கவி காளமேகம் ... அடுத்த ஒரு பாடலில்... வானவில், விஷ்ணு வெற்றிலை இம்மூன்றும் ஒன்றெனக் கூறுகிறார்..
நீரி லுளதால், நிறம்பச்சை யாற்றிருவால்
பாரிற் பகைதீர்க்கும் பான்மையால் - சாருமனுப்
பல்வினையை மாற்றுதலால், பாரீர், பெருவான
வில்விண்டு நேர்வெற் றிலை
பிரித்துப் படிக்க:
நீரில் உளதால், நிறம்பச்சையால் திருவால்
பாரில் பகைதீர்க்கும் பான்மையால் - சாருமனுப்
பல்வினையை மாற்றுதலால், பாரீர், பெருவான
வில்விண்டு நேர் வெற்றிலை
(சாருமனு - சார்ந்தவர்கள்.;
திரு- அழகு, திருமகள், மங்கலப் பொருள்
விண்டு - விஷ்ணு)
அதாவது,
வானவில்லானது நீர்நிறைந்த மேகத்திலிருந்து உண்டாகிறது. அதில் முக்கிய முக்கிய நிறமாகப் பச்சை நிறம் உள்ளது. அழகாக உள்ளது. உலக வாழ்க்கைக்குப் பகையான கோடை வரட்சியிலிருந்து காக்கிறது. வானவில்லைப் பார்க்கும்போது மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சியும், மழை வரும் முன்னறிவுப்பு என்பதால் சோர்வைப் போக்கி மகிழ்ச்சியைத் தருகிறது.
விஷ்ணு, பாற்கடலில் பள்ளி கொண்டவர். பச்சை வண்ண நிறமுடையவர்(பச்சை மாமலை போல் மேனி) . திருமகளைத் தன் மார்பில் கொண்டவர். உலகில் பகைவரை(அரக்கர்களை) அழிக்கும் இயல்புடையவர், தன்னை நாடித் தன்னையே சார்ந்திருப்பவர்களை பல்வேறு வினைகளிலிருந்தும் பாவங்களிலிருந்தும் நீக்குபவர்.
வெற்றிலையானது நீர்நிலைகளில் வளரும் தாவரம். பச்சை நிறமுடையது, அது மங்கலப் பொருளாக விளங்குவது. உலகில் பகை தீர்ந்த இடத்தில் நட்புக்கு அடையாளமாகப் பயன்படுகிறது. (பகை தீர்ந்ததும் சண்டையிட்டவர்கள் சேர்ந்து வெற்றிலை போட்டுகொண்டாடுவார்கள்) பல் சம்மந்தமான நோய்களைத் தீர்க்கிறது. பற்களில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்குகிறது. (வெற்றிலையில் உள்ள குளோரஃபில் பற்களுக்கு நன்மை பயப்பது)
இப்படி ஒரு அருமையான பாடலின் மூலமாக வெற்றிலையும் விஷ்ணுவும் வானவில்லும் ஒன்றெனக் கவி காளமேகம் கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக