என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

செவ்வாய், 22 டிசம்பர், 2015

சிம்புவின் மீது எந்த குற்றமும் இல்லை ...


கவிச்சக்கரவர்த்தி கம்பன் எழுதிய  இராமாயணம்  போல் ஒரு காவியம் உண்டா?  தமிழின் சுவையில் முழுவதும் நனைந்தாலும் ஆங்காங்கே   தெளித்து வைத்த ஆபாச வார்த்தைளை  இதுவரை எல்லோரும் ரசித்துக்கொண்டல்லவா இருக்கிறார்கள்.?  . 

உ.ம் : 
கன்னியர் அல்குல்  தடமென யார்க்கும் 
பதிவு அரு காப்பினதாகி  -  

இது இராமாயணத்தில் அயோத்தி மாநகரத்துக் கோட்டையின் அகழியைப் பற்றி கம்பர் வர்ணித்தது .

அதாவது கோட்டையானது கன்னியரின் அல்குல் போல எவரும் எளிதில் நெருங்க முடியாத காவலை உடையதாக இருக்கிறதாம்.


சிலப்பதிகாரத்தில் இளங்கோ..
இவர் சமணத் துறவியாக ஆகிவிட்ட பின்பே எழுதியது. இங்கும் வார்த்தைகளுக்குப் பஞ்சமில்லை.  இவரும் எழுதுகிறார் . வேட்டுவ வரியில் ... 

ஐயை  திருவின் அணிகொண்டு நின்றவிப்  
பையரவு அல்குல் தவமென்னை கொல்லோ  
பையரவு அல்குல் பிறந்த குடிப் பிறந்த 
எய்வில் எயினர் குலனே குலனும் 

விளக்கம் :- கொற்றவையின் அழகினை ஒப்ப அழகு கொண்டு நின்ற இந்த அரவின் (பாம்பின்) படம் போன்ற அல்குலினையுடையாள் செய்த தவம் யாதோ?

என்றும்,
காவிஅம்  கண்ணார் களித்துயில் எய்த
அம்செஞ் சீரடி அணிசிலம்பு ஒழிய 
மென்துகில் அல்குல் மேகலை நீங்க
கொங்கைமுன்றில் குங்குமம் எழுதாள் 
மங்கள அணியின் பிறிதுஅணி மகிழாள்  (சிலப்பதிகாரம் )

எழுதுகிறார். இவற்றை எல்லாம் போற்றுகிறோம்/

அடுத்து மணிமேகலையில் சாத்தனார்  இப்படிப்பட்ட வார்த்தைகளை உருண்டோட விட்டிருக்கிறாரே  மறுக்க முடியுமா? சக்கரவாளக் கோட்டத்தில் ஒரு பெண்ணின் பிணத்தை கழுகு கொத்தித் திண்பதை  வர்ணித்திருப்பதைப் பாருங்கள்  


உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும் 
களிப்புற அல்குல் கழுகு குடைந்து உண்டு  - (மணிமேகலை சக்கரவாளக் கோட்டம் )

அபப்பா.....ஆபாசத்தின் உச்சம்.

மகாபாரதத்திலும் அங்ஙனமே .... 

இப்படி சங்க இலக்கியங்களில் எல்லாம் இலைமறை காயாக இல்லாமல்  அப்பட்டமாகவே பெண்ணின் அங்கங்களை வர்ணித்து இருக்கிறார்கள், 


இவை மட்டுமல்ல எல்லா பக்தி இலக்கியங்கலிலும்  பெண்ணின் அங்கங்கள் அப்பட்டமாக வர்ணித்துத்தான் எழுதப்பட்டிருக்கிறது.

ஆக, இந்த குறிப்பிட்ட வார்த்தையானது அன்றைய காலத்தில் பழக்கத்தில்/புழக்கத்தில்  இருந்த வார்த்தைகள் தான் என்பது தெளிவாகிறது . இவற்றைத் தூயதமிழ் சொற்களாக ஏற்றுக் கொண்டுள்ளோம். இந்த வார்த்தைகளெல்லாம் தற்போது புழக்கத்தில் இல்லை என்பதாலே இவையெல்லாம்  இலக்கிய வார்த்தைகளாகி விட்டது நமக்கு.

புகழ் மிக்க புலவர்களால் எழுதப்பட்டது என்பதால் இவ்வார்த்தைகள் எல்லாம் தூய்மையானதென்றும்.... சிம்பு என்ற சாதாரண ஒரு நடிகன்... இன்றைய காலகட்டத்தில் புழக்கத்திலிருக்கும் வார்த்தையை .... கம்பன் குறிப்பிட்ட, இளங்கோ குறிப்பிட்ட, சீத்தலை சாத்தனார் குறிப்பிட்ட அக நானூற்றிலும் மற்ற சங்க இலக்கியங்களிலே பெரும்புகழ்  பெற்ற புலவோர்கள் குறிப்பிட்ட "அதே வார்த்தையைத்தான்"  இவனுக்குத் தெரிந்தவாறு இந்தக் காலத்தில் சொற் புழக்கத்தில் உள்ளபடி எழுதி பாடி இருக்கிறான்

தற்காலத்தில், சிம்புவின் பாடலில் இடம் பெற்ற இந்த  வார்த்தையானது நடைமுறையில்  சர்வ சாதாரணமாக சென்னையில் மட்டுமன்றி தமிழகமெங்கும் பலரும்  பேசிக்கொண்டிருப்பதை நாம் அனைவரும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.

சிம்பு  புலவனோ, கவிஞனோ அல்லது முறையாக தமிழ் படித்தவனோ அல்ல.  இதை சிம்பு  எழுதி விட்டான் என்பதற்காக இவளவு பேர் எதற்காகப் பொங்கி எழுந்து போராடுகிறார்கள் என்பதுதான் புதிராக உள்ளது.  அதுவும் அந்த வார்த்தையானது ஒலியால் மறைக்கப்பட்டுத்தான் இருக்கிறது. காலமாற்றத்தில் இவற்றையெல்லாம் சாதரணமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் அற்றவர்களாகவே இருக்கிறார்கள் நம் மக்கள் என்பதுதான் வெளிச்சமாகிறது. அல்லது இதுபோன்ற போராட்டங்களை முன்னெடுத்தால் தங்கள் மேல் வெளிச்சம் விழும் என்ற காரணத்திற்காகத்தான் இப்படிச் செய்கிறார்கள் என்பதும் புலனாகிறது.  அமைதியாக விட்டிருந்தால் இரண்டொரு நாட்களில் மறைந்திருக்கும் ஊதிப் பெருக்கிவிட்டனர் சாமானிய மக்கள் முதல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள் வரை. சுயாலவாதிகளின் திட்டமிட்ட செயலிது. வேறென்ன சொல்வது?

இப்படி எழுதுவதால் உங்களுக்குப் பொறுப்பு இல்லை என்று இதைப் படிக்கும் யாருக்காவது என்னிடம் சீறிவரும் எண்ணம் இருப்பின் அட்டைப் படத்தில் பக்தியும் ஆபாசங்களை  உள்ளடக்கிய அத்தனை சங்க இலக்கியங்களையும் தடை செய்யும்படி  போராடுங்கள். பிறகு பதில் கூறுகிறேன்.

அனைத்திற்கும் மேலாக ஒன்று சொல்ல வேண்டியுள்ளது... இவர்களையெல்லாம் வளர்த்து விட்டவர்கள் நீங்கள் தானே. ஆரம்பத்தில் ரசித்து விட்டு இப்ப்போது அலறுவது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

என்னைப் பொருத்தவரை கம்பன், இளங்கோ முதல் சிம்பு வரை பெண்ணின் அங்கங்களை முன்னிறுத்தி எழுதுவது அருவெறுக்கத் தக்கதே / அதே போல் இவர்ரைஎல்லாம் பெரிது படுத்தி சர்ச்சை உண்டாக்குவதும் அதனினும் அருவெறுக்கத்தக்கதே. 



1 கருத்து:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு