என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

சனி, 25 ஜூன், 2016

கே.ஆர்.கௌரியம்மாவின் 97-வது பிறந்தநாள் கொண்டாட்டம்






நேற்று 24/06/2016 வெள்ளிக்கிழமை அன்று கேரளா ஆலப்புழை லயன்ஸ் கிளப்பில் கேரளத்து ஜான்சி ராணி என்று அழைக்கப்படும் கே. ஆர். கௌரி அம்மா அவர்களின் 97 ஆவது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அம்மையார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வழங்கியும் அவரிடம் ஆசிகள் பெற்றும்  விருந்துண்டும்  மகிழ்ந்து சென்றனர்.



நூற்றாண்டுகளுக்கு முன்பான திராவிடர்கள் வாழ்க்கை முறை குறித்தும் அக்கால கட்டத்தில் நடந்த போராட்டங்கள் குறித்துமான என்னுடைய ஆராய்ச்சியில் குறிப்பாக பெண்ணினத்திற்கு எதிரான நியமங்களும் அதற்கெதிரான போராட்டங்களும் குறித்து தேடியபோது   "கௌரி அம்மையுடை ஆத்மகாதா " என்ற புத்தகத்தில் எனக்குத் தேவையான விஷயங்கள் இருந்ததைப்  படித்தேன். அவற்றையெல்லாம் கௌரி அம்மாவிடமே நேரடியாகச் சென்று கேட்டு பதிவிடலாம் என்று 10 நாட்களுக்கு முன்பு கேரளா சென்று கௌரி அம்மா அவர்களைச் சந்தித்து அது குறித்துப் பேசிவிட்டு வந்தேன்.அப்போது 24 ஆம் தேதி தன்னுடைய  "பிறந்தநாள் விழாவில் பங்கேற்கவேண்டும் என்றும் அன்று அம்பலப் புழா பாயசம் உண்டு அது கழிச்சுட்டு போனம்"  என்று  அன்புக் கட்டளை இட்டார்.


வாழ்க்கையில் மிக அரிதான தருணமாக கௌரி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று அம்மா அவர்களுக்கு ஒரு பூங்கொத்துடன் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய "இராவண காவியம்" நூலையும் பரிசளித்தேன்.
மிகுந்த விருப்பத்தோடு அப்புத்தகத்தை வாங்கிய கௌரியம்மா..... How can I read this Tamil book?  என்று கேட்டு பிறகு இது என்ன புத்தகம்? யார் எழுதியது? எதைக்குறித்து? என்றெல்லாம் கேட்டு  புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தார்.


இது தமிழ்ப்  பேரரசன் இராவணன் காவியம் என்றும், உரைநடையுடன் கூடியது என்றும் கூறினேன். பிறகு புலவர் குழந்தையவர்களைப் பற்றி கேட்டறிந்தார்.  தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் என்று கூறினேன். சிறிது நேரம் புத்தகத்தின் தாள்களை பிரித்துப் பிரித்துப் பார்த்தார்.   கௌரி அம்மாவுடனே இருக்கும் அவரின் வழக்கறிஞர்  திரு. சுனில் என்பவர் தமிழ் அறிந்தவர்கள் உள்ளார்கள் அவர்களிடம் கொடுத்து படித்துக் காட்டச் சொல்கிறோம் என்று கூறினார்.  அதன் பிறகே புத்தகத்தை அவரிடம் கொடுத்தார்.

97 வது வயதிலும் ஒரு புத்தகம் கொடுத்தபோது அதை வாசிக்கும் பழக்கமும் ஆர்வமும் சற்றும் குறையாதவண்ணம் இருக்கும் அம்மையாரைக் கண்டபோது உள்ளபடியே ஆச்சரியம் மேலோங்கியது. வேறு மொழியில் உள்ளதால் தன்னால் நேரடியாகப் படிக்கமுடியவில்லையெனினும் மொழியறிஞர்களிடம் கொடுத்துப் படிக்க வைத்து கேட்பதாகக் கூறிய பாங்கு உண்மையிலேயே உயர்ந்தோரிடத்தில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. தமிழகத்தில் நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவரர்களைப் போன்றே புத்தகங்கள் நாளிதழ்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவராக உள்ளதை காண முடிந்தது .

தந்தை பெரியார் மற்றும் நாகம்மையார்  அவர்களுடன் இணைந்து  வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்த கௌரி அம்மா அவர்களின் 97 வது  பிறந்தநாள் விழாவில் பங்கேற்றது உண்மையிலேயே கிடைப்பதற்கறிய அரியதருணம்.  அந்த விழாவில் கௌரி அம்மா அவர்கள் தன்னுடைய கையால் எனக்கு "கேக்" ஊட்டிவிட்டார். மிக மகிழ்வான அந்த நேரமும் பிறகு அவருடன் சேர்ந்து மீன், இறைச்சி மற்றும் பலவகையான உணவுகளுடன் கேரளாவின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலப்புழா அம்பலப் பாயாசத்துடன் சேர்ந்த "கேரள சத்யா" (கேரளாவின் பாரம்பரிய உணவுகள் கொண்ட விருந்து)  உண்டு உவந்து வந்தேன்.

இந்தியாவிலேயே கௌரி அம்மாவைப் போன்ற மிக்க அறிவும் தைரியமும் உள்ள வேறு பெண்மணி எனக்குத் தெரிந்து இல்லையென்றே கூறுவேன்.  இந்தியாவிற்குக் கிடைத்த போற்றிப் பாதுகாக்கவேண்டிய பெரிய பொக்கிஷம் கௌரி அம்மா. இவர் இன்னும் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மக்களுக்கு தான் பெற்ற அனுபவங்களையும் அறிவுரைகளையும் பகிர்ந்து இன்புறவேண்டும் என்று இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.


லதாராணி பூங்காவனம் ,
சென்னை 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக