தமிழகமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது
பெரியார் பிறந்த நாள் இன்று!
உலகத் தமிழர்களெல்லாம்
உற்சாகமாக இருக்கின்றனர்
பெரியார்பிறந்த நாள் இன்று!
வீடுகளில் உள்ள புகைப்படங்களும்
வீதியிலுள்ள சிலைகளும்
புதுமாலையோடு புது மெருகோடு -
பெரியார் பிறந்த நாள் இன்று!
பட்டிமன்றங்களும் கருத்தரங்குகளும்
நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
பெரியார் பிறந்த நாள் இன்று!
சிலர் இனிப்பு கொடுத்தும்
சிலர் விருந்து கொடுத்தும்
கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்
பெரியார் பிறந்த நாள் இன்று!
இதில் -
எத்தனை பேர் ஆத்மார்த்தமாகக் கொண்டாடுகின்றார்கள்
எத்தனை பேர் அங்கீகாரத்திற்காகக் கொண்டாடுகிறார்கள்
தெரியவில்லை.
இதில் -
எத்தனை பேர் உண்மையான தொண்டர்?
எத்தனை பேர் முகமூடி அணிந்தவர்?
தெரியவில்லை.
இதில்-
எத்தனை பேர் சுயமரியாதை உள்ளவர்கள் ?
எத்தனை பேர் சுயநல வாதிகள் ?
தெரியவில்லை.
பத்து வருடங்களுக்கு முன்பாயிருந்திருந்தால்
"யாமறியோம் பராபரமே" என்று சொல்லி இருப்பேன்
இப்போதோ -
"யாமறியோம் பெரியாரே" என்றே சொல்கிறேன் .
வெட்கமாகத்தான் இருக்கிறது.
பெரியார் என்ற முகமூடி அணிந்துக்கொண்டு
பார்ப்பன புத்தி பரவிக் கிடக்கும்
பாதகற்களை பார்க்கும்போதெல்லாம்
வெட்கமாகத்தான் இருக்கிறது
தன்னலமற்ற தொண்டு செய்த உன்பெயரில்
தன்விளம்பரம் தேடிக்கொண்டிருக்கும்
சுயநலவாதிகளைப் பார்க்கும்போதெல்லாம்
வெட்கமாகத்தான் இருக்கிறது .
இன்றும் உன் பேர் சொன்னனால்
பார்ப்பனன் பயந்துகொண்டுதான் இருக்கிறான்
ஆனால் உன்தொண்டர்களிடம் தான்
சூது நிறைந்திருக்கிறது - இதைச் சொல்வதற்கு
வெட்கமாகத்தான் இருக்கிறது.
இயக்கங்களை இயங்காமல் வைக்க
இயன்றவரை இடர் செய்யும்
"கொள்கைவாதி"களை நினைத்தால்
வெட்கமாகத்தான் இருக்கிறது
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு -
நீ ஒற்றை வரியில் சொல்லிய உலக தத்துவத்தை - இவர்கள்
ஒப்பிக்கும்போதெல்லாம் கேட்பதற்கு
வெட்கமாகத்தான் இருக்கிறது.
என்ன செய்வது? -
"இப்படியே விட்டுவிட்டு செல்கிறேனே " என்று
நீ கவலைப் பட்டது அப்படியேதான் இருக்கிறது.
என்றாவது மாறும் என்ற எதிர்பார்ப்புடனே
இன்றைய பிறந்த நாளிலும்
நம்பிக்கையோடே சொல்கிறேன்.
"பெரியார் பிறந்த நாள் வாழ்த்துக்கள்"
- லதாராணி பூங்காவனம்
அருமை... உங்கள் நற்பணி தொடரட்டும்...
பதிலளிநீக்குமிக சிறப்பு
பதிலளிநீக்கு