என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

திங்கள், 25 ஜனவரி, 2016

பழுதில்லாத் தமிழுக்குத் திறம்சேர்க்கும் புலவருக்கு….

புலவர் திரு சூசை மைக்கேல் அவர்களின் பிறந்த நாளுக்கு என்னுடைய சிறிதான வாழ்த்து.

சிங்கத்தின் கர்ஜனையா சிறுபூவின் இதழ்வெடிப்பா
பங்கமின்றிப் பண்ணமைத்துப் பாங்காகப் பாடுகின்ற
புங்கைமர நிழலருமை போற்றுகின்ற மிக்கேலாம்
தங்கசூசை பிறந்தநாளும் இதுவென்றே அறிவீரா?
கன்னலென இனிக்கிறது கருத்தமைந்த தாள்களெல்லாம்
முன்னிதுபோல் உண்டதில்லை முறையற்றுப் புகழவில்லை
பின்னையென்ன சொல்வதுநான்; பொருளுணர்ந்து படித்தபோது
அன்னையவள் ஊட்டிவிட்ட அமிழ்துகூட இனித்ததில்லை.
அமுதூட்டும் அன்னையிடம் அடம்பிடித்து விலகிநின்றேன்
தமிழூட்டும் தங்களிடம் தள்ளாடி வந்து நின்றேன்
காஞ்சிமகன் அண்ணாவின் நாத்தமிழைச் சுவைத்ததுபோல்
நாஞ்சில்மகன்; தமிழ்கேட்க நாளெல்லாம் விழைகின்றேன்
ஆய்ந்தெடுத்த அழகுதமிழ் அளந்துவைத்த ஈரடியை
ஓய்ந்திடாது ஒலிக்குமிந்த நாபடைத்த நாவலரை
வாஞ்சையோடு வாழ்த்திடவே வந்துநின்று குவிந்திருக்கும்
நாஞ்சிற்கரை ஓரமெங்கும் நற்றமிழர் கூட்டமம்மா!
எங்குலத்தார் மீன்பிடிக்கும் கரையெங்கும் தமிழ்தூவி
எங்குமுள தமிழ்ப்புலவோர் இயன்றவரை வாழ்த்துகின்றார்
மங்கையரின் குவிமுல்லைச் சிரிப்பெல்லாம் அதுபோல
பங்கொன்றாய்ப் பழந்தமிழால் ஆசிகளை அவிழ்த்(து)திடுதே!
நெய்தல்நிலப் பூதேடித் தேன்உண்ணும் சிறுவண்டும்
பொய்யில்லாப் புலவனவன் புதல்வனையே வாழ்த்திடத்தான்
ஒய்யாரத் தமிழ்ச்சொல்லால் ஒன்றாகப் பாடிடுதே
பொய்யாமொழி இன்று புகழாலே நனைகிறதே!
சிறுகொம்பில் உலவுகின்ற சிற்றணிலே செல்லாயோ
நறுந்தமிழால் வாழ்த்தொன்றை வைத்துவிட்டு வாராயோ?
பெருமணலின் ஓரத்திலே பாய்ந்தோடும் நண்டினமே
சிறிதான என்வாழ்த்தைச் சேர்த்துவிட்டு வாராயோ?
விழுதாகித் தமிழ்த்தாயின் உருவத்தைத் தாங்குகின்ற
எழுதிவைத்த ஓவியங்காள் ஒன்றாகச் சேர்ந்தின்று
பழுதில்லாத் தமிழுக்குத் திறம்சேர்க்கும் புலவருக்கு
முழுதான மனத்தோடு வாழ்த்துங்கள் வாழ்த்துங்கள்!
வாழிய வாழிய வாழிய பல்லாண்டு!
வாழிய வாழிய வாழியவே!
(லதாராணி பூங்காவனம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக