“Deepest sympathies to everyone depend on Jayalalitha.”(ஜெயலலிதாவைச் சார்ந்திருக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்) என்று கமலஹாசன் தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதில் என்ன தவறு இருக்கிறதென்று எல்லோரும் அவர்மீது பாய்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று வியப்பாக உள்ளது.
எந்த ஒரு இழப்பும் அதை அல்லது அவரை சார்ந்தவருக்குத் தானே துக்கத்தைக் கொடுக்கும்? அந்த பொருளையோ அந்த நபரையோ சாராதவருக்கு சிலநேர வருத்தம் மட்டுமே இருக்கும் என்பதுதானே உண்மை? அந்த வகையில் கமலஹாசன் சொன்னது சரிதானே?
"என்ன படித்திருந்து என்ன புண்ணியம், கண்ணியம் பேணத் தெரியாவிட்டால்..,? வெட்கம், உங்களின் ரசிகனாக இருந்திருக்கிறேன்" என்று ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுபோன்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்று செய்திகள் வந்து கொண்டுள்ளது.
இந்த ரசிகருக்கு விஸ்வரூபம் படம் எடுத்துவிட்டு அந்தப் படத்தை வெளியிட முடியாமல் கமலஹாசன் பட்ட அவஸ்தை மறந்து போய் விட்டதா?
படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியாமலே இஸ்லாம் மதத்தவர்கள் ஒன்று சேர்ந்து முதல்வரிடம் மனு கொடுத்து அந்தப் படத்தை தடை செய்யக் கேட்டதும்... அதைத் தொடர்ந்து அந்தப் படத்திற்குத் தமிழக அரசு தடை செய்ததும் மறந்து விட்டார்களா தமிழக மக்கள் அல்லது
தடை உத்தரவிற்குப் பின் வெடித்த கலவரங்களைத்தான் மறந்துவிட்டார்களா?
வீட்டை அடமானம் வைத்து கோடிகோடியாய் பணம் கொட்டிச் செலவழித்துத் தயாரித்த படத்திற்குத் தடை உத்தரவு வந்தபின் ஏற்பட்ட மன உளைச்சலும் கலைஞனை மதிக்கத்தெரியாத "இந்த நாட்டை விட்டே வெளியேறுகிறேன்" என்று கமல் அறிக்கை வெளியிட்ட பின் அன்றைய உள்துறை அமைச்சர் (Home Minister ) சுஷில்குமார் ஷிண்டே "கலைஞர்களுக்கு தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை இருக்கிறது" என்று கூறிய பின்தான் இந்தப் படத்தின் மீதான தடை விலக்கப் பட்டது என்பதையும் மறந்துவிட்டார்களா?
தடைக்கு காரணமாக இஸ்லாம் மதத்தை இழிவு படுத்தும் காட்சிகள் இருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் உண்மை என்னவோ,,, விஸ்வரூபம் படத்தின் தொலைகாட்சி ஒளிபரப்பு உரிமை குறித்த்து தானே?.
வீட்டை அடமானம் வைத்திருக்கிறார் .... கோடிகளில் பணம் செலவு செய்திருக்கிறார்கள் என்பதற்கு ஜெயலலிதா அன்று கூறிய பதில்... "தெரிந்துதான் செய்திருக்கிறார் கமல்; இது ஒரு திட்டமிடப்பட்ட சூதாட்டம் (It's a calculated Gamble)" என்று தானே சொன்னார்.
இப்படிப்பட்ட ஒரு சூழலை எந்த திரைப்படக் கலைஞரும் சந்தித்ததில்லை திரையுலக வரலாற்றில்.
தமிழக அரசால் திட்டமிட்டு செய்யப்பட்ட தடையினால் அளவுக்கு அதிகமான பாதிப்புக்கு உள்ளான நடிகர் கமலஹாசன் அல்ஜீமர் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்ன? எல்லாவற்றையும் இடையிடையே மறந்துவிட? அல்லது அப்படி என்ன தேவை அவருக்கு மற்றவர்கள் போல் துக்கம் கொண்டவராக நடிக்க? "
இதே முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாதான் அந்த பிரச்சினையின்போது சொன்னார்... "Mr. Kamalahaasan is nearing 60. He is a responsible adult" என்று. அதே responsibility யோடுதான் அதாவது அதே பொறுப்போடுதான் எல்லாவிதமான வெறுப்புக்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு முதலமைச்சரின் மறைவுக்கு அவரைச் சார்ந்தவர்களின் துக்கத்திற்கு அனுதாபங்கள் தெரிவித்திருக்கிறார்.
இதில் தவறொன்றும் இல்லை. கமலஹாசன் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். பொறுப்போடுதான் நடந்துகொண்டிருக்கிறார்.
- லதாராணி பூங்காவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக