என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

செவ்வாய், 22 ஜனவரி, 2013

கடலலையின் வழிநெடுகே....!

(ரசித்த கவிதை : புலவர் திரு. சூசைமிக்கேல் அவர்கள் எழுதிய "எண்ணப்பரல்களில் இன்னும் சில.... :கவிதைத் தொகுப்பிலிருந்து ...)


கடலலையின் வழிநெடுகே தத்தளிக்கும் உறவுகள்...
         கண்ணெதிரே உயிர்துறக்கும் தமிழர் உடன்பிறப்புகள்...
படகுகளில் கரையொதுங்கப் பரிதவிக்கும் முயற்சிகள்...
         பாரதத்துக் கடற்கரையில் தினம்தினம் இந்நிகழ்ச்சிகள்

என்னவெல்லாம் நடக்குதடா ஈழமகன் காணியில்
         எமது ரத்தம் கொதிக்குதடா இவற்றையெல்லாம் காண்கையில்...
 சின்னமதிச் சிங்களனின் வெறியடங்க வில்லையோ
         செந்தமிழன் வாழிடங்கள் சித்ரவதைப் பள்ளியோ?

வாழ்ந்திருந்த தமிழனுக்கு வந்ததென்ன சாபமோ?
         வரலாற்றின் தலைவனுக்கு அகதியென்ற பட்டமோ?
ஊழ்வினையோ, உறுவினையோ, கேட்டதெலாம் உண்மையோ
          ஒருமரத்துப் பறவைகட்கு  முடிவிலாத கொடுமையோ ?

இந்தியனாய்ப் பிறந்ததினால் தமிழனுக்கு மௌனமா?
         இலங்கையிலே பிறந்ததனால் தமிழனுக்கு மரணமா?
கண்திறந்து பார்க்க இங்குத் தமிழனுக்கே  வருத்தமா?
         கனன்றெழுந்து கடிந்துரைக்கத்  தலைவர்கட்கும் தயக்கமா?

மாடுமனை வீடிழந்து மறுகி வெந்து சாவதோ?
         மண்டபத்து அகதி முகாம் அடிமைமுகாம் ஆவதோ?
தேடிவந்த சோதரரைத் தேற்றுவதும் குற்றமோ?
         தேசபக்தி பேசுவோர்கள் சிங்களர்தம் சுற்றமோ?

மண்மூடிப் போகுதடா  மறத்தமிழன் குடிசைகள்
         மாற்றுவழி கேட்குதடா புத்தனின் அகிம்சைகள்
கண்மூடித் தாக்குதடா காடையனின் முப்படை
         கௌதமனே உன்மதத்தைக் கழுகுவசம் ஒப்படை

சர்வதேச நாடுகளும் தமிழருக்(கு)  எதிரடா
         சமாதானம் என்பதெலாம் கடைந்தெடுத்த புதிரடா
பர்வதம்போல் பேச்சின்றிக் கிடப்பது பாரதமடா
         பைந்தமிழர் கண்களிலே வேண்டுதல் விரதமடா

எதைப்புகன்றும் தமிழர்மீது பரிவு இல்லை பாரடா
         எந்த மன்றம் இவர்களுக்குத் தீர்ப்பு கூறும்  கேளடா
இதைவிடவும் தமிழனுக்கு என்ன உண்டு தீங்கடா
         இரக்ககுணம்  பூமியிலே எங்கிருக்கு போங்கடா !


-  புலவர். தொ. சூசைமிக்கேல் ,





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக