என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

செவ்வாய், 12 ஜூலை, 2016

விச்சுளிப் பாய்ச்சல்

நம்முடைய  முன்னோர்களின்  திறமைகள் காணும்போது எப்போதுமே ஆச்சர்யம் நிறைந்ததாகவே உள்ளது. எத்தனையோ கலைகளுக்கு  இருப்பிடமாகத் திகழ்ந்தது நம் தமிழகம்.

ஆனால் எல்லாக் கலைகளையும் தமிழன் பத்திரப்படுத்தவில்லை என்பது வருத்தமானதாக இருக்கிறது.  அதே நேரம் பல கலைகள் பிறரால் தழுவப்பட்டு அவற்றிலிருந்து நம்மை அந்நியப்படுத்தியே வைத்திருப்பதும் மிக்க வேதனைதருகிறது .

தமிழர்களின் நடனக்கலையை தத்தெடுத்துக்கொண்ட ஆரியம் தகதிமி தோம் என்று இன்று எக்காளமிட்டுக்கொண்டிருக்கிறது. ஆடல்கலையின் நாயகனே சிவபெருமான் தான். ஆனால் பரதம் இன்று பார்ப்பனனுக்குச் சொந்தமானதாகவே எண்ணப்படுமளவிற்கு ஆகிவிட்டது.

அப்படித்தான் வர்மக்  கலையும் களரியும் தமிழர்கள் கலை என்பதை மறந்தே விட்டோம். இன்று அவை மலையாள நாட்டிற்குச் சொந்தமானதாகக் கருதப்படுகிறது.

இப்படி எத்தனையோ தமிழ் நாட்டுக்கு கலைகளை மாற்றான் தத்தெடுத்து தனதாக்கிக்கொண்டு கர்வப்பட்டுக்கொண்டிருக்கும் அவலமும்;  இன்னும்
முற்றிலுமாக அழிந்துவிட்ட  கலைகளும்  எத்தனையோ உண்டு.  அப்படியான ஓர் அற்புதமான கலை தான் " விச்சுளிப் பாய்ச்சல்".  

இன்றைய தலைமுறையினர் கேள்விப்பட்டிருக்கவே முடியாத இந்த அற்புதமான கலை நம் பண்டைய தமிழர்களில் கழைக்கூத்தாடிகளின் கலைகளில் ஒப்பற்ற கலையாக விளங்கியிருந்தது.

விச்சுளி என்றால் மீன்கொத்திப் பறவை என்று பொருள். மீன் கொத்தியானது குளத்தங்கரையிலோ ஆற்றங்கரையிலோ மரக்கிளையில் மேல் அமர்ந்துகொண்டு மீன்வரும்வரை கீழே தண்ணீரை உற்று கவனித்துக்கொண்டே இருக்கும்.

பறவையின் கண்ணில் மீன் பட்டுவிட்டால் போதும் ; கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அந்த மீனைக் கொத்திக்கொண்டு மீண்டும் மரக்கிளையில் அமர்ந்துகொள்ளும்.

அப்படியான ஒரு வித்தைதான் விச்சுளிப் பாய்ச்சல்  என்பது.

அதாவது கழைக்கூத்தாடிப் பெண் மிக உயரமான மூங்கில் மேல் ஏறி தன்னுடைய காதணியோ மூக்குத்தியோ கழற்றிப் போடுவாள். அந்த முக்குத்தி / காதணி கீழே விழுவதற்குள்  ஒரே பாய்ச்சலாக பாய்ந்து அந்த அணிகலனைப் பிடித்துக்கொண்டு மீண்டும் உச்சிக்குச் சென்று விடுவாள். இந்த வித்தை செய்ய மாதக்கணக்கில் மூ ச்சுப் பயிற்சி செய்து உடலை இலேசாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.-

இந்த நிகழ்ச்சி கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்துவிடும்.
ஒரே ஒருமுறை மட்டுமே செய்யவேண்டும். இரண்டாம் முறை செய்தால் மரணம் நிச்சயம்.  ஒருமுறை செய்துவிட்டால் அடுத்ததாச் செய்ய ஆறுமாதம் பயிற்சி செய்யவேண்டும்.

தொண்டை மண்டல சதகத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு செய்யுளில் இந்த விச்சுளிப் பாய்ச்சல்  குறித்து அறியமுடிகிறது,

தொண்டை மாநகரத்தில் ஒரு கழைக்கூத்தாடிச் சிறுமி இந்த விச்சுளிப் பாய்ச்சல்".  வித்தையில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தாள்.  ஊர் ஊராகச் சென்று இந்த வித்தையைச் செய்து பிழைத்துக்கொண்டிருந்தார்கள்.

பொதுவாக ஒரு ஊரில் வித்தை செய்யச் சென்றால் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பாகவே அங்கு சென்று ஊரிலுள்ள பெரியமனிதர்கள் செல்வந்தர்கள் மற்றும் அனைத்து மக்களுக்கும் அறிவித்து விடுவார்கள்.

ஒருமுறை புழல் கோட்டம் என்ற ஊரில் இந்த வித்தையைச் செய்ய சென்றனர். அயன்றைச் சடையனார் என்ற வள்ளல்தன்மை வாய்ந்த ஒரு பெறுவணிகரைச் சென்று கண்டு " விச்சுளிப் பாய்ச்சல்" வித்தையைக் கண்டு உவந்து அருள வேண்டும் என வேண்டிக்கொண்டார் சிறுமியின் தந்தை .

வித்தை நடந்த அன்று அந்த பெருமகனார் விச்சுளிப் பாய்ச்சல் என்ற விததையைக்  கண்டு அதிர்ந்து போனார்.  இப்படியான ஆபத்து நிறைந்த விளையாட்டை இச்சிறு பெண் செய்வது முறையல்ல என்றும் வேறு ஏதாவது தொழில் தெரிந்தால் பிழைக்கலாமே என்று கூறினார்.

ஆனால் அச்சிறுமியோ எங்கள் பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து வழிவழியாகச்  செய்து வரும் இந்தக் கலையை நானல்லவா காப்பாற்ற வேண்டும்?  உயிருக்கு பயந்து விட்டுவிடுவது முறையாகாதே  என்று கூறினாள். அச் சிறுமியின் பேச்சிலிருந்த கர்வமும் நம் கலையைக் காக்க வேண்டுமென்ற உறுதியும் கண்டு வியந்துபோனார் சடையனார்.

இருந்தாலும்.... வேறு ஏதாவது உனக்குத் தெரியுமா என்று கேட்க... இவள் நன்றாகக் கவிதை வடிப்பாள். ஓய்வு நேரங்களில் வீட்டருகே இருக்கும் ஒரு புலவரிடம் சென்று தமிழ் பயில்கிறாள் என்று அவள் தந்தை  கூறினார். தமிழில் புலமை வாய்ந்தவளாக அப்பெண் இருந்ததை அறிந்த சடையனார் கவிதைகள் சொல்லுமாறு கேட்க சிறுமி நிறைய கவிதைகளைச் சொல்லி வள்ளலை வியப்பிலாழ்த்தினாள்.

புலமையிலும் வித்தையிலும் தேர்ந்தவளான அச்சிறுமியின்மேல் அதிக பாசம் கொண்டவராக அச்சிறுமியைத் தன் மகளாகவே நினைத்து நிறைய பொருளுதவிகள் செய்து வந்தார். அதுமட்டுமன்றி, ஆபத்தான வித்தையினை ஊர் ஊராகச் சென்று செய்வதனால் எங்கு சென்றாலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தன்னை வந்து கண்டு செல்லுமாறு கூறினார்.

அதிலிருந்து சிறுமியும் அவள் தந்தையும் ஒவ்வொருமுறையும் வெளியூர் சென்று வித்தை செய்துவிட்டு ஊர் திரும்பியதும் வள்ளல் சடையனாரைக் கண்டு கவிதைகள் சொல்லி இன்புற்று பொன்னும் பொருளும் பெற்றுக்கொண்டும் வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.

அக்கலாத்தில்  பாண்டிய மன்னனிடம் பரிசு பெறுவது ஒவ்வொரு கலைஞனுக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்பட்டது.
அந்த ஆசை மேலோங்க இக்கழைக் கூத்தாடி கலைஞர்களும் பாண்டி நாட்டிற்குச் செல்கின்றனர். பாண்டிய மன்னனிடம் அனுமதி பெற்று  நாட்டு மக்களுக்கும் அறிவிப்பு செய்துவிடுகின்றனர்.

மன்னன் முன்னிலையில் வித்தை தொடங்கி விடுகிறது. பாண்டிய மன்னன் தன் மனைவியுடன் வித்தையைக் கண்டுகளிக்க வந்தமர்ந்திருக்கிறார். பலவித்தைகளை அரங்கேற்றி அங்கு திரளாகக் கூடியிருந்த மக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தனர்.

இறுதியாக சிறுமியின் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சிறுமி உயரமான மூங்கிலின் மேல் ஏறிவிடுகிறார்.  எல்லோரும் கவனமாகப் பாருங்கள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விச்சுளிப் பாய்ச்சல் நடைபெற்றுவிடும். ஆதலால் கவனம் சிதறாமல் பாருங்கள் என்று அறிவிக்கிறார் சிறுமியின் தந்தை.

மக்கள் அனைவரும் ஆர்வத்ததுடன் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். மன்னனுடன் அமர்ந்திருந்த அரசியோ அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.        மூங்கிலின் உச்சியில் இருந்த சிறுமி மூக்குத்தியை கீழே எறிந்துவிட்டு கீழ் நோக்கிப் பாய.... வீல்....  என்று பயத்தில் அலறுகிறார் அரசி. அரசியின் அலறல் சத்தத்தில் மன்னனின் கவனம் அரசியின் பக்கம் சென்றுவிட கணநேரத்தில் விச்சுளிப் பாய்ச்சல் நடந்து முடிந்துவிடுகிறது.


வித்தையைப் பார்க்காத மன்னன் தனக்கு மீண்டும் ஒரு முறை செய்து காட்டவேண்டும் என சிறுமியிடம் கேட்கிறார்.  இதைக்கேட்ட  சிறுமியின் தந்தையோ கலக்கமுற்றவராய் மன்னனிடம் இரண்டாவது முறை செய்தால் மரணம் நிச்சயம் என்பதை மன்னனிடம் சொல்கிறார்..

மீண்டும் செய்யவேண்டுமெனில் ஆறுமாதப் பயிற்சிக்குப் பின்தான் செய்ய வேண்டும். இப்போது வேண்டாம் ஆறுமாதம் கழித்து  நாங்கள் மீண்டும் வந்து தங்களின் முன் இவ்வித்தையைச் செய்கிறோம் எனக் கூறுகிறார். சிறுமியும் மன்னனிடம் மீண்டும் இன்றே செய்யக்கூடாதென்று சொல்லிப்பார்க்கிறாள்.

மன்னனோ அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாதவனாய் இப்போதே இன்னொருமுறை இவ்வித்தையைச் செய்ய வேண்டும் என்னுடைய மோதிரத்தைத் தருகிறேன் இதை பாய்ந்து பிடித்து இதையே  பரிசாக கொள் எனக்கூறுகிறான்.

சிறுமியின் தந்தை மன்னனிடம் கெஞ்சுகிறான். மக்களைக் காப்பாற்றும் மன்னனல்லவா தாங்கள் என் மகளின் உயிரையும்  தாங்கள்தான் காக்க வேண்டும் மீண்டும் செய்ய சொல்லாதீர்கள் என் மகளை நான் இழந்துவிடுவேன் என  மன்னனிடம் தந்தை கதறுகிறார் .

மன்னனோ எதையுமே கேளாதவனாய் "இப்போதே மீண்டுமொருமுறை அவ்வித்தையைச் செய்ய வேண்டும் இது அரச கட்டளை" எனக் கூறிவிடுகிறார்.

அப்போது சிறுமி சொல்வாள்... கலங்காதீர்கள் அப்பா...பாண்டிய மன்னன் தான் நாட்டு மக்களைத்தான் காப்பார் போலும். நாம் தொண்டை நாட்டிலிருந்தல்லவா வந்திருக்கிறோம் என்னை இந்த மதுரை மீனாட்சிக்கு பலிகொடுக்க விரும்புகிறார் போலும்.

ஆகட்டும் அப்பா... மன்னனின் கட்டளையை நாம் மீறினவர்களாக இருக்கவேண்டாம்.  இதோ நான் மீண்டும் விச்சுளிப் பாய்ச்சல் செய்கிறேன் என்கிறாள். தந்தை கதறி அழ ஊர்மக்கள் எல்லோரும் மிகுந்த கவலையோடு என்ன நடக்கப்போகிறது என்ற அச்சத்தில் உறைந்து போய் நிற்கின்றனர்.

அப்போது சிறுமி மன்னனை வணங்கி மூங்கில் மேல் ஏற ஆயத்தப்படும் வேளையில் அவளுக்கு தன்னை மகள் போல் போற்றிப் பாதுகாக்கும் அயன்றைச் சடையனார் நியாபகம் வருகிறது, நான் மீண்டும் அவரைக் காணச்  செல்லாமல் இருந்தால் அப்பா மிகுந்த துயருறுவாரே என நினைத்தவளாய்.....

அப்போது அந்த வழியாகப் பறந்து கொண்டிருந்த பறவைக் கூட்டத்தைப் பார்த்து நான் இங்கு இறந்துகொண்டிருக்கின்றேன் என சடையனாரிடம் அறிவித்துவிடுங்கள் என்று கூறும்படியாக ;

  "மாகுன்றனைய பொற்தோளான்  வழுதிமன் வான்கரும்பின் 
  பாகென்ற செல்லியைப் பார்த்தெம்மைப் பார்த்திலன்;பைய்யப்பையப் 
  போகின்ற புள்ளினங்காள்   புழற்கோட்டம் புகுவதுண்டேல் 
  சாகின்றனள் எனச்சொல்வீர் அயன்றைச் சடையனுக்கே  "

என்ற பாடலைப் பாடிவிட்டு வேகமாக மூங்கில்மேல் ஏறி மன்னன் கொடுத்த மோதிரத்தை கீழே போட்டு கீழ்நோக்கிப் பாய்ந்தவள் அப்படியே விழுந்து
இறந்துவிடுகிறாள்.  ஊரே துயரத்தில் ஆழ்ந்தது.


இதுவே அழிந்துபோன நம் கலைகளில் ஒன்றான அபூர்வ கலை " விச்சுளிப் பாய்ச்சல்".
                                         ******

(அதன் பிறகு மன்னன் மிக்க கவலை கொண்டவராய் இறப்பதற்குமுன் அச்சிறுமி பாடிய பாடலை கேட்டு வியந்தவனாய் தன் தவறையும் உணர்ந்து கவலையடைகிறான். அதன்பின் யாரந்த அயன்றைச் சடையனார் என்பதையறிந்து அவரின் வள்ளல் தன்மையறிந்து வியக்கிறார்.  பின் பாண்டிய மன்னனுக்கும் சடையனாருக்குமான நட்பு தொடர்ந்தது. )


-- லதாராணி பூங்காவனம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக