என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

திங்கள், 11 ஜூலை, 2016

சித்தர் பாடல்கள் - அகப்பேய்ச் சித்தர் பாடல்


இறையச்சம் - எனக்கு இறை நம்பிக்கை கிடையாது. ஆதலால்.... கருத்தில் முரண் பட்டிருந்தாலும் கவிதைகளைப் படித்தின்புறுவது என்பது வேறு.


     மனமாகிய பேயை  வென்ற சித்தர் ஆதலின்  இவர் அகப்பேய் சித்தர்
என்றழைக்கப்படுகின்றார்.  அகம் + பேய் + சித்தர்.  இந்த அகப்பேய் சித்தர்
பெயர் காலத்தால் சிதைவுற்று ‘அகப்பைச் சித்தர்’ எனவும் கூறுவதுண்டு.


     நாயனார் குலத்தைச் சேர்ந்த இவர் இளமையில் துணி வணிகம் செய்து
வாழ்க்கை      நடத்தினார்.      வணிகத்தின்     பொருட்டுத்     தாம்
செல்லுமிடங்களிலெல்லாம்   பலதரப்பட்ட   மனிதர்களைச்  சந்திக்கின்றார்.
மேலுக்கு  மகிழ்ச்சியான  வாழ்க்கையை  வாழ்வதாகச்  சொல்லிக்கொள்ளும்
அவர்கள் உண்மையில் மனதிற்குள் அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள்.


     அவர்களின்   துன்பத்திற்குக்   காரணம்   என்ன  என்று  யோசிக்க
ஆரம்பித்தார். தன்னலம் கருதாது பிறர் நலன் குறித்துக் கவலைப்படும் அந்த
நல்லவருக்கு ஒரு போதி மரத்தடியில் (ஜோதி மரத்தடியில்) ஞானம் பிறந்தது.
ஆசையே  துன்பத்திற்குக்  காரணம்.  ஆசையை  வென்றால் இன்பமயமான
நித்திய  வாழ்வு வாழலாம் என்று கண்டுகொண்டார். 


இவர் பாடல்கள் அத்தனையும் தத்துவ முத்துக்கள். பாடல்களையெல்லாம்
படிக்குந்தோறும் அலை பாய்ந்து கொண்டிருக்கும் மனது அடக்கம் காணுகிறது.


நஞ்சுண்ண வேண்டாவே                      அகப்பேய்
     நாயகன் தாள்பெறவே
நெஞ்சு மலையாதே                          அகப்பேய்
     நீயொன்றும் சொல்லாதே.
1
பராபர மானதடி                             அகப்பேய்
     பரவையாய் வந்ததடி
தராதல மேழ்புவியும்                         அகப்பேய்
     தானே படைத்ததடி.
2
நாத வேதமடி                               அகப்பேய்
     நன்னடங் கண்டாயோ
பாதஞ் சத்தியடி                             அகப்பேய்
     பரவிந்து நாதமடி
3
விந்து நாதமடி                               அகப்பேய்
     மெய்யாக வந்ததடி
ஐந்து பெரும்பூதம்                            அகப்பேய்
     அதனிட மானதடி
4
நாலு பாதமடி                                அகப்பேய்
     நன்னெறி கண்டாயே
மூல மானதல்லால்                            அகப்பேய்
     முத்தி யல்லவடி.
5
வாக்காதி யைந்தடியோ                        அகப்பேய்
     வந்த வகைகேளாய்
ஒக்கம தானதடி                             அகப்பேய்
     உண்மைய தல்லவடி.
6
சத்தாதி யைந்தடியோ                        அகப்பேய்
     சாத்திர மானதடி
மித்தையு மாகுமிடி                           அகப்பேய்
     மெய்யது சொன்னேனே.
7
வசனாதி யைந்தடியோ                        அகப்பேய்
     வண்மையாய் வந்ததடி
தெசநாடி பத்தேடி                            அகப்பேய்
     திடனிது கண்டாயே.
8
காரண மானதெல்லாம்                        அகப்பேய்
     கண்டது சொன்னேனே
மாரணங் கண்டாயே                          அகப்பேய்
     வந்தவி தங்களெல்லாம்
9
ஆறு தத்துவமும்                             அகப்பேய்
     ஆகமஞ் சொன்னதடி
மாறாத மண்டலமும்                           அகப்பேய்
     வந்தது மூன்றடியே.
10
பிருதிவி பொன்னிறமே                        அகப்பேய்
     பேதைமை யல்லவடி
உருவது நீரடியோ                            அகப்பேய்
     உள்ளது வெள்ளையடி.
11
தேயு செம்மையடி                            அகப்பேய்
     திடனது கண்டாயே
வாயு நீலமடி                                அகப்பேய்
     வான்பொருள் சொல்வேனே.
12
வான மஞ்சடியோ                            அகப்பேய்
     வந்தது நீகேளாய்
ஊனம தாகாதே                             அகப்பேய்
     உள்ளது சொன்னேனே.
13
அகார மித்தனையும்                          அகப்பேய்
     அங்கென் றெழுந்ததடி
உகாரங் கூடியடி                             அகப்பேய்
     உருவாகி வந்ததடி.
14
மாகார மாயையடி                            அகப்பேய்
     மலமது சொன்னேனே
சிகார மூலமடி                               அகப்பேய்
     சிந்தித்துக் கொள்வாயே.
15
வன்னம் புவனமடி                            அகப்பேய்
     மந்திர தந்திரமும்
இன்னமுஞ் சொல்வேனே                       அகப்பேய்
     இம்மென்று கேட்பாயே.
16
அத்தி வரைவாடி                             அகப்பேய்
     ஐம்பத்தோ ரட்சரமும்
மித்தையாங் கண்டாயே                        அகப்பேய்
     மெய்யென்று நம்பாதே.
17
தத்துவ மானதடி                              அகப்பேய்
     சகலமாய் வந்ததடி
புத்தியுஞ் சொன்னேனே                        அகப்பேய்
     பூத வடிவலவோ.
18
இந்த விதங்களெல்லாம்                        அகப்பேய்
     எம்மிறை யல்லவடி
அந்த விதம்வேறே                            அகப்பேய்
     ஆராய்ந்து காணாயோ.
19
பாவந் தீரவென்றால்                          அகப்பேய்
     பாவிக்க லாகாதே
சாவது மில்லையடி                            அகப்பேய்
     சற்குரு பாதமடி.
20
எத்தனை சொன்னாலும்                        அகப்பேய்
     என்மனந் தேறாதே
சித்து மசித்தும்விட்டே                      அகப்பேய்
     சேர்த்துநீ காண்பாயே.
21
சமய மாறுபடி                               அகப்பேய்
     தம்மாலே வந்தவடி
அமைய நின்றவிடம்                          அகப்பேய்
     ஆராய்ந்து சொல்வாயே.
22
ஆறாறு மாகுமடி                             அகப்பேய்
     ஆகாது சொன்னேனே
வேறே யுண்டானால்                          அகப்பேய்
     மெய்யது சொல்வாயே.
23
உன்னை யறிந்தக்கால்                         அகப்பேய்
     ஒன்றையுங் சேராயே
உன்னை யறியும்வகை                         அகப்பேய்
     உள்ளது சொல்வேனே.
24
சரியை யாகாதே                             அகப்பேய்
     சாலோகங் கண்டாயே
கிரியை செய்தாலும்                          அகப்பேய்
     கிட்டுவ தொன்றுமில்லை.
25
யோக மாகாதே                             அகப்பேய்
     உள்ளது கண்டக்கால்
தேக ஞானமடி                              அகப்பேய்
     தேடாது சொன்னேனே.
26
( சரியையாகிய உருவ வழிபாட்டினாலும், கிரியையாகிய ஆசனம் முதலான
உடற்பயிற்சி  வழிபாட்டினாலும்  போகமாகிய தியான மன வழிபாட்டினாலும்
கூட இறையை இச்சை அற்றவிடத்து இனிதே காணலாம் என்று இறைவனைக்
காணும் வழியைப் போதிக்கிறார். ஞானத்தினால் மட்டுமே இறைவனைக் காண
முடியும் போலும்.)
ஐந்துதலை நாகமடி                          அகப்பேய்
     ஆதாயங் கொஞ்சமடி
இந்தவிஷந் தீர்க்கும்                         அகப்பேய்
     எம்மிறை கண்டாயே.
27
இறைவ னென்றதெல்லாம்                     அகப்பேய்
     எந்த விதமாகும்
அறை நீகேளாய்                            அகப்பேய்
     ஆனந்த மானதடி.
28
கண்டு கொண்டேனே                         அகப்பேய்
     காதல் விண்டேனே
உண்டு கொண்டேனே                         அகப்பேய்
     உள்ளது சொன்னாயே.
29
உள்ளது சொன்னாலும்                        அகப்பேய்
     உன்னாலே காண்பாயே
கள்ளமுந் தீராதே                            அகப்பேய்
     கண்டாக்குக் காமமடி.
30
அறிந்து நின்றாலும்                           அகப்பேய்
     அஞ்சார்கள் சொன்னேனே
புரிந்த வல்வினையும்                          அகப்பேய்
     போகாதே யுன்னைவிட்டு.
31
ஈசன் பாசமடி                                அகப்பேய்
     இவ்வண்ணங் கண்டதெல்லாம்
பாசம் பயின்றதடி                             அகப்பேய்
     பாரமது கண்டாயே.
32
சாத்திர சூத்திரமும்                           அகப்பேய்
     சங்கற்ப மானதெல்லாம்
பார்த்திட லாகாதே                           அகப்பேய்
     பாழ்பலங் கண்டாயே.
33
ஆறு கண்டாயோ                            அகப்பேய்
     அந்த வினைதீர
தேறித் தெளிவதற்கே                         அகப்பேய்
     தீர்த்தமு மாடாயே.
34
எத்தனை காலமுந்தான்                        அகப்பேய்
     யோக மிருந்தாலென்
மூத்தனு மாவாயோ                           அகப்பேய்
     மோட்சமு முண்டாமோ.
35
நாச மாவதற்கே                              அகப்பேய்
     நாடாதே சொன்னேனே

பாசம் போனாலும்                           அகப்பேய்
     பசுக்களும் போகாவே.
36
நாண மேதுக்கடி                             அகப்பேய்
     நல்வினை தீர்ந்தக்கால்
காண வேணுமென்றால்                        அகப்பேய்
     காணக் கிடையாதே.
37
சும்மா இருந்துவிடாய்                        அகப்பேய்
     சூத்திரஞ் சொன்னேனே
சும்மா இருந்தவிடம்                          அகப்பேய்
     சுட்டது கண்டாயே.
38
உன்றனைக் காணாதே                         அகப்பேய்
     ஊனுள் நுழைந்தாயே
என்றனைக் காணாதே                         அகப்பேய்
     இடத்தில் வந்தாயே.
39
வான மோடிவரில்                            அகப்பேய்
     வந்தும் பிறப்பாயே
தேனை யுண்ணாமல்                          அகப்பேய்
     தெருவோ டலைந்தாயே.
40
சைவ மானதடி                              அகப்பேய்
     தானாய் நின்றதடி
சைவ மில்லையாகில்                         அகப்பேய்
     சலம்வருங் கண்டாயே.
41
ஆசை யற்றவிடம்                           அகப்பேய்
     அசாரங் கண்டாயே
ஈசன் பாசமடி                               அகப்பேய்
     எங்ஙனஞ் சென்றாலும்.
42
ஆணவ மூலமடி                             அகப்பேய்
     அகாரமாய் வந்ததடி
கோணு முகாரமடி                            அகப்பேய்
     கூடப் பிறந்ததுவே.
43
ஒன்று மில்லையடி                           அகப்பேய்
     உள்ள படியாச்சே
நன்றில்லை தீதிலையே                       அகப்பேய்
     நாணமு மில்லையடி.
44
சும்மா இருந்தவிடம்                          அகப்பேய்
     சுட்டது சொன்னேனே
எம்மாய மீதறியேன்                          அகப்பேய்
     என்னையுங் காணேனே.
45
கலைக ளேதுக்கடி                           அகப்பேய்
     கண்டார் நகையாரோ
நிலைக ளேதுக்கடி                            அகப்பேய்
     நீயார் சொல்வாயே.
46
இந்த அமிர்தமடி                            அகப்பேய்
     இரவி விஷமோடி
இந்து வெள்ளையடி                           அகப்பேய்
     இரவி சிவப்பாமே.
47
ஆணல பெண்ணலவே                       அகப்பேய்
     அக்கினி கண்டாயே
தாணுவு மிப்படியே                          அகப்பேய்
     சற்குரு கண்டாயே.
48
என்ன படித்தாலும்                          அகப்பேய்
     எம்முரை யாகாதே
சொன்னது கேட்டாயே                       அகப்பேய்
     சும்மா இருந்துவிடு.
49
காடு மலையுமடி                              அகப்பேய்
     கடுந்தவ மானாலென்
வீடும் வெளியாமோ                           அகப்பேய்
     மெய்யாக வேண்டாமோ.
50
பரத்தில் சென்றாலும்                          அகப்பேய்
     பாரிலே மீளுமடி
பரத்துக் கடுத்தவிடம்                         அகப்பேய்
     பாழது கண்டாயே.
51
பஞ்ச முகமேது                              அகப்பேய்
     பஞ்சு படுத்தாலே
குஞ்சித பாதமடி                             அகப்பேய்
     குருபாதங் கண்டாயே.
52
பங்க மில்லையடி                           அகப்பேய்
     பாத மிருந்தவிடம்
கங்கையில் வந்ததெல்லாம்                    அகப்பேய்
     கண்டு தெளிவாயே.
53
தானது நின்றவிடம்                           அகப்பேய்
     சைவங் கண்டாயே
ஊனற நின்றவர்க்கே                          அகப்பேய்
     ஊனமொன் றில்லையடி.
54
சைவம் ஆருக்கடி                           அகப்பேய்
     தன்னை யறிந்தவர்க்கே
சைவ மானவிடம்                            அகப்பேய்
     சற்குரு பாதமடி.
55
பிறவி தீரவென்றால்                          அகப்பேய்
     பேதகம் பண்ணாதே
துறவி யானவர்கள்                           அகப்பேய்
     சும்மா இருப்பார்கள்.
56
ஆர லைந்தாலும்                            அகப்பேய்
     நீயலை யாதேயடி
ஊர லைந்தாலும்                             அகப்பேய்
     ஒன்றையும் நாடாதே.
57
தேனாறு பாயுமடி                             அகப்பேய்
     திருவடி கண்டவர்க்கே
ஊனாறு மில்லையடி                           அகப்பேய்
     ஒன்றையும் நாடாதே.
58
வெள்ளை கறுப்பாமோ                       அகப்பேய்
     வெள்ளியும் செம்பாமோ
உள்ள துண்டோடி                            அகப்பேய்
     உன்னாணை கண்டாயே.
59
அறிவுள் மன்னுமடி                           அகப்பேய்
     ஆதார மில்லையடி
அறிவு பாசமடி                               அகப்பேய்
     அருளது கண்டாயே.
60
வாசியி லேறியபடி                           அகப்பேய்
     வான்பொருள் தேடாயோ
வாசியி லேறினாலும்                          அகப்பேய்
     வாராது சொன்னேனே.
61
தூராதி தூரமடி                              அகப்பேய்
     தூரமும் இல்லையடி
பாராமற் பாரடியோ                           அகப்பேய்
     பாழ்வினை தீரவென்றால்.
62
உண்டாக்கிக் கொண்டதல்ல                   அகப்பேய்
     உள்ளது சொன்னேனே
கண்டார்கள் சொல்வாரோ                    அகப்பேய்
     கற்பனை யற்றதடி.
63
நாலு மறைகாணா                           அகப்பேய்
     நாதனை யார்காண்பார்
நாலு மறைமுடிவில்                           அகப்பேய்
     நற்குரு பாதமடி.
64
மூல மில்லையடி                            அகப்பேய்
     முப்பொரு ளில்லையடி
மூல முண்டானால்                          அகப்பேய்
     முத்தியு முண்டாமே.
65
இந்திர சாலமடி                             அகப்பேய்
     எண்பத் தொருபதமும்
மந்திர மப்படியே                           அகப்பேய்
     வாயைத் திறவாதே.
66
பாழாக வேணுமென்றால்                       அகப்பேய்
     பார்த்ததை நம்பாதே
கேளாமற் சொன்னேனே                       அகப்பேய்
     கேள்வியு மில்லையடி
67
சாதி பேதமில்லை                            அகப்பேய்
     தானாகி நின்றவர்க்கே
ஓதி யுணர்ந்தாலும்                          அகப்பேய்
     ஒன்றுந்தா னில்லையடி.
68
சூழ வானமடி                               அகப்பேய்
     சுற்றி மரக்காவில்
வேழம் உண்டகனி                            அகப்பேய்
     மெய்யது கண்டாயே.
69
நானு மில்லையடி                             அகப்பேய்
     நாதனு மில்லையடி
தானு மில்லையடி                             அகப்பேய்
     சற்குரு வில்லையடி.
70
மந்திர மில்லையடி                           அகப்பேய்
     வாதனை யில்லையடி
தந்திர மில்லையடி                           அகப்பேய்
     சமய மழிந்ததடி.
71
பூசை பாசமடி                               அகப்பேய்
     போதமே கொட்டமடி
ஈசன் மாயையடி                              அகப்பேய்
     எல்லாமு மிப்படியே.
72
சொல்ல லாகாதோ                           அகப்பேய்
     சொன்னாலும் தோஷமடி
இல்லை இல்லையடி                           அகப்பேய்
     ஏகாந்தங் கண்டாயே.
73
தத்துவத் தெய்வமடி                          அகப்பேய்
     சதாசிவ மானதடி
மற்றுள்ள தெய்வமெல்லாம்                    அகப்பேய்
     மாயை வடிவாமே.
74
வார்தை யல்லவடி                           அகப்பேய்
     வாச மகோசரத்தே
ஏற்ற தல்லவடி                               அகப்பேய்
     என்னுடன் வந்ததல்ல.
75
சாத்திர மில்லையடி                           அகப்பேய்
     சலனங் கடந்ததடி
பார்த்திட லாகாதே                          அகப்பேய்
     பாவனைக் கெட்டாதே.
76
என்ன படித்தாலென்                          அகப்பேய்
     ஏதுதான் செய்தாலென்
சொன்ன விதங்களெல்லாம்                    அகப்பேய்
     சுட்டது கண்டாயே.
77
தன்னை யறியவேணும்                        அகப்பேய்
     சாராமற் சாரவேணும்
பின்னை யறிவதெல்லாம்                       அகப்பேய்
     பேயறி வாகுமடி
78
பிச்சை யெடுத்தாலும்                          அகப்பேய்
     பிறவி தொலையாதே
இச்சை யற்றவிடம்                            அகப்பேய்
     எம்மிறை கண்டாயே.
79
கோல மாகாதே                              அகப்பேய்
     குதர்க்கம் ஆகாதே
சால மாகாதே                              அகப்பேய்
     சஞ்சல மாகாதே.
80
ஒப்பனை யல்லவடி                           அகப்பேய்
     உன்னாணை சொன்னேனே
அப்புட னுப்பெனவே                         அகப்பேய்
     ஆராய்ந் திருப்பாயே.
81
மோட்சம் வேண்டார்கள்                      அகப்பேய்
     முத்தியும் வேண்டார்கள்
தீட்சை வேண்டார்கள்                        அகப்பேய்
     சின்மய மானவர்கள்.
82
பாலன் பிசாசமடி                            அகப்பேய்
     பார்த்தால் பித்தனடி
கால மூன்றுமல்ல                            அகப்பேய்
     காரிய மல்லவடி.
83
கண்டது மில்லையடி                          அகப்பேய்
     கண்டவ ருண்டானால்
உண்டது வேண்டடியோ                       அகப்பேய்
     உன்னாணை சொன்னேனே.
84
அஞ்சையு முண்ணாதே                        அகப்பேய்
     ஆசையும் வேண்டாதே
நெஞ்சையும் விட்டுவிடு                        அகப்பேய்
     நிஷ்டையிற் சாராதே.
85
நாதாந்த வுண்மையிலே                       அகப்பேய்
     நாடாதே சொன்னேனே
மீதான சூதானம்                             அகப்பேய்
     மெய்யென்று நம்பாதே.
86
ஒன்றோ டொன்றுகூடில்                       அகப்பேய்
     ஒன்றுங் கெடுங்காணே
நின்ற பரசிவமும்                             அகப்பேய்
     நில்லாது கண்டாயே.
87
தோன்றும் வினைகளெல்லாம்                  அகப்பேய்
     சூனியங் கண்டாயே
தோன்றாமற் றோன்றிடும்                     அகப்பேய்
     சுத்த வெளிதனிலே.
88
பொய்யென்று சொல்லாதே                    அகப்பேய்
     போக்கு வரத்துதானே
மெய்யென்று சொன்னவர்கள்                  அகப்பேய்
     வீடு பெறலாமே.
89
வேத மோதாதே                            அகப்பேய்
     மெய்கண்டோ மென்னாதே
பாதம் நம்பாதே                            அகப்பேய்
     பாவித்துப் பாராதே.
90



  
“ஒப்பனை அல்லவடி - அகப்பேய்
    உன் ஆணை சொன்னேனே
அப்புடனுப் பெனவே - அகப்பேய்
    ஆராய்ந் திருப்பாயே

     மனப்பேயை  அடக்கி  வென்ற  அகப்பேய்  சித்தர் திருவையாற்றில்
சித்தியடைந்தார் என்று போகர் குறிப்பிடுகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக