என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

சனி, 23 ஏப்ரல், 2016

புத்தகங்களும் நானும் ...


இன்று உலக புத்தக நாள்.


"தினம் ஒரு செடிக்காவது  நீரூற்றாமல் காலை உணவை சாப்பிடாதே; எதாவது ஒரு புத்தகத்தில் பத்து பக்கங்களாவது படிக்காமல் உறங்காதே "
என்று என் அப்பா எப்போதும் சொல்வார்.

இயற்கையின் உன்னதமும் படிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் அற்புதமான இந்த வரிகள் இப்போதும் என் நெஞ்சில் பதியம் போட்டது போல் பரவிக்கிடக்கிறது.

புதிதாக ஒரு புத்தகத்தை வாங்கி அதைத் தொடும்போதே நமக்குள் ஒரு இனம் தெரியாத பரவசம் ஏற்படும். என்ன மாயமோ தெரியாது புது புத்தகத்தின் வாசமே ஒரு அலாதியான இன்பத்தைக் கொடுக்கும் எனக்கு.

ஒவ்வொரு புத்தகமும் யாரோ ஒருவரின் அனுபவத்தின் வெளிப்பாடு தான். ஒவ்வொரு புத்தகங்களுக்குள்ளும்  அந்த புத்தகத்தைப் படைத்தவனின் உயிர்மூச்சு  இன்னமும்  உலவிக்கொண்டிருப்பதை என்னால் உணரமுடியும்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழியில் இயற்றப்பட்ட புத்தகங்களே மனதிற்கு நெருக்கமானதாக அமையும்.  அப்படி இருக்கையில் உலக முதல் மொழியான நம் செம்மொழி தமிழின் ஒப்பற்ற களஞ்சியங்களான புத்தகங்களை நினைத்தாலே எனக்கு அளவுக்கு மீறிய கர்வம் துளிர்க்கும்.

நம்முடைய முன்னோர்கள் அவர்கள் வாழ்க்கை முறை, பண்பாடு, கல்வி, புலமை அத்தனையும் நாமெல்லாம் அறியும்படி ஓலைச்சுவடிகளில் பதித்துவைத்துச் சென்றதையும் அந்த ஓலைச் சுவடிகளையெல்லாம்  ஓடி ஓடி தேடித் தேடி புத்தகங்களாக்கிய தமிழறிஞர்கள் மழவை மகாலிங்க அய்யர், உ வே சாமிநாத அய்யர், ஆறுமுக நாவலர் வையாபுரிப் பிள்ளை இவர்களையெல்லாம் இன்று நினைத்துப் பார்க்கிறேன். அவர்களின் தமிழ்த்தொண்டு பற்றி நினைத்தாலே வியப்பாக இருக்கிறது.

தமிழ் இலக்கியங்களைஎல்லாம் ஒழித்திட வேண்டுமென்ற ஆரியர்களின் எத்தனையோ சூழ்ச்சிகளையெல்லாம் கடந்து நம் கையில் அரிய பல புத்தகங்களை விட்டுச் சென்ற இந்த மாமேதைகளுக்கெல்லாம் தமிழுலகம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது.

இப்படிப்பட்ட கடின உழைப்பெல்லாம் கொட்டி புத்தகங்களை ஆக்குவதென்பது சிரமம் தான். அனால் அந்தப் புத்தகங்களைப் படிப்பதில் என்ன சிரமம் இருக்கிறது?  படிக்கும்போது தான் உண்மையை உணரமுடியும்.

ஆறுமுக நாலவர் இலங்கையச் சேர்ந்தவர்... அவர் சரித்திரத்தில் இப்படி ஒரு வரி வரும்...

"ஒரு வித்துவான் தான் கற்கும் காலத்திலேயே எழுதிய நூற்குறிப்புக்களை 
மரணிக்கும் காலத்திலேயே தமக்கு முன்னே கொண்டுவந்து சுட்டுப் போடுதல் வேண்டும் என்று சொல்லி சுட்டுவித்து , அதன் பின்னரே தம் உயிர் போகப் பெற்றார்" ... எவ்வளவு கொடுமை பாருங்கள். இந்த வழக்கம் காலங்காலமாகப் பின்பற்றப் பட்டுக்கொண்டு வந்துள்ளது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

இன்னும் சில இடங்களில் ஒரு படி மேலே போய் "தமிழ்ப் பண்டிதர்கள் மரணித்தால் அவர்கள் எழுதிய கவிதைகள், குறிப்புக்கள் மட்டுமன்றி அவர் வாசித்த புத்தகங்கள் அனைத்தையும் கொண்டுவந்து எரித்த பின்னேதான் சவ அடக்கம் நடை பெற்றும் இருக்கிறது. இதை ஒரு சடங்காகவே செய்து வந்துள்ளனர். இப்படியெல்லாம் எத்தனை எத்தனை நாம் இழந்திருக்கிறோம்?   இப்படி நம்  தமிழை அழித்திட வேண்டுமென்று நினைத்தவர்களையெல்லாம் துரும்பென உதறிவிட்டு தூண் போல் வானளாவி நிற்கும் தமிழை எப்படி புகழ்வது?

நான் எப்போதுமே தனிமையாக உணர்ந்ததே இல்லை. எப்போதுமே என்னோடு அவ்வையார், காளமேகம், பாரதி தாசன், பாரதி, டா.நா. சஞ்சீவி, எஸ்.எம். கமால். இராசமாணிக்கனார்,அயோத்திதாசர், அண்ணா என அத்தனை பேருமே என்னோடு புத்தக வடிவில் இருந்துகொண்டேதான் என்னோடு பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

ஆயிரம் வருடத்திற்கு முந்தைய காலத்திற்கு என்னை அழைத்துச் செல்வதும்  100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் எப்படி இருப்போம் என்று எண்ணச் செயவதும் புத்தகங்களே... ஆயிரம் ஊர்களுக்கு நம்மை அழைத்துச் செல்வதும் ஆயிரம் மனிதர்களுடன் நம்மைப் பேசச் செய்வதும் புத்தகங்களே.

சிலநேரங்களில் நான் புத்தகங்களுக்கு அடிமையாகி விட்டது போலவே தோன்றும். ஆனால் பிறகுதான் புரியும் ஒரு புத்தகத்தை எடுத்து அதைப் படிக்க ஆரம்பித்தால் நமக்குத் தெரியாத எத்தனையோ கேள்விகளை நம்முள்ளே இருந்து எழச்செய்வதும் அதற்கான பதிலை உணரச்செய்வதுமான  வேலையை நம்முள்ளே அப்புத்தகங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும். படித்து முடித்தவுடன் நம் மனமும் உதடும் சேர்ந்து  உதிர்க்கும்  அந்தச் சிறு புன்னகையை அப்புத்தகத்திற்குச் சமர்ப்பிக்கும்போது நமக்குள்  ஏற்படும் ஒரு புத்துணர்ச்சியை, உள்ளக் கிளர்ச்சியை அறிந்தோர் அறிவர்.

எப்போதுமே நான் எந்த  ஒரு நூலகத்தினுள் நுழைந்தாலும்  . .. இதோ இங்கு நான் இருக்கிறேன்... என்னை எடுத்து வாசித்துப் பார் .... என் சிந்தனைகளை இங்கே கொட்டி வைத்துள்ளேன்... என் ஏக்கங்கள் இதற்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது .. இதோ என் ஒவ்வொரு தாள்களிலும் வீரம் கொப்பளித்து வெளியேறிக் கொண்டிருக்கிறது...  என்னுடைய காதல் இதிலே வழிந்தோடிக் கொண்டிருக்கிறது... இதோ நம் வரலாறு... இதோ இதில் துரோகிகளை அடையாளம் காண்பாய்.... இதோ பெண்ணின் உரிமை... இங்கே பகுத்தறிவு... இங்கே கடவுளை அறி... என்னுள் மனிதனை அறி.....    இங்கே நாத்திகம்... இதிலே ஆத்திகம்....இவைதான் இலக்கணம்... இதுவே இலக்கியம் என ஒவ்வொரு புத்தகமும் என்னை அழைப்பது போல் உணர்வேன். ஒவ்வொரு படைப்பாளியும் என்னோடு பேசுவது போலவே உணர்வு வரும்.... அப்படி புத்தகத்திற்கும் எனக்குள்ளுமான ஒரு உறவு மிக நீளமானது. அதை ஓரிரு வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.

உலகில் பிறந்த மனிதருள் புத்தகங்களைத் தொட்டுச் செல்லாதவர் என்று யாருமே இருக்க முடியாது. ஒவ்வொரு புத்தகங்களும் தன்னுள்ளே ஒரு புதையலை பொத்தி வைத்துள்ளது. அதனால் தான் புத்தகத்தை  "பொத்தி + அகம்  = பொத்தகம்" என்று சொல்ல வேண்டுமென்று அய்யா செல்லப் பெருமாள் அவர்கள் கூறுவார் .

எவ்வளவு பொருத்தம் பாருங்கள்... எந்தப் புத்தகத்தையும் நாம் பிரித்துப் படித்துப் பார்க்காதவரை அதில் புதைந்துள்ள விஷயம் என்ன என்று யாரால் கணிக்க முடியும்?

ஒரு நாட்டின் செல்வமே புத்தகங்கள் தான். அப்படிப்பட்ட செல்வங்களைக் காப்போம்.  யாழ்ப்பாண நூலகத்தை அழித்த பாவிகள் போல், அலெக்ஸாண்டரியா நூலகம் அழிந்ததுபோல், பாரதி தாசன் நூலகத்தை அகற்றியது போல்  இல்லாமல்... நம் தமிழ் நாட்டின் பொக்கிஷங்களை உள்ளே வைத்திருக்கும் "அண்ணா நூற்றாண்டு நூலகம்" என்ற அந்த "நூற்கோவிலைக்" காப்போம்.

புத்தகங்களை வாசியுங்கள் .... வாசித்துப் பாருங்கள் ....  வாசித்துக் கொண்டே இருப்பீர்கள்.. . உங்களை ஒரு புது உலகத்திற்கு கைப்பிடித்து அழைத்துச் செல்வதை உணர்வீர்கள்.


உலக புத்தக தினத்தை சிறப்பாக கொண்டாடுவோம்.  வாழ்த்துக்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக