என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 2 ஜூன், 2011

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும்

குவைத்தில் கறுப்புச் சட்டைக்காரன் என்றால் பெரும்பாலான தமிழர்கள் உடனே சொல்லி விடுவார்கள் ரஹமத்துல்லா என்று. அந்த அளவிற்கு பெரியார் கொள்கைகளின் சிறுவயது முதலே ஈடுபாடு கொண்டவர் அவர். அவர்மட்டுமல்ல அவரின் தந்தை பெரியாரின் சீரிய தொண்டரென்று    கேள்விப்பட்டுள்ளேன்.

இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த இச்சகோதரர் குவைத்திற்கு வருவதற்கு முன்பு (ஒரு 15  வருடத்திற்கு முன்பு) தமிழ்நாட்டில் லாரி ஓட்டுனராகப்பணியாற்றியிருந்திருக்கிறார்.
அடிக்கடி தமிழ் நாட்டிலிருந்து ஆந்திராவிற்கு   லோடு ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கமாம்.

அப்படி இருக்கையில் இரவில் திருப்பதியில் தர்மஸ்தாலவில்   வண்டியை நிறுத்திவிட்டு இரவு உறங்கிவிட்டு பிறகு காலை சிற்றுண்டிக்குப் பின் மீண்டும் தமது பணியைத் தொடர்வது வழக்கமாம்  . சிலநேரம் இரண்டு மூன்று நாட்களெல்லாம்  தங்கவேண்டிய சூழல்  உருவாகிவிடுமாம்.

அப்படி இருக்கையில்..அங்கு தங்கும்போதேல்லாம்... விடியற்காலை... ஒரு ரம்மியமான சூழலில் மலை மீது இளங் காற்றில் 3 மணிக்கு அங்கு ஒலிக்கும் சுப்ரபாதம் கேட்பதற்கு அவ்வளவு பிடிக்குமாம் அவருக்கு. அதுவும் MS சுப்புலக்ஷ்மியின் குரலுக்கு மயங்காதவர் எவரேனும் உண்டோ?

அப்படி அங்கு செல்லும்போதெல்லாம்... விடியற்காலை சுப்ரபாதம் கேட்பதற்கென்றே சீக்கிரம் விழித்துவிடுவாரம். அவரும் சேர்ந்து கூடவே பாடவும் முயற்சிப்பாராம்.

அது சமஸ்கிருதத்தில் இருப்பதால் வார்த்தைகள் சரிவர வராது ஆதலால்..  சாயந்திரம் பூஜையெல்லாம் முடிந்தபின் எப்போதும் அந்தவழி ஒரு பிராமணப்  ப்ரோகிதரர் செல்வதைப்  பார்ப்பாராம்..

சரி அவரிடம் கேட்டுப் பார்ப்போமே இந்த சுப்ரபாதத்தை நமக்குப் படித்துக் கொடுப்பார என்று என நினைத்து அந்தப் ப்ரோகிதரை அணுகி  ...   பெரியவரே... எனக்கு சுப்ரபாதம் ரொம்ப பிடிச்சிருக்கு... எனக்கும் அது போல பாடணும்னு விருப்பமா இருக்கு. கொஞ்சம் சொல்லித்தருவீங்ளா   எனக்கு என்று கேட்க,

 அந்தப் ப்ரோகிதர் உடனே... உன் பேர் என்னப்பான்னு கேட்டிருக்கார்.. உடனே இவர் சொல்லி இருக்கார் ரஹமத்துல்லா  என்று. 

உடனே தீயை மிதித்தவர் போல ... அபிஷ்டு,,,.. நீ எல்லாம் புலால் சாப்பிடறவா... புலால் சாப்பிடறவால்லாம் இதெல்லாம் பாடப்படாது. உங்க ஜாதி ஆள் வாயிலல்லாம்  இது நுழையாது என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம்..

"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகுன்னு" வார்த்தைக்கு வார்த்தை சொல்ற பெரியார் தொண்டனைப் பார்த்து ஒரு பிராமணன் இப்படி சொன்னதுல இரஹமத்துல்லாக்கு ரோஷம் பொத்துகிட்டு வந்துடிச்சு...

அது என்னடா அது... அவன் வாய்ல நுழையறது என்வாய்ல எப்படி நுழையாம   போய்டும்னு பார்க்கலாம்னு சொல்லி ரோஷத்தோட     வண்டி எடுத்துக்கொண்டு இரவு 8 :30  மணிக்கு ஏதோ ஒரு கடையில
அந்த  cassette வாங்கிட்டு வந்திருக்கார்.. இராத்திரி முழுவதும் lorry லையே போட்டு கேட்டு  ப்ராக்டிஸ் பண்ணிட்டு காலைல அந்தப் ப்ரோகிதர் தேவஸ்தானத்துக்கு போறதுக்காக அந்தப்பக்கம் போய்க்கிட்டிருக்க.. அவரைக் கூப்பிட்டு இந்தாங்க பாருங்க இதாணே ன்னு சொல்லி....

"கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா பிரவரத்ததே 
உத்திஷ்ட நரசாதூலா கர்த்தவ்யம் தெய்வமாநிஹம்"... ன்னு  மூச்சு விடாம கடகட கடன்னு முழு சுப்ரபாதத்தையும் அக்ஷரம்   பிசகாம... உச்சரிப்பு  பிசகாம சொல்லி இருக்கார்...

ஆச்சரியத்தில் வாய்பிளந்த  பிராமணன் வாயை  மூடவே   இல்லையாம். ஷாக் ஆகி இவர் சொல்வதை  அப்படியே கேட்டுகிட்டிருந்தாரம்.... சுப்ரபாதம் சொல்லி முடித்தபின் இந்தாங்க  இதை போனஸ் ஆ வச்சுக்கோங்கன்னு... சொல்லி,,...

வெங்கடேச   ஸ்தோத்திரம் ....

"கமலா குச சோசுக    குங்குமதோ 
நியதாருணிதாதுல நீலதநோ"....

இதையும் மூச்சு விடாம சொல்லவும்வாய் பிளந்து கேட்டிருக்கிறார் அந்தப் புரோகிதர் ...

சொல்லி முடிச்சுட்டு ரஹமத்துல்லா கேட்டிருக்கார்... என்ன அய்யரே சரியா சொன்னேனா... உங்க வாய்ல நுழையற பாஷை எங்க வாய்லையும் நுழையும்னு இவர் சொல்ல...

ஒரு இஸ்லாமியன் நம்ம சுலோகத்தை    நம்மை விட ப்ரமாதமா சொல்றானேன்னு ஏற்பட்ட ஆதங்கத்துல அந்த அய்யர் சொன்ன பதில் தான் சூப்பர்...

"டேய்... நீ போன ஜென்மத்துல பிராம்மணாளா  பொறந்திருந்திருப்பேடா..." ன்னு சொன்னாராம்  .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக