 8 மணிக்குள்ளே  வீட்டிற்குத் திரும்பிவிடவேண்டும்...   சமைக்கணும், வீடு சுத்தம் செய்யணும், குழந்தைகளைப் பார்த்துக்கணும்.... அப்படி இருந்தால் தான் அந்தப் பெண் பெண்ணாக மதிக்கப்படுகிறாள்.  ஆணைச் சார்ந்தே பெண் வாழவேண்டும் என்ற விதி வரையறுக்கப் பட்டு விட்டது.

இதெல்லாம் சென்ற நூற்றாண்டு வரை சரியாக இருந்திருக்கும் . ஆனால் தற்கால சூழ்நிலையில்  ஆணுக்குச் சமமாக பெண்களும் படித்துவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் இரவு பகலென்று பெண்களும் உழைக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் பெண்கள் தைரியமாக எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலுடன் வளர்க்கப் பட வேண்டும். இனியும் பெண் என்றால் அமைதியாக இருக்க வேண்டும்,. அடங்கி நடக்க வேண்டும், எதிர்த்துப் பேசக்கூடாது என்று அடக்கி அடக்கி பயந்தாங்கொள்ளிகளாக வளர்க்க வேண்டாம். நம்முடைய பெண் பிள்ளைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கிறோம், நாட்டியம் சொல்லிக் கொடுக்கிறோம். விளையாட்டு சொல்லிக் கொடுக்கிறோம், சமையல் சொல்லிக் கொடுக்கிறோம்....அதே போல பெண்களுக்கு  தற்காப்புக்  கலைகளையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.    (இந்த தற்காப்புக் கலைகள் பள்ளிக்கூடங்களிலேயே கற்றுக்கொடுத்தால் இன்னும் நலமாக இருக்கும். )

அதேபோல ஆண்பிள்ளைகளுக்கு பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது,  சண்டை போடக்கூடாதுன்னு பலவித ஒழுக்கங்களைச் சொல்லித் தரும் நாம் பெண்களிடம் வரைமுறையற்று நடக்கக்கூடாது என்பதையும் சொல்லித் தரவேண்டும்.

அப்போதுதான் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்கும்.


தில்லியில் நடந்த சம்பவத்திற்கு குற்றவாளிகளை மட்டும் தண்டித்தால் போதாது.
குற்றத்தைத் தடுக்கத் தவறிய அந்த காவலர்களையும் தண்டிக்க வேண்டும்.  அன்று மட்டும் அந்தக் காவலர்கள் (போலிஸ்) தன் கடமையை ஒழுங்காகச் செய்திருந்தால் அநியாயமாக ஒரு ஒரு கல்லூரி மாணவியின் வாழ்க்கை நாசமாகி  இருந்திருக்காது.

அன்று 5 போலீஸ் ஒழுங்காக வேலை செய்திருந்தால் இன்று ஐம்பதாயிரம் போலீஸ் குவிக்க வேண்டிய நிலை வந்திருந்திருக்காது.


5 காவல் நிலையத்தில் இருந்த காவலர்களில் ஒருவர் கூடவா கடமையைச் செய்யும் எண்ணமே இல்லாமல் இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்தால்  "உங்களுக்கெல்லாம் எதுக்குடா காக்கி சட்டை...த்தூ" என்று துப்பத் தோன்றுகிறது.  உலகமே இன்று இந்தியாவைப் பற்றித் தரக்குறைவாகப் பேசுவதற்கு காக்கிச் சட்டையே காரணமாகி விட்டது.

பொதுவாக ஒரு பெரிய சீர்குலைவுக்குப் பிறகு தான் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். அது போல இந்த நிகழ்விற்குப் பிறகாவது பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறைவதற்கு தீர்வு கிடைக்க வேண்டும். இந்தியாவில் பெண்களுக்குப் பாது காப்பில்லை என்ற நிலை மாறி பெண்கள் எந்த நேரத்திலும் வெளியில் சென்று பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமென்றால்....

நாட்டில் பாதுகாப்பு பலமாக்க  அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ( கடமை செய்யத் தவறும் காவலர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.)

பாலியல் குற்றங்கள் செய்வது யாராக இருந்தாலும், குற்றம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டு விட்டால் குற்றவாளி கண்டிப்பாக தண்டிக்கப் பட வேண்டும். அதுவும் குழந்தைகளை சீரழிக்கும் கயவர்களை மிக மிக கடுமையாக தண்டிக்க வேண்டும். இதில் அரசியல் தலையீடு, அதிகாரிகள் தலையீடு, லஞ்சம் கொடுத்துவிட்டு வெளியே வருவது  என்று இப்படி ஏதும் இருக்கக் கூடாது.  இந்தக் குற்றம் செய்தால் நான் கண்டிப்பாக தண்டிக்கப்படுவேன்  என்ற பயம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் தான் இது போன்ற குற்றங்கள் தடுக்கப்படும். 


பார்க்கலாம்.... இத்தனை பெரிய போராட்டத்திற்குப் பிறகு நம் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறதென்று  பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக