என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

நீதிபதியின் கண்ணீர் ஆபத்தின் அறிகுறி!


24-04-2016 அன்று தில்லியில் நடைபெற்ற மாநில முதல்வர்கள், உச்ச நீதி மன்ற மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்ற மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான திரு. தாகூர் பிரதம மந்திரி நரேந்திர மோடி முன்பு கண்ணீர் சிந்தி போதுமான அளவு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

1987 ஆம் ஆண்டு 10 லட்சம் மக்களுக்கு 100 நீதிபதிகள் என்ற அளவில் நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும் என்று சட்டக் கமிஷன் பரிந்துரை செய்ததையும் ஆனால் இதுவரை  நீதிபதிகளின் நியமனம் நடைபெறவில்லை எனவும் இதுவரை வந்த அரசுகள் சட்டக்கமிஷனின் ஆலோசனைகளை பூர்த்தி செய்யாமல் அலட்சியமாகவே இருந்துள்ளது எனவும்  கூறினார்.

மேலும், போதுமான நீதிபதிகள் இல்லாததால்தான்  ஏராளமான வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும் அதனால் குற்றம் சுமத்தப்பட்டவர்களும் நீதிகேட்டு வந்தவர்களும் வழக்குகள் முடியாமல்  துன்பப்படுகிறார்கள் எனவும் கண்ணீர் மல்கக் கூறினார்.

ஒரு நாட்டில் அந்நாட்டு ஜனாதிபதிக்குப் பின் அதிகாரமிக்க பதவியில் உள்ளவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான். அவர்கள் நாட்டின் பிரதம மந்திரி தவறிழைப்பின் அவர்மீது நடவடிக்கை எடுக்கும் முழு அதிகாரம் கொண்டவர்கள். அதன்பின் அவரை பதவியிலிருந்து விலக்கும் அதிகாரமும் மற்றும் 10 வருடம் அரசியலில் ஈடுபட முடியாத அளவிற்கு தடை விதிக்கும்  அதிகாரமும் கொண்டவர்கள். 

ஆனால் இன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமைநீதிபதி பிரதம மந்திரி முன்பு கண்ணீர்விடும் அளவிற்கு ஆளாக்காப்பட்டிருக்கிறார் என்றால் நம்முடைய அரசியல்வாதிகள் நீதிமன்றத்தின் அதிகாரத்தை எந்த அளவிற்கு பலமிழக்கச் செய்திருகிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

இந்தச் சூழ்நிலைக்குக் காரணம்  நீதிபதிகளின் சம்பளம் மற்றும் சலுகைகள் அனைத்தும்  மாநிலஅரசின்  பொறுப்பில்  இருப்பதும் அதற்குத் தேவையான நிதி மத்திய அரசிடமிருந்து பெறவேண்டும் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் அந்த நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் சரியானபடி அளிக்காமல் தாமதப்படுத்துவதும்,  மட்டுமன்றி  நீதிபதிகள் நியமனத்திற்கு உளவுத் துறையிலிருந்து கிடைக்க வேண்டிய விசாரணை அறிக்கையும்    தாமதப்படுத்தப்படுவதையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.   இந்தக் காரணங்களினால்தான்  தேவையான அளவிற்கு நீதிபதிகளின் நியமனம் நடைபெறாமல் தாமதப்படுத்தப்படுகிறது என்பது உண்மை. 

இப்படி வருடக்கணக்கில்மத்திய அரசு அலட்சியமாக இருந்துவிட்டதால்தான் இன்று நீதித்துறைக்கு அரசியல்வாதிகளால்  இந்த அளவிற்கு அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது என்பது கண்கூடு.

இன்று, இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் கண்ணீர் மூலம் நமக்கு என்ன தெரிகின்றதென்றால் நீதித்துறை மிகவும் பலவீனமடைந்திருக்கிறது / நீதித்துறை தன் சுயஅதிகாரத்தை  இழந்துகொண்டு வருகிறது.  இது நம் நாட்டிற்கு பேராபத்து என்பதுதான். 

இதற்குமுன் ஒரு முறை நீதித்துறை அதன் சுயஅதிகாரத்தை இழந்த போது அதனால் ஏற்பட்ட  விளைவுகளை நன்றாக நாடு அறியும். அதாவது இந்திரா காந்தி ஆட்சியின் போது அவர்  கொண்டுவந்த எமர்ஜெ ன்சி காலமும் அதன் விளைவாக நாட்டு மக்களைக் காக்க வேண்டிய நீதித்துறை தன்னுடைய தனித்துவத்தை இழந்து மக்களின் உரிமைகளை காக்கத் தவறியதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

மொத்தத்தில் இது நீதிபதியின் கண்ணீர் அல்ல. இந்திய  மக்களுக்கு அளித்த ஓர் எச்சரிக்கை மணி.

- லதாராணி  பூங்காவனம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக