என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

திங்கள், 11 ஜூலை, 2016

சிவவாக்கியர் பாடல்கள் - மூடப்பழக்கங்களைச் சாடுதல்



சமுதாயத்தில்  புரையோடி விட்டிருக்கும்  மூடப் பழக்கங்களைச் சாடும்
வித்தியாசமான   சித்தராக   சிவவாக்கியர்  காட்சி   தருகின்றார்.   ஆசார,
அனுஷ்டானங்களைக்  கடைபிடிக்கிறேன்  பேர்வழி என்று தேவையற்ற மூடப்
பழக்கங்களில்  மூழ்கித்  தவிக்கும்   மூடர்களைக்   கரையேறி   உய்யுமாறு
சிவவாக்கியர் அறிவுறுத்துகின்றார்.


     “பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
     பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
     ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
     ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே” (37)


என்று உண்மை பூசை பற்றியும்,
     
   “வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர்
     வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
     வாயிலெச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
     வாயிலெடச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே”


என்று  எச்சில்  படாமல்  பூசை  செய்ய வேண்டும் என்று மடிசாமிதனமாகப்
பேசும் அறிவிலிக்கு எச்சிலைப் பற்றி விளக்கம் தருகின்றார்.

வாயினால் ஓதப்படுவதால் வேதத்திலுள்ள  மந்திரங்களும் எச்சில், பசு
மடியில் கன்று குடித்த  பால் எச்சில்,  மாதிருந்த விந்து எச்சில், மதியுமெச்சி
லொளியுமெச்சில்  மோதகங்களான  தெச்சில் பூதலங்களேழும் எச்சில் எதில்
எச்சிலில்லை? என்று கேள்வி எழுப்புகின்றார்.

     
     புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர்
     புலாலைவிட்டு மெம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே
     புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய்
     புலாலிலே முளைத் தெழுந்த பித்தர்காணு மத்தனே” (149)



என்று புலால் மறுத்தலை எள்ளி நகையாடுகின்றார். இன்னும்,

     “மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
     மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
     மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
     மானுரித்த தோலலோ மார்புநூல ணிவதும்” (159)


   ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர் 
   ஆட்டிறைச்சி அல்லவோ யாகம்நீங்கள் ஆற்றலே 
   மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர் 
   மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது.

என்ற  பாடலில்  மாட்டிறைச்சி   தின்பது  பாவம்   என்று  அருவறுக்கும்
வேதியர்களே  மாட்டிறைச்சிதான்  உரமாக காய்கறிக்கிடுவதை அறிவீர்களா? 


ஆட்டிறைச்சி  தின்றதில்லை என்கிறீரே, உங்கள் யாக வேள்வியில் ஆகுதி
செய்யப் படுவதும், நெய்யாய்  இடுவதும் எது  என்பதை யோசிப் பீர்களாக
என்கிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக