தமிழோடு விளையாடி தமிழோடு உ றவாடி
தமிழாளை தினம்கூடும் தமிழ்க்கா முகனுன்னை
தமிழாலே உனைவாழ்த்த நான்கோர்த்த முத்துக்கள்
தமிழ்நாட்டி ல் உனைச்சேரும் மறுக்காமல் ஏற்க! (1)
மூச்சுக்கு மூச்சாக முழுநாளும் உம்பெயரை
வீச்சாக உச்சரிக்கும் ஆர்க்காட்டு நல்லாசான்
பூங்கா வனம்பெற்ற புதல்வியவள் நானும்
ஓங்காரத் தமிழாலே வாழ்துகிறேன் வாழியவே! ! (2)
என்புக்கும் தோலுக்கும் இடைப்பட்ட தசைபோல
தெம்புக்கொரு நெம்புக்கோல் துணையாவது போல
தன்வாழ்க்கை பொதுவாழ்க்கை இரண்டுக்கும் இடையில்
இன்பம்சேர் தமிழோடு விளையாடிய விரலால் (3)
சங்கத்தமிழ் குறளோவியம் நெஞ்சுக்கு நீதியென
பொங்கும் தமிழ் ஊற்றாகத் தென்பாண்டிச் சிங்கமுடன்
தொல்காப்பியம் குறளோவியம் இன்னும் பலவாக
பல்காவியம் படைத்தாயுன் கற்கண்டுத் தமிழால் (4)
தமிழுக்கு நீசெய்த அலங்காரம் கண்டாலென்
உமிழ் நீரும் ஊற்றாக்கி உதட்டோரம் ஒழுகும்
விழியாலே நான்பருகும் அமிழ்தத்தை ஒக்கும்
எழிலான உன்தமிழென் தாகத்தைத் தீர்க்கும் ! (5)
வற்றற்ற தமிழாலுன் “நா”செய்யும் வித்தை
பற்றற்ற பகைவருமே போற்றுகின்ற விந்தை
ஒப்பற்ற தமிழாலுன் வார்த்தைகளைத் தூவி
செப்பனிட்ட படங்களெமைச் சிலிர்க்கவைத்த துண்டு (6)
அப்படியே நாடகமுன் ஆர்ப்பாட்டத் தமிழாலே
செப்பட்டி வித்தைபோல் சொக்கவைத்த அந்நாளில்
உப்புக்குக் காசில்லை யென்றாலும் உயர்தமிழன்
ஒப்பற்ற தமிழ்தேடி ஓடோடி வருவானே! ! (7)
ஆழிசூழ் இலங்கைவேந்தன் ஆரியர்செய் சூழ்ச்சியாலே
பீழிசூழ் அரக்கனென் றுரைத்தராம காதையதன்
தாழியினை உடைத்துஉட் புகுந்தவோர் குழந்தையவன்
யாழிசைத்த ராவணனின் புகழுரைத்த காவியத்தை (8)
இருபத்தி மூன்றாண்டு இருட்டடிப்பு செய்துவைத்து
இருமாந்த ஆரியர்க்கு இளங்கதிராய் நீயுதித்து
உறையிட்ட வாளெடுத்து ஓர்வெட்டால் வீழ்த்தியபோல்
சிறைமீட்டு தமிழுக்கு நீசெய்தாய் உயர்தொண்டு! (9)
தீச்சுடராம் பெரியாரின் திண்ணையிலே அமர்ந்து
நீச்சத்தன மெல்லாம்கடும் போராடிக் களைந்து
கூச்சந்தனை யொழித்துக்குடி போற்றிவந்த உன்னை
ஆச்சரியத் தமிழ்கொண்டு வாழ்துகிறேன் வாழியவே! ! (10)
உன்னுருவம் பொறித்துவைத்த இதயத்தை பத்திரமாய்
தன்னுடனே கொண்டுசென்று தமிழ்பேசி உறங்குகின்ற
அண்ணாவின் இதயத்தில் நீயமர்ந்த தறியாமல்
அன்னாரின் இதயத்தை கடனாயேன் கேட்டீரோ? ! (11)
ஐந்துமுறை தமிழகத்தின் ஆட்சிப் பீடம்
தந்துநிறை உயர்வடைந்து ஓங்கிய மக்கள்
இந்தமுறை சூரியனின் ஒளிபறிக்க வில்லை
வந்ததொரு கிரணமதன் இருள்விரைவில் மாறும் (12)
தனித்தமிழ் நாடதனை பெற்றிருந்தால் இந்நேரம்
தனியொரு ஆளாக நீநின்று தடுத்திருப்பாய்
இடையினில் உள்ளதடை மீறியாங்கு நாமும்
படைதனை கொண்டுசெல லாகாது அறிவோம் ! (13)
இருந்தாலும் தமிழர்களைக் காக்கவில்லை என்றே
பருந்தாகக் கொத்தும்சில பாமரர்கள் உண்டு
பொருந்தாத பலகூறி பாடியாடு மவர்கள்
வருந்திடுவார் பின்னாளிளுன் உபகாரம் கண்டு! (14)
உலகமுதற் குடிமகனும் முதற்பேசிய மொழியும்
இலகுவான தமிழதுவே யெம்மொழி தானென்று
உலகோரை கழுத்தசைத்து ஏற்கவைத்து இதுவே
உயர்வான செம்மொழியென்று ணர்த்திவிட்டீர் ஆஹா! (15)
வண்டமிழ் போதை கொண்டு வாழுகின்ற உம்மிடத்தில்
பெண்டுகள் சார்பினில் புதுநூலை வேண்டுகின்றேன்
கண்ணாகக் காத்துவந்த கழகத்தின் வரலாற்றை
அண்ணாந்து நோக்குமாறு அத்துணையும் சேர்த்துவைத்து (16)
தாயுண்ட மீதத்தை சேய்கொஞ்சம் சுவைப்பபோலுன்
வாயுண்ட செந்தமிழால் வரைந்துஒரு காவியத்தை
நீயுண்ட தமிழமுதால் நிறைவாக நிரவிவிட்டால்
வேயுண்ட வண்டெனவே ஒண்டமிழர் மகிழ்ந்திடுவர் (17)
வயோதிகம் உன்னெழுத்தை தடையிடவும் வாய்ப்பில்லை
வயதில்லா மழலையென்றன் வாழ்த்திற்கும் தடையில்லை
சேயிவள் உதட்டோரம் சிதறுகின்ற தமிழ்ச் சொல்லை
வாய்நிறைக்க சேர்த்துவைத்து வாழ்த்துகிறேன் வாழியவே! ! (18)
வான்பெற்ற வளமனைத்தும் பெற்றபெரும் பேருன்னை
வாழ்த்துகிறேன் வயதெனக்குப் பொருட்டே இல்லை!
வாழியநீர் பல்லாண்டு வாழ்கவென எப்போதும்
வாழ்த்திடுவே னென்வயதெனக்குப் பொருட்டே இல்லை ... (19)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக