சிவவாக்கியர் தம் பாடல்களில் சாதி வேற்றுமைகளை மிகவும்
ஆணித்தரமாகக் கண்டிக்கிறார்.
“சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலோ
பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ
காதில்வாளி காரைக்கம்பி பாடகம்பொ னொன்றலோ சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே” (47) என்று சாதி பேதம் பார்க்கின்றவர்களைப் பார்த்துக் கேட்கின்றார். அது மட்டுமல்ல, மணமுடிக்க மணப் பெண்ணை குணம் பார்த்துதான் தேர்வு செய்ய வேண்டுமே தவிர குலம் பார்த்தல்ல என்று இளைஞர்களையும் கேட்டுக் கொள்கிறார். பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட் டிருக்கிதோ பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாடு மும்முளே” (40) கீழ் குலத்தைச் சேர்ந்த பறைச்சியும் மேல் குலத்தைச் சேர்ந்த பார்ப்பனத்தியும் போகம் செய்யும்போது ஒரே சுகத்தைத்தான் அளிக்கிறார்கள். இதில் பறைச்சி என்ன? பாப்பாத்தி என்ன? இரண்டும் ஒன்றுதான். ஆகவே சாதிபேதம் பார்க்காமல் இல்லறத்திற்கேற்ற பெண்ணை என்று தேர்வு செய்து மணம் முடிப்பதே பெருமைக்குரியது என்று கூறியதுமல்லாது தாமே இல்லறத்திற்கேற்ற குலப்பெண் ஒருத்தியை மணந்து வாழ்ந்து காட்டினார். சிவவாக்கியரின் புரட்சிக் கருத்துக்கள் ஜாதி மதத்தில் காணப்படுவதற்கு இன்னுமொரு சான்றாக, இவர் சைவராயிருந்தும் வைணவக் கடவுளான ராமரையும் தம் பாடல்களிலே புகழ்ந்து பாடியதுதுடன் இராம நாமத்தின் பெருமையையும் பாங்குற எடுத்தியம்புகிறார். ராம! ராம! என்று செபித்துக் கொண்டிருந்தால் போதும்; வேறு எந்த பூசையோ, சந்தி, ஜெப, தபங்களோ செய்ய வேண்டியதில்லை. எல்லா நன்மைகளும், கிடைக்க வேண்டிய எல்லாப் பலன்களும் இராம நாம உச்சரிப்பில் கிடைத்து விடும் என்று கூறுகின்றது சிவவாக்கியரின் பாடல். “அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்தி தர்ப் பணங்களும் தபங்களும், செபங்களும் சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம் சிந்தை ராம ! ராம ! ராம ! ராம என்னும் நாமமே” என்ற பாடலில் ராம நாமத்தின் பெருமையைச் சொல்லுகின்றார் சிவவாக்கியர். அந்தி, காலை, நடுப்பகல் ஆகிய மூன்று வேளைகளும் புண்ணிய தீர்த்தமாடுகின்ற பலன் இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும் என்கிறார். சந்தியாவந்தனம், முன்னோரை நோக்கிச் செய்யும் தர்ப்பணம், தவங்கள், செபங்கள் இவற்றால் கிடைக்கும் பயனும், இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும். உள்ளத்தில் உருப்பெரும் அறிவும் இராம நாமத்தால் மிகுந்த வளர்ச்சி யடையும். இவ்வாறு இராம நாமத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றார் சிவவாக்கியர். நன்மையும் செல்வமும் நாலும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே ராமவென்று இரண்டெழுத்தினால் என்ற கம்பரின் தனிப்பாடல் கருத்து சிவவாக்கியரின் கருத்தோடு ஒத்து விளங்குவதைக் காணலாம். வைணவத் தெய்வமான இராமனின் பெருமைமிகு மந்திரத்தைப் போலவே சைவர்களின் தெய்வமான சிவபிரானின் சிவமந்திரமும் பெருமைக் குரியது என்று சிவநாமப் பெருமையையும் தம் பாடலில் பேசுகின்றார். |
உபாய மென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
கபாடமுற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாயம் அஞ்சு எழுத்துமே
என்றும்,
அஞ்கோடி மந்திர முஞ்சுளே யடக்கினால்
நெஞ்சுகூற வும்முளே நினைப்பதோ ரெழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே
என்று ஐந்து கோடி மந்திரங்களும் ‘சிவாய நம’ எனும் ஐந்து எழுத்தில்
அடங்கி நன்மையளிக்கும் பெருமையைக் கூறுகின்றார்.
திருமூலரின் சில கருத்துக்களையும் சிவவாக்கியர் தம் பாடலில்
எடுத்துரைக்கின்றார்.
‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’
என்ற திருமூலர் கருத்தினை,
‘கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே”
என்ற சிவவாக்கியர் பாடலில் காணலாம்.
இறைவனை கோயில், பள்ளி இங்கெல்லாம் தேடி அலைய வேண்டிய
தில்லை. நமது உள்ளமே இறைவன் உறையும் கோயில் இந்த உடம்பே
அவன் ஆட்சி செய்யும் ஆலயம் என்று கூறுகின்றார் சிவவாக்கியர்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
என்ற திருவள்ளுவரின் கருத்தையும்
“மனத்து அடுத்து அழுக்கு ஆறாத மவுனஞான யோகிகள்”
என்ற தம் பாடலில் புலப்படுத்துகின்றார்.
ஒருவர் பலரிடத்தும் பேசாமலிருக்கலாம், மௌனமாகவும் இருக்கலாம்,
ஞானியாகவும் இருக்கலாம், யோகம் செய்து கொண்டும் இருக்கலாம்,
நாட்டைத் துறந்து காட்டிலே போய்க்கூட வாழலாம். ஆனால் உள்ளத்தில்
தூய்மை யில்லாதவராய் இருந்தால் அதனால் எந்த பலன்களும் மேற்சொன்ன
விரதங்கள் யாவும் பாழாய் முடியும். உள்ளத்திலே குற்றங்களை வைத்துக்
கொண்டு இருப்பவர்கள் உண்மையான கடவுளைக் காணமாட்டார்கள்.
அப்படியானால் உண்மையான கடவுள்தான் யார்? என்ற வினாவுக்கு
அறிவுதான் இறைவன் என்று விளக்கம் தருகின்றார் சிவவாக்கியர். அறிவு
தான் இறைவன் என்றால் அறிவாளிகள் மட்டும்தான் இறைவனைத் தொழ
இயலுமோ? என்ற வினாவும் எழுகிறது. இல்லை பாமர மக்களும் தம்
அன்பினால் இறைவனைத் தரிசிக்கலாம் என்றும் இறைவன் எங்கும்
நிறைந்திருக்கிறான் என்ற கருத்தையும் சிவவாக்கியர் தம் பாடல்களில்
நிறைத்துக் காட்டுகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக