நெய்தலில் நெய்த நூல்
ஈராயிரம் வயதுக்கும் மேற்பட்ட மூத்த தமிழன், முப்பாட்டன் வள்ளுவனின் மூலம் தேடி, சங்க இலக்கியப் பெருவெளியில் அவன் பதித்துச் சென்ற சுவடுகளின் ரேகைகளைத் துல்லியமாகப் பிளந்து, இதோ இந்த "நெய்தல் நில மணலில்" தான் தன் சிறு விரல் கொண்டு "அ" என எழுதிப் பழகியவன் இந்த "மீனவன்" என எந்தக் குளறுபடியும் இல்லாமல் குறளில் உள்ளபடியே கூறி பொருத இடம்கொடாமல் பொருத்தமான ஆதாரங்களோடு இந்நூலில் பொறித்து வைத்துள்ளார் ஆசிரியர்.
தன்னையறியாமல் தனது நெய்தல் நில அடையாளத்தை "அறவாழி அந்தணன்" ஆக வள்ளுவன் பதித்ததையும் அதைத் திருமூலரும் வீரமாமுனிவரும் தங்களுக்குத் துணையாகக் கொண்டதையும் நச்சென்று கூறி, நாஞ்சில் கரையோரம் தன் நிழலாட நடந்தவன்தான் வள்ளுவன் என்பதை சொல்லிவிட்டு நகர்கிறார்.
ஓடிச்சென்ற குழந்தை திரும்ப ஓடி வந்து தாய்க்கு மீண்டும் ஒரு முத்தம் கொடுப்பதுபோல, கூறியது போதவில்லையோயென "அனிச்சம்”, “ குவளை”, “ கோட்டுப்புன்னை” என பூக்களால் ஒத்தடம் கொடுத்து அதிலும் “நாகம்” என்ற சொல்லுக்கு “ஓசை”, “ சங்கு”, “ பெண்மீன்”, “ புன்னை” என்ற பல்வேறு அர்த்தங்களைக் கூறி நாகமல்லிகைதான் "அனிச்சமலர்" என அறுதியிட்டுக் கூறுவதோடல்லாமல் “உவரி நீர்”, “நாமநீர்”, “கீழ்நீர்”, “விரிநீர்” என்றும்; “துறைவன்”, “ கொண்கன்” என்றும் சரளமான வார்த்தைச் சான்றுகளைச் சரம் சரமாய்ச் ஊன்றி வைத்து, படிக்கும் நம்மைச் சுயமிழந்து அந்நீர்ச் சுழலிலே மூழ்கவைக்கின்றார்.
வள்ளுவன் வாழ்ந்த வீடெங்கே என்பதை இன்னும் விளக்கிட, நெய்தலில் வழங்கும் வட்டாரச் சொற்களை நாம் காணும் பொருட்டு “சுருக்கக்” கூறாமல் பெருக்கி, “அலத்தல்”, “அழித்தல்”, “படுத்தல்”, “குளித்தல்”, “பாத்தல்”, ”செறுத்தல் ” என ஒவ்வொன்றோடு “நாயுருவி”க்கும் விளக்கம் நுணுங்கக் கூறி எதிர் விசாரணைக்கு இடமின்றி நிரல்படுத்திய விதம் நம்மை “அழித்தழித்து” வாசிக்கத் தூண்டுகிறது.
மதங்களுக்கு அப்பால் நின்று அவன் எழுதியது “முப்பால்” மாத்திரமா? இறைவனென்றும், தெய்வமென்றும், அவ்வுலகென்றும், மறுமையென்றும் அழுத்தமாகக் கூறியவன் “அறம்”, “பொருள்”, “இன்பம்”, “வீடு” என்னும் நான்கு உறுதிப் பொருட்கள் இருக்க மூன்று பாலோடு முடித்திருக்க வாய்ப்பில்லை. அந்த நான்காம் பால் நகர்ந்தது எங்கே என நம்மைக் கேட்கும் முன் அதற்கான ஆதாரங்களை பெருந்தொகை, திருவள்ளுவமாலையோடு அவ்வை மூதாட்டியையும் அழைத்துவந்து அவர்கள் கைவழி வந்த நூற்பால், வள்ளுவன் நாற்பால் மொழிந்தவன் என்பதை உணர்த்தி யார் செய்த சூழ்ச்சியோ? நான்காம் பாலுக்கெதனால் வீழ்ச்சியோ? எனக்கேட்கிறார்.
மட்டுமல்லாது, இந்தியநாட்டின் பெயரே நெய்தல் நிலத்தைச் சார்ந்தது என “அத்து”ச் சாரியையை அறியத்தந்து ஆச்சரியம் மேலோங்க “பாரத”த்தைப் பார்க்கவைக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக