திருக்குறளின் பெருமையினை உலகம் கண்டு
தீந்தமிழின் தோற்றத்தை ஆய்ந்து நோக்கி
கருப்பினத்தின் மொழிவளமே உயர்ந்த தென்று
கடல்கொண்ட தென்னாட்டை வியந்து நின்றான்.
பெருந்தகையார் கைக்கொண்ட குறளின் மேன்மை
பேரினத்தார் பிறரறிய வேண்டும் என்று
விருப்புடனே பலமொழியில் பெயர்த்து வைத்த
வெண்டளைக்கு மயங்காதார் உண்டோ யாரும்?
தீமைகளைக் கவசமாக அணிந்து கொண்டு
தீக்குணத்தைத் துணையாகப் பிடித்துக் கொண்டு
சோமபானம் சுராபானம் குடித்தே ஆடிச்
சொந்தமெனக் காணிநிலம் ஏதும் அற்று
ஆமைமுதல் பாம்புவரை தின்று தீர்த்து
ஆடுமாடு மேய்த்திருந்த கயவர் இன்று
ஊமைகளாய் நம்மவரை உறைய வைத்து
உறுமுகிறார் தேவபாடை(ஷை) உயர்ந்த தென்று!
கற்றறிந்த நம்தமிழர் நிலத்து வந்து
கலவரங்கள் செய்துபல பிழைக்கு மாறு
உற்றவாறு பொய்கூறி உலகை ஏய்த்து
உடல்வளர்த்தான் கூட்டமாக வந்த பார்ப்பான்
சுற்றியொரு பூணூலை உடலில் மாட்டிச்
சுகபோக வாழ்க்கையினை வாழ வேண்டி
நற்றமிழை வளர்த்துவந்த வேந்தர் நெஞ்சில்
நயமாகப் பாய்ச்சிவிட்டான் முழுதாய் நஞ்சை
தயங்காமல் பொய்பேசி மன்னன் முன்னே
தோஷமென்றும் நிவர்த்தியென்றும் அடுக்கிக் கூறிப்
பயனற்ற மந்திரங்கள் பலதும் ஓதிப்
படுகுழியில் நம்மினத்தை வீழ வைத்தான்
இயற்கைதனை வணங்கிவந்த மக்கள் நம்மை
இனம்பிரிந்து இருளடைந்து நிற்க வைத்தான்
செயல்திறனே அற்றவராய் அடக்கி வைத்து
சிந்திக்கும் திறனின்றி மாற்றி விட்டான்
உடலுழைப்பே இல்லாமல் உண்டு வந்தான்
உயர்சாதி நானென்று நம்ப வைத்தான்
நடராசன் உமையாளின் புதல்வன் என்று
நமக்கிவனை அறிமுகமும் செய்து வைத்தான்
உடலழுக்கில் உதித்தவனே கடவுள் என்று
உளறிவைத்த புரட்டிதனை மெய்யே என்ற
வடநாட்டான் மாயைக்குள் வீழ்ந்து விட்ட
உலகளந்த தமிழ்க்கூட்டம் உய்வ தென்றோ?
தெருவெங்கும் தமிழ்க்கூடம் இருந்த நாட்டில்
திறம்கொண்ட தமிழ்மறவர் வாழ்ந்த நாட்டில்
பொருந்தாத பலகதைகள் சொல்லிச் சொல்லி
பண்பாட்டைச் சீரழித்த பின்னும் இன்று
உருப்படியாய்த் தமிழ்வளர்க்க வக்கே இல்லா
உருவமொன்று பீடத்தில் அமர்ந்தி ருக்க
தெருமுனையில் சிலைவைத்து வணங்கு கின்ற
தீராத நோய்தீரும் நாளும் என்றோ?
- லதாராணி பூங்காவனம்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை
(இலக்கிய அணி மாநில ஒருங்கிணைப்பாளர்)
திராவிட இயக்கத் தமிழர் பேரவை
(இலக்கிய அணி மாநில ஒருங்கிணைப்பாளர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக