என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

புதன், 13 ஏப்ரல், 2016

மானங்கெட்டவர்கள் உடைத்த மருது பாண்டியர்கள் சிலைகள்



மதுரை திருமங்கலத்தில் மருது பாண்டியர்கள் சிலை உடைப்பு....

தென்னாட்டு வரலாற்றை மாவீரர்களான மருதுபாண்டியர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் எவராலும் எழுதிவிட முடியாது.

தென்னகத்தைத் தாண்டி இவர்கள்  புகழ் போற்றப்படவில்லை என்ற ஒரே காரணத்தினால் தான் மருதிருவர்  என்றால் யாரிவர்கள் என்று கேட்பவர்களே.... கேளுங்கள் 

(என்னால் முடிந்தவரை ஓரு சுருக்கமான செய்தியாகச் சொல்கிறேன்)

17  ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் ஆங்கிலேயனிடம் தன்னை அடகு வைத்துவிட்ட  ஆர்க்காட்டு நவாபின் கையாலாகத்தனத்தினால் ஜெனெரல் ஸிமித் என்ற ஆங்கிலேயன் மறவர் நாட்டின் மீது படையெடுத்து இராமநாத புரத்தைத்தாக்கி 9 வயது சிறுவனான சேதுபதி மன்னனையும் அவன் தாயார் மற்றும் தங்கையை திருச்சி சிறையில் அடைத்தவனுக்கு சிவகங்கை சிம்ம சொப்பனமாக இருந்தது. கிட்டே நெருங்கக்கூட முடியாமல் படைவீரர்கள் தொடை நடுங்கினர். காரணம்  பெரிய மருது சின்ன மருது  என்ற இரு பெரும் வீரர்கள். இவர்கள் இருவரும் வெற்றுக்கதை பேசித் திரிந்தவர்கள் அல்ல. வெள்ளையனின் கண்களில் விரல் விட்டு ஆட்டிய மதயானைகள்.   இருபெரும் இளஞ்சிங்கங்கள் . கப்பம் என்று கேட்ட வெள்ளையனுக்கு கண்களுக்கு நேராகக்  கூர்கத்தியைக் காட்டியவர்கள்.

ஆரம்பத்தில் மன்னர் முத்து வடுகநாதர் போர்ப்படையில் வீரர்களாக இருந்த மருது பாண்டியர்கள் தங்களது நெஞ்சுரத்தாலும் நேர்மையாலும் மதி நுட்பத்தாலும் நன்றி உணர்ச்சியாலும்  மன்னரோடு நெருங்கிப் பழகி அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக உயர்ந்தனர். நாளடைவில் அரசனையும் விஞ்சிய புகழ் பெற்றனர். அரசியார் வேலு நாச்சியாருக்கு போர்க்கருவிகள் பயன் படுத்தும் கலைகளைக் கற்றுக்கொடுதவன் சின்ன மருது. அதனால் தான் அப்பெண்மையின்  நெஞ்சில் ஆண்மை பொங்கியது.

இந்நிலையில் ஆங்கிலேயன் ஸ்மித் தலைமையில் நவாபுகளின் துணையோடும் கூலிப்படைகலின் துணையோடும் சிவகங்கையப் பிடிக்க காளையர் கோவில் காட்டில் மூண்ட போரில் மருது சகோதரர்கள் பகை வீரர்களை பிணக்குவியல்களாக்கினர்.

காட்டிலே போர் நடந்துகொண்டிருக்க காசாசை பிடித்த கயவன் ஒருவனின் துரோகத்தால் கோட்டையைத் தகர்த்து வசமாக்கினர் பகைவர். இதையறிந்த மன்னன் வடுகநாதன் வேதனையுற்றான். மருதுசகோதரர்களோ தப்பிச்செல்வோம். இன்னும் பெரும்படை திரட்டி வந்து போரிடுவோம் புறப்படுங்கள் அரசே எனக்கூற மறுத்துவிட்ட மன்னன் என் கடைசிச் சொட்டு குருதியுள்ளவரை என்னாட்டைக் காக்க போராடுவேன். நாட்டைவிட்டு வெளியேற மாட்டேன் .... அரசியாரைக் காப்பாற்றுங்கள்.  என்றார்.

மன்னனின் கட்டளை ஏற்ற சகோதரர்கள் அரசி வேலு நாச்சியாரை மைசூர் ஆதிக்கத்தில் இருந்த திண்டுக்கல்லிற்கு அழைத்துச் சென்றனர். ஆனால்  அங்கே போர்க்களத்தில் ,  வீரமன்னன் வடுகநாதன் கடுகி வந்த பகைவர்களைஎல்லாம் வெட்டி வீழ்த்தினான். இருப்பினும் கடைசியில் கை கால்கள் வெட்டப்பட்ட நிலையிலேயும் அவர் முகத்தைச் சிதைத்த பகைவன் கூட்டத்தைப் பார்த்து வீரம் சிறிதும் குறைவின்றி எச்சில் உமிழ்ந்து வீரத்தை நிலைநாட்டி வீரமரணம் அடைந்தார்.

அந்த காலகட்டத்தில் தான்  1780 வரை 8 ஆண்டுகள் இராமநாதபுரமும் மறவர் சீமையும் நவாப்புகள் கைவசமாகியது. ஆனாலும் மருது சகோதரர்கள் மறவர் நாட்டு  மக்களிடம் தொடர்பிலேயே இருந்தனர்.  நவாப்புகளால் மக்களிடமிருந்து ஒரு சல்லிக்காசும் கப்பமாக வாங்க முடியாத நிலையிருந்தது.  ஒரு கட்டத்தில் இராமநாதபுரத்திலும் சிவகங்கைச் சீமையிலும் நாட்டில் வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாட, கள்ளர்கள் புகுந்து கொள்ளையிட அவர்களைத் தடுக்க முடியாது திணறிய நவாப் அரசு வேறு வழியின்றி நாட்டை திரும்பவும் கொடுத்துவிட்டு ஓடினர்.

மீண்டும் வேலு நாச்சியாரை ஆட்சியில் அமர்த்தினர் மருது சகோதரர்கள்.  நாச்சியாருக்கு ஆலோசனை கூறும் அமைச்சர்கள் ஆனார்கள் இச்சகோதரர்கள்.

இந்த நிகழ்ச்சிதான் மருது சகோதரர்களின் நேர்மைக்கு எடுத்துக்காட்டு. அரசாட்சிக்கு ஆசைப்பட்டிருப்பின் மிக எளிதாக அரசியாரை வீழ்த்திவிட்டு அரியணை ஏறியிருக்க முடியும் இச் சகோதரர்களால் ஆனால்  மன்னன் வடுகநாதனின் வார்த்தையை ஏற்று அரசியாரை பாதுகாத்து மீண்டும் அரியணை ஏற்றிய ஆண்மையாளர்களாக விளங்கினர்.

அதன் பிறகு 1800 ஆம் ஆண்டு வேலு நாச்சியார் மறைவுக்குப் பின் மருது பாண்டியர்களே சிவகங்கைச் சீமையின் நேரடி நிர்வாகத்தை ஏற்று நடத்தினர்.

அப்போது வெள்ளையர்கள் மருது பாண்டியரிடமிருந்து சிவகங்கை சீமையின் அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் என்று "கப்பம் சரிவரக் கட்டுவதில்லை" என  காரணம் காட்டி மிரட்டிப பார்த்தனர்.

இந்த நிலையிலேதான் வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளையனை எதிர்த்துப் போராடி தூக்கிலிடப்பட அவன் தம்பி ஊமைத் துரை  மருதுபாண்டியர்களிடம் வந்து சேர்ந்தான்.

மறவர் சீமையைக் கைப்பற்ற அவர்கள் வகுக்கும் திட்டத்தை அறிந்த மருது சகோதரர்கள் பரதேசிக் கூட்டத்திற்கு இவ்வளவு மமதையா?  ஒரே ஒரு சலிக்காசும் கப்பம் கட்ட முடியாது என அடியோடு மறுத்துவிட்டனர். எங்கள் மன்னன் வடுகநாதனைக் கொன்ற பரதேசிகளை இனியும் உயிருடன் உலவ விடக்கூடாது. வரட்டும் வெள்ளைப்படை! நாய்க்கும் நரிக்கும் விருந்து படைப்போம் என்று முழங்கினர். சிவகங்கைச் சீமையின் உரிமையை இனி எக்காரணத்தாலும் பறிகொடுக்கக் கூடாது என்று உறுதி பூண்டனர்.

வீரபாண்டியன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த மருதுபாண்டியர்கள் அவர் தமையன் தங்களுடன் சேர்ந்தபின் தீயும் காற்றும் ஒன்று சேர்ந்தது போல் அவர்கள் மனதில் விடுதலைத் தீ இன்னும் ஆவேசமாக எரியத் தொடங்கியது வெள்ளையன் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்திட வேண்டுமென்று மூவரும்  கங்கணம் கட்டிக்கொண்டனர்.

போர்மூண்டது காளையர் கோவில் காட்டில் போர் நடக்கிறது
முவர் தலைமையில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட போர்வீரர்கள் ஈட்டி, வில், வாள், வேல், வளரித் தடி, கதை போன்ற போர்க்கருவிகளுடன் துப்பாக்கி வெடிமருந்துகளுடன் களத்தில் போராடினர். ஆனால் பெரிய பீரங்கிகளை வைத்திருந்த வெள்ளையர்களுக்கோ மறவர்களை வெல்வது இயலாத காரியமாகவே பட்டது.ஆனால் எல்லா இடத்திலுமே ஈனப் பிறவிகள் இருக்கத்தானே செய்கிறார்கள்..

இதோ இங்கேயும் தொண்டைமான் என்ற துரோகி அந்நியன் காலடிக்குத் தன்னை அடைக்கலம் ஆக்கிக்கொண்டான். தாய் நாட்டின் மானம் காக்க தங்களோடு சேர்ந்து போரிடாவிட்டாலும் பரவாயில்லை பகைவர்களுக்குத் துணை னைபோகதீர்கள் என்று மருது பாண்டியர்கள் கெஞ்சியும் அக்கயவன் அன்னியர்களுக்குத் துணை போனான். நீண்ட நாட்கள் நடந்த கடும் போரில் கடைசியாக மருது பாண்டியர்களின் தலைநகரான சிறுவயல் நகருக்குள்ளே  நுழைந்த பகைவர்கள் துரோகிகளின் தயவாலும் பேய்வாய் பீரங்கிகளாலும் பொழிந்த அனல் மழையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தமிழர் படை பின்வாங்கியது. ஆனால் வீரர்கள் மிக மிக அழகாக உருவாக்கப்பட்ட தலைநகரான சிறுவயல் கிராமத்தை வெள்ளையனிடம் விட்டுவிட மனமின்றி தீவைத்துக் கொளுத்தினர்.

சிறுவயல் நாட்டைத் தீக்கிரையாக்கியப்பின் காளையர் காட்டுக்குள்ளே நுழைந்தது மறவர் படை. அயலானுக்கு காட்டில் போரிடுவதென்பது அவ்வளவு எளிதாக இல்லை. அங்கும்  ஒரு உடையனத்தேவன் என்றோர் துரோகியே மறவர்களின் போர் நுணுக்கங்களையும் போர்த்திட்டங்கள் பற்றிய ரகசியங்களையும் அந்நியனுக்குக் கூறி தன் இனத்தாருக்குத் துரோகம் செய்தான்.

இருப்பினும் வீரமறவர்கள் சற்றும் சளைக்க வில்லை  20000க்கும் மேற்ப்பட்ட  வீரர்கள் மருது பாண்டியரும் ஊமைத்துரையும் காட்டிய தியாக நெறியில் நின்று போர் செய்தனர். கைகால்கள் வெட்டப்படும், கழுத்தும் மார்பும் வெட்டப்பட்டும் தலைகள் துண்டிக்கப் பட்டும் துப்பாக்கிகுண்டுகள் துளைத்த மார்புகள் சிந்திய ரத்தமும் என அந்த காளையர் கோவில் காடு முழுவதும் தியாகிகளின் ரத்தத்தால் நனைந்தது.

இப்படி நாட்கணக்கில் நடந்த போரில் எவ்வளவு துயரங்கள் எத்தனை துரோகங்கள், பழிச்சொற்கள் தொடர் தாக்குதல்கள் என அனைத்திற்கும்  உட்பட்டு தாய்நாட்டிற்காக அனைத்தையும் தாங்கிய மருது சகோதரர்கள் துரோகிகளின் சூழ்ச்சியால் நாட்டுமக்கள் ஒற்றுமை இன்றி பிளவுபட்டு நிற்பதைப் பார்த்து கலங்கினர்

இதனிடையில் போரின் தீவிரம் பன்மடங்காகியது  பரங்கியர் படை காளையர் கோவிலில் நுழையுமளவு வந்துவிட்டது. எண்ணற்ற வீரர் மாண்டனர். அந்நேரம் முப்பெரும் வீரர்களின் தலைக்கு விலை வைத்தான் வெள்ளையன்.

இந்நிலையில் ஓர் நாள் தன் படை வீரர்கள் உணவின்றித் தவிப்பதைக் கண்டு மனம் பதைத்த மருதுசகோதரர்களும் ஊமைத்துரையும் மனம் சோர்ந்தவர்களாய் காட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அதை எப்படியோ மோப்பம் பிடித்த வெள்ளை வெறிநாய்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டது அப்போதும் புலியெனப் பாய்ந்து போரிட்டனர் மறவர் சகோதரர்கள். ஆனால். எதிரியின் ஒரு துப்பாக்கிக் குண்டு பெரிய மருதுவின் தொடையில் பட்டுக் குருதி கொட்டியது.

இந்தக் காட்சியை பேராசிரியர் நா. சஞ்சீவி அவர்கள் எழுதுவார் ...

"முப்பெரு வீரர்களுக்கும் கம்பெனி சிப்பாய்களுக்கும் இடையே இறுதிப் போர் நடந்தது ... அப்போரிலும் கம்பெனி சிப்பாய்களைஎல்லாம் வெட்டி வீழ்த்தி மருது சகோதரர்களும் ஊமைத் துரையும் வெற்றிபெற்று விடுவார்கள் என்ற நிலை இருந்த போது ஒரு துப்பாக்கிச் சுட அந்தோ ! பெரியமருதுவின் தொடையில் பட்டு எலும்பு முறிந்தது. எந்த மாவீரன்- எந்த கன்னித்தமிழ் நாட்டின் உரிமையும் மானத்தையும் காக்கப் பாடுப்ட்டானோ அவனே - அதே மண்ணில் காலூன்றி  நிற்கவும் வலிமையற்றவனாய் தரையில் தமிழ்த் தாயின் மடியில் சாய்ந்தான். .............. அவன் தொடையிலிருந்து வழிந்த ரத்தம் தமிழ் மண்ணை நனைத்துப் புனிதமாக்கியது! ஆம் அவன் குருதி பட்டுத் தூய்மையடைந்த மண்தான் நம் தாயகமாம் தமிழ்நாடு".

ஒற்றை விரலால் வெள்ளிக்காசை வளைத்து நசுக்கி வீசியெரியும் மாவீரன்,- ஓய்வின்றி வாளேந்திப் போரிட்ட வீர மறவன் நிற்கமுடியாமல் வலுவிழந்து தரையில் வீழும் காட்சியைக் கண்டு  வேறொரு புறமாக பகைவர்களை துரத்தியடித்துக்கொண்டிருந்த  ஊமைத்துரையும்  சின்ன மருதுவும் ஓடோடி வந்தனர் .. கீழே சரியும் தன் அண்ணனின் உடலைத் தன் தொடைமீது தாங்கினான் சின்ன மருது.  இதுதான்   சமயமென்று  சுற்றிவளைத்து மூவரையும் பிடித்து கைகளில் விலங்கிட்டது  பரங்கியர் படை.

அந்த வெறிபிடித்த வெள்ளையர்கள் வீரர்கள் மூவரையும்  திருச்சி கோட்டைக்குத் தூக்கிச் செல்லும் வழியிலேயே மருதுசகோதரர்களை  மட்டும் ஒரு மரத்தில் தூக்கிட்டுக் கொன்றனர். பிறகு ஊமைத்துரையையும் சீமையின் தலைநகரான பாஞ்சைப்பதியில் மரம் நட்டு தூக்கிட்டுக் கொன்றனர்.

இன்று சிலை வடிவில் நிற்கும் இச் செந்தமிழ் வீரர்களுக்கு  - தாய்நாட்டின் மானம் காத்த மாண்பு மிக்க வீரர்களுக்கு - வாழ்வின் கடைசி நொடி வரை  போராடிப் போராடி உயிர் துறந்த அந்த மாவீரர்களுக்கு நன்றிக்கடன் பட்டவனே ஒவ்வொரு தமிழனும். இந்த வீரத்தியாகிகள் ஜாதிபேதமற்று அனைத்துத தரப்பினராலும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் . இவர்களின் நாட்டுப் பற்று போற்றுதற்குரியது.


இப்படிப்பட்ட மருதுபாண்டிய சகோதரர்கள் தேவரினத்தாருக்கு மட்டும் சொந்தமானவர்கள் அல்ல. ஒவ்வொரு தமிழனின் நாடி நரம்பில் உயிர்த்துடிப்புடன் இருக்க வேண்டியவர்கள்.

இப்படி தாய் நாட்டின் மானம் காக்க தங்கள் உயிரையே தியாகம் செய்த அந்த இரு சகோதரர்கள் சிலைகள் தான் இன்று தமிழகத்தில் உடைத்து நொறுக்கப் படுகிறது. எவ்வளவு ஈனச் செயல் இது? எப்படிப் பொறுப்பது இந்த கோரச் செயலை? எந்தக் கயவனின் தூண்டுதலால் இப்படிப்பட்ட செயல் நடந்தேறியது?

மருது சகோதரர்களின் சிலை உடைப்பை முக்குலத்தோர் மட்டும்தான் கண்டிக்க வேண்டுமென்பதில்லை.. ஒவ்வொரு தமிழனுக்கும் இந்த உணர்வு வந்திருக்க வேண்டாமா?  ஒவ்வொரு தமிழனின் குருதியும் கொந்தளித்திருக்க வேண்டாமா?

ஆனால் ஜாதி என்ற ஒரு வேறுபாட்டினால் மற்றவர்கள் நமக்கென்ன என்று இருப்பதே நம் சாபக் கேடு. இதற்கெல்லாம் காரணம் இப்படிப்பட்ட வீரர்களின் வரலாறுகளை நாம் அறியத் தவறியதுதான் . தாய்நாட்டிற்காகத் தூக்குமேடையில் தொங்கிய அத்திருவுருவங்களை வணங்கி நன்றி செலுத்த வேண்டாமா?

அந்தத் தியாகச் செம்மல்களின் திருவுருவங்களின் தலைகளை வெட்டிச சிதைத்தது மன்னிக்க முடியாத குற்றமல்லவா? இப்படிப்பட்ட   அயோக்கியத்தனங்களைச்  செய்தவர்களை சும்மா விடலாமா? இவர்களையெல்லாம்  நடு ரோட்டில் ஓட விட்டு வெட்டினாலும் குற்றமில்லை ... உடம்பெல்லாம் சுட்டுத் துளைத்தாலும் தவறில்லை.

பொங்கி எழுங்கள் தமிழினமே! வீரர்களின் தியாகத்தைப் போற்றிடப் பழகுங்கள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக