என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வெள்ளி, 27 மே, 2011

அதிசய அவலம்(அரவாணிகளைப் பற்றிய கவிதை )





 குறிப்பு: 

சிறுவயதுமுதலே  அதிசய பிறவிகளான அலிகள் பற்றி அறிய ஆவல். யாரிடமும் கேட்கத் தயக்கம். புத்தகங்களில் படித்ததில் முரண்பாடுகள் என் மூளையை ரணப்படுத்தியதுதான் மிச்சம்.

தெளிவாய் அறியவேண்டி அவர்கள் வீடுதேடிச்  சென்று தினம் ஒரு  இரண்டு மணிநேரம் உரையாடி,
(கிட்டத்தட்ட பத்து நாட்கள் தாய் மடியில் பிறந்ததிலிருந்து
தாய்மண்ணை பிரியும் வரை அவர்களுக்குள் ஏற்படும்
உடல் உணர்வு மாற்றங்களைக்
கேட்டு, அறிந்து, உணர்ந்து, அழுது  "நானே அவளாக மாறி" எழுதியது இது.

இக்கவிதை எழுத எனக்கு உதவி புரிந்த அரவாணி ஸ்ரீதேவி அவர்களுக்கு (பெங்களூர்) என் மனமுவந்த நன்றிகள்.  


இக்கவிதை என் முதல் தொகுப்பு "என் தவத்தில் என்ன குறை?" புத்தகத்தில் வெளியிடப்பட்டது. வருடம் : 2003.

புத்தகத்தை வெளியிட்டவர்  கவிஞர் மு. மேத்தா அவர்கள்
கருத்துரை வழங்கியவர்கள் : திரு. தென்கச்சி சுவாமிநாதன், திரு, மணவை முஸ்தபா , திரு. திருப்பூர் கிருஷ்ணன், கவிஞர். ஜெய பாஸ்கரன், கவிஞர்,சொள்கேளான்.

இப்புத்தகத்தின் முதல் பிரதி திருநங்கை "நர்த்தகி. நடராசன் " அவர்களுக்கு வழங்கப்பட்டது.
.
அதிசய அவலம்

"என் ஜனனம் சாதாரணமானதுதான்"

நான் ஜனித்தபோது   மலர்ந்தவள்  - தாய்
அவளின் மலடிப் பட்டம் நீக்கியதற்காய்!

மார்புமுட்டிப் பால் குடித்து
மயங்கி மயங்கி உறங்கி எழுந்து
வாசம் முகர்ந்து தாயை உணர்ந்து
உருண்ட விழியில் சிரித்துப் பேசி
 கைகால் அசைத்துக் கவிதை பாடும்
குட்டிக் குழந்தையாய் நான் -

என்னை  ரசித்து என்தலை கோதி
எதையும்  எதிர்பாராது
எனக்கென வாழ்ந்திடவே
என்னைப் பிரசவித்து
என்னுடனே ஜனித்தவள் - என்தாய்  !
பிரசவம் மறுபிறவிதானே?

மகனின் உச்சி முகர்ந்து
உள்ளம் குளிர்ந்து  
சிறகு கட்டி சிகரம் தொட்டு
சந்தோஷ சாகரத்தில்  -என் தந்தை

"என் ஜனனம் சாதாரணமானதுதான்"

மழலை பேசி மனதைக்  கவர்ந்து
மணலில் ஆடி மேகம் பார்த்து
எல்லா இன்பமும் எனக்கே ஆக

இரண்டிலிருந்து ஐந்து வரை
இயல்பாய் நாம் இருந்துவிட்டேன்

ஐந்து வயதில்  -
அறியாத ஒரு சிறிதான மாற்றம்

சிரிப்பது  குறைந்து சிந்தனையில் சோர்வு
யாரிடம் சொல்வது? எப்படிச் சொல்வது?
புரியாத  புதிராய் எனக்குள் நான்.

கல்வி பயில பள்ளி சேர்ந்தும்
எண்ணம் அதிலே லயிக்கவில்லை

சக நண்பரகளிடம் சரியாய்
சிரித்துப் ழக முடியவில்லை.

என்ன  வேண்டும் ஏது வேண்டும்?
என்னை நானே கேட்டுக்  கொள்வேன்
தனிமை வேண்டும் தனிமை வேண்டும்
தொல்லை இல்லாத் தனிமை வேண்டும்


 வேகமாக வீடு வந்து
கதவு பூட்டிக் கலங்கி நிற்பேன்
அழுது அழுது அப்படியே
அறியாமல் உறங்கிப் போவேன்

இந்த வயதில் என்ன மாற்றம்?
எனக்குச் சரியாய் விளங்கவில்லை
தாய்மடியில் முகம் புதைத்துத்
தண்ணீர் வற்றும் வரை அழுது தீர்ப்பேன்

என் நீரின்  காரணமும்
அறியாமல் என் தாயும்
என் அருகில் வந்தமர்ந்து
என்னவென்று கேட்டபின்னும்
கண்ணீரே விடையாக
கவலையோடு கலங்கி  நிற்பாள்

சொப்பு  வைத்துச் சோறு  பொங்கி
பொம்மைக் கெல்லாம்  பெயர்கள் சூட்டி
சின்னப் பெண்கள் கூட்டத்தோடு
சேர்ந்து நானும் ஆடுவேன்

விடியற்காலை வெளியில் வந்து
சாணம் தெளித்துச் சாலை கூட்டி
கோடு சேர்த்துக் கோலமிட்டு
வீதியெல்லாம் அலங்கரிப்பேன்

அடுக்களையில் நான் புகுந்து
பாத்திரங்கள் தேய்த்து வைத்து
பச்சைக் கீரை அறிந்து கொடுத்து
அம்மாவின் வேலைக்கெல்லாம்
உதவிக்கரம் நீட்டிவைப்பேன்

"ஆஹா ... அருமை மகனடி  ..." 
ஊரார் பாராட்ட 
பெருமை பொங்க  முறுவலித்து
முகமலர்வாள்  என்தாய
 
இப்படியே எப்படியோ
எட்டு வயதும் தொட்டுவிட்டேன்

ஒன்பதாவது வயதில் ஓர்நாள்
வீட்டிலுள்ளோர் வெளியே போக
கண்ணாடி முன்னின்று
கண்ணிமைக்கா  தெனைப் பார்த்தேன்

கட்டிலில் கிடந்த
தங்கையின் பாவாடை - கண்ணில்
பட்டதுதான் என்ன சொல்ல?
பட்டென்று எடுத்து அதை அணிந்தபோது

சில்லென்ற தென்றல்
தொட்டசுகம் மேனியில் -

அடுத்ததாய் நானும்
பூ வைத்துப்   பொட்டுவைத்து
புதுப் பெண்ணாய் அலங்கரித்துப்
பார்வையால் என்னைப்
பலமுறை அளந்தேன்

ஏதோ விளங்கிற்று -
என்னவோ புரிந்திற்று 

விடைதெரியாப் புதிரொன்று
வெளிச்சம் சிதறி உடைந்ததுபோல்
"பெண்ணாய் மாறிவிட்ட"
பெருங்கதையை நானுணர்ந்தேன்

சந்தோஷமா துக்கமா?
சரம் சரமாய் வழிந்த கண்ணீர்

சட்டென்று கதவு தட்ட
சடுதியில் நான் மாறி
"ஆண்போல் வேடமிட்டு"
அன்னையை நானடைந்தேன்

சோர்ந்து திரும்பிய
என் தாயோ -
சிதைந்த என் சிரிப்பைச்
சிறிதேனும் அறியவில்லை

இப்படியே சிலநாட்கள்
யாருமில்லாப் போதுகளில்
பெண்ணாய் நான் மாறி
எனக்குள்ளே பூரிப்பேன்

ஏதோ  தேடுதல்
எவரையோ எதிர்பார்த்தேன்
என்னைப்போல் இங்கு
எவரேனும் வுள்ளனரா?
என்று நானும் எப்போதும் 
எண்ணி எண்ணிப் பார்ப்பதுண்டு

பதின்முன்று வயதில்
பக்குவமாய் அடியெடுத்து
என்மாற்றம்   கூற
எப்படியோ துணிந்துவிட்டேன்

அடுத்த  ஊரின் அரவாணி
எதேச்சையாய்  என் கண்ணில்பட
ஓடிச்சென்று நானும்
ஒட்டிக் கொண்டேன் அவளோடு

ஒன்றுமே சொல்லவில்லை
"ஒ.."வென்று அழுது நின்றேன்

புரிந்துகொண்ட அவளும்
பரிவோடு எனை அணைத்து
தன்னோடு கொண்டு செல்ல
தயாரென்று சொன்னதோடு
தாயிடம் மட்டும்
தகவல் அறிவித்துவிட்டு
"வா" வென்று சொல்லிவிட்டாள்

சில்லிட்ட பிணமாய் 
சிறகறுந்த கிளியாய்
செய்வதறியாது
சென்றடைந்தேன் வீடு

தக்க நேரம் தகையாது
தினம் தவித்து தவித்து வியர்த்தேன்

எப்போதும் போல்
இடையில் ஓர் நாள்
தனிமை கிடைக்கவே
தயாரித்தேன் என்னை

பாவாடை தாவணி சலசலக்க
கைவளை கால் கொலுசு குலுங்க
வேகமாய் நடைபயின்று
வீடுமுழுக்க உலாவி

சுமந்தவளின் வருகையை
சுமையோடு எதிர்பார்த்தேன்

திரும்பி வந்த அவளும்
திக்கித்த விழியாலே
திகைத்தெனைப் பார்த்தாள்

இயற்கைக்கு மாறாய்
இது என்ன கோலம்?
இறங்கியது அவள் நெஞ்சில்
இமயமலையின் பாரம்

எரிமலைக் குழம்பில்
இறங்கிவிட்ட இறகாய்
எழில் குலைந்து போனாள்
என்நிலை கண்டு

என்னுயிர் சுமந்தவள்
அவளுயிர் உறைந்தாள்
நடை பயில விரல் தந்தவன்
நடை பிணமானான்

தாவி வந்து தோள் சேரும்
தங்கையும் துவண்டாள்

குருவிக் கூட்டைப்
பிளக்க வந்த கோடரியாய்
என்குடும்பம் குலைக்கவா
எனக்கிந்த மாற்றம்?
இதற்கா எடுத்தேன்
இப்பாழ் பிறவி?

என்வேதனை அறியாத அவர்களும்
தன்வேதனை மட்டும்
தடி கொண்டு உணர்த்தினர்
தரம் கெடப் பேசினர்

செல்லாத காசானேன்
என்வீட்டு உண்டியலில்

ஆலாலம் உண்ணாமலே
விரவிய விஷத் தீ - வீட்டின்
ஆனந்த வெள்ளத்தை
அழித்துக் கருக்கிடவே

வானுள்ள தேவர்களை
வாக்காலே நிந்தித்து
இருண்ட என்நெஞ்சுடன்
இருள் கவிழக் காத்திருந்தேன்

அந்தியும் போனது
அந்த நேரம் வந்தது

உறங்கிய உறவுகளை
உளம் நோகக் கண்டுவிட்டு
வெம்பிய கனியொன்று
கிளைவிட்டு விழுந்ததுபோல்

மனத்தை மனையில் விட்டு - என்
பிணத்துடன் வெளியேறினேன்

என்வீட்டின் இருள்
வானுக்கும் சூழ்ந்ததேன்?

என்கோலம் கண்டு
இயற்கையும் பழித்ததேன்?

நிலவும் இன்று  
நித்திரை கொண்டதேன்?

நியதிதான் என்னை
நிலைகுலைய வைத்ததேன்?

இரவோடு இரவாக
இறையாத நடையோடு
இயங்காத நினைவோடு
இலக்கினை எட்டிவிட்டேன்

புதுவுலகில் கால்பதித்து
புதுவுரவில் நான் கலந்தேன்

ஆரத் தழுவி அணைத்தெடுத்த
அன்னையின் அன்பும்

சுற்றிநின்று சுகம் விசாரித்த
"சமரி" களின் சிரத்தையும்
அந்த நேரம் ஆறுதல்
தந்தது உண்மைதான்

ஆறுமாத காலமாய்
அறிவுரைகள் கூறியும்
அலிவாழ்க்கை அவலங்களை
அடுக்கடுக்காய்க் விவரித்தும்

என்முடிவில் மாற்றங்கள்
ஏற்படாது போகவே
முடிவெடுத்துவிட்டனர்
என்முளைகிள்ளி எறியவே!

முற்றிவிட்ட உணர்ச்சிகள்
முன்வந்து அமர்ந்திட
மகிழ்வுடன் நானும்
மருத்துவரை அணுகினேன்

சோதித்த அவரும்
சிறிதாய்க் கவலையுற்று
ஆணுறுப்பை அன்றே
அறுத்தும் எறிந்திட்டார்

துக்கப் பிரவாகம் - விழிகளில்
தூரிகை மௌனம் - இதயத்தில்

விடுதலையாகி வீடுவந்து
தனியறையில் தாழ்போட்டு
ஆண்வாடை அறியாமல்
அடைகாத்தர் நாற்பது நாள்

நாற்பதாவது நாளில்
கொண்டாட்டம் கோலாகலம்
சூரியன்  விழிக்கும் முன்

தலையில் சுமந்த பால்குடமதனை
தண்ணீரில் கரைத்து
"திட்டு" கழித்திட
ஆறுதேடி அத்தனை அலிகளும்
மேளதாளத்துடன்
மொத்தமாய்ச் சென்றோம்

சடங்குகள் முடிந்து
சலசலப்பு ஓயுமுன்
செவிலித்தாய் எழுந்து என்
"செய்யலா" இவளென்று   ( * தத்துப் பெண் )
 செவியறிவித்தாள்

அங்கே...

தெரியுமா சேதி என்று
தெருவெங்கும் பரபரப்பு

இன்னார் வீட்டு மகன்
இரண்டுங்கெட்டான் ஆனானென்று

குழாயடிச் சண்டை நிறுத்திவிட்டு
கிசுகிசுத்தார் தெருமக்கள்

முகச்சவரன் செய்பவர் முதல்   
மூன்றுவயது குழந்தை வரை
சிறப்புச் செய்தியாக -என்
சோகக் கதை பேசினர்

கூனிக் குறுகி என்
குடும்பமே கவிழ்ந்தது

திரும்பி வீடுவந்தால்
தோண்டிப் புதைக்கச் சொல்லி
தூரத்துச் சொந்தமெல்லாம்
தொனதொனத்து நின்றது   

பாவம் என் அம்மாதான்

பித்துப் பிடித்தவள் போல
பாதை பார்த்துக் காத்திருப்பாள்

என்றாவது ஓர்நாள்
என்மகன் வருவானென்ற ஏக்கத்தில்

இங்கு -
புதிய உறவு
புதுமையாய் இருந்தாலும்

சந்தோஷமாய் சங்கமித்து
சந்தோஷி மாதாவைப் பூஜித்து
சகஜமாய் வாழுகின்றோம்
சமூகத்திடமிருந்து சற்று விலகியே

ஜாதி பேதமில்லை
குல கொத்திரமில்லை
 "கவுடி" பாஷை கற்று
கட்டழகு பேணி
ஒவ்வோர் வருடமும்
ஒருநாள் சுமங்கலியாகி
அடுத்தநாளே தாலி அறுத்து வீசி
அமங்கலி ஆகாத  
அபலைகளாக உலவுகின்றோம்

குடும்ப அட்டையில்
பெயர்ப்பதிவு இல்லை
அரசாங்கமும்
ஆணை பிறப்பித்தத பாடில்லை

கூலித்தொழில் செய்யச் சென்றால்
கூடும் கோரக் கூட்டம்

அங்கங்கள் தொட்டு
அணைக்க அழைக்கும்
மனித உருவில் சில
மிருகக் கூட்டம்

எங்கள் உணர்ச்சிகளை
எருமையும் உணரும்

ஆனால் ஏனோ -
நாயைவிடக் கேவலமாய்
நடத்தப் படுகிறோம் நாங்கள்

உழைத்து உண்ணத்
தயார்தான் நாங்கள்
உழைக்கும் வாய்ப்பைத்
தருவோர்தான் இல்லை

வயிறு மட்டும் உண்டே
வீணாய் அழுது புலம்பும்

தொடர்ந்து பட்டினி போட்டே
தொய்ந்து போன நானும்
துரத்திவிட்ட விதியாலே
"தொழிலுக்கே" வந்துவிட்டேன்

பெற்றவளைக் காண
பெரும்பாடு பட்டு
என்விழி நீர் துடைக்கும் அவள்
ஒற்றை விரலுக்காய்

ஊரே அடங்கியபின்
ஒளிந்திருந்து தரிசிப்பேன்

என்னதான் செய்ய
எவருமே இல்லையே?
இப்போது கூறுங்கள்
என்னைப்போல் ஒரு
"அதிசய அவலம்"
எங்கேனும் கண்டதுண்டா?

- ***************
சிறப்புக் குறிப்பு:

இக்கவிதையை எழுதி முடித்துவிட்டு என் நிலைக்கு வர ஒரு வாரகாலம் தேவைப்பட்டது எனக்கு.

அதே போல.. கவிதை எழுதி முடித்துவிட்டு, மீண்டும் அந்த அரவாணிகள் வீட்டிற்குச் சென்று அவர்களுக்கு புத்தகத்தைக் கொடுத்துவிட்டு அக் கவிதையை நான் வாசித்தபோது...12  அரவாணிகள் நான் படிக்க ப் படிக்க அவர்கள் தேம்பித் தேம்பி சப்தமிட்டு அழுதது என்னைக் கவிதை எழுதியதை விட அதிகம் பாதித்தது.
*************

இக்கவிதையைப் படிப்பவர்கள் தங்கள் மேலான கருத்தினைத் தெரிவிக்கவும்

 நன்றி!

சொப்னபாரதி (எ) யாதுமானவள் (எ) லதாராணி

3 கருத்துகள்:

  1. மனதைத் தொட்டு, இதயம் கனத்துக் கண்ணீரைக் கசியச் செய்கிறது திருநங்கையரின் வரலாறு.

    பதிலளிநீக்கு
  2. திருநங்கை பற்றிய கவிதை உண்மையில் கண்ணீர் வந்துவிட்டது தோழி
    உணர்வுகளோடு உள்ளுணர்ந்து எழுதிய வரிகள் எத்தனை பாராட்டினாலும் போதாது

    கவிதைக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமையான கவிதை. உணர்வுப்பூர்வமாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் மேடம்.

    பதிலளிநீக்கு